Powered by Blogger.

Wednesday, September 14, 2011

இதற்கு யார் காரணம்??

தமிழர் தாயகப்பகுதியில் குறிப்பாக யாழ் சமூகத்தை மையப்படுத்தி பெருமெடுப்பிலான சமூக விரோத செயல்கள் கலாச்சார சீரழிப்புகள் ஊக்குவிக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன. சிறிலங்கா அரசின் மறைமுக ஊக்குவிப்புகள் இருந்தாலும் நேரடி ஊக்குவிப்புகள் அல்லது காரணிகள் தொடர்பில் அவசரமாக கவனம் செலுத்துவது இன்றியமையாதது.
இன்றைய சமூக சீரளிவுகளுக்கு முக்கிய காரணங்களாக
1)பணம்
2)பெற்றோர்களின் கட்டுப்பாடின்மை

இருக்கின்றன.

பெறறோர்களின் கட்டுப்பாடின்மை மற்றும் கவனிப்பின்மை

பாடசாலை மாணவர்கள் பாலியல் தவறுகள் இழைக்க கூடிய அளவிற்கு கட்டுப்பாடற்று செல்கிறது சமூகம்.

சில நாட்களின் முன் நடந்த சம்பவம் ஒன்று, சுண்ணாகம் பகுதியில் ஒரு மாணவி அவரது காதலருடன்  ஓடிச் சென்றார் 3 நாட்களின் பின் சில இளைஞர்களால் பலவந்தமாக அந்த மாணவியின் வீட்டுக்கருகில் இறக்கிவிடப்பட்டுள்ளார்.  இந்த மாணவி ரீயுசன் வகுப்பிற்கு செல்வதாக வீட்டை விட்டு வெளியில் புறப்பட்டுவிட்டு வீதியில் விளையாடிக் கொண்டு நின்ற சிறுவர்களிடம்  "நான் பத்து வருசத்திற்கு பிறகு தான் வீட்டுக்கு வருவேன்" என்று சொல்லிவிட்டு சைக்கிளை அந்த சிறுவர்களிடம் வீட்டில் கொடக்குமாறு கூறிவிட்டு அங்கு வந்த ஆட்டோவில் ஏறிச் சென்றிருக்கிறார். அதாவது அந்த மாணவியின் நடவடிக்கைகள் செயற்பாடுகளில் இருக்க கூடிய மாற்றங்கள் குறித்து எந்த அக்கறையுமற்று பெற்றோர்கள் இருந்திருக்கின்றனர்.

பாலியல் என்றால் என்ன என்பது பாலியல் உறவு என்றால் என்ன என்பது பதின்ம வயது சிறுவர்களுக்கு பாடசாலைகளில் சொல்லிக் கொடுக்கப்படுவதால் அவர்கள் அதன் பால் ஈர்க்கப்படுகின்றனர். முந்தைய காலங்களில் ஆண்டு 11 விஞ்ஞானப்பாடப் புத்தகத்தில் பாலியல் சம்மந்தப்பட்ட ஒரு அத்தியாயம் இருந்தது. ஆனால் அது குறித்த தரவுகளையும் பாடத்தின் ஆளம் குறித்தும் ஆசிரியர்கள் அக்கறை காட்டுவது கிடையாது. அதனால் அந்த அத்தியாம் குறித்து பெரிதும் மாணவர்கள் அலட்டிக் கொள்வது இல்லை. ஆனால் இன்றைய நிலையில் ஆணுறை என்றால் என்ன ஏன் பாவிக்கப்படுகிறது உள்ளிட்ட பல பரீட்சைப்பாடத்திட்டத்திற்கு தேவையற்ற பாடப்பரப்புகளை மாணவர்களுக்கு பலவந்தமாக திணிக்கப்படுகிறது. பதின்ம வயதுகளின் உளவியல் தாக்கம் எதையும் செய்து பார்க்கத் தூண்டும். அந்த வகையில் இந்த பரீட்சைக்கு தேவையற்ற பாடப்பரப்பின் மீது அதிக அளவில் மாணவர்கள் ஈர்க்கப்படுகின்றனர்.
ஒரு மருந்தக நண்பர் சொன்னார் மாவட்ட ரீதியில் யாழ் மாவட்டத்தில் தான் அதிகளவு ஆணுறைகள் விற்பனையாகின்றன என்று.

தவிர பிள்ளைகள் பாடசாலை தவிர்த்து என்னென்ன செயற்பாடுகளில் நாட்டம் கொண்டுள்ளனர் என்பதை பெற்றோர்கள் கவனிப்பது கிடையாது.

விடுதலைப்புலிகள் நிர்வாகத்தில் இருந்த காலத்தில் மாணவர்கள் பொதுவாக இரவுகளில் வீதிகளில் திரிவதோ பொது இடங்களில் கூடி நிற்பதோ கிடையாது. "இயக்கம் பிரச்சாரம் வைச்சு பிள்ளைகள இயக்கத்துக்கு கொண்டு போயிருவாங்கள்" என்று பல பெற்றோர்கள் தமது பிள்ளைகளின் போக்குவரத்து குறித்து அதிக அக்கறையில் இருந்தனர். மற்றது பொது இடங்களில் வீதிகளில் இடம் பெறக்கூடிய சமூக சீர்கேடுகளுக்கு விடுதலைப்புலிகள் வழங்கிய தண்டனைகள்.

இலகுவில் தவறான வழிகளில் செலுத்தப்படக்கூடியவர்களாக பள்ளிப்பருவத்தில் இருக்கும் மாணவர்களே. அதாவது பதின்ம வயது இளைஞர் யுவதிகள் புறச் சக்திகளால் இலகுவில் எந்த வழியிலும் வழிநடத்தப்படக் கூடிய அபாயம் இருக்கிறது. இது உளவியல். அந்த வகையில் பெற்றோர்கள் பாடசாலை மாணவர்கள் பாடசாலை தவிர்ந்த செயற்பாடுகளில் ரீயூசன் வகுப்புகள் மற்றும் மேலதிகள வகுப்புகள் பழகும் நண்பர்கள் நண்பர்கள் குழுமும் இடங்கள் உள்ளிட்ட பிள்ளைகளின் செயற்பாடுகளில் அக்கறையின்றி காணப்படுகின்றனர்.

பாடசாலை மாணவர்கள் எல்லோரும் தொலைபேசி பாவனையாளர்களாக இருக்கிறார்கள். இது கூட இன்றைய யாழ் சமூகத்தின் சமூக சீரளிவுகளிற்கு முக்கிய பங்காக இருக்கிறது.

எல்லா சீரளிவுகளுக்கும் முழுக் காரணம் பணம்.
பிள்ளைகளுக்கு செலவுக்கதிகமாக தாராளமாக பணம் கிடைப்பது சமூக சீர்கேடுகளிற்கு மிக முக்கிய காரணமாக இருக்கிறது.

