இன்று சிறிலங்கா அரசின் அரசியல் நிலமை என்பது என் செய்வதன்று தெரியாமல் தினறும் சூழ்நிலையாகவே காணப்படுகிறது.
1)தமிழின படுகொலை மீதான போர்க்குற்றம்
2)தமிழர் பிரதேசத்தில் ஏற்படுத்திய சிங்கள மற்றும் பெளத்த மயமாக்கல்
3)சீனாவின் ஆழ ஊடுருவல்
4)இந்தியாவின் அரசியல் ஊடுருவல்
5)பன்னாட்டு புலனாய்வாளர்களின் உள்நுழைவு
6)விடுதலைப்புலிகளின் கட்டமைப்புகளின் அசைவு தெரியாத உறங்கு நிலை
7)புலம்பெயர் தமிழர்களின் தமிழீழம் பற்றியதான விடாப்பிடி
8)சிறிலங்கா அரசுக்கெதிரான மாணவர்களின் போராட்டம்
9)பூசி மெழுகப்படும் பொருளாதார சோடினைகளில் உட்சரிவுகள்
என சிறிலங்கா அரசசின் அரசியலின் காலில் அவிழ்க்கப்படமுடியாத பிணைப்புகள் பல போடப்பட்டுள்ளன.
தன்னை காப்பாற்றி கொள்வதற்காக இந்தியாவிற்கும் சீனாவிற்கும் தன்னையே அடைமானம் வைத்த சிறிலங்காவிற்கு தன்னிடத்திலையே இந்தியாவும் சீனாவும் மோதப்போகின்றன அல்லது போட்டியை நடத்தப்போகின்றன என்ற காலம் கடந்த ஞானம் ரஜீவ்காந்தி கொலைவழக்கில் இருந்து விடுதலைப்புலிகளின் தலைவரை விடுவித்ததில் இருந்து புரிந்திருக்கும். தெற்காசியாவின் பலம் மிக்க புலனாய்வு அமைப்பான றோவிற்கு ஈழத்தமிழர்களுக்கெதிரான போரில் நேரடிப்பங்காளியாக இருந்த றோவிற்கு விடுதலைப்புலிகளின் தலைவர் பற்றிய இறுதி முடிவெடுக்க ஒரு வருடத்திற்கு மேலானது பெரும் சந்தேகத்திற்குரியதே. அரசியல் ஆளுகையை செய்யக்காத்திருந்த இருந்தியாவுக்கு சீனாவின் நில ஆழுகை கொள்கையானது பெரும் சங்கடத்தை உருவாக்கியிருக்கலாம். இலங்கையின் தெற்கில் பல வர்த்தக மற்றும் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த நிலங்கள் சீனாவிடம் போயுள்ளதோடு வடக்கு மற்றும் கிழக்கிலும் ஊடுருவியுள்ளமையானது காலப்போக்கில் இந்தியாவின் அரசியல் ஆளுகைக் கொள்கை பிரயோசனமற்றதாகிவிடும் என்ற காரணத்தாலேயே இன்று இந்தியாவும் வடக்கில் தன் நில ஆளுகை திட்டத்தை முன்னெடுத்து வருகிறது. இதனால் இரண்டு நாடுகளின் ராஜதந்திர மோதல் களம் ஒன்று சிறிலங்காவில் திறக்கப்பட்டுள்ளமை சிறிலங்கா அரசிற்கு நெருக்கடியே.
