Powered by Blogger.

Friday, November 12, 2010

சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடும் தமிழர் உரிமை எதிர்ப்பு நாசகார சக்திகளும்

தமிழும் அதன் தொன்மையும் எமது உயிர் மற்றும் உரிமையே. ஆனால் தமிழினமே அழிக்கப்ட்ட பூமியில், துடிக்க துடிக்க தமிழனை கொன்று புதைத்துவிட்டு எதுவும் தெரியாதது போல் எக்காளமிட்டுக்கொண்டிருக்கும் சிங்கள அரசின் நாட்டில், இந்த தமிழ் எழுத்தாளர் மாநாடு தேவையா என்பது தான் பிரச்சினை. சர்வதேச தமிழ் எழுத்தாளர் ஒன்றியம் என்பது என்ன? எப்போது உருவானது? இது போகட்டும். விடையத்திற்கு வருவோம்.

எத்தனையோ தமிழ் எழுத்தாளர்கள் சுட்டுப்படுகொலை செய்யபட்டுக்கொண்டிருக்கும் போது,இதே தலை நகரில் எத்தனையோ இளைஞர் யுவதிகள் கடத்தப்ட்டுக்கொண்டிருக்கும் போது, எம் இனம் கொத்துக்கொத்தாய் கொன்று குவிக்கபட்டுக்கொண்டிருக்கும் போது, இலங்கை அரசிடம் குறைந்தபட்டசம் ஒரு அறிக்கை விடுப்பினூடாக சரி, மனிதாபிமானம் மற்றும் மனித உரிமைகள் பற்றி கேள்வி எழுப்ப முடியாதிருந்த இந்த ஒன்றியம்... இப்போது தமிழர் உரிமை பற்றி பேசுவதற்கு சிறிலங்காவில் சந்தர்ப்பம் கிடைத்துள்ளது என்று கூறுவது வேடிக்கைக்குரியதும் அதன் பின்னணியையும் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.

சிங்கள அரசால் தமிழ் மக்கள் பிணங்களாக வேரறுக்கப்ட்டனர், முகாம்களில் கருவறுக்கப்ட்டுக் கொண்டிருக்கின்றனர், நிலங்கள் பறிக்கபட்டுக் கொண்டிருக்கிறது என்று மக்கள் ஒப்பாரி வைத்த வண்ணம் இருக்கின்றனர், ஆனால் மாநாட்டின் இலங்கைக்கான இணைப்பாளர் அவர்கள், ஆடிவேல் திருவிழா கொழும்பில் நடந்ததென்றம் நல்லூரில் திருவிழா நடந்ததென்றும் அதற்கு ராஜபக்ஸ வந்தாரென்றும் அதே போல் தான் இதுவும் ஒரு நிகழ்வென்று கூறுவது எழுத்தாளர் மாநாட்டின் நோக்கத்தை திசை திருப்புவதோடு அவரது உள்நோக்கின் வெளிப்படையான கருத்து.

எல்லாரும் அறிந்த தமிழ் எழுத்தாளர் திஸ்ஸநாயகம் சிங்கள அரசால் காட்டுமிராண்டித்தனமாக நடாத்தப்பட்டு இன்று நாட்டைவிட்டு வெளியேறியுள்ளார் இது யாவரும் அறிந்த விடையம். தமிழர் உரிமைக் கோரிக்கைகளை அப்பட்டமாக எழுத முடியாது என்று சிறிலங்கா அரசே அவரை வெளிப்படையாக எச்சரித்திருந்தது. அந்த சர்தர்ப்பத்தில் இந்த ஒன்றியமும், திரு ஞானசேகரம் அவர்களும் எங்கிருந்தனர்?? தமிழர் உரிமைக் கோரிக்கைகளை அப்பட்டமாக பேச முடியாது என ஒரு சர்வதேச விருதுக்குரிய எழுத்தாளருக்கே இலங்கை அரசு சொல்லியுள்ள நிலையில், இலங்கை அரசை சர்வதேச மட்டத்தில் காப்பாற்றுவதற்கான ஆரம்ப கட்ட செயற்பாட்டையே இந்த ஏற்பாட்டாளர்கள் செய்து கொண்டிருக்கிறார்கள் என்பது வெளிப்டை உண்மையாகிறது.