இன்று வீதிகளில் சிகரட்பிடித்து தண்ணி அடித்துவிட்டு ரவுடித்தனம் பண்ணுபவர்களும் பெண்களுடன் சேட்டை விடுபவர்களும் எந்த வேலைகளும் செய்யாமல் வெட்டியாக வீடுகளில் இருப்பவர்களே தான். அவர்களைத் தவிர பாடசாலை மாணவர்கள். இப்படியானவர்களுக்கு வீடுகளில் தாராளமாக பணம் கிடைப்பதனால் தான் பல துஸ்பிரயோகங்களில் ஈடுபடுகின்றனர்.

ரீயுசன் வகுப்புகள் என்று சொல்லிவிட்டு பள்ளி மாணவர்கள் (ஆண் பெண் இருபாலாரும்) இன்று ராஜா மனோகரா திரையரங்குகளில் இரவு நேரக் காட்சிகளுக்கும் வருவதை காணமுடிகிறது. சிலர் பாடப்புத்தகங்களுடனேயே வருகின்ற கொடுமையும் நடக்கிறது. அருவருப்பூட்டும் விதமாக கண் முன்னாலையே சமூகம் கெடுக்கப்ட்டுக் கொண்டிருக்கிறது.

இன்று யாழில் இயங்கும் பல லொட்ஜ்கள் கணவன் மனைவி என்ற எந்த ஆதாரங்களும் இன்றி ஆண் பெண் தங்குவதற்கு சாதாரணமாக அறைகளை கொடுக்கின்றனர். பணத்தை மட்டுமே நோக்க மாக கொண்டு இயங்கும் இந்த லொட்ஜ் உரிமையாளர்களில் பெரும்பான்மை இனத்தவரும் இருக்கின்றனர். தென்னிலங்கை விலை மாதர்களும் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களுக்கும் இவர்களில் பலர் ஏஜன்டுகளாக செயற்படுகின்றனர்.

திரையரங்குகளுக்கு செல்லவும், தண்ணியடிக்கவும், சிகரட் பிடிக்கவும், ஆணுறை வாங்கவும் சொந்தமாக உழைக்காத இவர்களுக்கு எப்படி பணம் வருகிறது?

பல்சர் உள்ளிட்ட பஷன் மோட்டார் சைக்கிள்களில் தங்கள் பிள்ளைகள திரிவதை பெருமையாக நினைக்கும் பெற்றோர் கலாச்சாரம் வெகு வீரியத்தோடு வளர்ந்து வருகிறது. வகுப்பு கட்டணங்களை தவிர பெரிய பணப்புளக்கங்கள் இருந்திராத தமிழ் மாணவர் சமூகத்திடம் இன்று ஆயிரக் கணக்கில் கைகளில் புரள்கிறது. மோட்டார் சைக்கிள்களில் வகுப்பிற்கு செல்லும் பஷன் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. கட்டாயம் காதலர் ஒருவர் இருந்தாக வேண்டும், கட்டாயம் காதலர்கள் சந்தித்தாக வேண்டும் என்பது போலான வளர்ச்சி பாரிய அளவில் பதிம்ம வயதுக் காரர்களிடம் ஊடுருவி வருகிறது.

இந்த பதிம்ம வயத்துக்காரர்களின் எதிர்பார்ப்பிற்கேற்றவாறு பெற்றோர்களும் பணங்களை இறைக்கின்றனர். பெற்றோர்கள் பணம் கொடுக்காவிடில் இவர்களின் தேவைக்கு  என்ன செய்வார்கள்??? சத்தம் போடாமல் வீட்டில் இருப்பார்கள் தானே!!!

முந்தித்தான் வீட்டில் ஏசினால், கேக்கிறது குடுக்காட்டி பெடி இயக்கத்துக்கு போயிருவான் என்பீர்களே இப்பொழு பெடி பெட்டையள கட்டுப்படுத்துறத்துக்கு என்ன பிரச்சினை என்று காவாலிகளின் பெற்றோர்களை கேட்க வேண்டும் போல் உள்ளது.

சொந்த வேலைகள் செய்யாமல் வீடுகளில் இருந்து பணம் கிடைப்பவர்கள் தான் இன்று சமூக சீரளிவுகளுக்கு மிக முக்கிய காரணமாக இருக்கிறார்கள் என்பதை என்னால் அடித்துச் சொல்ல முடியும். பதினொராம் ஆண்டு படிக்ககிற பெடியனுக்கு "கொண்டம்" எதற்கு?? கொண்டம் வாங்குவதற்கு பணம் எங்கிருந்து வருகிறது. லொட்ஜில் ரூம் எடுப்பதற்கு எங்கிருந்து பணம் வருகிறது. 11ம் ஆண்டு பையனை காதலிக்கும் 10 ம் ஆண்டு பிள்ளைக்கு பாலியல் உறவு வைத்துக் கொள்ள துணிவு எப்படி வருகிறது. இவர்களை இந்த அளவுக்கு மாற்றிய வெளிச் சக்தி என்ன?? எல்லாமே யோசிக்க வேண்டிய விடையங்கள்.

"பேஸ்புக்" "ரக்ட்" போன்ற சமூக தளங்களில் தாராளமாக திசை மாறிச் செல்கிறது எமது சமூகம். பிள்ளைகளை கட்டுப்படுத்துவதும் கண்காணிப்பதும் பெற்றோர்களது கடமை. சமூக ஆர்வலர்கள் இது குறித்து கடுமையான முடிவுகளை எடுத்தால் பாதிக்கப்படுவது இந்த பதின்ம வயது இளையவர்களே!!

புலம்பெயர் உறவுகளே!!!!
நீங்கள் இயந்திர வாழ்வில் செத்துச் செத்து உழைத்து இங்கு பணம் அனுப்புகிறீர்கள். இயந்திர வாழ்வின் இழைப்பாறும் நேரத்தில் இனத்தின் விடிவிற்கான போராட்டங்களில் பங்கெடுக்கிறீர்கள் ஆனால் நீங்கள் இங்கு அனுப்பும் பணம் தவறான வழிகளில் சமூகத்தை சென்றடைகிறதோ என்ற அச்சம் வருகிறது. படித்துக் கொண்டிருக்கும் உங்கள் சகோதரங்கள் குறித்து மிகுந்த கவனமாயிருங்கள்.  நீங்கள் அனுப்பும் பணத்தை அவளவுக்கதிகமாக இளையவர்களின் கைகளில் செல்வது குறித்து அவதானமாயிருங்கள். கண்டிப்பாக இருங்கள்.

