Powered by Blogger.

Saturday, June 25, 2011

ஈழத்தமிழர் அரசியலில்; தமிழக அரசியலின் செல்வாக்கு





ஈழத்து அரசியலில் காலாகாலமாய் பிராந்திய வல்லாதிக்கங்களின் செல்வாக்கு இருந்து கொண்டேதான் வருகிறது. அதிலும் ஈழத்தமிழர் உரிமைப்பிரச்சினையை பொறுத்தவரையில் சிங்கள அரசுகளால் தமிழ் மக்களுக்கு உரிமைகள் மறுக்கப்பட்டு அதை எதிர்த்து ஈழத்தமிழர் அரசியல் தலமைகள் போராட்டங்களை ஆரம்பித்த காலத்தில் இருந்து தமிழக அரசியல் செல்வாக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் இருந்தே வருகிறது.


தமிழக அரசியலின் துணையின்றி ஈழத்தமிழர் விடையத்தில் எந்த அரசியல் முடிவுகளையும் எடுக்க முடியாத மறைமுக அழுத்தங்கள் இருந்து கொண்டேதான் இருக்கிறது. ஈழத்தமிழர் நலன் தொடர்பில் தமிழ் நாட்டு மக்கள் அனைவரும் ஒருமித்த குரலில் இந்திய அரசிடம் நீதி கேட்டால் தமிழர் உரிமைப்பிரச்சினை தொடர்பில் சாதகமான முடிவுகளை இந்திய அரசு அறிவிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும் என்ற நிலை காணப்படுகிறது. காரணம் இந்திய ஆழும் அரசுகளுக்கு தமிழ் நாட்டு அரசியல் சக்தி என்பது இன்றியமையாத ஒன்றாக இருக்கிறது.


இங்கு சில விடையங்கழள நாங்கள் தெளிவாக விளங்கிக் கொள்ள வேண்டும். ஒன்று பிராந்திய வல்லாதிக்கங்களின் அரசியல் பரம்பல் எப்படி எமது உரிமைப்பிரச்சினையில் செல்வாக்கு செலுத்துகின்றன மற்றயது அந்த செல்வாக்கு எப்படி தமிழ் நாட்டினூடாக அமுல்படுத்தப்படுகின்றன என்பதேயாகும்.


பிராந்திய வல்லாதிக்கங்களின் அரசியல் பரம்பல் என்பது பெரும்பாலும் வர்த்தகத்தை மையப்படுத்தியதாகவே இருக்கின்றன. தெற்காசியாவின் நுகர்வோர் சந்தையை கைப்பற்றுவதும் அதன் மீது தமது ஆதிக்கத்தை தக்கவைப்பதற்காகவுமே வல்லாதிக்க அரசுகள் முனைப்புக்காட்டி வருகின்றன. அந்த வர்த்தக போட்டியில் பிரந்தியா அரசியல் விடையங்களில் தமது செல்வாக்கை அதிகரித்து அதனூடாக வர்த்தக சந்தையை கட்டுப்பாட்டில் வைத்திருப்பதற்கான நடவடிக்கைகளில் தான் அனைத்து வல்லரசு நாடுகளும் ஈடுபட்டு வருகின்றன.


 தெற்காசியாவின் நுகர்வோர் சந்தையின் பெரும்பகுதியை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் அமெரிக்காவிற்கு சீனாவின் அதிகரித்துவரும் வர்த்தகத்தை கட்டுப்படுத்த வேண்டிய நிலமை ஏற்பட்டுள்ளது. ஆதனால் தெற்காசிய அரசியலில் குழப்ப நிலைகளை உருவாக்கி அதனூடு தனது செல்வாக்கை செலுத்த வேண்டிய தேவையும் அதற்கிருக்கிறது. இந்தியாவை பொறுத்தவரை நேரடியாக அமெரிக்காவிற்கெதிராக களத்தில் இறங்க முடியாதெனிலும் பிராந்திய அரசியல் நிலையை கட்டுப்பாட்டடில் தான தான்; வைத்திருக்க வேண்டும் என்று விரும்புகிறது. பல வர்த்தக உடன்படிக்கைகளை செய்து தனது; பல சந்தைகளை அமெரிக்காவிற்கு தாரைவார்த்துள்ள இந்தியாவிற்கு பரிசாக பிராந்திய அரசியலில் நேரடித்தலையீடு செய்வதற்கு இந்தியாவிற்கு அமெரிக்கா வாய்ப்பளித்துள்ளது என்று கூட சொல்லக் சுடிய நிலை தான் காணப்படுகிறது.


தவிர தனது வர்த்தக செயற்பாடுகளுகளின் பாதுகாப்பிற்காக அமெரிக்கா தெற்காசியா முழுவதும் தனது படையினரை பரப்பி வைத்துள்ளது. இலங்கையை பொறுத்த வரையில் அமெரிக்காவிற்கு இந்துமா சமுத்திரத்தில் தனது பாதுகாப்பு அணியினருக்கான தளம் அல்லது ஓய்வெடுக்க கூடிய தளம் அமைப்பதற்கு இன்றியமையாத ஒன்றாக காணப்படுகிறது. இந்த நிலையில் தான் ஈழத்து அரசியல் நிலையை சாதகமாக பயன்படுத்தி தனது தலையீடுகளை விஸ்தரித்துள்ளது அமெரிக்கா.


