Powered by Blogger.

Sunday, June 19, 2011

பாதைகளை உருவாக்குவோம்


இன்று நாம் வித்தியாசமான அரசியல் சூழலில் இருக்கிறோம். பலவிதமான உலக அரசியல் மாற்றங்களுக்கு நடுவே எமது உரிமைப் பிரச்சினையை நகர்த்தியிருக்கிறோம்.இன்று தமிழர்களுக்கான இராணுவ தலமையோ குறிப்பிடத்தக்க அரசியல் தலமையோ இன்றி உலக அரங்கில் உரிமைப்பிரச்சினையை பேச வேண்டிய கட்டாய அரசியல் நிலமைக்கு தமிழர்களாகிய நாம் தள்ளப்ட்டிருக்கிறோம் என்பதை அனைவரும் தெளிவாக விளங்கிக் கொள்ள வேண்டும்.

இனத்தின் தேசிய உரிமைப்பிரச்சினையை உலக அரங்கில் எமக்கு சாகமாக பல வழிகளிலும் நகர்த்த வேண்டிய கட்டாயமும் நகர்த்தப்பட்டுள்ள பல விடையங்களை இன்னமும் வீரியமாக கொண்டு செல்ல வேண்டிய தேவையும் ஒவ்வொரு தமிழனுக்கும் உள்ளது என்பதை நாங்கள் புரிந்து கொள்ள வேண்டும். ஈழத்தில் தமிழர்களுக்கான விடுதலைப்போராட்டம் ஏன் ஆரம்பித்தது என்ற தார்ப்பரியத்தை ஒவ்வொருவரும் விளங்கிக் கொள்ள வேண்டும். அகிம்சைப் போராட்டங்கள் ஆயுதப்போராட்டமாக உருவெடுத்து இன்று முற்றுமுழுதான அரசியல் ராஜதந்திர நகர்வுகளுக்கு பரிணமித்திருக்கிறது.

அகிம்சை போராட்டங்கள் தொடக்கம் ஆயுதப்போராட்ட முடிவு வரைக்கும் வெளிப்படையான தலமைகளை நாங்கள் கொண்டிருந்ததும் இன்றைய அரசியல் ராஜதந்திர நகர்வுகளுக்கு வெளிப்படையான பொதுவான தலமையின்றி முற்று முழுதாக மக்கள் மயப்படுத்தப்பட்ட வேலைத்திட்டமாக மாறியுள்ளதை தமிழர்கள் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும். இன்றை நிலையில் சர்வதேச பார்வைகளை தமிழர் உரிமைப்பிரச்சினை மேல் தெளிந்த நிலையில் குவிக்க ஒட்டு மொத்த தமிழினமும் ஒன்றுபடவேண்டிய கட்டாயம் இப்பொழுது உருவாகியிருக்கிறது. உரிமைப்பிரச்சினைகளைஇ எமது தேவைகளை சர்வதேச மயப்படுத்துதல் என்பது புலம்பெயர் தமிழர்களின் கையில் தான் பெரிதும் தங்கியிருக்கிறது.

1976ம் ஆண்டு விடுதலைப்புலிகளின் அடிப்படைக் கொள்கையாகிய “தமிழீழத்தனியரசு”  என்ற கொள்கையை வலியுறித்தி வட்டுக்கோட்டையில் நிகழ்த்தப்ட்ட தீர்மானத்திற்கு உலகெங்கும் நடாத்தப்ட்ட வாக்கெடுப்பில் 90 வீதத்திற்கும் அதிகமானோர் ஆதரவு தெரிவித்து தமிழ் மக்களின் அபிலாசையை உலகிற்கு வெளிப்படுத்தினர் என்பது மட்டுமல்லாது தமிழ் மக்களின் நிலைப்பாட்டை தெளிவாக சிறிலங்கா அரசிற்கும் உலகிற்கும் வெளிப்படுத்தியிருந்தனர். இதன் அடிப்படையில் தான் தமிழ் மக்களின் சிறிலங்கா அரசுடனான ஆயுதப்போராட்டமும் சர்வதேச முன்னிலையில் நடைபெற்ற பேச்சுவாரத்தைகளும் நடைபெற்றன. அதாவது ஒட்டுமொத்த தமிழ் மக்களின் அபிலாசைகளை அடைவதற்கு போராடிய வழிகள் பலவகைப்பட்டாலும் குறிக்கோள் இன்றுவரை ஒன்றாகதான் இருந்து வந்துள்ளது.

