Powered by Blogger.

Tuesday, June 12, 2012

யாரும் சொல்ல விரும்பாத வாக்குமூலங்கள்

இறுதிக்கட்ட  போரில் விடுதலைப்புலிகள் மேல் குற்றம் சுமத்தி ஒரே நபர்கள் பல பெயர்களில் பதிவுகள் எழுதி வியாபாரம் நடத்தியது அனைவரும் அறிந்ததே.

மக்களை மனித கேடையங்களாக பாவித்தார்கள் வெளியேறிய மக்களை சுட்டார்கள் என்ற குற்றச்சாட்டுகளுடன் தாங்கள் அறிவு ஜீவிகள் என்றும் தங்கள் அறிவுரைகளை புலிகள் கேட்கவில்லை என்பது அவர்களின் உச்சக்ட்ட குற்றச்சாட்டுகள்.

மன்னாரில் தொடங்கி முள்ளிவாய்க்கால் வரைக்கும் குறிப்பாக கிளிநொச்சி நகர் சிறிலங்கா ராணுவத்தினால் ஆக்கிரமிக்கப்ட்டதன் பிற்பாடு முள்ளிவாய்க்கால் வரை புலிகள் எப்படி பின்வாங்கி சென்றார்கள் எப்படி மக்கள் வெளியேறினார்கள் என்பது இதுவரை எந்த ஆவணப்படுத்தலையும் யாரும் செய்யவில்லை.

புலிகள் பிடித்தார்கள் சுட்டார்கள் என்று எழுதியவர்கள் யாரும் புலிகள் எப்படி சமர் செய்தார்கள் எப்படி மக்களை பாதுகாக்க போராடினார்கள் என்று எழுதவேயில்லை. புலிகள் பிடித்தார்கள் சுட்டார்கள் என்று ஒரு சில நபர்கள்தான் பல பெயர்களில் எழுதித்தள்ளினார்கள் என்பதும் அதைவைத்து "முரண் அரசியல்", "புலிகளுக்கு முன் புலிகளுக்கு பின்" இப்படி பல மூலப்பெயர்களில் விவாதங்களையும் நடாத்தி தங்களை பெரிய அரசியல் மேதைகளாக காட்டிக்கொள்ள முயற்சித்த காமடிகளும் நடந்தேறின. இன்னமும் அதே சுரத்தில் அப்பப்போ வாசித்துக் கொண்டிருப்பவர்களும் இருக்கிறார்கள். சரி இனி விடையத்திற்கு வருவோம்.

விடுதலைப்புலிகளின் அரசியற் பிரிவினரின் சில செயற்பாடுகளுக்கு கோபமடைந்திருந்த மக்கள் எவருமே புலிகளின் ராணுவ பிரிவுகளை குறை சொல்லியிருந்தது கிடையாது. தவிர வன்னிக்குள் இருந்து கட்டம் கட்டமாக போரினால் வெளியேறிய மக்கள் விடுதலைப்புலிகளின் தாக்குதல்கள் ஆயுத பிரசன்னங்கள் மக்களுக்கும் புலிகளுக்கும் இடையில் இருந்த "இராணுவ உறவு" குறித்து வாய்திறந்தது கிடையாது. யாரும் கேட்டாலும் அவர்கள் ஒருபோதும் சொல்லப்போவதும் இல்லை என்பது பேசிப்பார்த்தீர்களெண்டால் புரியும். ஒன்றில் தெரியாது என்று சொல்வார்கள் அல்லது பொய் சொல்வார்கள். இது யாவரும் (ராணுவம் ஒட்டுக்குழு வெளிநாட்டு புலனாய்வமைப்புகள் உள்ளிட்ட அனைவரும்) அறிந்த ஒன்று தான்.

இரண்டு சம்பவங்களை மாத்திரம் இங்கு பதிவுசெய்யலாம் என்று நினைக்கிறேன்.
கிளிநொச்சி பின்வாங்கலுக்கு பிறகு மக்களை புலிகளே கட்டம் கட்டமாக வெளியேற்றினார்கள். குறிப்பிட்ட கால இடைவெளிகளுக்குள் இது நடந்தது. "இன்று நாங்கள் பின்வாங்க போகிறோம்.. வருபவர்கள் வரலாம் அங்கால் போகிறவர்கள் போகலாம்.. போறதெண்டால் கவனமாக போங்கள்.. ஆமி அடிபட்டு கொண்டு வரேக்க இடம் மாற வேண்டாம்" இப்படி அறிவுறுத்தல்களை புலிகளே மக்களுக்கு வளங்கியிருந்தார்கள்.

குறிப்பாக சுதந்திரபுர பிரதேசத்தில் 10ற்கும் குறைவான போராளிகள் நூற்றுக்கணக்கான இராணுவத்தை 100 மீட்டருக்கும் குறைவான இடைவெளியில் 15 நாட்களுக்கு மேல் மறித்து வைத்திருந்திருக்கிறார்கள். அந்த போராளிகள் அங்கிருந்த மக்களை வெளியேறி விரைவாக செல்லும் படியும் இல்லாவிடில் சண்டைக்குள் மாட்டுப்பட வேண்டிவரும் என எச்சரித்தும் போராளிகளை விட்டு மக்கள் நகர மறுத்த விடையத்தை அந்த சம்பவத்தில் இருந்த ஒரு பெண் சொன்னார். பெடியளுக்கு சண்டை பிடிக்க சப்ளை காணாம தான் விட்டிற்று போனவங்கள் எண்டு சொன்னார்.