மாவீரர் நினைவு கட்டுரைகள்,தமிழர் உரிமை பற்றிய கட்டுரைகள், உலகின் எந்த பாகத்திலிருந்து வெளியாகினாலும் அச்த சஞ்சிகையில் சம்மந்தப்பட்ட பக்கங்கள் கிழிக்கப்ட்டே சிறிலங்காவிற்குள் அனுமதிக்கப்படுகின்றன. இந்த நிலையில் சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாட்டை சிறிலங்காவில் நடத்துவதற்கு ஏற்பாட்டை யார் செய்வார்கள் என்று அனைத்து தமிழ் மக்களுக்கும் புரியும்.

தமிழர் உரிமைபோராட்ட மற்றும் புலி எதிர்ப்பு சக்திகளின் மறைமுக அரசியல் பின்னணியில்தான் இந்த மாநாடு சிறிலங்காவில் நடாத்துவதற்கான ஏற்பாடு நடைபெற்றுக் கொண்டிருப்பதற்கான சான்றுகள் பலவற்றை கூறலாம். தமிழர் உரிமை போராட்ட மற்றும் புலி எதிர்பு எழுத்தாளர்களின் வெளியீடுகளான வடலி வெளியீடுகளுக்கு எந்த பக்க வினைகளுமற்று சிறிலங்காவில் பரவவிடுவதற்கான ஏற்பாடுளிற்கு அரசு சார் தமிழ் கட்சிகளின் மறைமுக ஒத்துழைப்பபுகள் இருப்பதே சான்று. முற்று முழுதாக அவர்களின் செயற்பாடுகளினூடாகவே இந்த மாநாடு நடைபெறப்போகிறது என்ற சந்தேகம்தான், சிறிலங்காவில் நடைபெற இருக்கும் இந்த மாநாட்டினூடாக சிறிலங்கா அரசை காப்பாற்றுவதற்கான அரசியல் செயற்பாட்டை வெளிக்காட்டுகிறது.

ஆய்வரங்கங்களில் பேசப்படும் விடயங்களில் அரசியல் பேசக் கூடாது என்று மாநாட்டு இலங்கை இணைப்பாளர் திரு ஞானசேகரம் அவர்கள் கூறியிருப்பதானது, அந்த மாநாட்டில் குறைந்த பட்டசம் தமிழ் எழுத்தாளர்களுக்கு... இலங்கை அரசால் கொடுக்கப்பட்டுக் கொண்டிருக்கும் உரிமை மறுப்புகளுக்கோ அல்லது அழுத்தங்களுக்கோ எதிராக குறை கூறிக்கூட ஒரு அறிக்கை விடமுடியாது என்பதை காட்டுகிறது. மொழிக்கலப்பை, தமிழ் மொழிச் சிதைப்பை, மேற்கொள்ளும் சிறிலங்கா அரசுக்கெதிராக சான்றுகளோடு ஒரு கண்டன அறிக்கை விடமுடியாது என்பதை காட்டுகிறது. 

அதாவது தமிழ் எழுத்தாளர்கள் தமிழ் மக்களுடைய உரிமைகளை ஒன்று கூடி பேசிவிடக்கூடாது என்பதில் சிறிலங்கா அரசு தெளிவாக இருந்தே இந்த மாநாட்டின் ஒழுங்குபடுத்தல்களை நகர்த்திக்கொண்டிருக்கிறது.

இந்த மாநாட்டினாடாக ஒரு கல்லில் பல மாங்காய்கள் சிறிலங்கா அரசிற்கு விழப்போகிறது என்பதே உண்மை
1)சர்வதேச அளவில் எழுத்தாளர் ஊடகவியலாளர்களிற்கு சிறிலங்காவில் மிகச்சிறந்த உரிமை உள்ளது என்பதை காட்டுவது
2)ஒன்று கூடும் தமிழ் எழுத்தாளர்களை ஒட்டுமொத்த குரலாக தமிழ் மக்களின் உரிமை பற்றி பேசுவதை இலங்கையில் தடுப்பது
3)மாநாடே நடாத்தும் அளவிற்கு சர்வதேச தரத்தில் தமிழர்களுக்கு சிறிலங்காவில் உரிமை கிடைத்துவிட்டது என்பதை காட்டுவது.
4)மாநாட்டினூடாக தமிழர் உரிமைப்போராட்ட மற்றும் புலி எதிர்ப்பு எழுத்தாளர்களை இலகுவாக அடையாளம் கண்டு எதிர்காலத்தில் தமிழ் மக்களை ஊடகங்களினூடாக குழப்புவதற்கு பிரயோகிப்பது

