Powered by Blogger.

Wednesday, September 7, 2011

தூக்கு தண்டனையை எதிர்த்து மூண்டெழுந்த தமிழ் சமூகம்.

ரஜீவ் காந்தியின் கொலை வழக்கில் குற்றவாளிகளாக சோடிக்கப்பட்டு தண்டனை அனுபவித்துவரும் பேரறிவாளன் முருகன் மற்றும் சாந்தன் உள்ளிட்டோரினது கருணை மனுக்களை நிராகரித்த இந்திய ஜனாதிபதி அவர்களை தூக்கிலிடுமாறு பணித்திருந்தார். ஏறத்தாள இரட்டை ஆயுள் தண்டனை காலத்தை சிறையில் அனுபவித்த பின்னர் இவர்களின் கருணை மனுவை நிராகரித்திருக்கிறது இந்திய மத்திய அரசு.

செப்டம்பர் 9ம் திகதி தூக்கிலிடுமாறு வேலூர் சிறைக்கு கட்டளை வழங்களப்பட்டிருந்தது. தூக்கு மேடை தூசி தட்டப்பட்டது. வர்ணம் பூசப்பட்டது. தூக்கிற்கு தெரிவு செய்யப்ட்டு முறை குறித்து பேரறிவாளன் சாந்தன் முருகனுக்கு தெரிவிக்கப்ட்டது. 11 வருடங்கள் கிடப்பில் வைத்திருந்த கருணை மனுவை நிராகரித்த இந்திய மத்திய அரசு இவர்களை தூக்கிலேற்றுவதற்கு அவரசம் காட்டுகின்றமைக்கு பல காரணங்கள் சொல்லப்படுகின்றன.

ராஜீவ் காந்தி கொலை விசாரணை என்பது சந்தேகத்திற்கிடமான முறையில் நடாத்தப்பட்டிருக்கிறது. சம்மந்தப்பட்டவர்கள் விசாரிக்கப்படவில்லை. கொலை நடந்த இடத்தில் கிடைக்கப்பெற்ற ஆதாரங்கள் முழுமையான விசாரணைக்கு உட்படுத்தப்படவில்லை. விசாரணைக் குழுவிற்கு அரசியல் அழுத்தங்கள் இப்படி பல குழுறுபடிகளை கொண்ட விசாரணையைதான் ராஜிவ்காந்தி கொலை விசயத்தில் நடாத்தி முடித்திருக்கிறது இந்திய அரசு.

இந்திய பிரதமரின் கொலை சம்மந்தப்பட்ட விசாரணைகளை மிகச்சாதாரணமாகவும் அடிப்படை கண்டுபிடிக்காமலும் இந்திய புலனாய்வமைப்புகள் முடித்திருப்பது கேலிக்குரியதாக இருக்கிறது. இந்த கொலையில் பெரும் அரசியல் சதி இருப்பதாகவே நம்பப்படுகிறது. ஆனால் பற்றரி வாங்கி கொடுத்தவருக்கும் தற்கொலை குண்டுதாரி தங்க இடம் கொடுத்தவருக்கும் மரண தண்டனையை வழங்கியிருக்கிறது இந்திய நீதித்துறை. கொலையின் பின்னணியில் இருக்க கூடிய உள்நாட்டு அரசியல் சக்தி எது என்பதை கண்டுபிடிக்காமலே நேரடி தொடர்பில்லாத சந்தேக நபர்களை தூக்கிலிடும் அளவிற்கு இந்திய நீதித்துறையை அரசியல் அமைப்புகள் அழுத்தம் கொடுத்திருக்கின்றன என்றே நம்பப்படுகின்றது.

எது எப்படியிருப்பினும் தற்காலிகமாக தூக்கு தண்டனையை நிறுத்த வைத்திருக்கிறது தமிழகம்.