தங்களுக்கே சாப்பாடு செய்ய ஏலாம இருக்குமாம் பங்கருக்க வச்சு வெறும் மாவில ரொட்டி சுட்டுதான் சாப்பிட்டவர்களாம். இரவும் பகலும் மாறிமாறி பெடியள் படுறபாட்ட பாத்த பாவமா இருக்கும். இப்ப எங்கயோ தெரியா அவங்கள் என்று கண்கலங்கினார் அந்த பெண். "ஒரு பெடியன் விடிய அஞ்சு மணில இருந்து கிட்டதட்ட இரவு 7 மணிவரைகக்கும் இருந்த இடம் விட்டு நகராம சினைப்பரால போட்டுக் கொண்டே இருந்தான்" என்று சொன்வர் "தம்பி உந்த அரசியல் துறைல இருந்த சிலதுகள்தான் சனத்தோட பிரச்சினப்பட்டது. இப்ப யோசிக்கேக்க இவங்கள் முதலே காட்டிக்குடுக்க வெளிக்கிட்டிருப்பாங்களோ எண்டு டவுட்டா இருக்கு" என்று சொன்னார். 

தவிர காயப்படும் மக்களை பராமரிக்க சில வைத்தியர்களை தவிர பெரிய ஆளணியோ மருந்துப்பொருட்களோ இருந்கவில்லை. காயப்படும் போராளிகள் மக்கள் என அனைவரையும் வைத்தியர்கள் தாதிமார்களோடு விடுதலைப்புலிகளின் மருத்துவ பிரிவுதான் பராமரித்தது.

"காயப்பட்ட அத்தினயாயிரம் சனத்தையும் எப்பிடி பராமரிக்கிறது. இண்டைக்கு அங்க கொண்டுபோய் கிபிர் வந்து அடிச்சா திருப்பி வேற இடத்துக்கு கொண்டு போகோணும். இயக்க பெடியளும் பிள்ளையளும் எப்பிடி பாத்தாங்கள்.
காயப்படுற சனத்துக்கு மருந்த கட்டிற்று அடுத்தநாள் பாத்தா புண்ண சுத்தி புழு வந்திருக்கும். அதையெல்லாம் சுத்தப்படுத்தி திரும்பி மருந்து கட்டி பாவம் அவங்கள். சண்டைய பாக்கணோம்.. இதை பாக்கோணும். புதுசா இயக்கத்துக்கு கொண்டுவந்த பெடியள இதுகளுக்குதான் கூட விட்டிருந்தவங்கள்.. அதில இருந்து ஓட வெளிக்கிட்ட பெடியள் இந்த நிலைய பாத்திட்டு சனத்துக்கு உதவுற வேலைய செய்தவங்கள். காயப்படுறதெண்டா அப்பிடி இப்பிடி காயமில்லை.. சதைகள் எலும்புகள் எல்லாமே முறிஞ்சு தொங்கும்... இப்பிடி பட்ட நிலையிலயும் பதட்டமடையாம வேலை செய்யிறத்துக்கு அவங்களால மட்டும் தான் முடியும் தம்பி" என்று தனது கணவரையும் 1 பிள்ளையையும் பறிகொடுத்த தாய் ஒருவர் சொன்னார்.

இப்படி நிறைய இருக்கிறது. மக்கள் பேசமாட்டார்கள்.பத்திரிகைகளில் வரும் செய்திகளை மாத்திரம் படித்துவிட்டு அரசியல் வியாக்கியானம் செய்யும் "அவர்களின்" நோக்கம் இங்குள்ள அனைவருக்கும் தெரியும்.

இந்தியன் ஆமிக்கெதிரான சமர் தொடக்கம் பூநகரி தாக்குதல்(தவளைப்பாய்ச்சல்) முல்லைச்சமர் (ஓயாத அலைகள் 1) கிளிநொச்சி சமர் (ஓயாத அலைகள் 2, ஓயாத அலைகள் 3 சமர், மற்றும் தீச்சுவாலை முறியடிப்பு சமர் போன்ற பெரு வெற்றிக்களுக்கு பின்னால் நின்றவர்கள் இந்த மக்கள். இந்த சண்டைகளுக்கு பின்னால் மக்களின் பங்கு எப்படிப்பட்டது என்பதை பல தளபதிகளே சொல்லியிருக்கிறார்கள். ஏன் தலைவர் கூட சொல்லியிருக்கிறார்.

"புலிகளுக்கு முன் புலிகளுக்கு பின்" , "முரண் அரசியல்" என்று தமது சுயவிளம்பரம் அல்லது பொழுதுபோக்கிற்காய் விவாதம் செய்யும் இவர்களை விட இந்த மக்கள் இராணுவ நுணுக்கங்களும் அரசியல் தெளிவும் கொண்டவர்கள். அதனால்தான் விவாதங்களை விரும்பவில்லை.

"இயக்கத்தின்ர விசயங்கள் நாங்க ஆராய கூடாது என்ன செய்யோணும் எண்டு அவங்களுக்கு தெரியும்" என்று எனக்கு அறிவுறுத்தல் சொன்ன பெண்ணின் வயது 18 ..இரண்டு மாவீரர்களின் பள்ளி செல்லும் தங்கை.

ஆதி
13-06-2012

Wednesday, June 6, 2012

இதை யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்..

மகிந்தராஜபக்ஷவிற்கு எதிராக பிரித்தானியாவில் தமிழ் மக்கள் இந்த அளவு எதிர்ப்பையும் போராட்டத்தையும் இந்த காலப்பகுதியில் நடத்த இருந்திருப்பார்கள் என சிங்கள அரசோ இந்திய அரசோ சிந்தித்திருக்காது. பிரித்தானிய அரசு கூட இந்த போராட்டம் இந்த அளவு வீரியம் பெறும் என நினைத்திருக்கமாட்டார்கள்.

இந்த போராட்டங்களை திறம்பட ஒழுங்கமைப்பு செய்ய தமிழ் அமைப்புகளுக்கு நன்றிகளை சொல்வதோடு பதிவிற்குள் செல்கிறேன்.

