மனிதம் தீர்ந்துவிட்ட
இந்த மண்ணில் இருந்து
இன்னமும் இன்னமும்
எப்படித்தான்
நாங்கள் கத்துவது..
எனது குரல்வளையை
நசுக்கி
பிய்த்தெறிய
இந்த அரச இயந்திரத்தின்
கரங்கள் மிகப்போதுமானவையே!!
வீட்டுவாசலில்
துப்பாக்கியை சொருவியபடி
அங்கும் இங்குமாய்
அலைந்து திரியும்
இந்த சிப்பாயின்
துப்பாக்கிச் சன்னம்
என்னில் பாய்ந்துவிட
சில நொடிகளுக்கு மேல் ஆகாது...
புழுதி மாறாத
என் வீதிகளில்
புதிதாய்
ராணுவத்தை தவிர
எதையுமே தருவிக்கவில்லை
இந்த சிங்கள அரசு...
பலவந்தமாய் திணிக்கப்படும்
பெரும்பான்மை மொழியும்
அதன் பால் கொண்ட
சமய நெறியும்
என்னை மீண்டும் மீண்டும்
சுதந்திரத்திற்கான போராட்டம்
பற்றியதாய்
சிந்திக்கத் தூண்டுகிறது..
ஆனால்
வீட்டுவாசலில்
துப்பாக்கியை சொருவியபடி
அங்கும் இங்குமாய்
அலைந்து திரியும்
இந்த சிப்பாயின்
துப்பாக்கிச் சன்னம்
என்னில் பாய்ந்துவிட
சில நொடிகளுக்கு மேல் ஆகாது...
ஆதி
6-6-2011
No comments:
Post a Comment