அதே போல சீனாவினதும்; வர்த்தக மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு இலங்கை இன்றியமையாத ஒன்றாக காணப்படுகிறது. இப்படி பலதரப்பட்ட வல்லாதிக்கங்கள் மையம் கொண்டிருக்கும் நிலையில் தான் எமது உரிமைப்பிரச்சினைகளும் கையாளப்படுகின்றன.


ஈழத்தமிழர் பிரச்சினையை பொறுத்தவரையில் ஆரம்பம் தொடக்கமே இந்தியா நேரடியாக தலையீடு செய்து வந்துள்ளது. போராளிக் குழுக்களுக்கு பயிற்சி அளித்தது மட்டுமல்லாது உரிமைப்பிரச்சினை தொர்பில் இலங்கை அரசை நேரடியாக கண்டித்தும் உள்ளது. இந்த நிலையில் போராளிக்குழுக்களின் மையமாக தமிழநாடு திகழ்ந்து வந்துள்ளது. காலப்போக்கில் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு மட்டுமே சாதகமான தன்மை தமிழ் நாட்டு அரசியலில் புகுந்து கொண்டது. இது நாட்டின் ஸ்திரத்தன்மைக்கு பாதிப்பை ஏற்படுத்துமோ என்று அச்சம் கொண்ட இந்திய அரசு தமிழீழ விடுதலை;புலிகள் பற்றிய நற்பெரை தமிழ் நாட்டடில் இருந்து இல்லாது செய்வதற்கு நடவடிக்கைகளை எடுத்தது அதன் பிற்பாடுதான் விடுதலைப்புலிகளுக்கெதிரான சம்பவங்கள் சிலவற்றை தமிழ் நாட்டினூடாக செய்து முடித்தது இந்திய அரசு.


சில காலம் விடுதலைப்புலிகளுக்கு ஆதரவான வெளிப்படை போக்கு இல்லாதிருந்த தமிழ் நாட்டில் மீண்டும் விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக குரல்கள் எழத் தொடங்கின. அதை அடக்குவதற்கு காங்கிரஸ் அரசு பாவித்த மிகப்பெரிய ஆயுதம் தான் “கருணாநிதியின் அரசு”. குடும்ப அரசியலிலும் வியாபார நோக்கத்திலும் அதிக நாட்டம் காணப்பட்டவராக இருந்த கருணாநிதியை சாதகமாக பயன்படுத்திய இந்திய மத்திய அரசு அவரை சிறிலங்கா அரசிற்;கு நண்பராக அறிமுகப்படுத்தியதோடு அவருக்கு தனிப்பட்ட வியாபார ஒப்பந்தங்களையும் செய்வதற்கு ஊக்குவித்தது. ஈழத்தமிழர் விடையத்தில் அக்கறை உள்ளவர் போல் காட்டிக்கொண்டு ஈழத்தமிழருக்கான அனைத்து போராட்டங்களையும் தமிழகத்தில் நசுக்கிய கருணாநிதி சிறிலங்காவுடனான தனது நெருக்கத்தை அதிகரித்தார். இந்த நிலையில் தான் தமிழ் நாட்டில் எந்த கிளர்ச்சிகளுமின்றி விடுதலைப்புலிகளின் ஆயுத போராட்டத்தை முறியடித்ததோடு பலலட்சம் தமிழ் மக்களை கொன்று குவித்து போரை நிறுத்திக் கொண்டது இந்திய அரசும் சிறிலங்கா அரசும்.


போர்ச் செல்வாக்குடன் தனது குடும்ப அரசியலை நிலை நாட்டுவதற்கு ராஜபக்ஷ போர் முடிந்த கையோடு தீவிரமாக இறங்கினார். ஆடிப்படையில் ராஜபக்ஷ சீன ஆதரவுப்போக்கு கொண்டவர் என்பதால் இலங்கையில் அவரின் தனிப்பட்ட அரசியல் செல்வாக்கை விஸ்தரிக்க முழு ஆதரவு இந்தியாவைவிட சீனா போன்ற நாடுகளிடம் இருந்து கிடைக்க ராஜபக்ஷ சிறிலங்காவின் பெரும் வர்த்தக பகுதிகளை சீனாவிற்கு குத்தகைக்கு குடுத்ததுடன் சீனாவின் படைத்தளத்தை அமைப்பதற்காபன மறைமுக வேலைத்திட்டங்களிலும் இறங்கினார் ராஜபக்ஷ. இது இந்தியாவிற்கும் அதன் நட்பு நாடான அமெரிக்காவிற்கும் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில் தான் ராஜபக்ஷவை அகற்ற வேண்டும் அல்லது அடக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டிற்கு தள்ளப்படுகின்றன அமெரிக்காவும் இந்தியாவும்.