தமிழ் தேசிய போராட்டங்கள் மற்றும் செயற்பாடுகளுக்கு எதிராக குறிப்பாக முள்ளிவாய்க்கால் இன அழிப்பு நினைவு கூரலை குழப்பும் நோக்கோடு ஒட்டுக்குழுக்களை சேர்ந்த ஏராளமானவர்கள் கனடா லண்டன் பிரான்ஸ் நோர்வே என அனுப்பட்டிருப்பதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகியிருந்தன.

தமிழ் மக்கள் சுயநிர்ணய உரிமை மற்றும் தனிநாட்டு கோரிக்கைகளை கைவிட்டுவிட்டார்கள் என்ற கருத்துப்பட திட்டமிட்ட அரசியல் பரப்புரையை இந்திய மற்றும் சிறிலங்கா அரசுகள் செய்து வந்தன. குறிப்பாக தமிழீழ மக்கள் பற்றியதான அனைத்துலக கரிசனையை சிதைத்து சிறிலங்கா அரசின் இரண்டாம்தர மக்களாக தமிழ் மக்களை காட்டி கொடுப்பதை வாங்கி கொண்டு இறமையை தொலைத்துத்தான் தமிழ் மக்கள் வாழ்வது நல்லது என்ற தோற்றப்பாட்டில் இந்திய அரசால் அனுப்பட்ட குழுவும் செயற்பட்டது அனைவரும் அறிந்த விடையம்.

ஒருபக்கத்தில் தமிழர் போராட்ங்களை குழப்புதல் மறுபக்கத்தில் தமிழ் மக்களின் அரசியல் சிந்தனைகளுக்கு நெருக்கடியை கொடுத்து மக்களின் சிந்தனையில் ஸ்திரமற்ற நிலை ஏற்படும் தறுவாயில் தாம் நினைக்கும் அரசியல் தீர்வை திணிப்பது என்ற உளவியல் அரசியலை இந்திய இலங்கை கூட்டணி நகர்ந்து வருகிறது.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் குழப்பகரமான அறிக்கைகள் என குழம்பியிருக்கும் மக்களை இலகுவில் அடக்கிவிடலாம் என்பது இந்த பயங்கரவாத அரசுகளின் கனவு. இப்படி உள்ளுக்குள்ளும் வெளியிலும் தமிழர்கள் குழம்பியிருக்கிறார்கள் ஆகவே இவர்களால் எதையும் ஒருமித்து செய்யமுடியாது என்று இந்த பயங்கரவாத அரசுகள் அளவுக்கு மீறிய நம்பிக்கையில் இருந்தன. அதனடிப்படையில் தான் முதல் பட்ட அவமானத்தையும் பொருட்படுத்தாது மகிந்தராஜபக்ஷ மீண்டும் லண்டன் புறப்பட்டார்.

பரமேஸ்வரனின் உண்ணாவிரதத்தை அவமதிப்பு செய்து தவறான தகவலை ஸ்கொட்லண்ட் பொலிஸிற்கு கொடுத்து தன்னையும் அவமானப்படுத்தி ஸ்கொட்லண்ட் பொலிஸையும் அவமானப்படுத்தியிருந்தது சிறிலங்கா அரசு. அதன் பின் தமிழர்கள் ஏன் போராட்டம் செய்கிறார்கள்.. உண்மையில் தண்டிக்கப்பட வேண்டியது யார்.. தமிழர்களின் விடுதலை வேட்கை எப்படிப்பட்டது என்பதை ஸ்கொட்லண் பொலிஸ் நன்றாகவே உணர்ந்திருக்கும்.

பல குழப்பகரமான நிலமைகளை தமிழ் மக்களின் அரசியல் ரீதியில் உருவாக்கிவிட்டு (உருவாகியிருப்பதாக அவர்கள் நினைக்கிறார்கள்) அதற்குள் தன்னை ராஜாவாக காட்டிக் கொள்ளும் கனவோடு லண்டன் புகுந்திருந்த ராஜபக்ஷ மரண வேதனையை அனுபவத்திருப்பார் என்பது உண்மையே.

குறுகிய ஒழுங்குபடுத்தலில் இத்தனையாயிரம் தமிழ் மக்கள் லண்டன் மாநகரில் கூடியதும்.. முன்பைவிட ஆக்குரோசமாய் மக்கள் திரண்டிருப்பதும் இந்திய இலங்கை உள்ளிட்ட பயங்கரவாத நாடுகளுக்கு நிட்சயமாக ஆச்சரியமளித்திருக்கும்.


ராஜபக்ஷவின் கொடும்பாவியையும் சிறிலங்கா தேசிய கொடியையும் பிரித்தானிய காவல்துறையினருக்கு முன்பு வைத்தே தீயிட்டுக் கொழுத்தியுள்ளார்கள் தமிழீழ மக்கள். இந்த ஆக்குரோசம் முன்னயதைவிட பல மடங்கு அதிகமானது. பரமேஸ்வரன் உண்ணாவிரம் இருந்து மோசமான நிலையை அடைந்து கொண்டிருந்த பொழுதும் தமிழ் மக்களின் மீதான படுகொலையை நிறுத்தக்கோரி முத்துக்குமார் உள்ளிட்ட தியாகிகள் தம்மைத்தாமே அழித்துக்கொண்ட போதிலும் அமைதியாக போராட்டங்களை நடாத்திக் கொண்டிருந்த தமிழ்ச் சமூகம் பிரித்தானியாவின் ராணி வருகைக்கிருக்கும் நிகழ்வொன்றின் நாளில் சிறிலங்கா தேசிய கொடியையும் சிறிலங்கா ஜனாதிபதியின் கொடும்பாவியையும் தீயிட்டு கொழுத்தியது சாதாரணமான கருதிக்கொள்ளக் கூடிய விடையமல்ல என்பது அரசியல் ராஜதந்திரிகளுக்கு புரிந்திருக்கும்.

