இன அழிப்பு நடந்தேறி முடிந்த ஈழத்தில் குறிப்பாக தமிழர் தாயகப்பகுதிகளில் நாளுக்குநாள் தற்கொலைச்சம்பவங்கள் அதிகரித்துக் கொண்டிருக்கின்றன. அதற்கான பின்னணி என்ன, காரணங்கள் என்னவாயிருக்க முடியும் என்பது பற்றியதான ஒரு ஆய்வுதான் இந்த கட்டுரை.
பலதரப்பட்ட நாடுகளின் உதவியுடன் போர்விதிமுறைகளுக்கப்பாற்பட்டு இரண்டு நாடுகள் சண்டையிடும் போது பாவிக்கக் கூடிய அனைத்து ஆயுதங்களை பாவித்து மனத உரிமைகளை மீறி தமிழினத்தின் மீது மாபெரும் இனப்படுகொலையை கனகச்சிதமாக முடித்துவிட்டு எந்த சலனமும் இன்றி இலங்கை அரசு உலக அரங்கில் உலா வருகிறது.
மனிதாபிமான போர் என்று அட்டைப்படம் கட்டிய இனப்படுகொலைiயின் மற்றய பக்கங்களை புரட்டிப்பார்ப்பதற்கும் தட்டிக்கேட்பதற்கும் உலக அரங்கில் இருந்து வலுவான குரல்கள் எதுவுமே இன்னமும் எழவில்லை. போர்தின்ற மக்களின் நலன் குறித்து அக்கறை கொள்ள எந்த நாடுகளுமே சிறிலங்கா அரசை அதட்டிக்கேட்கவில்லை. வேரோடு பிடுங்கி எறிப்பட்ட மக்களாய் அவர்கள் வாழ்வோடு போராடிக் கொண்டிருப்பது குறித்து யாருக்கும் அக்கறையில்லை. உரிமைகளை இழந்தும் எல்லா உடமைகளை இழந்தும் உறவுகளை இழந்தும் வாழ்வின் கிழிந்து போன பக்கங்களுடன் இந்த மக்கள் நாட்களை நகர்த்திக் கொண்டிருக்கிறார்கள்.
சங்கீதங்கள் மரத்துப்போய் மௌனம் நீண்டுகிடக்கும் வெளியில் இவர்களின் மனங்களும் சிந்தனைகளும் வெறுமையாய் கிடக்கிறது. எல்லாம் இழந்து விட்ட இவர்களின் மனங்களை செழிப்படைய செய்து வாழ்வியல் குறித்து சிந்திக்க வைக்க யாருமே இதுவரை களத்திற்கு வரவில்லை. உளவியல் ரீதியில் நொந்துபோய் கிடக்கும் இந்த மக்களை உளமேற்ற சிறிலங்கா அரசு ஒருபோதும் நினைக்காது. ஆவர்களின் உள ரீதியான பலத்தை அதிகரிக்க செய்து வாழ்வின் வரப்போகும் நாட்களை நம்பிக்கை தரக்கூடியவையாக அவர்களுக்கு செய்து கொடுக்க வெளிநாட்டு அமைப்புகளை இந்த நிலத்திற்கு அனுமதிக்கும் படி சர்வதேசம் சிறிலங்கா அரசை அதட்டவில்லை.
ஏன் உளவியல் பலம் அவசியம்?
ஏல்லா துயரத்தையும் நேரில் கண்டமக்கள்.. எல்லா உடமைகளையும் இழந்த மக்கள் உறவுகள் பலதை இழந்த மக்கள் வாழ்வது குறித்த வெறுப்பில் இருக்கிறார்கள். குழந்தைகள் எதையுமே அச்சத்துடன் பார்க்கிறார்கள். இரவுகளில் திடுக்கிட்டு கதறுகிறார்கள். போரின் சத்தமும் அச்சமும் இன்னமும் இவர்களின் பொழுதுகளை தின்றபடிதான் உள்ளது. ஒரு இனத்தின் விடிவிற்காய் இறுதிவரை ஆயுதமெடுத்து போராடிய மக்கள் இவர்கள். இறுதிவரை அத்தனை வலிகளையும் போரின் ரணங்களையும் அனுபவித்த மக்கள் இவர்கள். அந்த வலியும் ரணமும் மரணத்தின் வாயில்வரை சென்றுவந்த தருணங்களும் இவர்களை இன்னமும் வதைத்துக் கொண்டே இருக்கிறது.
