Powered by Blogger.

Thursday, April 21, 2011

உலக கிண்ண கிரிக்கட் போட்டியும் சிறிலங்கா அரசு நகர்த்திய அரசியயலும்


உலக கிண்ண கிரிக்கட் போட்டியும் சிறிலங்கா அரசு நகர்த்திய அரசியயலும்

நடந்து முடிந்த உலக கிண்ண கிரிக்கட் போட்டியினூடாக சிறிலங்கா அரசு மிகப்பெரிய அரசியல் நகர்வை தமிழ் மக்களிடையில் பலவழிகளிலும் நகர்த்தி முடித்திருக்கிறது. புலம் பெயர் தமிழர்களை விட ஈழத்தில் உள்ள தமிழ் மக்களிடையில் தனது அரசியல் நிலைப்பாட்டை நகர்த்துவதற்று உலக கிண்ண கிரிக்கட்டை பெரிதும் சிறிலங்கா அரசு பாவித்தது என்பது மறுக்கப்பட்வியலாத ஒன்று. எந்த அளவிற்கு அது வெற்றியளித்தது என்பதற்கப்பால் சிறிலங்கா அரசு விளையாட்டினூடாக  நகர்த்திய அரசியல் என்பது சாதாரணமாக எடைபோட முடியாது என்பதை தமிழர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.                        

"விளையாட்டும் அரசியலும் வேறு வேறு" என்ற தொனிப் பொருளினூடு சிறிலங்கா அரசு தனது அரசியல் நகர்வுகளை ஆரம்பித்திருந்தது. அதை சில தமிழர்கள் ஆமோதித்ததோடு சிறிலங்கா கிரிக்கட்டை ஆதரிப்பதற்கான தமது நிலைப்பாட்டை "விளையாட்டும் அரசியலும் வேறு வேறு " என்ற கொள்கையினூடு நியாயப்படுத்தியும் இருந்தனர். அவர்களின் அரசியல் புரிதலின்மை மற்றும் தூரநோக்கற்ற சிந்தனைகளால் சிறிலங்கா அரசின் நிலைப்படு பல வழிகளிலும் தமிழ் மக்களிடையில் திணிக்கபட்டது. எப்படி திணிக்கப்பட்டது என்பதை விளங்கிக் கொள்ள முன் விளையாட்டுகளினூடு தமது தேசிய இனத்திற்காய் போராடிய தேசிய அணி வீரர்களை பற்றி நாம் கட்டாயம் அறிந்து வைத்திருத்தல் அவசியம். சிம்பாவே கிரிக்கட் அணியின் முக்கிய வீரர் ஹென்றி ஒலங்காவினதும் குத்துச்சண்டை வீரர் முகமது அலி அவர்களிருவரினதும் வரலாறுகள் இதற்கு சிறந்த உதாரணம் என்று கருதுகிறேன். 2003ம் ஆண்டு நடந்த உலக கிண்ண கிரிக்கட் ஆட்டத்தில் ஹென்றி ஒலங்கா தனது இனத்திற்காக தன்னால் இயன்ற முற்று முழுதான போராட்டத்தில் ஈடுபட்டிருந்தார். அந்த நாட்களில் அவர் கூறிய வசனங்கள் இன்றும் எப்படி விளையாட்டினூடு அரசியல் நகர்த்தப்படுகிறது என்பதற்கு மிகப்பபெரிய எடுத்துக்காட்டாகும்.

நாங்கள் தொழில்ரீதியான மட்டைப்பந்து(ஊசiஉமநவ) ஆட்டக்காரர்களாக இருந்தபோதிலும்இ எங்களது தேசத்தில் நடக்கும் கண்மூடித்தனமான மனித உரிமைமீறல்களைஇ படுகொலைகளைப் பார்த்துக்கொண்டு மனசாட்சியை மீறீ அமைதியாக இருக்க இயலாது. எங்களது மவுனம் இ எங்களது தேசத்தில் நடப்பவைகளைப் பற்றிய அக்கறையின்மையாக வெளிப்படுமோ என்றெண்னிஇ இந்த சந்தர்ப்பத்தில் எங்களது அரசாங்கத்திற்கான எதிர்ப்பைஇ உலகக்கோப்பைப்போட்டிகளில் கருப்புப் பட்டையை அணிந்து பதிவு செய்கின்றோம்.