சமகாலத்தில் போர்க்குற்றவாளி ராஜபக்ஷவை பிரித்தானியா வெளியேற்றவேண்டும் என்ற தொனியில் பிரித்தானிய தூதரகத்தை தமிழகத்தில் தமிழர்கள் சூழ்ந்து கொண்டனர். கனடா உள்ளிட்ட நாடுகளில் கண்டன அறிக்கைகள் விடப்பட்டிருந்தன. தவிர யாழ்ப்பாணத்தில் இளைஞர்களால் அரசியல் சாசனம் தீயிட்டு கொழுத்தப்பட்டது.

அறிக்கைகளையும் கண்டனங்களையும் மட்டுமே தெரிவித்துக் கொண்டு தமிழினம் அடங்கிவிட்டது என்று தேனிலவு அரசியல் செய்து கொண்டிருந்த வல்லாதிக்கங்களுக்கு தமிழ் மக்களின் இந்த எழுச்சியும் கடந்தகாலங்களை விட ஆக்குரோசமாக மக்கள் போராட நினைக்கும் தன்மையும் அதிர்ச்சிக்குள்ளாகியிருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

தம்மைத்தாமே எரித்து போராட்டம் நடாத்தியவர்கள் சிறிலங்கா தேசிய கொடியை ராஜதந்திரிகள் கூடுமிடத்தில் எரித்து போராட்டம் நடத்தும் அளவிற்கு மனதளவில் மாற்றமடைந்துவிட்டார்கள் என்பது சாதாரணமாக கடந்துவிடக்கூடிய விடையமில்லை என்பது உளவியல் தெரிந்த அரசியல் ஆர்வலர்களுக்கு புரியும்.

தமிழீழம் என்பது தமிழ்மக்களின் நாடு என்பதும் புலிக்கொடிதான் தமிழ் மக்களின் கொடி என்பதும் உலக அளவில் வேகமாக புரிந்துவருகிறது. தமிழர்களின் நாட்டை இலங்கை இந்திய பயங்கரவாத அரசுகள் ஆக்கிரமித்துள்ள உண்மை வேகமாக பரவிவருகிறது.

தமிழீழ தேசிய கொடியுடன் viva உலக கிண்ண போட்டிகளில் தமிழீழ உதைபந்தாட்ட அணி பங்குபற்றிக் கொண்டிருக்கிறது.

தமிழர்கள் தமது இலட்சியத்தை கைவிட்டுவிட்டார்கள் என்று அரசியல் கனவு கண்டுகொண்டிருந்த பயங்கரவாத அரசுகள் சமகாலத்தில் இத்தனை மாற்றங்கள் நடந்து கொண்டிருப்பதை எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.

ஆதி
07-06-2012


Friday, June 1, 2012

தம்பி உங்களுக்கு என்ன தெரியும்... புலிய பற்றி எங்களுக்கு நல்லாவே தெரியும்..

தம்பி உங்களுக்கு என்ன தெரியும்... புலிய பற்றி எங்களுக்கு நல்லாவே தெரியும்.. நீங்க எல்லாம் வரி உடுப்போட றைபிள தூக்கி கொண்டு ரோட்டால புலி நடந்து போனதில இருந்து தான் நீங்க புலிய பாத்திருக்கிறியள். புள் கை சேட்ட முழங்கைக்கு மேல மடிச்சு விட்டிற்று சாரம் கட்டிக் கொண்டு திரிஞ்ச புலியில இருந்து ரோட்டில பிலைட்ட ஓட்டி மேல எழுப்பின புலிவரைக்கும் எனக்கு தெரியும் தம்பி என்று ஒரு ஜயா சொன்னார்.

"இயக்க பொடியன் ஒருத்தனை காப்பாத்திறத்துக்காகவே கன்னி பொம்பிள பொட்டு வச்சு தாலி கட்டின வரலாறெல்லாம் இருக்குது. சமைச்சு கோடிக்க சாப்பாடு வச்சு தமிழ் சனம் வளத்தெடுத்தது தான் புலிப்படை. யாரெண்டே தெரியா 2 புலிப்பெடியள இந்தியன் ஆமிட்ட இருந்து காப்பாத்த சட்டைய களட்டிற்று முத்தத்தில கிடந்து கத்தியிருக்கு என்ர மனிசி. அவங்கள் சாப்பிட்டிற்று குடுத்த கோப்பைய பாத்து எத்தின பெடியள் சாப்பிட்டிருப்பாங்கள்.. சாப்பாடு காணுமா என்டு பாத்து சமைச்சு குடுத்தது எங்கட சனம். இந்தியன் ஆமி நல்லவனா இருந்திருந்தா சனம் அண்டைக்கு புலிகள காட்டிக் குடுத்திருக்கும்.  பெரிய நாட்டோட சண்ட பிடிக்கிறாங்கள் எண்டு தெரிஞ்சும் புலிகள பொத்தி பொத்தி வளத்தது தான் தமிழ் சனம். பெடியள்ள அவளா நம்பிக்கை.

குடுத்த ஆயுதமெல்லாத்தையும் பறிச்ச பிறகும் இந்தியன் ஆமியோட அடிபர்ற தைரியம் வந்ததும் வெளிநாடுகளில இருந்து ஆயுதம் வாங்கிற அளவுக்கும் பெடியள் அப்பவே வளந்திட்டாங்கள் எண்டு சனம் பெருமைப்பட்டிச்சு. இப்ப பெரிய வியாக்கியானங்கள் பேசுற ஆக்களுக்கு தலைவற்ற அந்த வயசில இவ்வளவு துணிவு வந்திருக்குமா? எவ்வளா பெடியள கட்டியவுக்கணும்.. அவளாபேற்ற பிரச்சினையும் பாக்கணும்.. சண்டை பிடிக்கணும்.. எதிர்காலத்தில எப்பிடி நடக்கணும் எண்டு திட்டம் போடணும்.. எத்தின பிரச்சினை அவங்களுக்கு.. இப்ப நிறைய கதைக்கிற எவனாவது அந்த வயசில இவளாத்தையும் செய்திருப்பானா?? ஒரு மயிருக்கும் ஏலாது தம்பி. எத்தின பேர் இருந்தவங்கள் ஆனா பெடியள மட்டும் ஏன் சனம் பொத்தி பொத்தி வளத்திச்சு.