வீதியில் தண்ணியடித்துவிட்டு பெண்பிள்ளைகளுடன் சேட்டைவிட்ட ஒரு இளைஞனை சமூக ஆர்வலர்கள் பொலிஸ் இல் கொடுத்தார்கள் ஆனால் அவன் பொலிஸ்க்கு பணம் கொடுத்துவிட்டு வெளியில் வந்து விட்டான். வெறும் 17 வயது இளைஞன். பாடசாலை மாணவன். இவனுக்கு எப்படி பணம் வருகிறது. "அவன்ர அண்ணன் வெளிநாட்டில் இருக்கிறான் அவனுக்கென்ன"  இப்படி பேசுகிறார்கள். குளிரில் உறைந்து வெயில் காய்ந்து உங்கள் சொந்தங்களுக்கு அனுப்பும் பணம் சரியான முறையில் கையாளப்படுகிறதா என்பது குறித்து அவதானமாயிருங்கள். "இந்த காவாலிய பொலிஸ்ல குடுக்காம ஒரு காலையும் கையையும் முறிச்சுப் போட்டு விட்டிருந்தா 6 மாசம் படுக்கையில கிடக்கேக்க திருந்தியிருக்கும்" இப்படி பேசுகிறார்கள் சமூக அக்கறையுள்ளவர்கள்.

சமூகத்தின் நலனுக்கு பங்கம் விளைவிக்கும் ஆண் பெண் பிள்ளைகளின் விபரங்களை மருந்தகங்களில் ஆணுறை வேண்டும் பாடசாலை மாணவர்கள் குறித்த ஆதாரங்களை எடுத்து வெளியிடுவது பெரும் சிரமமானதல்ல ஆனால் அது எதிர்காலத்திற்கு நல்லதல்ல.

பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு அளவுக்கதிகமாக பணம் கொடுப்பதை நிறுத்த வேண்டும். பிள்ளைகளின் நடவடிக்கைகள் குறித்து கண்காணிக்க வேண்டும்.

ஆதி
14-09-2011

Wednesday, September 7, 2011

தமிழர் அகதி அந்தஸ்திற்காக போராடிய அவுஸ்ரேலியர் டேவிட் மான் (Devid Mann)

அவுஸ்ரேலியாவில் அகதி அந்தஸ்து கோரிய ஈழத்தமிழர்களை மலேசியாவிற்கு திருப்பி அனுப்புவதற்கு அவுஸ்ரேலிய அரசாங்கம் பல நடவடிக்கைகளை எடுத்துவந்துள்ள நிலையில் அவர்களை திருப்பி அனுப்புவது சட்டவிரோதம் என நீதிமன்றத்தில் வாதாடி வென்றிருக்கிறார் டேவிட்மான்.

திருப்பி அனுப்பும் நடவடிக்கையை தடுத்து நிறுத்திய சட்டத்தரணி டேவிட்மான் க்கு முதலில் எமது நன்றியை தெரிவித்து கொள்ள வேண்டும். எந்த எதிர்பார்ப்பும் இன்றி ஒரு இனத்தின் அகதி உரிமைக்காக இவர் வாதிட்டு வென்றிருப்பதென்பது நிட்சயமாக வாழ்ப்பட வேண்டியஒன்று.

சிறிலங்கா அரசு சிறிலங்காவில் சுமூக நிலை தோன்றிவிட்டதென்றும் தமிழர்கள் இயல்பாக இருக்க கூடிய சூழ்நிலை உருவாகிவிட்டதென்றும் பிரச்சாரப்படுத்திவரும் நிலையில் அவுஸ்ரேலியாவில் அகதி அந்தஸ்து கோரிய தமிழர்களை வேறு நாட்டிற்கு திருப்பி அனுப்ப வேண்டாம் என அவுஸ்ரேலிய அரசு அறிவித்துள்ளதென்பது அரசியல் முக்கியத்துவம் பெறுகிறது.  பாதிக்கப்ட்ட இந்த தமிழ்மக்களுக்கு தமது சொந்த நாட்டில் பாதுகாப்பில்லை என்ற செய்தியை அவுஸ்ரேலிய நீதிமன்றம் ஏற்றுக் கொண்டுள்ளமை புலம்பெயர் தமிழ் மக்களுக்கு கிடைத்த மிகப்பெரிய ஒரு நற்செய்தி. இதன் அடிப்படையில் சிறிலங்கா அரசு மீது அழுத்தங்கள் கொடுக்கவும் சிறிலங்கா அரசின் மனித உரிமை மீறல்கள் மற்றும் தமிழர் உரிமை மறுப்புகள் குறித்தும் கேள்வியெழுப்ப முடியும்.

சிறிலங்காவில் தமிழ் மக்களுக்கு எதிரான அரசின் போக்குகளை சர்வதேச அளவில் வெளிக்காட்டுவதற்கு பலவழிகளிலும் தமிழ் மக்கள் போராடிக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் தமிழ் மக்களின் அகதி அந்தஸ்து கோரிக்கையை ஏற்றுள்ளமை அல்லது திருப்பி அனுப்பபடவிருந்த தமிழ் அகதிகளை திருப்பி அனுப்பாமல் தடுத்துள்ளமை என்பது தமிழ் மக்களின் நிலை குறித்த செய்தி ஒன்றை சொல்லியிருக்கிறது. தமிழ் மக்களின் அவலங்களை புரிந்து சிறிலங்காவில் இருக்க கூடிய பாதகத்தன்மையை புரிந்து திருப்பி அனுப்பப்பட இருந்த தமிழ் மக்களுக்காக சட்டத்தரணி டேவிட்மான் வாதாடியிருப்பதென்பது நிட்சயமாக தமிழர்கள் நாம் நன்றிக்கடன்பட்டுள்ளோம்.

பிரபலாமான இவ் சட்டத்தரணிகள் எமது உரிமை குறித்த விவாதங்களில் ஈடுபடுவதை நாங்கள் ஊக்குவிக்க வேண்டும். அவர்களுக்கு எமது நன்றிகளை தெரிவிக்க வேண்டும். இப்படிப்பட்ட சட்டத்தரணிகளை தொடர்ந்து ஊக்குவிப்பதன் மூலம் எமது உரிமைப்பிரச்சினைகளை சர்வதேச அளவில் கொண்டு செல்வதற்கும் அந்நதந்த நாட்டு அரசுகளுக்கு புரிய வைப்பதற்கும் இலகுவாக இருக்கும்.

தமிழ் மக்களே!! இந்த சட்டத்தரணிக்கு உங்கள் நன்றிகளை தெரிவித்துக் கொள்ளுங்கள். மின்னஞ்சலூடாகவே அல்லது வேறு வழிகளிலோ உங்கள் நன்றிகளை தெரிவித்து தொடர்ந்து ஊக்கப்படுத்துங்கள். சிறிலங்காவில் இருக்க கூடிய தமிழ் மக்கள் மீதான அடக்குமுறைகளை பேசக்கூடிய குரல்களை நாங்கள் வளப்படுத்த வேண்டும். எமது நன்றிகளையும் விருப்புகளையும் தெரியப்படுத்துமிடத்து  இவ்வாறான குரல்கள் எங்களுக்காக தொடர்ந்து ஒலிக்கும்.

ஆதி.

தூக்கு தண்டனையை எதிர்த்து மூண்டெழுந்த தமிழ் சமூகம்.