ஹென்றி ஒலாங்கா (முன்னாள் சிம்பாவே ம‌ட்டைப்ப‌ந்து வீர‌ர்)

என்னை நீக்ரோ என்றழைக்காத வியட்காங்கையர்களை (வியட்நாமிய கம்யூனிஸ்டுகள்) நான் ஏன் கொல்லப்போகவேண்டும்” .”என்னுடைய சொந்த மக்களே இங்கு அடிமைகளாகவும் அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டவர்களாகவும் கிடக்கும்பொழுதுஇஇ பத்தாயிரம் மைல்கள் கடந்து சென்று வெள்ளைக்காரர்களுக்கு அடிமையாக்க நான் ஏன் பழுப்பு நிறமக்களை சீருடை அணிந்து கொல்லவேண்டும்”.வியட்நாம் போருக்கான ராணுவத்தில் கட்டாயமாக சேர்க்கப்படஇ ராணுவ உயரதிகாரிகளால் தன் பெயர் அழைக்கப்பட்டபொழுது நான்காவது முறையும் முன்னுக்கு வராமல் நின்றதால் தண்டனைக்குள்ளாக்கப்பட்டார்.

—– முக‌ம‌து அலி (உலகப்புகழ் பெற்ற குத்துச்சண்டை வீரர்)

இந்த வீரர்கள் தமது இனத்துக்கெதிரான அரசின் நிலைப்பாட்டை,அடக்குமுறைகளை தத்தமது ஸ்தானத்தில் இருந்து எதிர்த்தார்கள். தம்மால் இயன்றவரை போராடினார்கள். இன்று நாங்கள் பேசக்கூடிய அளவிற்கு தமக்கெதிரன அரசின் அடக்குமுறைகளை வெளிக் கொணர்ந்தார்கள். இந்த போராட்டம் விளையாட்டினூடாகத் தான் நடந்தேறியது என்பதை யாராலும் மறுக்க முடியாது. சிம்பாவேயில் ஒரு இனத்திற்கெதிராக மாபெரும் வன்முறை கட்டவிழ்த்து விடப்பிட்டிருக்கின்றது என்ற சேதியை, அந்த வீரன் போட்டியில் கறுப்பு பட்டி அணியும் வரை அறிந்திராத அனைவருக்கும் சொன்னான். அது தான் மக்கள் மயப்படுத்தப்பட்ட போராட்டம். தனது இனத்திற்கெதிரான ஆக்கிரமிப்பை எதிர்ப்பதற்கு அந்த வீரன் எடுத்துக் கொண்ட ஆயுதம் விளையாட்டு என்பது மட்டும் போதுமானது அரசியல் எப்படியெல்லாம் செய்யமுடியும் என்பதற்கு.

அரசியல் என்பது தேர்தல்களின் போதும் நாடாளுமன்றத்திலும் மட்டும் தான் செய்வதன்று. அப்படிப்பட்ட அரசியல்கள் அரசியல்வாதிகளால் செய்யபட்டும் அரசியல். மக்கள் மயப்படுத்தப்ட்ட அரசியல் வித்தியாசமானது. தமது அபிலாசைகளை எந்தவழிகளிலெல்லாம் சொல்ல முடியுமோ அந்தந்த வழிகளிலெல்லாம் சொல்லிக் கொண்டிருப்பது தான் மக்கள் மயப்படுத்தப்பட்ட அரசியல். தமிழ் மக்களுக்கு இன்று தேவையானது மக்கள் மயப்படுத்தப்பட்ட அரசியல். "விளையாட்டும் அரசியலும் வேறு வேறு" என்று சொல்லப்படுவதே ஒரு அரசியல் தான் என்று புரிந்து கொள்ளும் மக்களின் அரசியல் தான் இன்று தமிழ் மக்களுக்கு தேவை.