இப்படி வெளிப்படையான காரணங்கள் பல காணப்படுகின்றன. ஆக இந்த மாநாடு நடாத்தப்படும் இடம், மாநாட்டை நடாத்தும் அமைப்பின் செயற்பாடு, மாநாட்டு இணைப்பாளர்களின் பின்னணி மற்றும் உள்நோக்கு அத்தோடு மாநாட்டினூடான சிறிலங்கா அரசின் அரசியல் நகர்வுகள் குறித்து சிந்தித்து விட்டு இந்த மாநாடு பற்றி தங்கள் நிலைப்பாட்டை எடுப்பதே எழுத்தாளர்களுக்கு, தமிழுக்கும் அதன் எழுத்து தர்மத்திற்கு செய்யும் சத்தியம.

மாநாட்டின் இலங்கை இணைப்பாளர் அண்மையில் வழங்கியுள்ள பேட்டில் காணப்படும் குழப்ப நிலைகள்.
தங்களுடைய உணர்வுகளை, தமிழுணர்வை, எழுத்தாளன் என்ற நிலையில் அல்லது கலைஞன் என்ற நிலையிலே பரந்த வாழ்கிற எங்களுடைய மக்கள் எல்லோரையும் ஒன்றிணைத்து  அவர்களோடு பரிமாற, கருத்துப்பரிமாற்றம் செய்ய ஒரு சந்தர்ப்பம் தேவை
நிச்சயமாகத் தணிக்கை இருக்கிறது அதாவது.  எந்த அரசியல் விடயங்களும் அதற்குள் வரக்கூடாது.
இந்த இரண்டு கருத்துகளும் அவரால் தெரிவிக்கப்பட்ட விடையங்களே.... "உணர்வுகளை பகிர்ந்து கொள்ள" என அழைப்பு விடுக்கப்படும் இடத்தில் தணிக்கை வேறு இருக்கிறது... இங்கேயும் தமிழ் எழுத்தாளர்ளின் உரிமைகளை பறிப்போம் என்று முற்கூட்டியே சொல்விடுகின்றனர் ஏற்பாட்டாளர்கள். அப்படியாயின் இவர்கள் யார்?? எல்லா உணர்வகளையும் பேசக்கூடிய நாட்டிலா இந்த மாநாடு நடைபெறப் போகிறது??

சர்வேதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு நடைபெற இருக்கும் சிறிலங்காவில் தமிழரின் நிலை...

கடவுளே இவர்களின் வாழ்வை உறுதிப்படுத்து..

சிறிலங்கா அரசினால் சின்னாபின்னமாக்கப்பட்ட பின் இப்பொது இருக்கும் கூடாரம்
கொத்து கொத்தாய் கொன்று குவிக்கப்பட்டுகிடக்கும் தமிழர்கள்
சிறிலங்கா அரசினால் காட்டுமிராண்டிதனமாக சுட்டுக்கொல்லப்ட்டுகிடக்கும் தமிழ் இளைஞர்கள்
கிளிநொச்சி இரணைமடுவில் சிறிலங்கா அரசால் திறக்கப்ட்டுள்ள பெளத்த விகாரை.
கிளிநொச்சி கனகாம்பிகை அம்மன் கோயில் வாசலில் ஆயுதம் தாங்கிய சிறிலங்கா படை.




இப்படி தமிழர்கள் நாடாத்தப்பட்டுக் கொண்டிருக்கும் சிறிலங்கா சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாட்டை நடத்த உகந்த இடமா??  தமிழினம் இப்படி ஒடக்கப்ட்டுக்கொண்டிருக்க தமிழ் எழுத்தாளனை அரசியல் பேசாதே என்று தடுப்பதன் பின்னணி என்ன??? அப்படித்தான் பேசினாலும் எதிர்காலத்திற்கு எந்த உத்தரவாதமும் கிடையாது. இப்படிப்பட்ட சர்வாதிகார நாட்டில் தமிழர் உரிமை போராட்ட எதிர்ப்பு சக்திகளால் ஒழுங்கு படுத்தப்பட்டுக்கொண்டிருக்கும் மாநாடு பற்றிய நிலைப்பாட்டை தமிழ் எழுத்தாளர்கள் தான் ஊகித்தறியவேண்டும்.

ஆதி
10-11-10

No comments:

Post a Comment

Blog template by simplyfabulousbloggertemplates.com

Back to TOP