இண்டைக்கு எல்லா நாயும் காட்டிக் குடுக்கிறதும் காசடிக்கிறதுமா திரியுங்கள் எண்டு தெரிஞ்சுதான் அண்டைக்கே சனம் புலிகள மட்டும் தெரிஞ்செடுத்தது. சரி இண்டைக்கு புலி இல்லை எண்டா, சனத்துக்கு நல்லது செய்யதான் எல்லாரும் போராட்டம் தொடங்கினவே எண்டா.. டக்கன் என்ன புடுங்கி கொண்டு இருக்கிறான். காட்டிக் குடுக்கிறதும் கூட்டிக்குடுக்கிறதும் தானே செய்யிறான். சிங்களவன கண்டா சூத்துக்குள்ள கைய வச்சுக்கொண்டு திரியிறானுகள் இவங்கள்.

தம்பி யாழ்ப்பாணத்த ஆமி பிடிச்சா பிறகு அங்க நிண்ட பெடியள் சிலர பள்ளிக்கூடத்தில படிக்கிற பிள்ளையளே காப்பாத்தி இருக்கு. சுற்றிவளைப்பு ஒண்டில ஒரு பெடியள் றிவோள்வரோட மாட்டுப்பட்டிருக்கிறான்.. அதை புரிஞ்சு கொண்ட பள்ளிக்கூட பிள்ளையொண்டு தன்னோட வரச்சொல்லி கேட்டிருக்கு.. "இல்ல நீ போ தங்கச்சி நான் பாத்துக்கொள்றன் எண்டு சொல்லி இருக்கிறான்". அதுக்கு அந்த பிள்ளை சொல்லி இருக்கு.. "இல்ல பருவாயில்ல என்னோட வாங்க ஆனா ரிவோல்வர சுடுற மாதிரி செய்திட்டு என்னட்ட தாங்க.. ஆமி பிடிச்சா நீங்க சயனைட் கடிச்சிருவீங்க.. ரிவோல்வர் என்னட்ட இருந்தா தான் நானும் சாகலாம்" எண்டு.

சனம் சாப்பாடு போட்டு பொத்திப் பொத்தி வளத்தது தான் புலி. சனம் புலிக்கு அடிக்கும், ஏசும்.. அந்தளா உரிமை இருக்கு. இவ்வளா உரிமையோட வேற யாருக்கும் ஏச முடியாது. வேற யாரோடையும் சண்ட பிடிக்க ஏலாது. இப்ப இருக்கிற இளந்தாரிகள் கெட்டு குட்டிச்சுவராகிக் கொண்டு இருக்குதுகள். உதுகளுக்கு அரசியல் செய்ய தெரியாது. உதுகள கட்டி மேய்க்கிறத்துக்கு இப்ப ஆள் கிடையாது. பெடியள் வருவாங்கள் பார் தம்பி. எந்த ரூபத்திலயாவது கட்டாயம் வருவாங்கள்.

வாற போற சிங்களவனெல்லாம் எங்கட பிள்ளையளோட சொறி தேய்க்குதுகள்.. நிலத்த பறிக்கிறாங்கள்.. யாவாரம் செய்ய முடியல.. கோயில்ல பெரிசா பாட்டு போட முடியல..பாதர்மார வெருட்டுறாங்கள்.. பெடியள் இருந்தா இந்த மசிராட்டம் ஆடுவாங்களா??

முந்தி கள்ளு குடிச்சா "என்ன தவறண பக்கம் போறியள்.. ஆச்சிட்ட போட்டுக் குடுக்கிறன்" எண்டு பெடியள் சொல்ல.. அதுக்கு ஏதாவது திருப்பி சொல்ல.. அப்ப எல்லாம் யோசிப்பன்.. எப்பிடி சிம்பிளா போறாங்கள். துவக்கையும் கட்டிக் கொண்டு சைக்கிள்ள போற பெடியள் யார் யாரெண்டே தெரியாது..  இப்ப எல்லாம் தவறண பக்கம் போறதில்ல.. தகரம் அடிச்சு வாங்கு போட்டிருக்கிறாங்களாம் தவறணைக்கு. வயசு போனதுகள் நிம்மதியா கள்ளு கூட குடிக்க ஏலாம கிடக்கு. ஒரே சிகட்டும் சாராய போத்திலுமா கிடக்கு.

புலிய விட யாரையும் நம்பேலாது. சம்மந்தர் என்ன கதைக்கிறாரெண்டே விளங்குதில்ல. சுமந்திரனாம்.. ஆர் தம்பி அது. சரி அத விடு.. என்ன நடக்குதெண்டே புரியல.
உம்மையிலேயே வெறுக்குது வாழ்கை. ஆயுதத்த மெளனிக்கிறம் எண்டு சொன்னவங்கள் அரசியல் ரீதியா இருக்கிறம் எண்டு சொல்லியிருந்தாலே இவ்வளவு மோசமான நிலைக்கு தமிழ்ச்சனம் போயிருக்காது. எண்டாலும் நம்பிக்கை இருக்கு தம்பி .. எப்பிடியாவது வருவாங்கள்"


தள்ளாடும் வயதிலையும் அவ்வளவு உறுதி.. நம்பிக்கை.. நிறையவே பேசினார்.. கடைசியா  சொன்னார்.. தம்பி "முள்ளிவாய்க்கால் வரைக்கும் போய் மொக்கு தனமாய் ஆயதத்த குடுக்கிறதுக்கும்.. முடிவில்லாம எல்லாத்தையும் முடிச்சு கொள்றத்துக்கும்.. பிரபாகரன் ஒண்டும் கோஸ்டி மோதல் செய்யிற குறூப் வச்சிருக்கல.. அது புலிப்படை... "

வயது போனவர்களுடன் பேசும் பொழுது.. நிறைய ஆர்வமாக இருக்கும். நினைவுகளை சுவாரஸ்யமாக மீட்பார்கள். இந்த ஜயாவுடன் பேசும் பொழுது.. அவர் ஒரு புலியாகவே மாறியிருந்தார்.