சிறிலங்கா அரசு நகர்த்திய அரசியல்
சிறிலங்கா அரசானது உலக கிண்ண கிரிக்கட் காலப்பகுதியில் தமிழ் ஊடகங்கள், பேஸ்புக் மற்றும் ருவீட்டர் என்பவற்றினூடாக தனது நகர்வுகளை விஸ்தரித்திருந்தது. சிறிலங்காவை பொறுத்தவரை சிறிலங்காவின் அத்தனை தமிழ் ஊடகங்களையும் இந்த நடவடிக்கைக்கு பாவித்திருந்தது சிறிலங்கா அரசு. வானொலி, தொலைக்காட்சி,தினசரிப்பத்திரிகைகள் வாராந்த மற்றும் மாதாந்த எழுத்து ஊடகங்களை மட்டுமல்லாது வலைப்பதிவுளிலும் தமது செயற்பாட்டை விரிவுபடுத்தியிருந்தனர். "I am Sri lanka" என்ற வசனமும் சிங்க கொடியும் எல்லா இடங்களிலும் பொறிக்கபட்டிருந்தன. சிறிலங்கா எமது தாய்நாடு, அரசியலும் விளையாட்டும் வேறு வேறு என்று எல்லா இடங்களிலும் திரும்ப திரும்ப சொல்லப்பட்டடுக்கொண்டிருந்தன. தமிழ் மக்களின் உரிமைகள் மறுக்கபட்டுக்கிடக்கும் தேசத்தில். சிறிலங்கா எமது தாய்நாடு என்பது திணித்தலினூடாக மாபெரும் அரசியல் நகர்வை சிறிலங்கா அரசு திட்டமிட்டிருந்தது என்பது தான் வெளிப்படை உண்மை. தமிழ் மக்களை கொன்று குவித்து வெற்றி விழா கொண்டாடியபோது தமிழ் மக்கள் புறக்கணித்த சிங்க கொடியை தமிழ் மக்களை கொண்டாட வைத்தல் என்பது அரசியல் அன்று வேறெதாய் இருக்க முடியும்? விடுதலைப்புலிகள் களத்தில் இருந்தபோது கொண்டாடப்படாத உலக கிண்ணங்கள்,தேசிய கொள்கைகள் ஏன் இப்பொழுது தமிழ் மக்களிடத்தில் கொண்டாடப் பண்ணுவதற்காக அரும்பாடுபடவேண்டும்? சிறிலங்கா என்ற தேசத்தில் எது நடந்தாலும் அது உள்வீட்டுப்பிரச்சினை, தவிர எல்லா மக்களும் சிறிலங்கா தேசியத்தை கொண்டாடுகிறார்கள் என்ற செய்தி உலக நாடுகளுக்கு சொல்லப்பட் வேண்டும் என்பதிலையே சிறிலங்கா அரசு இந்த உலக கிண்ண கிரிக்கட்டில் முற்று முழுதாக ஈடுபட்டது என்பதை தமிழ் மக்கள் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும்.   

மனித உரிமை மீறல்கள்,தமிழர் தாயகப்பகுதியில் நடக்கும் நிலப்பறிப்புகள், கைதுகள்,கடத்தல்கள், கப்பம் கோரல்கள், பாலியல் பலாத்காரங்கள் இப்படி சிறிலங்கா அரசு செய்துவரும் அனைத்து அடாவடித்தனங்களும் இந்த உலககிண்ண கிரிக்கட் காலத்தில் மக்களை சென்றடையாது தடுத்து மக்களின் மனநிலையை திசைதிருப்புவதினூடாக அரசுக்கெதிரான மக்களின் போக்கை கணிசமான அளவு தடுத்துவிடலாம் என்றே அரசு நம்பியது. அது சிறிதளவேனும் வெற்றியளித்திருக்க வேண்டும். காரணம் போர்க்குற்ற ஆதாராங்கள், கடந்த சில நாட்களுக்குள் நடந்தேறிய படுகொலைகள், தமிழ் மொழியில் மொழிபெயர்க்கப்படாமல் நாடாளுமன்றத்தில் சமர்க்கப்பட்ட சட்டவாக்கல்கள் இப்படி தமிழ் மக்களுக் கெதிரான பாரிய செயற்பாடுகள் நடந்து கொண்டிருக்கும் இந்த காலப்பகுதியில் தமிழ் மக்களில் பலர் "சிறிலங்கா கிரிக்கட்ட தோற்பதற்கு சூதாட்டம் காரணமா"என்ற விவாதத்தை நடாத்திக் கொண்டிருக்கிறார்கள். 

எதிரிக்கு சிறிது இடைவெளிவிட்டாலும் அவன் தன்னை தயார்ப்படுத்திக் கொண்டுவிடுவான். அது ஆயுதப்போராட்டம் என்றாலும் சரி அரசியல் போராட்டம் என்றாலும் சரி. சலுகைகள் இலவசங்கள் இப்படி பலவற்றை வழங்கியும் உள்ளூராட்சி தேர்தலில் தமிழ் மக்கள் அரசுக்கெதிரான நிலைப்பாட்டை தெளிவாக சொல்லியிருந்தனர். ஈழத்தில் வாழும் தமிழ் மக்களால் செய்யப்பட்ட மிக்பெரிய அரசியல் அது. அதை விட இந்த மக்களால் எதுவும் செய்யமுடியாது. தமிழ் மக்கள் தன்னை ஏற்றுக் கொள்ளாவிடினும் இராணுவ வேலிக்குள் தனக்கெதிராய் அவர்களால் ஒன்றும் செய்ய முடியாது என்று அரசிற்கு மிக நன்றாகவே தெரியும். அதனால் அரசிற்கு இப்போதுள்ள பிரச்சினை புலம்பெயர் தமிழர்கள் செய்யும் அரசியல் நகர்வுகளை சிதைப்பது. அல்லது தற்காலிகமாகவேனும் புலம்பெயர் தமிழர்களின் அரசியலை திசை திருப்பி தன்னை சுதாதரித்துக் கொள்வது. அரசு தன்னை தயார்படுத்திக் கொள்வதற்கான கால அவகாசத்தை புலம் பெயர் தமிழ்மக்களின் மனநிலையை மாற்றுவதுடன் எடுத்துக் கொள்ளலாம் என்று கருதுகிறது. 