மூண்டெழுந்த தமிழகம்
இந்த விடையத்தில் என்றுமில்லாதவாறு தமிழகம் விழித்துக் கொண்டது. நாம்தமிழர் இயக்கம் மே.17 இயக்கம் மக்கள் மன்றம் எழுத்தாளர்கள் சமூக நலன்விரும்பிகள் மனித உரிமை ஆர்வலர்கள் தமிழ் உணர்வாளர்கள் என ஒட்டுமொத்த தமிழகமே மரண தண்டனைக்கு எதிராக களம் இறங்கியது என சொல்லலாம். ஊருராய் தெருத்தெருவாய் சென்று இந்த வழக்கில் இருக்கப்படக்கூடிய சோடிப்புகள் மற்றும் மரணதண்டனைக்கு அவசரம் காட்டும் இந்திய அரசின் கபடத்தனம் குறித்தும் மக்களுக்கு விளங்கப்படுத்தப்பட்டது தோழர்களால். கல்லூரி மாணவர்கள் சட்டத்தரணிகள் என போராட்டங்களில் இறங்கினர். ஆங்காங்கே சிறு சிறு அளவில் நடைபெற்றுக் கொண்டிருந்த போராட்டங்கள் சாகும் வரையிலான உண்ணாவிரத போராட்டமாக உருவெடுத்திருந்தன. உளலுக்கெதிராக அன்னா வினுடைய உண்ணாவிரப்போராட்டம் டில்லியில் நடைபெற்றுக் கொண்டிருந்த சமயத்தில் மரண தண்டனையை எதிர்த்து தமிழகத்தில் சாகும் வரையிலான உண்ணாவிரதப்போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. இந்திய அரச ஊடகங்கள் இந்த மரணதண்டனை போராட்டத்தை பெருமளவில் மறைத்தன என்றே சொல்லலாம். ஆனால் பல இயக்கங்களை சேர்ந்த தோழர்கள் மற்றும் எழுத்தாளர்கள் இந்த செய்தி மக்களை சென்றடைவதற்கு பல்வேறு உத்திகளை கையாண்டனர். சைக்கிள் பயணம் மோட்டார் சைக்கிள் பயணம் என ஒரு வழியிலும் இணையத்தில் சமூக தளங்களினூடாக மாபெரும் போராட்டத்தை நகர்த்தியிருந்தனர் என்றே சொல்லலாம். தமிழகம் முழுவதும் இளைஞர்கள் மத்தியில் இந்த போராட்டம் நகர்வதற்கு சமூகதளங்களில் முன்னெடுக்கப்ட்ட பாரிய அளவிலான கோஷங்களும் காரணமாக இருக்கலாம் என்று கருதுகிறேன்.

சாகும் வரையிலான உண்ணாவிரதப்போராட்டங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் சந்தர்ப்பத்தில் அனைவருக்கும் அதிர்ச்சியழித்த விடையம் தியாகி செங்கொடியின் தற்கொலை. மக்கள் மன்ற உறுப்பினராக இருந்த 22 வயதே ஆன செங்கொடி மூன்று உறவுகளின் தூக்கு தண்டனையை நிறுத்தக் கோரிய எல்லா போராட்டங்களிலும் முழுமையாக இணைத்துக் கொண்டடிருந்தவர். இவர் மூன்று பேரினதும் தூக்கு தண்டனையை நிறுத்தக் கோரி தீமூட்டி தன்னை மாய்த்துக் கொண்டது அனைவரையும் ஆதிர்ச்சியிலும் மீள முடியாத சோகத்திலும் ஆழ்த்தியிருக்கிறது.

இந்த நேரத்தில் மூவரின் தூக்கு தண்டனையை ரத்து செய்து தண்டனையை குறைக்கும்படி சட்ட மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுத்திருக்கிறார் தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா. தமிழ் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக தெரிவித்திருக்கிறார். இந்த இடத்தில் தியாகி செங்கொடிக்கு வீரவணக்கங்களை தெரிவிப்பதோடு முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவிற்கு நன்றிகளையும் சொல்ல கடமைப்பட்டிருக்கிறோம் நாம்.

சோர்ந்து போன புலம்பெயர் தமிழ் சமூகம்.
ராஜிவ்காந்தி கொலைவழக்கில் பொய்குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் தூக்கு தண்டனை விதிக்கப்ட்டுள்ள 3 தமிழ் உயிர்களை காக்க புலம்பெயர் தமிழ் சமூகம் இன்னமும் முழுவீச்சுடன் போராடவில்லை என்றே கூறலாம். வெளிநாடுகளில் உள்ள இந்திய தூதரகங்களிற்கு முன்னால் பெருமளவில் போராட்டங்கள் நடைபெறவில்லை.  பெருமளவில் போராட்டங்களை நடாத்தி தூக்கு தண்டனையை நிறுத்தியது இது தான் முதல்தடவை என்று நினைக்கிறேன். அதாவது மக்கள் சக்தி வென்றிருக்கிறது. தற்காலிகமாக தான் இந்த தூக்கு தண்டனை நிறுத்தப்பட்டிருக்கிறது. ஆகவே நிரந்தரமாக இந்த தூக்கு தண்டனையை நிறுத்த கோரி புலம்பெயர் தமிழர்களும் தமது மக்கள் பலத்துடன் இந்திய தூதரகங்களின் முன்னால் போராட வேண்டும். மனித உரிமை ஆர்வலர்கள் இது குறித்து கவனம் செலுத்த வேண்டும். ஒட்டு மொத்த தமிழனம் போராடி தூக்கிலிருந்து 3 உயிர்களை காப்பாற்றியது என்று வரலாறு பதிவு செய்யட்டும்.

ஆதி
03-09-2011

No comments:

Post a Comment

Blog template by simplyfabulousbloggertemplates.com

Back to TOP