இது போக போர்க்குற்றம், தமிழ் பிரதேசங்கள் மீதான சிங்கள மற்றும் பெளத்த மயமாக்கல், புலம்பெயர் தமிழரின் தமிழீழம் பற்றியதான சட்ட நகர்வுகள் சிறிலங்கா அரசை பெரிதும் திணறடித்துள்ளது. இங்கு போடப்பட்டுள்ள சிக்கல்களை தமிழ் மக்களை கொண்டே இல்லாது செய்வதற்கான நடவடிக்கையில் தான் இன்று சிறிலங்கா அரசு இறங்கியுள்ளது. போர்க்குற்றம் தொடர்பில் செய்யப்பட்ட ஆணைக்குழு முன்னில் தமிழ் மக்கள் சிறிலங்கா அரசு செய்த போர்க்குற்றங்களை அப்பட்டமாக ஒப்புவித்த நிலையில் ஒன்றும் செய்ய முடியாத சிறிலங்கா அரசு வன்னி மக்கள் சிவில் நிர்வாகத்தை விட இராணுவ நிர்வாகத்தையே விரும்புகின்றனர் என்ற சம்மந்தமற்ற ஆவணச் சமர்பித்தலூடாக போர்க்குற்றம் தொடர்பான உள்நாட்டுக்கேள்விகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க நினைத்துள்ளது. ஆனால் சர்வதேச விசாரணைகள் தவிர்க்கப்பட முடியாததே.
இதே போல் இன்று தமிழர் பிரதேசங்களில் நடைபெறும் சிங்கள அத்துமீறல்களையும் சிறிலங்காவில் உள்ள தமிழ்ர்களுடாக, என்ற பேரில் மூடி மறைப்பதற்கான பல ஏற்பாடுகளையே சிறிலங்கா அரசு மேற்கொண்டுவருகிறது. தமிழர் பிரச்சினைகளை பேசும் அத்தனை குரல்களையும் அதிகாரத்தின் பெயரால் அடக்கியுள்ள சிறிலங்கா அரசு விடுதலைப்புலிகளை அவதூறு செய்தல், சிறிலங்கா அரச நிர்வாககங்களை தூற்றுதல் ஆனால் அரசை போற்றுதல் போன்ற குரல்களுக்கு அரசு களமமைத்து கொடுத்துள்ளது. அதாவது நடுநிலைச்சார்பான அரசு என்ற தோற்றப்பாட்டை உலகிற்கு தமிழர்களினூடாக காண்பித்து தமிழர் பகுதிகளில் போருக்கு பின் செய்யப்படும் சிங்கள ஆக்கிரமிப்புகளை மூடிமறைக்கும் அரசியலை மேற்கொள்கிறது. யாழ்ப்பாணத்தில் செய்யப்படும் சிங்கள கலாச்சாரத்தின் பெருமளவிலான உள்வாங்கல்கள் அதை தட்டிக்கேட்கமுடியாமல் அதிகார அடக்கல்கள் போன்றானவை உலக நாடுகளின் பார்வையில் தமிழர் பிரதேசங்களில் சிங்கள பெளத்த மேலாதிக்கத்தை தமிழர்கள் விரும்புகிறார்கள் போன்றான தோற்றப்பாட்டை கட்டாயம் உருவாக்கும். இப்படியான ஒரு சோடிக்கப்பட்ட பார்வைக்கே உலகத் தமிழ் எழுத்தாளர் மாநாடு ஒழுங்கு படுத்தப்பட்டுக்கொண்டிருக்கிறது.
இந்த உலக தமிழ் எழுத்தாளர் மாநாட்டை, தமிழர் உரிமை போராட்டத்தை மற்றும் தமிழர் சுயநிர்ணய உரிமை கோரிக்கையை ஏற்றுக்கொள்ளாத விடுதலைப்புலி எதிர்ப்பாளர்களால் ஒழுங்குபடுத்தப்பட்டுக்கொண்டிருப்பதனூடாக எப்படிப்பட்ட சிறிலங்கா அரசியலின் பின்னணி உள்ளது என்பதை யாவரும் உணர்ந்து கொள்ள முடியும். பல எத்தாளர்களை தடைசெய்த நாடுகடத்திய இலங்கை அரசு, பல ஊடகவியலாளர்களை சிறையில் அடைத்து துன்புறுத்திய துன்புறுத்திக்கொண்டிருக்கும் இலங்கை அரசு, பல எழுத்தாளர்களின் கொலைச் சூத்திரதாரிகளை கண்டுபிடிக்க முடியாத இலங்கை அரசிற்கு உலகத் தமிழ் எழுத்தாளர்களின் மாநாடும் அதன் பின் அரசு செய்யப்போகும் பிரச்சாரமும் வெகு பெறுமதியானது என்றே கருதுகிறது.