சிந்தனைகள் இறந்தகாலத்தின் மீதும் நிகழ்காலத்தின் மீதும் அடிக்கடி அலைபாய்ந்து நிமிடங்களை கொன்று கொண்டிருக்கும் இந்த நேரத்தில் அவர்களின் சிந்தனைகளை எந்தவழியிலும் திசை திருப்பிவிடக்கூடிய அபாயம் இருக்கிறது. வாழமுடியும் என்ற நம்பிக்கையையும் வாழ்வதில் இனி எதுவுமே இல்லை என்ற வெறுப்பையும் இலகுவாக குழந்தைகளுக்கு கூட புகுத்திவிடக்கூடிய அபாயகரமான தருணம் இது. இந்த தருணத்தில் தான் நம்பிக்கை தரக்கூடிய உளவியல் ரீதியிலான பலத்தை இவர்களுக்கு கொடுக்க வேண்டும்.
இந்த உளவியல் பின்னணிகளில் தான் வாழ்வியல் மீதான் வெறுப்புகளை உருவாக்கி இளம் தலைமுறையினருக்கு தற்கொலை மீதான தூண்டுதலை செய்து கொண்டிருக்கிறான் எதிரி. இது வரை எத்தனையோ தற்கொலைகள் நடந்துவிட்ட பின்னும் அதன் பின்னணி அல்லது தற்கொலை தூண்டுதலுக்கான காரணங்கள் குறித்து ஆய்வு செய்து அதற்கு தீர்வுகாணும் வழிமுறைளை சிறிலங்கா அரசு மேற்கொள்ளாதிருப்பதற்கான காரணம் என்ன? குறிப்பிட்ட ஒரு சில மாதங்களுக்குள் 30ற்கும் மேற்பட்ட சம்பவங்கள் தற்கொலைச்சம்பவங்கள் என வைத்திய அறிக்கைகள் தெரிவித்தும் அதுகுறிதது எந்த அக்கறையும் எடுக்கப்படாமைக்கான காரணம் என்ன? குறிப்பிட்ட ஒரு பிரதேச எல்லைகளுக்குள் மாத்திரம் அல்லது குறிப்பிட்ட ஒரு இனக்குழுமத்திடையில் மாத்திரம் குறுகிய காலப்பகுதிகளில் இதத்தனை தற்கொலைச்சம்பவங்கள் நடைபெற்றிருக்குமேயானால் எந்தவொரு நாட்டின் அரசாங்கமும் இத்தனை அசமந்தப்போக்கை கடைப்பிடித்திருக்காது. ஆனால் சிறிலங்கா அரசு அது குறித்து அக்கறையிற்று இருப்பதன் பின்னணி என்னவாயிருக்க முடியும் என்பதை நீங்களாகவே ஊகிக்க முடியும்.
இனப்படுகொலைப்போர் முடிவுற்று ஏ9 பாதை திறந்த கையோடு நடந்தேறிய முதலாவது சம்பவம் மருத்துவமாது தர்ஷிகாவினுடையது. தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்ட சம்பவத்தை உடனடியாகவே அது தற்கொலை என அறிவித்தது யாழ் பொலிஸ் மற்றும் இராணுவம். ஆனால் அவரின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கொண்ட சந்தேகத்தால் அரசுக்கெதிராக போர்க்கொடி தூக்கியதால் பிரேத பரிசோதை அறிக்கையின் உண்மைத் தன்மையை கட்டாயம் வெளியிட வேண்டிய நிலை ஏற்பட்டது. ஆதனடிப்படையில் அது ஒரு படுகொலை என்றே நிரூபணமானது. குற்றபழிப்பிற்கு பின் படுகொலை செய்யப்ட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தை வலுப்படுத்தியது. ஆதனடிப்படையில் சிங்கள வைத்திய அதிகாரி ஒருவர் கைது செய்யப்ட்டு நீதிமன்றில் ஆயர்படுத்தப்பட்டார். ஆனால் அவரை சிறிலங்கா ராணுவமும் அரசும் காப்பாற்றி அனுராதபுரம் சிறைச்சாலைக்கு மாற்றுவதாக கூறி பிணையில் விடுதலை செய்தது.