ரஜீவ் காந்தியின் கொலை வழக்கில் குற்றவாளிகளாக சோடிக்கப்பட்டு தண்டனை அனுபவித்துவரும் பேரறிவாளன் முருகன் மற்றும் சாந்தன் உள்ளிட்டோரினது கருணை மனுக்களை நிராகரித்த இந்திய ஜனாதிபதி அவர்களை தூக்கிலிடுமாறு பணித்திருந்தார். ஏறத்தாள இரட்டை ஆயுள் தண்டனை காலத்தை சிறையில் அனுபவித்த பின்னர் இவர்களின் கருணை மனுவை நிராகரித்திருக்கிறது இந்திய மத்திய அரசு.

செப்டம்பர் 9ம் திகதி தூக்கிலிடுமாறு வேலூர் சிறைக்கு கட்டளை வழங்களப்பட்டிருந்தது. தூக்கு மேடை தூசி தட்டப்பட்டது. வர்ணம் பூசப்பட்டது. தூக்கிற்கு தெரிவு செய்யப்ட்டு முறை குறித்து பேரறிவாளன் சாந்தன் முருகனுக்கு தெரிவிக்கப்ட்டது. 11 வருடங்கள் கிடப்பில் வைத்திருந்த கருணை மனுவை நிராகரித்த இந்திய மத்திய அரசு இவர்களை தூக்கிலேற்றுவதற்கு அவரசம் காட்டுகின்றமைக்கு பல காரணங்கள் சொல்லப்படுகின்றன.

ராஜீவ் காந்தி கொலை விசாரணை என்பது சந்தேகத்திற்கிடமான முறையில் நடாத்தப்பட்டிருக்கிறது. சம்மந்தப்பட்டவர்கள் விசாரிக்கப்படவில்லை. கொலை நடந்த இடத்தில் கிடைக்கப்பெற்ற ஆதாரங்கள் முழுமையான விசாரணைக்கு உட்படுத்தப்படவில்லை. விசாரணைக் குழுவிற்கு அரசியல் அழுத்தங்கள் இப்படி பல குழுறுபடிகளை கொண்ட விசாரணையைதான் ராஜிவ்காந்தி கொலை விசயத்தில் நடாத்தி முடித்திருக்கிறது இந்திய அரசு.

இந்திய பிரதமரின் கொலை சம்மந்தப்பட்ட விசாரணைகளை மிகச்சாதாரணமாகவும் அடிப்படை கண்டுபிடிக்காமலும் இந்திய புலனாய்வமைப்புகள் முடித்திருப்பது கேலிக்குரியதாக இருக்கிறது. இந்த கொலையில் பெரும் அரசியல் சதி இருப்பதாகவே நம்பப்படுகிறது. ஆனால் பற்றரி வாங்கி கொடுத்தவருக்கும் தற்கொலை குண்டுதாரி தங்க இடம் கொடுத்தவருக்கும் மரண தண்டனையை வழங்கியிருக்கிறது இந்திய நீதித்துறை. கொலையின் பின்னணியில் இருக்க கூடிய உள்நாட்டு அரசியல் சக்தி எது என்பதை கண்டுபிடிக்காமலே நேரடி தொடர்பில்லாத சந்தேக நபர்களை தூக்கிலிடும் அளவிற்கு இந்திய நீதித்துறையை அரசியல் அமைப்புகள் அழுத்தம் கொடுத்திருக்கின்றன என்றே நம்பப்படுகின்றது.

எது எப்படியிருப்பினும் தற்காலிகமாக தூக்கு தண்டனையை நிறுத்த வைத்திருக்கிறது தமிழகம்.

மூண்டெழுந்த தமிழகம்
இந்த விடையத்தில் என்றுமில்லாதவாறு தமிழகம் விழித்துக் கொண்டது. நாம்தமிழர் இயக்கம் மே.17 இயக்கம் மக்கள் மன்றம் எழுத்தாளர்கள் சமூக நலன்விரும்பிகள் மனித உரிமை ஆர்வலர்கள் தமிழ் உணர்வாளர்கள் என ஒட்டுமொத்த தமிழகமே மரண தண்டனைக்கு எதிராக களம் இறங்கியது என சொல்லலாம். ஊருராய் தெருத்தெருவாய் சென்று இந்த வழக்கில் இருக்கப்படக்கூடிய சோடிப்புகள் மற்றும் மரணதண்டனைக்கு அவசரம் காட்டும் இந்திய அரசின் கபடத்தனம் குறித்தும் மக்களுக்கு விளங்கப்படுத்தப்பட்டது தோழர்களால். கல்லூரி மாணவர்கள் சட்டத்தரணிகள் என போராட்டங்களில் இறங்கினர். ஆங்காங்கே சிறு சிறு அளவில் நடைபெற்றுக் கொண்டிருந்த போராட்டங்கள் சாகும் வரையிலான உண்ணாவிரத போராட்டமாக உருவெடுத்திருந்தன. உளலுக்கெதிராக அன்னா வினுடைய உண்ணாவிரப்போராட்டம் டில்லியில் நடைபெற்றுக் கொண்டிருந்த சமயத்தில் மரண தண்டனையை எதிர்த்து தமிழகத்தில் சாகும் வரையிலான உண்ணாவிரதப்போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. இந்திய அரச ஊடகங்கள் இந்த மரணதண்டனை போராட்டத்தை பெருமளவில் மறைத்தன என்றே சொல்லலாம். ஆனால் பல இயக்கங்களை சேர்ந்த தோழர்கள் மற்றும் எழுத்தாளர்கள் இந்த செய்தி மக்களை சென்றடைவதற்கு பல்வேறு உத்திகளை கையாண்டனர். சைக்கிள் பயணம் மோட்டார் சைக்கிள் பயணம் என ஒரு வழியிலும் இணையத்தில் சமூக தளங்களினூடாக மாபெரும் போராட்டத்தை நகர்த்தியிருந்தனர் என்றே சொல்லலாம். தமிழகம் முழுவதும் இளைஞர்கள் மத்தியில் இந்த போராட்டம் நகர்வதற்கு சமூகதளங்களில் முன்னெடுக்கப்ட்ட பாரிய அளவிலான கோஷங்களும் காரணமாக இருக்கலாம் என்று கருதுகிறேன்.

சாகும் வரையிலான உண்ணாவிரதப்போராட்டங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் சந்தர்ப்பத்தில் அனைவருக்கும் அதிர்ச்சியழித்த விடையம் தியாகி செங்கொடியின் தற்கொலை. மக்கள் மன்ற உறுப்பினராக இருந்த 22 வயதே ஆன செங்கொடி மூன்று உறவுகளின் தூக்கு தண்டனையை நிறுத்தக் கோரிய எல்லா போராட்டங்களிலும் முழுமையாக இணைத்துக் கொண்டடிருந்தவர். இவர் மூன்று பேரினதும் தூக்கு தண்டனையை நிறுத்தக் கோரி தீமூட்டி தன்னை மாய்த்துக் கொண்டது அனைவரையும் ஆதிர்ச்சியிலும் மீள முடியாத சோகத்திலும் ஆழ்த்தியிருக்கிறது.