தமிழரின் சமகாலப்பிரச்சினைகள்,தமிழ் நிலப்பறிப்புகள்,தமிழர் மேல் திணிக்கப்படும் பெளத்தம், தமிழர் மேல் மேற்கொள்ளும் பாலியல் வன்முறைகள்,தமிழர் பகுதிகளில் கேள்விக்குறியாகியுள்ள சிவில் நிர்வாகம், இப்படி அரசால் இரண்டாம் தரப்பு மக்களாகக்கப்பட்டிருக்கும் தமிழர்களின் உணர்வுகளை இந்த மாநாடு பேசுமா என்பது ஜயத்திற்குரிய விடயமே. சிறிலங்காவில் இனப்பிரச்சினையே இல்லை,நடந்த போர்களெல்லாம் மதப்பிரச்சினை மற்றும் சில குழுக்களுக்கிடையில் மொழி புரிதலின்மையால் நடந்த பிரச்சினைகளே தவிர இனப்பிரச்சினையே நடக்கவில்லை, முள்ளிவாய்க்கால் எனும்பிரதேசத்தில் அப்படி ஒரு இனப்படுகொலையையே நடத்தி முடிக்க வில்லை என்று சொல்லி முடிப்பதற்காக, தமிழர் உரிமைப்போராட்ட எதிர்ப்பு சக்திகளை உலக அரங்கிற்கு காட்டுவதற்கான ஒத்திகையாக கூட இந்த இலங்கை உலகத் தமிழ் எழுத்தாளர் மாநாடு இருக்கலாம்.
அரசாங்கம் தமிழ் மக்களுக்கு சில உதவிகள் செய்யவேண்டும் ஆனால் தமிழர்களுக்கு சுயநிர்ணய உரிமையோ, பழம் பெரும் இனம் என்ற அங்கிகாரமோ தேவையில்லை என்ற தொனியில் இந்த மாநாட்டின் கருப்பொருள் இருந்தாலும் வியப்பதற்கில்லை.
பயங்கரவாதம் அழிக்கப்பட்டுவிட்டது என்று 1 வருடத்திற்கு முதல் தானே அறிவித்த அரசு இன்னமும் பயங்கரவாத சட்டம் வைத்திருப்பது ஏன் என்ற கேள்விக்கு இன்னமும் அரசு சரியான பதில் கூறவில்லை. தமிழ் உரிமை பற்றி பேசும் குரல்களுக்குத்தான் நிட்சயமாக அந்த சட்டம் அமுலில் உள்ளது என்பது யாவரும் அறிந்திருக்க இந்த தமிழ் எழுத்தாளர் மாநாடு நிட்சயமாக தமிழ் மக்களின் உரிமை பற்றி பேசுமா என்பது சந்தேகமே.
ஒருவேளை தமிழ் மக்களின் உரிமையை பற்றி இந்த மாநாடு பேசுமென்றால் அந்த மாநாட்டை இலங்கையில் நடாத்தும் தருணம் இதுவல்ல என்பது தான் உண்மை. தமிழ் மக்களை கொன்று குவித்து வாழ்விடங்களை அழித்து தமிழர் பிரதேசங்களில் சிங்கள கலாச்சாரத்தை திணித்து கொண்டிருக்கும் சிறிலங்கா அரசை முதலில் சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும். அதற்கு சிறிலங்கா அரசை காப்பாற்றும் அல்லது அதன் பிரச்சாரத்திற்கு உதவக்கூடிய அத்தனை நிகழ்வுகளையும் தவிர்த்தல் இன்றியமையாதது. சிறிலங்காவில் சட்டம் என்பது அரசின் சட்டைப் பை ஆகிவிட்ட நிலையில் சிறிலங்கா அரசை சர்வதேச நீதிமன்றிற்கு கொண்டு போவது பற்றி யோசிக்க வேண்டும். இந்த வகையில் இப்போது நடைபெற இருக்கும் உலகத் தமிழ் எழுத்தாளர் மாநாடு என்பதன் உள்நோக்கம் பற்றி அனைவருக்கும் புரிந்திருக்கும்.
ஆதி
2-11-10
No comments:
Post a Comment