அகிம்சை மற்றும் ஆயுதப்போராட்ட காலப்பகுதிகளில் கொள்கைவேறுபாடுகள் மற்றும் ஆயுதபோராட்ட எதிர்ப்பு போக்கு காரணங்களால் தமிழ் மக்களில் சில பிரிவினர் சிறிலங்கா அரசுடன் சேர்ந்தியங்கிய நிலைப்பாடும் அவர்களால் தமிழ் மக்களின் போராட்டங்களிற்கு முட்டுக்கட்டை ஏற்படும் சந்தப்பங்களும் பெருமளவில் உருவாகியிருந்தது. ஆனால் இன்றய நிலை என்பது முற்றிலும் மாறுபட்ட அரசில் சூழ்நிலை. இராணுவ கட்டமைப்போ அல்லது அமைப்பு ரீதியான அரசில் தலமையோ இன்றி ஈழத்தில் நேரடியாக எமது அபிலாசைகளை சிறிலங்கா அரசிற்கு வெளிப்படுத்தும் சூழ்நிலையும் சர்வதேசத்திற்கு நேரடியாக எமது பிரச்சினைகளை வெளிப்படுத்தும் நிலையும் உருவாகியுள்ளது.

ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்களை பலி கொடுத்து, உலகிலேயே நடந்தேறாத பல வகையிலான அத்துமீறல்களையும் அராஜகங்களையும் சந்தித்து, இராணுவ தலமைகளையும் இழந்து இக்கட்ட நிலையில் இன்று தமிழினம் இருக்கிறது. இந்த நிலையிலே தமிழ் மக்கள் மிக நிதானமாக சிந்தித்து செயல்ப்பட வேண்டிய கட்டாம் இருக்கிறது. எமது அரசியல் இலக்கை அடைவதற்கு புதிய பாதைகளை உருவாக்கி ஒருமித்த இலக்கிற்காக பயணிக்க வேண்டிய மிக முக்கியமான சந்தர்ப்பத்தில் அனைவரும் இருக்கிறோம்.
முந்தயை காலப்பகுதிகளில் நடந்த போராட்டங்களில் இருந்த கருத்துவேறுபாடுகள், வறட்டுக்கௌரவ நிலைப்பாடுகள் மற்றும் தேவைகள் என பல வழிகளில் தமிழ் மக்களின் விடுதலைப்பயணத்தில் இருந்து விலகி நின்றவர்களும் சிறிலங்கா அரசுடன் கைகோர்த்து நின்று இன்று தமிழ் மக்களின் மிகப்பெரிய அழிவிற்கு விரும்பியோ விரும்பாமலோ காரணமாகிவிட்ட தமிழர்களும் இன்று நிதானமாக சிந்திக்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது.

சுயநலக்கோட்பாடுகளுக்கப்பால் தமிழ் இனம் என்ற ஒற்றை மொழியில் பயணித்து ஒட்டுமொத்த இனத்தின் சுதந்திரத்திற்கும் உரிமைக்கும் குரல் கொடுக்கவேண்டிய காலத்தின் கட்டளை அனைவருக்கும் திணிக்கப்ட்டுள்ளது என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். சமகாலத்தில் அந்நிய அராஜகங்களால் எம் தமிழ் உறவுகள் படும் சொல்லணாத்துன்பங்களும் இன அழிப்பு நிகழ்ச்சி நிரலில் சிக்கி தவிக்கும் ஈழத்து உறவுகளையும் கருத்தில் கொண்டு வேறுபாடுகளுக்கப்பால் தமிழ் இனமாக சிந்திக்க வேண்டி கட்டாயம் அனைவருக்கும் ஏற்பட்டுள்ளது.