இந்த நேரத்தில் மூவரின் தூக்கு தண்டனையை ரத்து செய்து தண்டனையை குறைக்கும்படி சட்ட மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுத்திருக்கிறார் தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா. தமிழ் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக தெரிவித்திருக்கிறார். இந்த இடத்தில் தியாகி செங்கொடிக்கு வீரவணக்கங்களை தெரிவிப்பதோடு முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவிற்கு நன்றிகளையும் சொல்ல கடமைப்பட்டிருக்கிறோம் நாம்.

சோர்ந்து போன புலம்பெயர் தமிழ் சமூகம்.
ராஜிவ்காந்தி கொலைவழக்கில் பொய்குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் தூக்கு தண்டனை விதிக்கப்ட்டுள்ள 3 தமிழ் உயிர்களை காக்க புலம்பெயர் தமிழ் சமூகம் இன்னமும் முழுவீச்சுடன் போராடவில்லை என்றே கூறலாம். வெளிநாடுகளில் உள்ள இந்திய தூதரகங்களிற்கு முன்னால் பெருமளவில் போராட்டங்கள் நடைபெறவில்லை.  பெருமளவில் போராட்டங்களை நடாத்தி தூக்கு தண்டனையை நிறுத்தியது இது தான் முதல்தடவை என்று நினைக்கிறேன். அதாவது மக்கள் சக்தி வென்றிருக்கிறது. தற்காலிகமாக தான் இந்த தூக்கு தண்டனை நிறுத்தப்பட்டிருக்கிறது. ஆகவே நிரந்தரமாக இந்த தூக்கு தண்டனையை நிறுத்த கோரி புலம்பெயர் தமிழர்களும் தமது மக்கள் பலத்துடன் இந்திய தூதரகங்களின் முன்னால் போராட வேண்டும். மனித உரிமை ஆர்வலர்கள் இது குறித்து கவனம் செலுத்த வேண்டும். ஒட்டு மொத்த தமிழனம் போராடி தூக்கிலிருந்து 3 உயிர்களை காப்பாற்றியது என்று வரலாறு பதிவு செய்யட்டும்.

ஆதி
03-09-2011

புலம்பெயர் தமிழர் மத்தியில் மகிந்த ராஜபக்ஷவின் அடுத்த ஊதுகுழலாக மிருக வைத்தியர் நடேசன்

மிருக வைத்தியர் நடசேன் (அவுஸ்ரேலியா) அவர்கள் அண்மையில் "பிரபாகரனை கொன்று தமிழ் மக்களை காப்பறியதற்காக மகிந்தராஜபக்ஷவிற்கு நன்றி" என்பது போன்ற தொனிப்பொருளில் பெரிய கட்டுரை ஒன்றை எழுதிதத் தள்ளியிருந்தார்.
I am grateful to President Mahinda Rajapaksa for finishing Prabhakaran and saving my people
17 August 2011, 10:27 pm
by Dr.Noel Nadesan
இதற்கு பின்னணியில் இருக்க கூடிய சிங்கள அரசின் கபடத்தனம் மற்றும் மிருக வைத்தியர் நடேசனின் தமிழர்விரோதப்போக்கை நாங்கள் அவதானமாக அணுகவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.

இன்று சிறிலங்கா அரசானது சர்வதேச அளவில் மிகப்பொரிய அழுத்தங்களை எதிர்நோக்கியிருக்கும் இந்த வேளையில் உள்நாட்டில் தமிழ் மக்கள் தொடர்ச்சியாக சிறிலங்கா அரசை தேர்தல்களில் நிராகரித்துவருவது பெரும் தலையிடியாக மாறியிருக்கிறது ராஜபக்ஷவிற்கு. இந்த நிலையில் உள்நாட்டில் இருக்க கூடிய தமிழ் மக்கள் எப்பொழும் ராஜபக்ஷவை ஏற்றுக் கொள்ளப்போவதில்லை என்ற உண்மையை அறிந் மகிந்த ராஜபக்ஷவிற்கு புலம்பெயர்ந்து இருக்கும் தமிழ் மக்களின் ஆதரவை பெறவேண்டிய கட்டாம் ஏற்பட்டடுள்ளது. அதன் திட்டமிடல்களில் தான் தமிழ் மக்களிடையில் குழு பேதமைகளை உருவாக்கும் வேலைத்திட்டங்களில் ஈடுபட்டுவரும் சிறிலங்கா புலனாய்வுத்துறையினரும் சமாந்தரமாக மகிந்த ராஜபக்ஷவை சிறந்த மனிதராகவும் தமிழ் மக்கள் மேல் மதிப்பு வைத்திருப்பவர் போலவும் காட்ட சில தமிழ் அயோக்கியர்களை களம் இறக்கியிருக்கிறது சிங்கள அரசு.

அந்த நிகழ்ச்சி நிரலில் அடிப்படையில் தான் இன்று இந்த மிருக வைத்தியர் நடேசன் செயற்பட்டுக் கொண்டிருக்கிறார். உள்நாட்டில் தமிழ் மக்களால் நிராகரிக்கப்ட்ட மகிந்தராஜபக்ஷ அரசிற்கு புலம்பெயர் தமிழர் மத்தியில் ஆதரவு திரட்டும் நோக்கத்தில் செயற்பட்டுக் கொண்டிருக்கிறார்.

சிறிலங்கா அரசின் அத்தனை அராஜகங்களையும் எதிர்த்து அடக்குமுறைகளை சமாளித்து தான் தமிழ்தேசிய கூட்டமைப்பை தமிழ்மக்கள் வெற்றிபெறச் செய்திருந்தனர். தமிழ் மக்கள் பட்ட துன்பத்தை நேரில் நின்று அறியாமல் அறிவிலித்தனமாக அறிக்கைகள்விடுவதும் சிங்களை அரசை போற்றி துதிபாடுவதும் தமிழ் மக்களுக்கு ஏற்பட்டுள்ள மிகப்பெரிய அசிங்கமாகதான் கருத வேண்டியிருக்கிறது.

மனிதகுலத்திற்கெதிராக பாரிய அளவில் உரிமை மீறல்களையும் படுகொலைகளையும் நடாத்திமுடித்திருக்கிற சிங்கள அரசை அதுவும் லட்சக்கணக்கில் தமிழ் மக்களை கொன்று குவித்திருக்கிற மகிந்த ராஜபக்ஷவை வாழ்த்துவதாக மிருகவைத்தியர் சொல்லியிருப்பது மிருகத்தனமாக இருக்கிறது.