இந்த இறுக்கமான காலப்பகுதியில் தான் தமிழ்நாட்டு தேர்தல் மிக முக்கியம் வாய்ந்த ஒன்றாக கருதப்பட்டது. ஈழத்தமிழர் பிரச்சினை இந்த தேர்தலில் மிகத் தீவிரமாக்ப்ட்டது. தமிழர் போராட்டங்களை நசுக்கிய காங்கிரஸையும் கருணாநிதி அரசியலையும் இல்லாது செய்வதற்காக பிரச்சாரங்கள் வெளிப்படையாகவே பலதரப்பட்டோராலும் செய்யப்ட்டன. முடிவு ஈழத்தமிருக்கு துரோகமிழைத்த இரண்டு கட்சிகளும் தமிழக ஆட்சியில் இருந்து தூக்கி வீசப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஈழத்தமிழருக்கான  குரல்கள் தமிழக அரசிடம் இருந்து வருமானால் அதுவே “தனியரசு” பற்றிய தேவையை வலியுறுத்துமேயானால் இந்திய மத்திய அரசு அதை புறக்கணிக்க முடியாத நிலைக்கும் இலங்கை அரசை வற்புறுத்த வேண்டிய நிலைக்கும் தள்ளப்படும்.


ஆனால் தற்போது ஆட்சிக்கு ஏறியுள்ள தமிழக அரசு தமிழக மக்களின் உணர்வை மதிக்காது இந்திய மத்திய அரசின் நிகழ்சி நிரலில் செயற்படுமேயானால் ஈழத்தமிழர் விடையத்தில் மாற்றம் ஏற்படப்போதில்லை. இந்தியஇ அமெரிக்க ராஜதந்திரம் ராஜபக்ஷவை அரசியலில் இருந்து தூக்கினாலும் தமிழக சட்டமன்றத்தில் ஈழத்தமிழருக்கான “தனி அரசு” கோரிக்கை நிறைவேற்றப்ட்டால்தான் அது ஈழத்தமிழர் விடையத்தில் செல்வாக்கு செலுத்தும். இந்தியாவின் உடன்பாடின்றி ஈழத்தமிழர் கோரிக்கையை மேற்குலகம் எவ்வளவு நடைமுறைப்படுத்த ஒத்துழைக்கும் என்பது கேள்விக்குறியே. இந்தியாவின் நிலைப்பாடு மாறுவதற்கு தமிழக அரசின் அரசியலிலும் மாற்றம் ஏற்பட வேண்டும்.


சர்வதேச அரசியலில் எமக்கு சாதகமான நிலையை உருவாக்க வேண்டும். அதனூடு தமிழக அரசிடமும் எமது கோரிக்கைக்கான சாதகமான நிலைப்பாட்டை ஏற்படுத்த முயற்சிக்க வேண்டும். எமது உரிமைப்பிரச்சினையில் பலதரப்பட்ட வல்லாதிக்க சக்திகள் பல்வேறு தேவைகளுக்கு மையம் கொண்டிருப்பதால் மிக அவதானமாக எமது ராஜதந்திர நகர்வுகளை செய்து எமது இலக்கை அடைய வேண்டிய கட்டாம் இருக்கிறது.


பலதரப்பட்ட ராஜதந்திரிகளோடும் எமக்கான உரிமைகளின் தேவைகள் பற்றியும் உரிமைகளை பெற்றுக் கொள்வது பற்றியும் எல்லோரும் பேசவேண்டும். எமது அபிலாசை குறித்த பிராந்திய வல்லாதிக்கங்களின் சந்தேகங்களை இல்லாது செய்து எமது விடுதலையை உறுதி செய்ய அனைவரும் பாடுபடவேண்டும்.
ஆதி
8-6-11

Sunday, June 19, 2011

பாதைகளை உருவாக்குவோம்


இன்று நாம் வித்தியாசமான அரசியல் சூழலில் இருக்கிறோம். பலவிதமான உலக அரசியல் மாற்றங்களுக்கு நடுவே எமது உரிமைப் பிரச்சினையை நகர்த்தியிருக்கிறோம்.இன்று தமிழர்களுக்கான இராணுவ தலமையோ குறிப்பிடத்தக்க அரசியல் தலமையோ இன்றி உலக அரங்கில் உரிமைப்பிரச்சினையை பேச வேண்டிய கட்டாய அரசியல் நிலமைக்கு தமிழர்களாகிய நாம் தள்ளப்ட்டிருக்கிறோம் என்பதை அனைவரும் தெளிவாக விளங்கிக் கொள்ள வேண்டும்.