ஆதி
31-05-2012

இணைக்க தூண்டிய குறும்படம்
Part 1 http://www.youtube.com/watch?v=f9-92Swp-iw
Part 2 http://www.youtube.com/watch?v=j_QGvMj3H3g
Part 3 http://www.youtube.com/watch?v=bffjVCj3fyo

Friday, December 16, 2011

காலம் எல்லாவற்றிக்கும் பதில் வைத்திருக்கிறது

இன்று உலகெங்கும் தமிழன் அடிவாங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. தமது சுகபோக நலனுகளுக்காக தன்னினத்தையே காட்டிக் கொடுத்தும் அழித்தும் வரும் ஈனத்தனம் தமிழினத்தில் மட்டும் தான் நடக்கிறது.

ஈழத்தில் போர் நடந்து கொண்டிருந்த காலத்தில் எதிரிகளோடு சேர்ந்து இனத்தை காட்டிக்கொடுத்த ஈனப்பிறவிகள் இன்று புலம்பெயர் தேசத்தில் வலுத்துவரும் தமிழர் உரிமைக் கோரிக்கைகளை சிதைப்பதற்காக பலவழிகளிலும் செயற்பட்டுவருகின்றனர்.

தமிழர் விடுதலைப்போராட்டத்தையும் உரிமைக் கோரிக்கைகளையும் திசைதிருப்பும் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருகின்றனர். துணைராணுவக் குழுக்களின் அரசியல் செயற்பாட்டாளர்களாய் அவர்கள் செயற்பட்டுக் கொண்டிருப்பது யாவரும் அறிந்த ஒன்றுதான்.

சிறிலங்காராணுவத்தினால் இந்தனைவருட போராட்ட வரலாற்றில் கொன்றுகுவிக்க்பட்ட லட்சக்கணக்கான தமிழ் உயிர்களின் ஆத்மாவின் முன் இந்த பணம் தின்னி பிசாசுகளின் சோரம்போதலால் இன்னமும் தமிழ் மக்களின் உயிர்கள் காவு கொள்ளப்ட்டுக் கொண்டிருக்கிறது என்பது மட்டுமல்லமால் தமிழ் மக்களின் இருப்பு சிறுக சிறுக அரித்து அழிக்கப்ட்டடுக் கொண்டிருக்கிறது.

தமிழர் தரப்பு ஆயுதப்போராட்டத்தை மெளனித்த கையோடு தமிழ்ர் தாயகமெங்கும் சிங்கள அரசு ராணுவத்தையும் சிங்களவர்களையும் பெருமளவு குவித்துவரும் நிலையில் சமாந்தரமாக தமிழர்தாயக நிர்வாக அலகுகளில் சிங்கள இனத்தவர்களை திணித்துவருகிறது.

தமிழ் இளைஞர்களை முகாம்களில் அடைத்துவைத்துள்ளதோடு பேரால் இடம்பெயர்ந்து அடிப்படைவசதியின்றி மீளக்குடியமர்ந்திருக்கும் தமிழ் மக்கள் மீது ராணுவத்தை பயன்படுத்தி அடக்குமுறைகளை மேற்கொண்டுவருகிறது சிறிலங்கா அரசு.

பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகள்.. கொள்ளைகள் உயிர் அச்சுறுத்தல்கள் என பல வழிகளிலும் உளவியல் மற்றும் அடக்குமுறைப் போர்களை வெவ்வேறு வடிவங்களில் சிறிலங்கா அரசு நடாத்திவருகின்றது. பாதிக்கப்படும் மக்கள் நீதிமன்றம் செல்ல முடியாத அளவிற்கு தமிழர் தாயகத்தில் அரச பயங்கரவாதம் தலைவிரித்தாடுகிறது.

ஈபிடிபி துணைராணுவ குழு, கருணா துணைராணுவ குழு, ஜிகாத் துணைராணுவ குழுவை சேர்ந்தவர்கள் கிளிநொச்சி முல்லைத்தீவு மற்றும் யாழ்ப்பாணத்தில் பரவலாக களம் இறக்கப்ட்டுள்ளார்கள். கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு பகுதிகளில் பெண்களை பாலியல் ரீதியாக கேலி செய்வது பெண்களை பாலியல் ரீதியாக ராணுவத்துடன் சேர்ந்து துன்புறுத்துவது.. கப்பம் கோருவது கொள்ளையிடுவது என சிறிலங்கா அரசு தமிழ் மக்கள் மேற்கொண்டுவரும் அடக்குமுறை வடிவங்களுக்கு இந்த துணைராணுவ குழுக்களின் செற்பாடுகள் இப்படி விரிந்து கிடக்கின்றன.