மீள்குடியேற்றப்பட்ட மக்களுக்கு எந்த அடிப்படை வசதியும் செய்து கொடுக்காமல் பாதுகாப்பற்ற சூழ்நிலையில் தான் தமி்ழ்மக்களை அடைத்துவைத்திருக்கிறது சிறிலங்கா அரசு. புலம்பெயர்ந்த தமிழ் மக்களின் உதவிகள் தான் பல வடிவங்களில் தமிழ் மக்களை சென்றடைந்து கொண்டிருக்கின்றன. சிறிலங்கா அரசு போரால்பாதிக்க்பட்டுள்ள மக்களுக்கென எந்த விசேட திட்டங்களையும் வைத்திருக்கவில்லை. இந்த நிலையில் போரை தமிழின படுகொலையாக நடாத்தி முடித்து 2 வருடங்கள் கடந்துவிட்ட பிறகும் எந்தவொரு அரசியல் தீர்வுக்குமான சமிஞ்சையையும் காட்டத சிங்கள அரசின் கபடத்தனதத்திற்கு ஓத்து ஊதுகிறார் இந்த மிருக வைத்தியர்.

புலம்பெயர் தமிழர்களே!!!
இந்த காலகட்டமானது மிக முக்கியமான காலகட்டம். சிங்கள அரசை பல வழிகளிலும் நெருக்கடிக்குள்ளாக்கி எமது உரிமைகளை வென்றெடுப்பதற்கு அரசியல் ரீதியில் ஜனநாயக வழியில் நாங்கள் நகர்ந்து கொண்டிருக்கிறோம். உள்நாட்டு தமிழர்கள் அத்தனை வலிகளையும் பொறுத்துக் கொண்டு சிங்கள அரசை தொடரந்து நிராகரித்துக் கொண்டிருக்கிறார்கள். அத்தனை சலுகைகளையும் தூக்கியெறிந்து மிரட்டல்களுக்கும் அச்சுறுத்தல்களுக்கும் அடிபணியாமல் சிங்கள அரசை நிராகரித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த வேளையில் புலம்பெயர் தமிழர்கள் மிக அவதானமாகவும் வரைவாகவும் செயற்பட வேண்டும். சிங்கள அரசு பற்றிய மகிந்த ராஜபக்ஷ பற்றிய நல்ல அபிப்பிராய கருத்துகளை புலம்பெயர் தமிழ் மக்களிடையில் செலுத்தி புலம்பெயர் தமிழ் மக்களை தன்பக்கம் இழுத்து வெளி அழுத்தங்களில் இருந்து விடுபட்டு புலம்பெயர் தமிழ் மக்களினூடக உள்நாட்டு தமிழ் மக்களை தனது வழிக்கு கொண்டுவர முடியும் என்று சிங்கள அரசு கனவு காணுகிறது. அந்த வேலைத்திட்டங்களிற்கு தான் இன்று மிருகவைத்தியர் நடேசன் உள்ளிட்ட சிலர் களம் இறக்கப்ட்டுள்ளனர் என்பதை தெளிவாக புரிந்து கொள்ளுங்கள்.

சனல் 4 ஊடகம், இந்திய ஊடகம் என எமது மக்களின் அவலத்தை மிகுந்த சிரமத்திற்கு மத்தியில் மக்களை சந்தித்து நேரடி பதிவுகளை வெளியிட்டு தமிழ் மக்களின் நீதிக்காக குரல் கொடுத்துக் கொண்டிருக்கும் இந்த வேளையில் சிங்கள அரசிடம் இருந்து கிடைக்க கூடிய அற்ப சுகங்களிற்காக ராஜபக்ஷவின் ஊதுகுழலாக மிருகவைத்தியர் நடேசன் மாறியிருப்பது கேவலமாக இருக்கிறது. எமது வலிகளை துன்பங்களை எமக்கான உரிமை மறுப்புகளை உலகமே பேசிக் கொண்டிருக்கும் இந்த வேளையில் எமது இனத்துக்குள்ளேயே அதை மூடிமறைக்கும் செயற்பாடுகளில் ஈடுபட்டு குற்றவாளியை காப்பாற்றும் நடவடிக்கைகளில் இறங்குபவர்கள் இருப்பது வேதனைக்குரியது. இந்த மிருகவைத்தியர் போன்றோரை இனம் கண்டு அவதானமாக இருக்க வேண்டியது தமிழ் மக்களின் பொறுப்பு.


ஆதி
03-09-2011

Monday, September 5, 2011

தமிழர்களாக ஒன்றிணைவோம் தமிழர்களாக போராடுவோம்,விடுதலை வேண்டி தொடரந்து போராடுவோம்.

இன்று தமிழ் நாட்டில் இருக்க கூடிய பள்ளி மாணவர்கள் முதல் எந்த அரசியல் சிந்தனையுமற்று இருந்த இளைஞர்கள் வரைக்கும் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 3 நிரபராதிகளை இந்திய காங்கிரஸ் அரசு தூக்கிலேற்றி சாகடிப்பதற்கு பல வழிகளில் முயற்சித்துக் கொண்டிருக்கின்றது என்ற செய்தியை கொண்டு செல்வதற்கும் அவர்களையும் இது குறித்து சிந்திக்க வைப்பதற்கும் இணைய தளங்கள் மற்றும் சமூக தளங்கள் பெரரிதும் உதவியிருக்கின்றன.

தொடர்ச்சியான ஞாபகப்படுத்தல்கள் செய்திப் பகிர்வுகள் என இடைவிடாது சமூகதளங்களை இந்த பிரச்சினை நிரப்பியிருந்தது இத்தனை சாதகங்களுக்கும் காரணம இருந்திருக்கிறது. அதே போல் தமிழ் நாட்டில் இருக்க கூடிய கிராமப்புறங்கள் தெருக்கள் என பல வழிகளில் மக்களை சென்றடைந்து இந்த தூக்கு தண்டனை என்றயெரில் நடைபெற இருந்த தமிழினப்படுகொலை பற்றிய வழிப்புணர்வு மக்கள் மத்தியில் பெரும் மாற்றத்தை உண்டுபண்யிருக்கிறது.

கிராமப்புற மக்கள் முதல் நகர்ப்புற மக்கள் வரைக்கும் சரியான முறையில் தகவல்கள் பரிமாறப்பட்டு ஒரு லட்சியத்தை நோக்கிய ஒருமித்த நகர்வு மிகப்பெரிய வெற்றிகளை ஈட்டித்தரும். அந்த அரசியலும் புரட்சியும்தான் இன்று தேவைப்படுகிறது.

தற்காலிகமாக தடைவிதிக்கப்ட்டுள்ள தூக்குத்தண்டனையை நிறைவேற்றுவதற்கு இந்திய காங்கிரஸ் அரசு  எந்த வழியிலும் நிறைவேற்ற முயற்சிக்கும் என மனம் ஒருவித பதட்டத்திற்குள்ளானாலும் இந்த தற்காலிக தடையை வாங்கிய தோழர்கள் மீது அதை விட நம்பிக்கை இருக்கிறது. இரவுபகலாக பாடுபட்ட இந்த தோழமைகளின் வலிமை மீது நம்பிக்கை இருக்கிறது.

