Powered by Blogger.

Tuesday, November 23, 2010

மாவீரர் நாள் - கனவுகள் பலிக்கும் வரை போராடுவோம். இது சத்தியம்

தமிழீழ விடுதலைப்போராட்டமானது இன்று பல பரிமானங்களை தாண்டி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. நாங்கள் தமிழீழ மக்கள்  என்று உலகெல்லாம் கோஷமிடக்கூடிய அளவிற்கு வியாபித்து நிற்கிறது போராட்டம். தமிழீழ மக்களின் பிரச்சினைகள் குறித்து உலக அரசுகள் பேசக்கூடிய அளவிற்கு போராட்டம் ராஜதந்திர ரீதியாக நகர்த்தப்பட்டுள்ளது. தமிழர் விடுதலை குறித்து ஆரம்பிக்கப்ட்ட எத்தனையோ இயக்கங்களில் ஒரு சிலவற்றை தவிர போராட்ட அமைப்பை வெறும் வியாபாரத்திற்கேதான் தோற்றுவித்தார்களா என்று எண்ணும் அளவிற்கு நடந்து கொண்டார்கள் நடந்து கொண்டிருக்கிறார்கள்.


இன்று தமிழீழ மக்களின் அபிலாசைகளை விடுதலையின் தேவைகளை உலகம் பூராவும் ஓங்கி ஒலிப்பதற்கு, ஏறத்தாள 33 000 விடுதலைப்புலிப் போராளிகள் மாவீரர் ஆகியுள்ளனர். சொந்தம், பந்தம், இன்பம், இளமை என அத்தனையையும் துறந்து தமிழீழ விடுதலைக்காய் போராடி களப்பலியாகியுள்ளனர்.


இந்த இடத்திலே நான் அறிந்த சில சம்பவங்களை சொல்லியாக வேண்டும்.


தியாக தீபம் லெப்.கேணல் திலீபன் அவர்களுடைய வீரச்சாவை சிந்தித்து பாருங்கள். தமிழீழ விடுதலைக்காய் மக்களோடு மக்களாக மக்கள் முன்னே வீரச்சாவடைந்தானே. அப்படிப்பட்ட போராளிகளை கொண்ட மக்கள் இயக்கம் தான் தமிழீழ விடுதலைப்புலிகள்.




மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒரு புலனாய்வு பிரிவு போராளி இராணுவத்திடம் அகப்பட்டுவிட்டார். அவரிடம் இருந்து செய்திகளை கறப்பதற்காக அவரை கட்டிலில் கட்டிவைத்து சித்திரவதை செய்திருக்கிறார்கள். தன்னிடம் இருக்கும் தகவல்களை தான் சித்திரவதை வேதனையில் சொன்னால் தமிழீழ போராட்டத்தில் சில முக்கிய விடயங்கள் தெரியவந்துவிடும் என்று சிந்தித்த போராளி கட்டில் சட்டத்தில் அடித்து தனது பல்லால் தனது நாக்கை துண்டித்திருக்கிறார்.. இப்படி 90 காலப்பகுதிகளில் பெரியவர்கள் பேசிக்கொள்வார்கள்.


இதே போல் கிளிநொச்சி மீட்டு நடவடிக்கையான ஓயாத அலைகள் 2 சமரின் போது கிளிநொச்சி மத்திய கல்லூரியில் போடப்பட்டிருந்த கொமான்டோ முட்கம்பி வேலியை தகர்த்து குறிப்பிட்ட நேரத்துக்குள் நகர வேண்டும். ஆனால் அந்த நேரத்தில் அதை தகர்ப்பதற்குரிய வெடிபொருள் வெடிக்கவில்லை.... உடனே அதில் ஒரு போராளி அந்த கம்பிமேல் படுத்துக்கொண்டு தன் மீது ஏறி வேலியை கடக்கு மாறு கூடியுள்ளான். அத்தனை போராளிகளும் அந்த வேலியை கடந்து முடிக்கும் போது சொட்டச் சொட்ட ரத்தம் கசிந்து கொண்டிருந்த போராளி  பின் வீரச்சாவடைகிறான்.


காயமுற்ற போராளி தன்னை கொண்டு செல்வது சிரமம் எனவே என்னை கொன்றுவிட்டு ஆயுதத்தை எடுத்துச்செல்.. என்னை கொல்வதற்கு ரவையை வீணாக்காமல் கத்தியால் கொலை செய் என தன் தோழனிடமே கட்டளையிட்டான் ஒரு விடுதலைப்புலி வீரன்.


இப்படி பல...
தமிழீழ விடுதலைக்காக, மக்களின் சுதந்திரத்திற்காக, சுயநலமற்று வீரச்சாவை தழுவிக்கொண்ட தியாக தீபங்களை... எமது மாவீரச் செல்வங்களை எப்போதும் நாம் நினைவு கூர கடமைப்பட்டுள்ளோம்.


இன்று முற்று முழுதாய் தமிழீழ மண்ணை ஆக்கிரமித்து்ளள சிங்கள ராணுவம் மாவீரர் கல்லறைகள், நினைவுச்சின்னங்கள் என எல்லாவற்றையும் சிதைத்து அழித்து முடித்துள்ளது. கல்லறைகளை அழிக்க முடியுந்த ராணுவத்திற்கு நினைவு நாளை இல்லாது செய்ய முடியுமா?? முடியாதல்லவா.அங்கு தான் எமது விடுதலைக்கான போராட்டத்தின் வீரியமும் அது பற்றிய தேவைகளும் இருக்கின்றன.


விடுதலைப் போராட்டத்தில் விடுதலைப்புலிகள் ஆயுதங்களை மெளனித்து முற்று முழுதாக உறங்கு நிலைக்கு சென்றுள்ள நிலையில் மக்கள் எப்படி விடுதலைக்கான போராட்டத்தை நகர்த்த வேண்டும் என சிந்திக்க வேண்டும். தமிழ் மக்களுக்கான விடுதலையின் தேவை குறித்த விழிப்புணர்வுகள் இளைஞர்கள் மத்தியில் உருவாக்கப்படல் வேண்டும்.  தமிழீழ அரசை அமைப்பதற்கான சர்வதேச அங்கிகாரத்தை புலம் பெயர் தமிழர்கள் போராடிப் பெறவேண்டும். அத்தனை தமிழ் இளைஞர் யுவதிகளுக்கும் தமிழீழம் பற்றிய சிந்தனைகள் உருவாக்கப்படல் வேண்டும். தமிழீழ விடுதலை பற்றிய குரல்கள் ஒட்டுமொத்தமாக உலகம் பூராகவும் ஒலிக்க வேண்டும்.


தமிழ் மக்களின் விடிவிற்காய், தமிழீழ மண்ணின் விடிவிற்காய் வீரகாவியமான மாவீரச் செல்வங்களுக்கு வீரவணக்கங்களை செலுத்துவதோடு தமிழீழ விடுதலையின் தேவை குறித்த சிந்தனைகள், கோஷசங்கள் அனைத்து தமிழ் மக்களிடையேயும் ஓங்கி ஒலிக்க செய்வோம்..தமிழீழத்திற்காக எவ்வழியிலும் தொடர்ந்து போராடுவோம் எனவும் சத்தியம் செய்து கொள்வோம்.
தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்




ஆதி
24-11-10

No comments:

Post a Comment

Blog template by simplyfabulousbloggertemplates.com

Back to TOP