இனத்தின் தேசிய உரிமைப்பிரச்சினையை உலக அரங்கில் எமக்கு சாகமாக பல வழிகளிலும் நகர்த்த வேண்டிய கட்டாயமும் நகர்த்தப்பட்டுள்ள பல விடையங்களை இன்னமும் வீரியமாக கொண்டு செல்ல வேண்டிய தேவையும் ஒவ்வொரு தமிழனுக்கும் உள்ளது என்பதை நாங்கள் புரிந்து கொள்ள வேண்டும். ஈழத்தில் தமிழர்களுக்கான விடுதலைப்போராட்டம் ஏன் ஆரம்பித்தது என்ற தார்ப்பரியத்தை ஒவ்வொருவரும் விளங்கிக் கொள்ள வேண்டும். அகிம்சைப் போராட்டங்கள் ஆயுதப்போராட்டமாக உருவெடுத்து இன்று முற்றுமுழுதான அரசியல் ராஜதந்திர நகர்வுகளுக்கு பரிணமித்திருக்கிறது.

அகிம்சை போராட்டங்கள் தொடக்கம் ஆயுதப்போராட்ட முடிவு வரைக்கும் வெளிப்படையான தலமைகளை நாங்கள் கொண்டிருந்ததும் இன்றைய அரசியல் ராஜதந்திர நகர்வுகளுக்கு வெளிப்படையான பொதுவான தலமையின்றி முற்று முழுதாக மக்கள் மயப்படுத்தப்பட்ட வேலைத்திட்டமாக மாறியுள்ளதை தமிழர்கள் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும். இன்றை நிலையில் சர்வதேச பார்வைகளை தமிழர் உரிமைப்பிரச்சினை மேல் தெளிந்த நிலையில் குவிக்க ஒட்டு மொத்த தமிழினமும் ஒன்றுபடவேண்டிய கட்டாயம் இப்பொழுது உருவாகியிருக்கிறது. உரிமைப்பிரச்சினைகளைஇ எமது தேவைகளை சர்வதேச மயப்படுத்துதல் என்பது புலம்பெயர் தமிழர்களின் கையில் தான் பெரிதும் தங்கியிருக்கிறது.

1976ம் ஆண்டு விடுதலைப்புலிகளின் அடிப்படைக் கொள்கையாகிய “தமிழீழத்தனியரசு”  என்ற கொள்கையை வலியுறித்தி வட்டுக்கோட்டையில் நிகழ்த்தப்ட்ட தீர்மானத்திற்கு உலகெங்கும் நடாத்தப்ட்ட வாக்கெடுப்பில் 90 வீதத்திற்கும் அதிகமானோர் ஆதரவு தெரிவித்து தமிழ் மக்களின் அபிலாசையை உலகிற்கு வெளிப்படுத்தினர் என்பது மட்டுமல்லாது தமிழ் மக்களின் நிலைப்பாட்டை தெளிவாக சிறிலங்கா அரசிற்கும் உலகிற்கும் வெளிப்படுத்தியிருந்தனர். இதன் அடிப்படையில் தான் தமிழ் மக்களின் சிறிலங்கா அரசுடனான ஆயுதப்போராட்டமும் சர்வதேச முன்னிலையில் நடைபெற்ற பேச்சுவாரத்தைகளும் நடைபெற்றன. அதாவது ஒட்டுமொத்த தமிழ் மக்களின் அபிலாசைகளை அடைவதற்கு போராடிய வழிகள் பலவகைப்பட்டாலும் குறிக்கோள் இன்றுவரை ஒன்றாகதான் இருந்து வந்துள்ளது.

அகிம்சை மற்றும் ஆயுதப்போராட்ட காலப்பகுதிகளில் கொள்கைவேறுபாடுகள் மற்றும் ஆயுதபோராட்ட எதிர்ப்பு போக்கு காரணங்களால் தமிழ் மக்களில் சில பிரிவினர் சிறிலங்கா அரசுடன் சேர்ந்தியங்கிய நிலைப்பாடும் அவர்களால் தமிழ் மக்களின் போராட்டங்களிற்கு முட்டுக்கட்டை ஏற்படும் சந்தப்பங்களும் பெருமளவில் உருவாகியிருந்தது. ஆனால் இன்றய நிலை என்பது முற்றிலும் மாறுபட்ட அரசில் சூழ்நிலை. இராணுவ கட்டமைப்போ அல்லது அமைப்பு ரீதியான அரசில் தலமையோ இன்றி ஈழத்தில் நேரடியாக எமது அபிலாசைகளை சிறிலங்கா அரசிற்கு வெளிப்படுத்தும் சூழ்நிலையும் சர்வதேசத்திற்கு நேரடியாக எமது பிரச்சினைகளை வெளிப்படுத்தும் நிலையும் உருவாகியுள்ளது.

ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்களை பலி கொடுத்து, உலகிலேயே நடந்தேறாத பல வகையிலான அத்துமீறல்களையும் அராஜகங்களையும் சந்தித்து, இராணுவ தலமைகளையும் இழந்து இக்கட்ட நிலையில் இன்று தமிழினம் இருக்கிறது. இந்த நிலையிலே தமிழ் மக்கள் மிக நிதானமாக சிந்தித்து செயல்ப்பட வேண்டிய கட்டாம் இருக்கிறது. எமது அரசியல் இலக்கை அடைவதற்கு புதிய பாதைகளை உருவாக்கி ஒருமித்த இலக்கிற்காக பயணிக்க வேண்டிய மிக முக்கியமான சந்தர்ப்பத்தில் அனைவரும் இருக்கிறோம்.
முந்தயை காலப்பகுதிகளில் நடந்த போராட்டங்களில் இருந்த கருத்துவேறுபாடுகள், வறட்டுக்கௌரவ நிலைப்பாடுகள் மற்றும் தேவைகள் என பல வழிகளில் தமிழ் மக்களின் விடுதலைப்பயணத்தில் இருந்து விலகி நின்றவர்களும் சிறிலங்கா அரசுடன் கைகோர்த்து நின்று இன்று தமிழ் மக்களின் மிகப்பெரிய அழிவிற்கு விரும்பியோ விரும்பாமலோ காரணமாகிவிட்ட தமிழர்களும் இன்று நிதானமாக சிந்திக்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது.

சுயநலக்கோட்பாடுகளுக்கப்பால் தமிழ் இனம் என்ற ஒற்றை மொழியில் பயணித்து ஒட்டுமொத்த இனத்தின் சுதந்திரத்திற்கும் உரிமைக்கும் குரல் கொடுக்கவேண்டிய காலத்தின் கட்டளை அனைவருக்கும் திணிக்கப்ட்டுள்ளது என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். சமகாலத்தில் அந்நிய அராஜகங்களால் எம் தமிழ் உறவுகள் படும் சொல்லணாத்துன்பங்களும் இன அழிப்பு நிகழ்ச்சி நிரலில் சிக்கி தவிக்கும் ஈழத்து உறவுகளையும் கருத்தில் கொண்டு வேறுபாடுகளுக்கப்பால் தமிழ் இனமாக சிந்திக்க வேண்டி கட்டாயம் அனைவருக்கும் ஏற்பட்டுள்ளது.

கட்சி ஆதரவாளர்கள் என்ற பெயரில் தமிழ் இனத்தின் தேசிய விடுதலையை எதிர்ப்பவர்களாயும், பிரதேசவாரிய பிரிவுபட்டு நிப்பவர்களும், சொந்த சொந்த தேவைகளுக்காய் தமிழ் தேசிய விடுதலைப் பணயத்திற்கு எதிராக முட்டுக்கட்டை போடுபவர்களும், இன்று சிந்திக்க வேண்டி நிர்ப்பந்தம் ஏற்பட்டிருக்கிறது. தமிழ் இன அழிப்பும், தமிழ் இனச்சிதைப்பும,இ தமிழ் இன விடுதலைப்பயணத்திற்கு முட்டுக்கட்டை போடுபவர்களின் எதிர்காலத்தையும் இருப்பையும் கூட இல்லாது செய்யும் என்ற உண்மையை விளங்கிக் கொள்ள வேண்டும்.

இனமே பெரும் அழிவுக்கு உட்பட்டு நிக்கும் இந்த நேரத்தில் தமிழ் மக்களுக்கிடையில் உள்ள கருத்துவேறுபாடுகள் மற்றும் காழ்ப்புணர்வுகளை கழைந்து ஒன்றுபட்ட இனமாக எமது இனத்தை கருவறுத்த சிறிலங்கா அரசை நீதிக்கு முன் நிறுத்த பாடுபட வேண்டும். சர்வதேச சட்டத்தின் வரையறைக்குட்பட்டு இனத்தின் தேசிய விடுதலைக்காய் பயணிக்க வேண்டும். சர்வதேச மனித உரிமை மற்றும் போர்க்குற்ற ஆய்வியலாளர்கள்இ ராஜதந்திரிகள் என பலதரப்பட்டோரையும் அணுகி எமது இனத்தின் மீது நடந்தேறிய இன அழிப்புக் குறித்தும் எமது இனத்திற்கு தேவையான விடுதலை குறித்தும் பேச வேண்டும். எமது ராஜதந்திர நகர்வுகளுக்கு நாங்களே பாதைகளை உருவாக்க வேண்டும். உலக ராஜதந்திரிளை அணுகி எமது பிரச்சினைகளை பேசுவதற்குரிய வெளியை நாங்களே கண்டுபிடிக்க வேண்டும். இது ஒவ்வொரு தமிழனின் கடமையும் கூட. சிறிலங்கா அரசுக்கெதிராய் தமிழ் மக்களின் நலனிற்காய் செய்யப்டும் அந்தனை விடையங்களையும் நாம் ஒருமித்த தமிழ் இனமாக ஆதரிக்க வேண்டும்.

சிறிலங்காவில் தமிழ் மக்களின் இருப்பை சிதைத்து சிங்களமயமாக்கும் அரசின் முகமூடி அரசியலை கிழித்தெறிய வேண்டும். தமிழ் மக்களின் கலாச்சார மற்றும் கல்வி பலத்தை ஆட்டம் காண வைப்பதோடு தமிழ் மக்களை அரசியல் அடிமைகளாக்க தனது அரசியலை நகர்த்திக் கொண்டிருக்கும் சிறிலங்கா அரசின் போக்கை தெளிவாக விளங்கி ஒன்றுபட்ட இனமாக விடுதலைக்குபாடுபடுவதுதான் இன்று தமிழ் மக்கள் அனைவருக்கும் உள்ள அவசரமான தேவை.

