தமிழீழ விடுதலைப்புலிகளின் இராணுவ கட்டமைப்புகள் இராணுவ நடவடிக்கை முறைமைகள் புலனாய்வு திறமைகள் ராஜதந்திர நகர்வுகள் குறித்து உலகத்தின் பொலிஸ்காரன் என குறிக்கப்படும் அமெரிக்காவே வியப்பு வெளியிட்டது யாவரும் அறிந்ததே. இந்த வகையில் சிறிலங்கா அரசால் விடுக்கப்பட்ட விடுதலைப்புலிகள் அழிக்கப்பட்டுவிட்டனர் என்ற செய்தியும் ஈழப்போரில் நேரடிப்பங்களிப்பு வழங்கியதும் அண்டை நாடுமான இந்திய வல்லரசின் அதன் பிற்பாடான நடவடிக்கைகளும் ஈழத்தமிழரை மட்டுமல்லாது அனைத்து நாடுகளையும் சிந்திக்க வைத்துள்ளது.
ஈழப்போரின் நேரடிப்பங்காளியான இந்தியா விடுதலைப்புலிகள் அழிக்கப்பட்டுவிட்டனர் என்ற சிறிலங்கா அரசின் செய்திக்கு வாழ்த்து தெரிவித்தது மட்டுமல்லாது சிறந்த ராணுவத்தினர் என்றும் சிறிலங்கா அரசை மெச்சியது. ஆனால் விடுதலைப்புலிகள் அழிக்கப்பட்டுவிட்டனரா இல்லையா அல்லது விடுதலைப்புலிகளின் தலைவரும் தமிழீழ தேசியத்தலைவருமான மே.த.கு வே. பிரபாகரன் உயிருடன் இருக்கிறாரா இல்லையா என்ற ஜயப்பாடுகள் இந்திய வல்லரசில் காணப்படுவது பெரும் சந்தேகத்தை தோற்றுவித்துள்ளது மட்டுமல்லாது இந்தியவல்லரசின் இயலாத்தன்மையையும் வெளிக்காட்டியுள்ளது. இது குறித்த காரணங்களை நாம் நிதானமாக சிந்திக்க வேண்டும்.
1)விடுதலைப்புலிகள் மீதான தடை
2)ராஜீவ் காந்தி கொலைவழக்கில் இன்னமும் தமிழீழ தேசியத்தலைவரின் பெயர் நீக்கப்படாது இருப்பது.
இந்தியாவின் பங்காளி நாடான சிறிலங்கா விடுதலைப்புலிகள் இனிமேல் இல்லை என்று அறிவித்ததன் பிற்பாடு இல்லாத விடுதலைப்புலிகளுக்கு இந்தியாவில் தடைவிதித்திருப்பதானது இந்திய வல்லரசின் ராஜதந்திரத்தின் இயலாத்தன்மையை காட்டுகிறது. விடுதலைப்புலிகள் அழிக்கப்பட்டுவிட்டனர் என்ற செய்திக்கு வாழ்த்து தெரிவித்த இந்தியா விடுதலைப்புலிகளை தடைசெய்ய வேண்டும் என்று நீதிமன்றத்ததிடம் கோரியமை இந்தியாவின் கொள்கை மற்றும் செய்தி வகுப்பாளர்களிடம் காணப்படும் முரண்பாடுகளையே காட்டுகிறது.
விடுதலைப்புலிகளின் தலைவரை தாம் கொன்றுவிட்டோம் என்று இலங்கை அரசு உத்தியோக பூர்வமாக அறிவித்து அவரின் மரண சான்றிதளையும் இந்திய அதிகாரி சிதம்பரத்திடம் ஒப்படைத்தது யாவரும் அறிந்ததே. இவ்வாறிருக்க ராஜீவ் காந்தி கொலைவழக்கில் தமிழீழ தேசியத்தலைவரின் பெயர் நீக்கப்படாமையானது இந்திய சட்டத்தில் மரணமானவர் கூட வழக்கில் சேர்த்துக்கொள்ளப்படுவாரா என்ற சந்தேகமும் நகைப்பும் ஏற்படுவது தவிர்க்கப்பட முடியாததே.