இந்த துணைராணுவ குழுக்களின் அரசியல் செயற்பாட்டாளர்கள் தமிழ் நாட்டு கம்யூனிஸ்டுகள் சிலரை வலையில் விழுத்தி அவர்களுக்கூடாக தமிழீழ விடுதலைப்போராட்டத்திற்கெதிராக பாரிய பிரச்சாரம் ஒன்றை தமிழ்நாட்டில் 2008 2009 மற்றும் 2010 களில் அதிகளவில் செய்திருந்தார்கள். புலிகளுக்கு முன் புலிகளுக்கு பின் என்ற வார்ததைப்பிரயோகங்களினூடாக பெரும் அரசியலை தமிழ்நாட்டில் நகர்த்தியிருந்தார்கள். கருணாநிதி அரசு சிறிலங்கா அரசுடன் வைத்திருந்த உறவு நிலை இந்த துணை ராணுவக் குழுக்களின் அரசியல் செயற்பாட்டாளர்களுக்கு தளம் அமைத்து செயற்பட பெரும் வாய்ப்பாக அமைந்திருந்தது.

தவிர பிரான்ஸ் கனடா பிரித்தானியா மற்றும் நெதர்லாந்துகளிலும் இந்த துணைராணுவ குழுக்களின் அரசியல் செயற்பாட்டாளர்கள் தமது நடவடிக்கைகளை விரிபுபடுத்தி மக்களை குழுப்பும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருகின்றனர். தாயக விடுதவைப்போரில் வீரகாவியமாக மாவீரர்களை கேலிசெய்வது விடுதலைப்போராட்டம் பற்றிய தவறான கருத்துகளை மக்களில் திணிப்பது என அவர்களுக்கு வழங்கப்பட்ட கட்டளைகளை நன்கு செய்கிறார்கள். இந்த எடுபிடிகளின் கேவல அரசியல் நிலை புரிந்து எப்பவோ இவர்களை மக்கள் விலத்தி வைத்திருக்கிறார்கள் என்பது இந்த தடவை நடந்த மாவீரர் தின நிகழ்வுகளில் இரந்த அனைவருக்கும் தெரியவந்திருக்கும்.

புலம்பெயர் தேசங்களில் தோல்வியை தழுவிக்கொண்ட இந்த துணைராணுவக்குழுக்களின் அரசியற்பிரிவினர் தமது கோபங்களை ஈழத்தில் கல்விகற்கும் மாணவர்கள் மீது திசைதிருப்பியிருப்பது ஒன்றும் வியக்கதக்கதல்ல.

ஈழத்தில் மக்களை ஆயுதமுனையில் அடக்குதல் கடத்துதல் கொலைசெய்தல் கொள்ளையடித்தல் கற்பழித்தல் என அனைத்து அராஜகங்களையும் புரிந்துவரும் இவர்கள் புலம்பெயர்தேசத்தில் மக்களை குழுப்புதல் விடுதலைப்போராட்டத்தின் மீது கேலிசெய்தல் என பல வேலைகளில் ஈடுபட்டுவருகின்றனர்.

தமிழகத்தில் தமிழீழபோராட்த்திற்கான இருக்கும் ஆதரவை எழுத்தாளர்கள் மத்தியில் இருந்து சிதைப்பதற்கு இந்த ஆயோக்கிய சக்திகள் மேற்கொண்ட முயற்சிகள் முறியடிக்கப்ட்டு தமிழகம் எங்கும் தமிழின விடுதலைக்கான கோரிக்கைகள் வலுப்பெற்றிருக்கிறது.

கம்யூனிஸ்டுகள் என்ற போர்வையில் தமிழினத்தின் உரிமையை எதிர்க்கும் வல்லூறுகள் இனம் காணப்பட்டுள்ளன.  இந்த வேளையில் பல புலம்பெயர் தேசங்களில் விரிந்து கிடக்கும் ஒருசில ஓட்டுக்குழுக்களின் அரசியற் பிரிவினரை இனம் கண்டு அவர்களை சமூகத்தில் இருந்து ஒதுக்கி வைக்க ணே்டும். அனைத்து மக்களுக்கும் இவர்களின் செயற்பாடுகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். மக்களே விழிப்பாய் இருங்கள்.

ஆதி
16-12-2011

Thursday, December 15, 2011

திசைதிருப்பப்படும் தமிழர் கோரிக்கைகள்

தமிழீழ விடுதலைக்கான ஆயுதப்போராட்டம் மெளனிக்க்பட்டதில் இருந்து தமிழ் மக்களின் உரிமைக்கோரிக்கை பலவழிகளிலும் திசைதிருப்பட்டுக் கொண்டிருக்கின்றன.
தமிழர் அமைப்புகள் மீது குற்றச்சாட்டுகளை சுமத்துதல் அதனை முதன்மைப்படுத்தி ஊடகங்களீனூடாக மக்களை குழப்புதல் என்று ஈடுபட்டுக் கொண்டிருந்த சிறிலங்கா அரசுடன் இந்த விடையத்தில் இந்தியாவும் சேர்ந்துள்ளதாகவே தெரிகிறது.
புலம்பெயர் தேசங்களில் சிறிலங்கா அரசின் குற்றச்செயல்கள் குறித்து விசாரணைக்கான கோரிக்கைகள் பல அழுத்தங்களை கொடுத்துக் கொண்டிருக்கும் வேளையில் என்றுமில்லாதவாறு தமிழகத்தில் தமிழீழ விடுதலைக்காகன கோரிக்கை வலுப்பெற்றிருக்கிறது.
 
தமிழகத்தில் வலுப்பெறும் தமிழீழ விடுதலைக்கான உணர்வலை ஒரு கட்டத்தில் இந்திய மற்றும் பிராந்திய அரசியல் நிலையில் மாற்றங்களை கொண்டுவரும் என்பது இந்திய வல்லரசிற்கு நன்கு தெரியும். இந்த நிலையில் தமிழக மக்களுக்கு இருக்க கூடிய தமிழீழ விடுதலை தொடர்பான நிலைப்பாடு தொடர்பில் மாற்றங்களை கொண்டுவருவதற்காக தமிழகத்தில் பல பிரச்சினைகளை உருவாக்கியிருக்கிறது காங்கிரஸ் தலமையிலாக மத்திய அரசு.