ஆதி
3-6-11

Thursday, June 16, 2011

ஈழத்தில் தற்கொலைகளாகும் படுகொலைகள்


இன அழிப்பு நடந்தேறி முடிந்த ஈழத்தில் குறிப்பாக தமிழர் தாயகப்பகுதிகளில் நாளுக்குநாள் தற்கொலைச்சம்பவங்கள் அதிகரித்துக் கொண்டிருக்கின்றன. அதற்கான பின்னணி என்ன, காரணங்கள் என்னவாயிருக்க முடியும் என்பது பற்றியதான ஒரு ஆய்வுதான் இந்த கட்டுரை.

பலதரப்பட்ட நாடுகளின் உதவியுடன் போர்விதிமுறைகளுக்கப்பாற்பட்டு இரண்டு நாடுகள் சண்டையிடும் போது பாவிக்கக் கூடிய அனைத்து ஆயுதங்களை பாவித்து மனத உரிமைகளை மீறி தமிழினத்தின் மீது மாபெரும் இனப்படுகொலையை கனகச்சிதமாக முடித்துவிட்டு எந்த சலனமும் இன்றி இலங்கை அரசு உலக அரங்கில் உலா வருகிறது.

மனிதாபிமான போர் என்று அட்டைப்படம் கட்டிய இனப்படுகொலைiயின் மற்றய பக்கங்களை புரட்டிப்பார்ப்பதற்கும் தட்டிக்கேட்பதற்கும் உலக அரங்கில் இருந்து வலுவான குரல்கள் எதுவுமே இன்னமும் எழவில்லை. போர்தின்ற மக்களின் நலன் குறித்து அக்கறை கொள்ள எந்த நாடுகளுமே சிறிலங்கா அரசை அதட்டிக்கேட்கவில்லை. வேரோடு பிடுங்கி எறிப்பட்ட மக்களாய் அவர்கள் வாழ்வோடு போராடிக் கொண்டிருப்பது குறித்து யாருக்கும் அக்கறையில்லை. உரிமைகளை இழந்தும் எல்லா உடமைகளை இழந்தும் உறவுகளை இழந்தும் வாழ்வின் கிழிந்து போன பக்கங்களுடன் இந்த மக்கள் நாட்களை நகர்த்திக் கொண்டிருக்கிறார்கள்.

சங்கீதங்கள் மரத்துப்போய் மௌனம் நீண்டுகிடக்கும் வெளியில் இவர்களின் மனங்களும் சிந்தனைகளும் வெறுமையாய் கிடக்கிறது. எல்லாம் இழந்து விட்ட இவர்களின் மனங்களை செழிப்படைய செய்து வாழ்வியல் குறித்து சிந்திக்க வைக்க யாருமே இதுவரை களத்திற்கு வரவில்லை. உளவியல் ரீதியில் நொந்துபோய் கிடக்கும் இந்த மக்களை உளமேற்ற சிறிலங்கா அரசு ஒருபோதும் நினைக்காது. ஆவர்களின் உள ரீதியான பலத்தை அதிகரிக்க செய்து வாழ்வின் வரப்போகும் நாட்களை நம்பிக்கை தரக்கூடியவையாக அவர்களுக்கு செய்து கொடுக்க வெளிநாட்டு அமைப்புகளை இந்த நிலத்திற்கு அனுமதிக்கும் படி சர்வதேசம் சிறிலங்கா அரசை அதட்டவில்லை.

ஏன் உளவியல் பலம் அவசியம்?
ஏல்லா துயரத்தையும் நேரில் கண்டமக்கள்.. எல்லா உடமைகளையும் இழந்த மக்கள் உறவுகள் பலதை இழந்த மக்கள் வாழ்வது குறித்த வெறுப்பில் இருக்கிறார்கள். குழந்தைகள் எதையுமே அச்சத்துடன் பார்க்கிறார்கள். இரவுகளில் திடுக்கிட்டு கதறுகிறார்கள். போரின் சத்தமும் அச்சமும் இன்னமும் இவர்களின் பொழுதுகளை தின்றபடிதான் உள்ளது. ஒரு இனத்தின் விடிவிற்காய் இறுதிவரை ஆயுதமெடுத்து போராடிய மக்கள் இவர்கள். இறுதிவரை அத்தனை வலிகளையும் போரின் ரணங்களையும் அனுபவித்த மக்கள் இவர்கள். அந்த வலியும் ரணமும் மரணத்தின் வாயில்வரை சென்றுவந்த தருணங்களும் இவர்களை இன்னமும் வதைத்துக் கொண்டே இருக்கிறது.