சிறிலங்காவில் சீனாவின் வருகையும் வடக்கில் நாசுக்காக ஊடுருவும் சீனாவின் ராஜதந்திரமும் இந்தியாவை அவசர அவசரமாக இந்தியாவை வடக்கில் களமிறங்க தூண்டியுள்ளது வெளிப்படையுண்மை. விடுதலைப்புலிகள் குறித்தும் அதன் தலமைகள் குறித்தும் சிறிலங்கா அரசின் கருத்து வேறுபாடுகளுக்கிடையில் சிறுபிள்ளைத் தனமான ராஜதந்திர கொள்கைகளை மாற்ற முடியாத இந்தியா வடக்கில் மென்மையான ஊடுருவலை மேற்கொள்கிறது என்பதை ஈழத்தமிழர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
விடுதலைப்புலிகள் மற்றும் விடுதலைப்புலிகளின் தலமை குறித்து ஈழத்தமிழர்களிடத்தில் காணப்படும் நம்பிக்கையே இன்று இந்தியவல்லரசை முட்டாளாக்கியது மட்டுமல்லாது சிறிலங்கா குறித்த ராஜதந்திரத்தில் ஆட்டம் காண வைத்துள்ளது என்பதை அனைத்து தமிழர்களும் புரிந்து கொள்ள வேண்டும். விடுதலைப்புலிகள் அழிக்கப்பட்டுவிட்டனர் தமிழீழ தேசியத்தலைவர் கொல்லப்பட்டுவிட்டார் என்று பல அரசுகள் உத்தியோகபூர்வ அறிக்கைகளைவிடுத்தும் தமிழீழம் என்ற கொள்கையை விட்டு சற்றும் தளராத தமிழ் மக்களினால் தான் இன்று வல்லருசுக்கள் மூக்குடைபட்டு நிற்பதை வெளிப்படையாகவே உணர்ந்து கொள்ள முடிகிறது.
விடுதலைப்புலிகள் உத்தியோக பூர்வமான ஆயுதப்போராட்டத்தை மெளனித்த பின்னர் அவர்களின் ராஜதந்திர நடவடிக்கைகள் குறித்து கணிப்பதற்கு இந்திய வல்லரசின் புலனாய்வாளர்கள் தோற்றுப்போனது தமிழர்களின் வெற்றி. விடுதலைப்புலி உறுப்பினர்களின் சரணடைவு மற்றும் காணாமால் போன மக்கள் குறித்தான வன்னி மற்றும் மட்டக்களப்பு மக்களின் நேரடிச்சாட்சியங்களானது இந்தியாவின் வல்லாதிக்க கனவில் நாற்றத்தை அள்ளி வீசியுள்ளது.
சிறிலங்கா அரசின் கோமாளித்தனமான செயற்பாடுகளால் விடுதலைப்புலிகளின் ராஜதந்திரம் மற்றும் நகர்வுகள் குறித்து இந்திய வல்லரசு விடுதலைப்புலிகளிடம் தோற்றுப்போனது தமிழர்களின் வெற்றியே.
இனிவரும் காலங்களில் ஈழ மற்றும் புலம்பெயர் தமிழர்களின் செயற்பாடுகள் இந்திய வல்லாதிக்கத்தின் காழ்ப்புணர்ச்சி கொள்கைகளை இல்லாது செய்யும் அல்லது அடிபணியச்செய்யும் என்பது தெளிவாகிறது.
அனைத்து தமிழர்களும் தமிழர்களுக்கு இதுவரை நாடில்லை என்பதையும் போரினால் சிதைந்து போயுள்ள தமிழர்களின் வாழ்வாதரங்களை கட்டியெழுப்ப வேண்டிய கடமை அனைத்து தமிழர்களினுடையது என்பதையும் நினைவில் வைத்து செயற்படுவது தமிழீழத்திற்கான வழிகளை ஏற்படுத்தும் என்பதில் ஜயமில்லை.
ஆதி
18-10-10
No comments:
Post a Comment