எழுத்தாளர்களும் சமூகநலன்விரும்பிகளும் இளைஞர் இயக்கங்கள் ஒருபக்கத்தால் போராட்டங்களை ஒழுங்குபடுத்த மறுபுறத்தில் இளைஞர்களை ஒழுங்கமைத்து சமாந்தரமாய் சட்டரீதியாக கையாள்வதற்கான ஏற்பாடுகளையும் செய்திருந்த அண்ணன்கள் வைக்கோ மற்றும் சீமானின் செயற்பாடுகளின் பலம் வித்தியாசமாக இருந்தது. ஈழத்தில் இருந்து இதை உணரும் பொழுது உத்வேகம் அளிக்கிறது. பல நண்பர்கள் இந்த உணர்வை பகிர்ந்நிதருந்தார்கள். இங்குள்ள அதிகமான எல்லோருமே "2009 ல் கருணாநிதி இவர்களை விட்டிருந்தால் போராடி போரை நிறுத்தியிருப்பார்கள்" என்று பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

வீரப்புதல்வி செங்கொடியின் தியாகம் அளப்பெரியது. செங்கொடியின் வரலாறு குறித்த அத்தனை பதிவுகளையும் படித்துவிட்டேன். இத்தனை புரட்சி சிந்தனை கொண்டவள், இத்தனை விடுதலை வேட்கை கொண்டவள், இத்தனை ஆழுமை கொண்டவள், எமதருகில் இப்பொழுது இல்லையெனும் பொழுது மனம் கனக்கிறது.

இந்த தூக்கு தண்டனையை நிறுத்துவதற்கு வன்முறையைச் சரி பாவியுங்கள் என்று கத்துமளவிற்கு நாங்கள் இயலா நிலைக்கு தள்ளப்ட்டிருந்தோம். எமது இனத்தின் மீது அத்தனை அடக்குமுறையையும் அழிப்பையும் செய்திருந்த இந்த இந்திய காங்கிரஸ் அரசுமீது உச்சக்கட்ட வெறுப்பிலேயே இருக்கிறோம். வன்னிக்குள் போரை முடக்கி வெளி உலகத்திற்கு தெரியாத வகையில் இந்தி அரசின் பாதுகாப்புடன் சிறிலங்கா அரசு செய்த தமிழினத்தின் மீதான மிகப்பெரிய படுகொலையை கண்டித்து போராட முடியாத நிலைக்கு தள்ளிய கருணாநிதி அரசின் மீது வெறுப்பில் இருக்கிறோம். இந்த நிலையில் மீண்டும் 3 உறவுகளை இத்தனை கோடி தமிழர்களுக்கு முன்னால் அதுவும் தமிழ்நாட்டில் வைத்து படுகொலை செய்வதற்கு எப்படி அனுமதிக்க முடியும் என்ற மனநிலையில் வன்முறை குறித்து சிந்திக்கும் அளவிற்கு மாற்றப்ட்டிருக்கிறோம். எப்படி இருப்பினும் சட்டரீதியான ஜனநாயக வழிமுறைகளுக்கும் தமிழின உணர்விற்கும் மதிப்பளிப்பவராக முதலமைச்சர் ஜெயலலிதா செயற்பட்டிருப்பது அவரை இன்னமும் ஒருபடி மேலே உயர்த்தியிருக்கிறது.

தூக்கு தண்டனை ரத்து என்பது தற்காலகமாவே காணப்படுகிறது. எனவே அது நிதந்தரமாக நிறுத்தப்படும்வரை போராட்டங்கள் தொடர்ந்து கொண்டிருக்க வேண்டும்.

புலம்பெயர் தமிழர்களே!!! பெருமளவில் இந்திய தூதரகங்களுக்கு முன்னால் போராட்டங்களில் ஈடுபடுங்கள். மனுக்களை கொடுங்கள்.

சர்வதேச அளவில் இருக்க கூடிய மனித உரிமை அமைப்புகள் மற்றும் மனிதஉரிமை ஆர்வலர்களுக்கு இது குறித்து தெரியப்படுத்துங்கள். மின்னஞ்சல் அனுப்புங்கள்.


மர்மமனிதர்கள் என்ற பயங்கரத்தை உருவாக்கி அதன் மூலம் இங்கு தமிழ்கள் மீது கொலைவெறியாட்டம் ஆடிக் கொண்டிருக்கிறது சிங்கள அரசு. அதே நேரத்தில் 3 தமிழர்களை தூக்கிலிட்டு படுகொலை செய்து ரசிக்க துடிக்கிறது இந்திய காங்கிரஸ் அரசு. எல்லா வழிகளிலும் தமிழ்கள் மீது வேதனைகளும் சோதனைகளும் கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கிறது. காங்கிரஸை கொண்ட இந்தி வல்லாதிக்கமும் சிங்கள பேரினவாதமும் இயலுமான வழிகளில் தமிழர்கள் மேல் கொலைவெறியாட்டத்தை நடாத்திக் கொண்டிருக்கின்றன. எல்லாவற்றுக்கும் எதிராக போராட வேண்டிய நிலையில் இருக்கிறோம் நாம். இந்த நிலையில் எம் மீதான வன்முறை கட்டவிழ்ப்புகளை உலகம் பூராவும் தெரியப்படுத்த வேண்டும். மனித உரிமை குறித்து பேசப்படும் அத்தனை இடங்களிலும் எம்மீதான வன்முறைகள் குறித்து முறைப்பாடுகள் செய்ய வேண்டும். உங்களால் இயலுமான வழிகளில் இந்த பிரச்சினைகளை சர்வதேச அளவிற்கு கொண்டுவாருங்கள். எல்லா வழிகளிலும் இருந்து எம் மீது கட்டவிழ்த்துவிடப்பட்டிருக்கும் ஆக்கிரமிப்புகளை எதிர்து எல்லோரும் போராடுவோம், ஒண்றியைவோம்.

சிங்கள அரசின் கூலிகளாக இருந்து கொண்டு தமிழர்கள் மீதான வன்முறைகள் குறித்து வாய்திறக்காதிருப்பவர்கள் குறித்து கணக்கில் எடுக்காதீர்கள். அவர்கள் மலம் இருந்தால் தின்று வாழத்தெரிந்தவர்கள். இங்கு தமிழர்கள் மீது செய்யப்படும் வன்முறைகளுக்கு சிங்கள இராணுவம் காரணம் இல்லை என்கிறார்கள் இவர்கள். ராஜீவ் காந்தி கொலைவழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள 3 உறவுகள் தான் குற்றவாளிகள் என்பது போல் பேசிக் கொண்டிருக்கிறார்கள். இந்த மலம் தின்னும் மனநோயாளிகள் குறித்து எந்த அக்கறையும் தேவையில்லை எமக்கு.