கட்சி ஆதரவாளர்கள் என்ற பெயரில் தமிழ் இனத்தின் தேசிய விடுதலையை எதிர்ப்பவர்களாயும், பிரதேசவாரிய பிரிவுபட்டு நிப்பவர்களும், சொந்த சொந்த தேவைகளுக்காய் தமிழ் தேசிய விடுதலைப் பணயத்திற்கு எதிராக முட்டுக்கட்டை போடுபவர்களும், இன்று சிந்திக்க வேண்டி நிர்ப்பந்தம் ஏற்பட்டிருக்கிறது. தமிழ் இன அழிப்பும், தமிழ் இனச்சிதைப்பும,இ தமிழ் இன விடுதலைப்பயணத்திற்கு முட்டுக்கட்டை போடுபவர்களின் எதிர்காலத்தையும் இருப்பையும் கூட இல்லாது செய்யும் என்ற உண்மையை விளங்கிக் கொள்ள வேண்டும்.

இனமே பெரும் அழிவுக்கு உட்பட்டு நிக்கும் இந்த நேரத்தில் தமிழ் மக்களுக்கிடையில் உள்ள கருத்துவேறுபாடுகள் மற்றும் காழ்ப்புணர்வுகளை கழைந்து ஒன்றுபட்ட இனமாக எமது இனத்தை கருவறுத்த சிறிலங்கா அரசை நீதிக்கு முன் நிறுத்த பாடுபட வேண்டும். சர்வதேச சட்டத்தின் வரையறைக்குட்பட்டு இனத்தின் தேசிய விடுதலைக்காய் பயணிக்க வேண்டும். சர்வதேச மனித உரிமை மற்றும் போர்க்குற்ற ஆய்வியலாளர்கள்இ ராஜதந்திரிகள் என பலதரப்பட்டோரையும் அணுகி எமது இனத்தின் மீது நடந்தேறிய இன அழிப்புக் குறித்தும் எமது இனத்திற்கு தேவையான விடுதலை குறித்தும் பேச வேண்டும். எமது ராஜதந்திர நகர்வுகளுக்கு நாங்களே பாதைகளை உருவாக்க வேண்டும். உலக ராஜதந்திரிளை அணுகி எமது பிரச்சினைகளை பேசுவதற்குரிய வெளியை நாங்களே கண்டுபிடிக்க வேண்டும். இது ஒவ்வொரு தமிழனின் கடமையும் கூட. சிறிலங்கா அரசுக்கெதிராய் தமிழ் மக்களின் நலனிற்காய் செய்யப்டும் அந்தனை விடையங்களையும் நாம் ஒருமித்த தமிழ் இனமாக ஆதரிக்க வேண்டும்.

சிறிலங்காவில் தமிழ் மக்களின் இருப்பை சிதைத்து சிங்களமயமாக்கும் அரசின் முகமூடி அரசியலை கிழித்தெறிய வேண்டும். தமிழ் மக்களின் கலாச்சார மற்றும் கல்வி பலத்தை ஆட்டம் காண வைப்பதோடு தமிழ் மக்களை அரசியல் அடிமைகளாக்க தனது அரசியலை நகர்த்திக் கொண்டிருக்கும் சிறிலங்கா அரசின் போக்கை தெளிவாக விளங்கி ஒன்றுபட்ட இனமாக விடுதலைக்குபாடுபடுவதுதான் இன்று தமிழ் மக்கள் அனைவருக்கும் உள்ள அவசரமான தேவை.

ஆதி
3-6-11

No comments:

Post a Comment

Blog template by simplyfabulousbloggertemplates.com

Back to TOP