"சிறிலங்கா கிரிக்கட்டை எதிர்ப்பதனால் தமிழீழத்தை பெற்றுவிடலாம் என நாடுகடந்து ஒப்பாரி வைக்கும் தமிழர்கள்" என்று சிறிலங்கா வானொலி ஒன்றின் மிகப்பிரபலமான தமிழ் அறிவிப்பாளர் ஒருவர் தனது பேஸ்புக் மற்றும் ருவீட்டர் நிலைச் செய்தியல் போட்டிருந்தார். இது தான் அரசு எதிர்பார்த்த அரசியல். தமிழ் மக்களின் அரசியல் சிந்தனைகளை சிதைப்பது இப்படியான சொல்லாடல்களினூடுதான்.சிறிலங்கா கிரிக்கட்டை எதிர்த்தல் என்பது, உலக கிண்ண கிரிக்கட் எனும் உலக அரங்கில் சிங்கள அரசால் நசுக்கபடும் தமழ் மக்களின் அரசியல் அபிலாசைகள் மற்றும் உரிமைகள் குறித்து பேசுவதற்கான ஒரு சந்தர்ப்பம் மட்டுமே. தவிர சிறிலங்கா கிரிக்கட்டடை எதிர்பதால் தமிழீழம் கிடைக்கும் என்பதல்ல. "நான் சிறிலங்கா கிரிக்கட்டை எதிர்க்கிறேன்" என்று சொன்னால் நீ சிறிலங்கன் தானே ஏன் உனது நாட்டின் கிரிக்கட்டை எதிர்க்கிறாய் என்று இன்னொரு நாட்டு நண்பன் என்னிடம் கேட்பான். அவனுக்கு நான் காரணத்தை சொல்வேன். "ஓ... இப்படியெல்லாம் சிறிலங்கா அரசு செய்கிறதா" என்று ஏங்கிப்போவான். நாளை "உன் வீட்டுக்காரர் நலமாக இருக்கிறார்களா" என்று கேட்பான். இது தான் விளையாட்டினூடாக நாங்கள் உலகிற்கு சொல்ல வேண்டிய செய்தி. விளையாட்டை மட்டுமல்ல சிறிலங்காவின் பிரபலமான எதை புறக்கணிக்கும் போதும் எம்மீதான அடக்குமுறைகள் குறித்து இன்னொரு நாட்டுக்காரனுடன் பேசும் வெளியொன்று உருவாகிறது. எமது பிரச்சினைகளை உலக மயமாக்க வேண்டும். எமது உரிமைகளை பெற்றுத்தாருங்கள் என்று எங்கெங்கெல்லாம் இருக்கிறோமோ அங்கங்கெல்லாம் வீதிக்கிறங்கும் போது அந்த நாட்டுமக்கள் எம்மோடு கை கோர்க்க வேண்டும். அந்த மக்கள் மயப்படுத்தப்ட்ட அரசியல் தான் இன்று தமிழ் மக்களுக்கு தேவை.