சிங்கள அரசு, இந்திய காஸ்கிரஸ் அரசு, மற்றும் சிங்கள கூலிப்படைகளாலும் வரும் அராஜகங்களையும் எதிர்த்து தான் நாங்கள் போராட வேண்டியிருக்கிறது. தமிழர்களாக ஒன்றிணைவோம் தமிழர்களாக போராடுவோம்.

ஆதி
04-09-11

Friday, September 2, 2011

கிறிஸ் பூதங்கள் என பெயர்வைத்து உலாவரும் சிறிலங்கா அரச மனித மிருகங்கள்.

சிங்கள அரசின் திட்டமிட்ட நிகழ்ச்சி நிரலில் கீழ் தமிழர் பிரதேசத்திற்கு கிறிஸ்பூதங்கள் என்ற பெயரில் சிங்கள ராணுவத்தின் காடையர் தனத்தை நகர்த்தியிருக்கிறது. கிழக்கு மாகாண இயல்பு வாழ்க்கையை குலைத்த சிறிலங்கா அரசு இன்று வடக்கு மாகாணத்திற்கு சிங்கள காடையர்களை அனுப்பியிருக்கிறது. மக்களின் இயல்புநிலையை குழப்புதல் அதனூடாக ராணுவத்தின் அதிகாரத்தன்மையை பிரயோகித்து அச்சமுள்ள சுழ்நிலையில் தமிழ் மக்களை அடக்கி வைத்திருத்தல் என்ற அராஜக போக்கில் செயற்பட்டுக் கொண்டிருக்கிறது சிறிலங்கா அரசு.

பிடிபடும் மர்ம மனிதர்கள் இராணுவத்திற்கு உடனடியாக தகவல் தெரிவிக்க கூடிய வகையில் ஜி.பி.ஸ் தொழினுட்ப வசதி அல்லது தொலைபேசி வசதிகளுடன் காணப்படுகின்றனர். மக்கள் பொலிசாருக்கு தகவல் தெரிவித்து பொலிசார் சம்பவ இடத்திற்கு வருமுன் இராணுவம் வந்துவிடுகிறது. ராணுவம் ஆயுதங்கள் சகிதம் சட்டத்தை கையில் எடுக்கிறது. மர்ம மனிதர்களை பிடித்த மக்கள் குறித்து நோட்டம்விட்ட அல்லது தகவல் சேகரித்த இராணுவம் மக்களை கலைந்து செல்லும்படி உத்தரவிடுகிறது சிறிது நேரத்தின் பின் அந்த மக்களின் வீடுகளுக்குள் புகுந்து காட்டுமிராண்டித்தனமாக தாக்கி அவர்களை நீமன்றத்திற்கு கொண்டு செல்கிறது.

பிடிபடும் மர்மனிதர்கள் எவரையுமே நீதிமன்றத்திற்கு கொண்டுசெல்லாத சிங்கள ராணுவமும் பொலிசும் மர்ம மனிதர்களை பிடிக்கும் மக்களை தாக்கி நீமன்றிற்கு இழுத்துச் செல்லும் அராஜகம் நடந்து கொண்டிருக்கிறது.

அண்மையில் கோண்டாவிலில் பிடிபட்ட மர்மமனிதனை மிகுந்த சிரமத்திற்கு மத்தியில் மக்கள் பொலிஸ் இல் ஒப்படைத்தனர். நீதிகிடைக்கும் என அனைவரும் எதிர்பார்த்திருந்த நிலையில் பிடிபட்ட சிங்கள இளைஞன் பாலியல் மன நோயாளி எனவும். அதனால்தான் களவாக பெண்களை யன்னல் வழியாக பார்த்ததாகவும் பொலிஸ் தெரிவித்தது. தென்னிலங்கையில் இருந்து பெண்களை களவாக பார்ப்பதற்கு பாலியல் மனநோயாளி பஸ் ஏறி யாழ்ப்பாணம் வந்திருப்பது புதுமையாக இருக்கிறது. கேட்பதற்க யாருமற்ற நிலையில் சிங்கள அரசும் சிங்கள ராணுவமும் தமிழ் மக்களை முட்டாள்கள் என நினைத்து நிர்வாகம் செய்து வருகின்றனர்.

நேற்று இரவு கூட யாழ்பல்கலைக்கழக பெண்கள் விடுதிக்குள் புக முயற்சித்துள்ளனர். இந்த நிலையில் பெண்கள் விடுதி மாணவிகள் ஆண் மாணவர்களிடம் சொல்ல ஆண்கள்விடுதியில் உள்ள மாணவர்கள் விடுதிடியில் கூடியபொழுது மரத்தில் இருந்து குதித்த மர்மமனிதர்கள் மாணவர்களை மிரட்டிக் கொண்டு ஓடியுள்ளனர். அவர்களை துரத்திச் சென்ற மாணவர்களை ரயில் ரோட்டு கரையில் மறித்த ராணுவத்தினர் தாக்கியுள்ளனர்.

மர்ம மனிதர்கள் நடமாட்டம் உள்ள இடங்களிலெல்லாம் அவர்களை பாதுகாப்பதற்கு ராணுவம் உடனடியாக கூடிவிடுவது ஆச்சரியப்படுவதற்கில்லை. யாருடைய திட்டமிடல் என்பது இங்கு புலனாகிறது.

சிவில் நிர்வாகத்தை காட்டுமிராண்டித்ததனமான கையாண்டு கொண்டிருக்கும் சிங்கள ராணுவத்திற்கெராக சமூக அர்வலர்கள் மனத உரிமை ஆர்வலர்கள் சட்டரீதியில் கையாள முன்வர வேண்டும். சிங்கள அரசின் காட்டுமிராண்டித்தனமான இந்த நிகழ்ச்சிநிரலிலின் பின்னணியில் இருக்க கூடிய அடக்குமுறையை சர்வதேச அளவில் பேசும்பொருளாக்கப்பட வேண்டும். ராஜபக்ஷ அரசு எதை வேண்டுமானாலும் மனிதகுலத்திற்கெதிராக செய்வோம் என கங்கணம்கட்டி நிற்பதை சர்வதேசத்திற்கு காட்டுவதோடு மனித உரிமைகள் மீறப்படுவதையும் இராணுவ அடக்கு முறைகளையும் எதிர்த்து ஜனநாயக வழியில் போராட வேண்டும். சர்வதேச அளவில் இதை கொண்டு போய் இலங்கை அரசுக்கெதிராக சட்டநடவடிக்கைகள் எடுக்க கூடிய வழிகள் இருக்கின்றனவா என்பதை ஆராயவேண்டும்.

மனித உரிமை ஆர்வலர்களுக்கு இந்த பிரச்சினையை உடனடியாக கொண்டு செல்லுங்கள் தமிழர்களே.

ஆதி
03-09-11

Blog template by simplyfabulousbloggertemplates.com

Back to TOP