சிந்தனைகள் இறந்தகாலத்தின் மீதும் நிகழ்காலத்தின் மீதும் அடிக்கடி அலைபாய்ந்து நிமிடங்களை கொன்று கொண்டிருக்கும் இந்த நேரத்தில் அவர்களின் சிந்தனைகளை எந்தவழியிலும் திசை திருப்பிவிடக்கூடிய அபாயம் இருக்கிறது. வாழமுடியும் என்ற நம்பிக்கையையும் வாழ்வதில் இனி எதுவுமே இல்லை என்ற வெறுப்பையும் இலகுவாக குழந்தைகளுக்கு கூட புகுத்திவிடக்கூடிய அபாயகரமான தருணம் இது. இந்த தருணத்தில் தான் நம்பிக்கை தரக்கூடிய உளவியல் ரீதியிலான பலத்தை இவர்களுக்கு கொடுக்க வேண்டும்.

இந்த உளவியல் பின்னணிகளில் தான் வாழ்வியல் மீதான் வெறுப்புகளை உருவாக்கி இளம் தலைமுறையினருக்கு தற்கொலை மீதான தூண்டுதலை செய்து கொண்டிருக்கிறான் எதிரி. இது வரை எத்தனையோ தற்கொலைகள் நடந்துவிட்ட பின்னும் அதன் பின்னணி அல்லது தற்கொலை தூண்டுதலுக்கான காரணங்கள் குறித்து ஆய்வு செய்து அதற்கு தீர்வுகாணும் வழிமுறைளை சிறிலங்கா அரசு மேற்கொள்ளாதிருப்பதற்கான காரணம் என்ன? குறிப்பிட்ட ஒரு சில மாதங்களுக்குள் 30ற்கும் மேற்பட்ட சம்பவங்கள் தற்கொலைச்சம்பவங்கள் என வைத்திய அறிக்கைகள் தெரிவித்தும் அதுகுறிதது எந்த அக்கறையும் எடுக்கப்படாமைக்கான காரணம் என்ன? குறிப்பிட்ட ஒரு பிரதேச எல்லைகளுக்குள் மாத்திரம் அல்லது குறிப்பிட்ட ஒரு இனக்குழுமத்திடையில் மாத்திரம் குறுகிய காலப்பகுதிகளில் இதத்தனை தற்கொலைச்சம்பவங்கள் நடைபெற்றிருக்குமேயானால் எந்தவொரு நாட்டின் அரசாங்கமும் இத்தனை அசமந்தப்போக்கை கடைப்பிடித்திருக்காது. ஆனால் சிறிலங்கா அரசு அது குறித்து அக்கறையிற்று இருப்பதன் பின்னணி என்னவாயிருக்க முடியும் என்பதை நீங்களாகவே ஊகிக்க முடியும்.


இனப்படுகொலைப்போர் முடிவுற்று ஏ9 பாதை திறந்த கையோடு நடந்தேறிய முதலாவது சம்பவம் மருத்துவமாது தர்ஷிகாவினுடையது. தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்ட சம்பவத்தை உடனடியாகவே அது தற்கொலை என அறிவித்தது யாழ் பொலிஸ் மற்றும் இராணுவம். ஆனால் அவரின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கொண்ட சந்தேகத்தால் அரசுக்கெதிராக போர்க்கொடி தூக்கியதால் பிரேத பரிசோதை அறிக்கையின் உண்மைத் தன்மையை கட்டாயம் வெளியிட வேண்டிய நிலை ஏற்பட்டது. ஆதனடிப்படையில் அது ஒரு படுகொலை என்றே நிரூபணமானது. குற்றபழிப்பிற்கு பின் படுகொலை செய்யப்ட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தை வலுப்படுத்தியது. ஆதனடிப்படையில் சிங்கள வைத்திய அதிகாரி ஒருவர் கைது செய்யப்ட்டு நீதிமன்றில் ஆயர்படுத்தப்பட்டார். ஆனால் அவரை சிறிலங்கா ராணுவமும் அரசும் காப்பாற்றி அனுராதபுரம் சிறைச்சாலைக்கு மாற்றுவதாக கூறி பிணையில் விடுதலை செய்தது.

இந்தச் சம்பவம் தொடக்கம் இன்று இளம் பாடசாலை ஆசிரியைகள் தற்கொலை என்று வரும் செய்திகள் வரைக்கும் இதுவரை எந்த முழுமையான வைத்திய அறிக்கைகளோ காரணங்களோ வெளியிட்படவில்லை. இதன் பின்னணியில் கொலைகளும் தற்கொலைத்தூண்டுதல்களும் இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. தற்கொலைக்கு தூண்டுதலும் அதை ஊக்குவித்தலும் கொலை என்றே கருத்தப்படும். இதுவரை தற்கொலை என்று வந்த அத்தனை பெண்களின் உடல்களிலும் காயங்களும் வன்முறை அடையாளங்களும் இருந்தான் இருக்கின்றன. ஆனால் அதுகுறித்த விசாரணைகளோ விசாரணை அறிக்கைகளோ இதுவரை சமர்ப்பிக்கப்பட்வில்லை. வெறுமனே தற்கொலை என்று சொல்லி கவனமற்று விடமுடியாது. துற்கொலைக்கான காரணங்களை சமுகத்திற்கு சொல்லவேண்டிய கட்டாயம் நீதித்துறைக்கு இருக்கிறது.