இந்தச் சம்பவம் தொடக்கம் இன்று இளம் பாடசாலை ஆசிரியைகள் தற்கொலை என்று வரும் செய்திகள் வரைக்கும் இதுவரை எந்த முழுமையான வைத்திய அறிக்கைகளோ காரணங்களோ வெளியிட்படவில்லை. இதன் பின்னணியில் கொலைகளும் தற்கொலைத்தூண்டுதல்களும் இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. தற்கொலைக்கு தூண்டுதலும் அதை ஊக்குவித்தலும் கொலை என்றே கருத்தப்படும். இதுவரை தற்கொலை என்று வந்த அத்தனை பெண்களின் உடல்களிலும் காயங்களும் வன்முறை அடையாளங்களும் இருந்தான் இருக்கின்றன. ஆனால் அதுகுறித்த விசாரணைகளோ விசாரணை அறிக்கைகளோ இதுவரை சமர்ப்பிக்கப்பட்வில்லை. வெறுமனே தற்கொலை என்று சொல்லி கவனமற்று விடமுடியாது. துற்கொலைக்கான காரணங்களை சமுகத்திற்கு சொல்லவேண்டிய கட்டாயம் நீதித்துறைக்கு இருக்கிறது.
இப்படி தமிழ் இளம் சமுதாயத்தின் மீது கொலைகளை செய்து தற்கொலைகள் என பெயர்சூட்டி தூக்குகளில் தொங்கவிடுவதும் உண்மையாகவே தற்கொலைகளாக இருப்பவற்றின் காரணங்களை மறைப்பதும் ஒருவிதமான இன அழிப்புத்தான். உளவியல் ரீதியிலான இன அழிப்பு இது. இது குறித்து தமிழ் மக்கள் விழிப்புடன் செயற்பட வேண்டும்.
அரச பயங்கரவாதத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் சிறிலங்கா நீதித்துறையிடம் நியாயத்தை எதிர்பார்ப்பதென்பது இயலாத ஒன்றாக மாறியுள்ளது. புhலியல் ரீதியாக வன்முறைகளுக்கு உள்ளாகும் தமிழ் உறவுகள் நீதிமன்றங்களை நம்பி நீதிகேட்டுச் செல்லமுடியாத நிலை தோன்றியுள்ளது. புhலியல் வன்முறைக்குட்படுத்தியரை நீதிமன்றத்தில் அடையாளம் காட்டினாலும் அவர்கள் இராணுவ மற்றும் அரசியல் செல்வாக்குடன் வெளியில் வந்துவிடுகிறார்கள். பின் வழக்கை வாபஸ்வாங்குமாறும் அல்லது அதுகுறித்து இனிமேல் அக்கறை செலுத்தாது இருக்குமாறும் மிரட்டப்படுகிறார்கள். அதன் உச்சக்கட்டமாக பாதிக்கப்ட்டவர்கள் தற்கொலை செய்து கொள்கிறார்கள். இப்படியான சம்பவங்கள் ஊடகங்களுக்கு தெரியாமல் இருந்தாலும் இடம்பெயர்ந்து மீளக்குடியமர்ந்துள்ள மக்களிடையில் காணப்படுகிறது. இப்படியான சம்பவங்கள் குறித்து ஊடகங்களுடனோ அல்லது வெளி அமைப்புகளுடனோ பேச அஞ்சுகிறர்கள் இந்த மக்கள்.
இந்த மக்களுக்கு உளவியல் ரீதியிலான பலம் கொடுக்க வேண்டும். சர்வதேச மனித உரிமை அமைப்புகள் மற்றும் உளவியல் அமைப்புகளை நாடி தமிழர் தாயகத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் இந்த சம்பவங்கள் குறித்து முறைப்பாடுகளை செய்யவேண்டும். ஆலோசனைகளை பெறவேண்டும். சிறிலங்கா அரசாங்கத்தின் இந்த வன்மத்தை நேரடியாக கண்காணித்து தமிழர் தாயகப்பகுதிகளில் உளவியல் பலத்தை அதிகரிக்க சர்வதேசத்தை உதவுமாறு வற்புறுத்த வேண்டும். இது குறித்தும் புலம்பெயர் தமிழ் மக்கள் அவசரமாக செயற்படுவது இன்றியமையாதது.
ஆதி
10-06-11
காலத்திற்கு கட்டாயமான பதிவு..
ReplyDeleteசிந்திக்க வைக்கும்பதிவு பாராட்டுக்கள். மேலும் தொடருங்கள்.
ReplyDeleteமிக்க நன்றி ஜனகன்
ReplyDeleteமிக்க நன்றி நிலாமதி
ReplyDeleteஇந்தத் தாக்க ரீதியான உளவியலை என்னவென்று சொல்வது சகோ..
ReplyDeleteஎம் தலமைகள் பணத்துக்கும் பதவிக்கும் அடிமையாக இருக்கும் வரை இது தொடரத் தானே போகிறது...