தமிழ் மக்களை எண்ணுக்கணக்கற்று கொன்று குவித்து பிணங்களின் மேல் ஏறி நின்று வெற்றி விழாக் கொண்டாடிய போது எல்லா சிங்களவர்களும் நெஞ்சினில் குற்றியிருந்த சிங்க கொடியினை தான் எங்களில் பலர் உலக கிண்ண கிரிக்கட் போட்டியின் போது குற்றியிருந்தார்கள். எப்படி முடிகிறது இந்த மனிநிலை? இனத்திற்காய் ஆக குறைந்தது ஒரு விளையாட்டை கூட நிராகரிக்க திராணியற்ற இனமா நாம்? இலங்கையன் என்று சொல்வதற்கு சமஉரிமை தகுதி கூட இல்லாத தமிழர்கள் ஏன் சிங்க கொடியினை கொண்டாட வேண்டும்? அது அருவருப்பாக இல்லையா? மாத்தறையில் ஒருவனுக்குள்ள உரிமையின் எல்லை வன்னியில் இருக்கும் எனக்கும் வேண்டும். அதுவரை சிங்க கொடியை நிராகரித்துக் கொண்டே இருப்போம்.யாழ்ப்பாணம்,வவுனியா,மன்னார்,மட்டக்களப்பு,அம்பாறை,திருகோணமலை இப்படி எல்லா இடங்களிலும் நிராகரித்துக் கொண்டே இருப்போம். அந்த கொடியை கொண்டாடும் எல்லோருக்கும் சம உரிமைகள் வழங்கப்பட்ல் வேண்டும். உரிமைகளே வழங்கப்படாத போது அவனது கொடியினை கொட்டாடுவது வெட்கமாயிராது?சிறிலங்கா அரசால் ஏதிலிகளாக்கப்ட்டு இன்னொரு நாட்டின் தயவுடன் வாழும் புலம் பெயர் தமிழர்களில் பலரும் சிங்கக் கொடியை தூக்கியவாறு சிறிலங்கா கிரிக்கட் என்று அலைந்து திரிந்தது பெரும் வியப்புக்குள்ளாக்கியிருந்தது. சிறிலங்கா கொடியினை பாடசாலையில் வைத்து எரித்து தான் தமிழர்களுக்கான போராட்டம் புதிய பரிமானம் பெற்றது. பாடசாலை மாணவனாக இருந்தபோதே பாடசாலையில் வைத்து சிங்க கொடியை கொழுத்தும் அளவிற்கு சிறிலங்கா அரசு தமிழ் மக்கள் மீது எப்படிப்பட்ட வன்முறைகளை கட்டவிழ்த்திருற்தது என்பதை புரிந்து கொள்ள முடியும். 


எமது அரசியல் அபிலாசைகள் நிறைவேறும் வரை,எமக்கு நடந்து கொண்டிருக்கும் வன்முறைகளை யாராவது தட்டிக் கேட்கும் வரை,எம்மால் முடிந்த அளவு நாங்கள் போராடிக் கொண்டே இருக்க வேண்டும். தேர்தலில் வாக்களிப்பதை தவிர வேறெந்த வழிகளிலும் தமது அரசியல் அபிலாசைகளை பேசமுடியாத அளவிற்கு ஈழம் வாழ் தமிழ் மக்கள் தள்ளபட்டுள்ளனர். இந்த நிலையில் தமிழ் மக்களின் அரசியல் உரிமைகள் குறித்த போராட்டங்கள் புலம் பெயர் தமிழ் மக்களினூடாக தான் நகர்த்தப்பட வேண்டும் என்ற யதார்த்தத்தை புலம்பெயர் தமிழ்மக்கள் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும். பொது இடங்களில் சிறிலங்கா மீதான நிராகரிப்புகளை வெளிப்படுத்த வேண்டும். நாங்கள் ஏன் நிராகரிக்கிறோம் என்ற காரணம் உலகமயப்படுத்தப்பட வேண்டும். எமது காரணங்கள் எல்லா மக்களுக்கும் தெரியுமிடத்து எமது போராட்டங்களுக்கு பெரும் பக்கபலமாக அது அமையும். சிறிலங்கா கிரிக்கட்டை நிராகரிப்பதால் தமிழீழம் கிடைக்குமா என்ற முட்டாள்த்தனமான விவாதங்களை விடுத்து இப்படியான சந்தர்ப்பங்களில் எமது அரசியலை பேசக்கூடிய வெளிகளை உருவாக்கிக் கொள்ளல் வேண்டும். மற்றய இனங்கள் எப்படி தமது அரசியல் போராட்டங்களை நகர்த்தி வெற்றிகண்டன என்று நாங்கள் சிந்திக்க வேண்டும். மக்கள் மயப்படுத்த போராட்டங்களிற்கு எந்த ஆதிக்க சக்தியும் ஆட்டம் காணும். சிறிலங்கா அரசை தொடர்ந்து நாங்கள் நிராகரிப்பதினூடு உலகம் நிட்சயமாக ஏதாவது செய்தாக வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாகும். அதை யாராலும் மறுக்க முடியாது. இனத்திற்காய் எம்மால் இயன்றவரை போராடுவோம். போராடும் வழிகளாக எமக்கு கிடைக்கும் சந்தர்ப்பங்களை பயன்படுத்திக் கொள்வோம்.  அடிமைப்படுத்தப்பட்டு கிடக்கும் இனத்திற்காக அதன் மக்கள் உலகெல்லாம் இருந்து போராடினார்கள் என்ற வரலாற்றை பதிவு செய்வோம்.

ஆதி

Blog template by simplyfabulousbloggertemplates.com

Back to TOP