இப்படி தமிழ் இளம் சமுதாயத்தின் மீது கொலைகளை செய்து தற்கொலைகள் என பெயர்சூட்டி தூக்குகளில் தொங்கவிடுவதும் உண்மையாகவே தற்கொலைகளாக இருப்பவற்றின் காரணங்களை மறைப்பதும் ஒருவிதமான இன அழிப்புத்தான். உளவியல் ரீதியிலான இன அழிப்பு இது. இது குறித்து தமிழ் மக்கள் விழிப்புடன் செயற்பட வேண்டும்.


அரச பயங்கரவாதத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் சிறிலங்கா நீதித்துறையிடம் நியாயத்தை எதிர்பார்ப்பதென்பது இயலாத ஒன்றாக மாறியுள்ளது. புhலியல் ரீதியாக வன்முறைகளுக்கு உள்ளாகும் தமிழ் உறவுகள் நீதிமன்றங்களை நம்பி நீதிகேட்டுச் செல்லமுடியாத நிலை தோன்றியுள்ளது. புhலியல் வன்முறைக்குட்படுத்தியரை நீதிமன்றத்தில் அடையாளம் காட்டினாலும் அவர்கள் இராணுவ மற்றும் அரசியல் செல்வாக்குடன் வெளியில் வந்துவிடுகிறார்கள். பின் வழக்கை வாபஸ்வாங்குமாறும் அல்லது அதுகுறித்து இனிமேல் அக்கறை செலுத்தாது இருக்குமாறும் மிரட்டப்படுகிறார்கள். அதன் உச்சக்கட்டமாக பாதிக்கப்ட்டவர்கள் தற்கொலை செய்து கொள்கிறார்கள். இப்படியான சம்பவங்கள் ஊடகங்களுக்கு தெரியாமல் இருந்தாலும் இடம்பெயர்ந்து மீளக்குடியமர்ந்துள்ள மக்களிடையில் காணப்படுகிறது. இப்படியான சம்பவங்கள் குறித்து ஊடகங்களுடனோ அல்லது வெளி அமைப்புகளுடனோ பேச அஞ்சுகிறர்கள் இந்த மக்கள்.

இந்த மக்களுக்கு உளவியல் ரீதியிலான பலம் கொடுக்க வேண்டும். சர்வதேச மனித உரிமை அமைப்புகள் மற்றும் உளவியல் அமைப்புகளை நாடி தமிழர் தாயகத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் இந்த சம்பவங்கள் குறித்து முறைப்பாடுகளை செய்யவேண்டும். ஆலோசனைகளை பெறவேண்டும். சிறிலங்கா அரசாங்கத்தின் இந்த வன்மத்தை நேரடியாக கண்காணித்து தமிழர் தாயகப்பகுதிகளில் உளவியல் பலத்தை அதிகரிக்க சர்வதேசத்தை உதவுமாறு வற்புறுத்த வேண்டும். இது குறித்தும் புலம்பெயர் தமிழ் மக்கள் அவசரமாக செயற்படுவது இன்றியமையாதது.

ஆதி
10-06-11

Thursday, June 9, 2011

மெளனத்தின் போராட்டம்



மனிதம் தீர்ந்துவிட்ட
இந்த மண்ணில் இருந்து
இன்னமும் இன்னமும்
எப்படித்தான்
நாங்கள் கத்துவது..
எனது குரல்வளையை
நசுக்கி
பிய்த்தெறிய
இந்த அரச இயந்திரத்தின்
கரங்கள் மிகப்போதுமானவையே!!
வீட்டுவாசலில்
துப்பாக்கியை சொருவியபடி
அங்கும் இங்குமாய்
அலைந்து திரியும்
இந்த சிப்பாயின்
துப்பாக்கிச் சன்னம்
என்னில் பாய்ந்துவிட
சில நொடிகளுக்கு மேல் ஆகாது...


புழுதி மாறாத
என் வீதிகளில்
புதிதாய்
ராணுவத்தை தவிர
எதையுமே தருவிக்கவில்லை
இந்த சிங்கள அரசு...
பலவந்தமாய் திணிக்கப்படும்
பெரும்பான்மை மொழியும்
அதன் பால் கொண்ட
சமய நெறியும்
என்னை மீண்டும் மீண்டும்
சுதந்திரத்திற்கான போராட்டம்
பற்றியதாய்
சிந்திக்கத் தூண்டுகிறது..
ஆனால்
வீட்டுவாசலில்
துப்பாக்கியை சொருவியபடி
அங்கும் இங்குமாய்
அலைந்து திரியும்
இந்த சிப்பாயின்
துப்பாக்கிச் சன்னம்
என்னில் பாய்ந்துவிட
சில நொடிகளுக்கு மேல் ஆகாது...

ஆதி
6-6-2011

Blog template by simplyfabulousbloggertemplates.com

Back to TOP