தவிர ஈழத்தில் நல்லிணன்ன அறிக்கை, தமிழ்தேசிய கூட்டமைப்பினுடனான பேச்சுவார்த்தைகள், அரசியல் தீர்வு குறித்து விவாதிப்பதற்கான பாராளுமன்ற தெரிவுக்குழு என்று தமிழ் மக்களின் உரிமைப்பிரச்சினைகளை பல வடிவங்களில் சிதறடித்து திசைதிருப்பல்களை செய்து கொண்டிருக்கிறது சிறிலங்கா அரசு.
அரசியல் நிலைகளில் குழுப்பங்களை ஏறப்படுத்தியிருக்கும் சிறிலங்கா அரசு சாமாந்தரமாக தமி்ழர் தாயகப்பகுதியை சிங்கள மயமாக்கல் அல்லது பெரும்பான்மை சிங்களவர்களின் நிர்வாக கட்டமைப்பின் கீழ் கொண்டுவருதல் என்ற நடவடிக்கையை நாசுக்காக செய்துவருகிறது. தமிழர் தாயகப்பகுதியில் உள்ள அரச அலுவலகங்களிற்கு சிங்களவர்களை நியமித்தல், சிங்கள கலாச்சார நிகழ்வுகளை தமிழர் தாயகப்பகுதியில் பெருமெடுப்பாக செய்தல், தமிழர் தாயகப்பகுதி சிவில் நிர்வாக நடவடிக்கைகள் சிறிலங்கா ராணுவத்தின் கீழ் செயற்படுத்துதல் என பல வழிகளில் தமிழ் மக்களின் இருப்புகளை இல்லாது செய்துவருகிறது சிங்கள அரசு.

நிலங்கள பறிக்கப்படுவது குறித்த மக்களின் குரல்களும் சிறிலங்கா ராணுவத்தினால் மேற்கொள்ளப்பட்டுவரும் அச்சுறுத்தல் மற்றும் அத்துமீறல்கள் குறித்த பதிவுகளும் ஊடகங்களில் வருவதை தடுப்பதிலும் குறியாய் இருக்கிறது இந்த அரசு.
தம் மீதான போர்க்குற்றங்கள் தொடர்பில் கேள்விகளை எழுப்பிவரும் புலம்பெயர் அமைப்புகள் இந்த விடையங்கள் தொடர்பில் கவனம் செலுத்த மாட்டார்கள் என்று நினைக்கிறது சிறிலங்கா அரசு. போர்குற்றங்கள் தொடரபில் இந்திய மற்றும் சீனாவின் உதவியுடன் எப்படியும் தப்பிவிடலாம் என்ற கனவில் சிறிலங்கா அரசு இருப்பதாகவேபடுகிறது.
 
தமிழ் மக்களின் ஆயுதப்போராட்டம் தொடர்பில் கடும்போக்கை வெளிப்படுத்திவந்த இந்தியா உள்ளிட்ட வல்லாதிக்க அரசுகள் ஆயுதப்போராட்டம் மெளனிக்கட்ட நிலையில் தமிழ் மக்களின் உரிமை மற்றும் தீர்வு குறித்த விடையத்தில் கள்ள மெளனம் சாதித்து வருவது சந்தேகத்திற்குரியது.
 
புலம்பெயர்உறவுகளே!!!

ஆயதப்போராட்டம் மெளனிக்கப்பட்ட நிலையில் எமக்கான உரிமை மற்றும் விடுதலை கேட்பது தொடர்பில் எந்த அரசும் எம்மை குற்றம் சொல்ல முடியாது. தமிழ் மக்களின் விடுதலை பற்றிய தேவையை உரத்து சொல்ல வேண்டும். ஈழத்தில் இருந்து தமிழின விடுதலை குறித்து பொதுமக்களால் எந்த குரலுலம் எழுப்ப முடியாது. அரசியல் வாதிகளின் நடவடிக்கைகள் பேச்சுகளோடு மட்டுப்படுத்தப்ட்டுள்ளது. எனவே புலம்பெயர் தேசங்களில் தமிழ் மக்களின் விடுதலைக்கான குரல்கள் ஓங்கி ஒலிக்கப்படல் வேண்டும். சிறிலங்கா அரசு செய்துவரும் அத்துமீறல்கள் மற்றும் வன்முறைகள் குறித்து வெளிநாடுகளுக்கு தொடர்ந்து சொல்லப்பட்ல் வேண்டும். தமிழ் மக்கள் இன்னமும் விடுதலை நோக்கி இயங்கிக் கொண்டிருக்கிறார்கள் என்ற செய்தி சர்வதேச காதுகளில் ஒலித்துக் கொண்டிருக்க வேண்டும். பிராந்திய வல்லாதிக்கங்கள் எமது விடுதலைத்கெதிராக நகர்த்திக் கொண்டிருக்க கூடிய அரசியல் சூழ்ச்சிகளை தகர்க்க கூடிய வகையில் தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டிருக்க வேண்டும்.

ஆதி
12-12-2011



Tuesday, December 6, 2011

தமிழகத் தோழா!!!

எங்களுக்காய் அழுதீர்கள்...
எங்களுக்காய் வீதிகளில் போராடினீர்கள்...
எங்களுக்காய் தீக்குளித்தீர்கள்...
எங்களுக்காய் பட்டினி கிடந்தீர்கள்...
நாங்கள்
கண்ணீர் வற்றி
ரத்தம் வற்றி
வீழ்ந்து கிடக்கிறோம்...
உங்களில் சிலர் எங்களை கொல்கின்றனர்!!!
அது அகதிப் பெட்டை
இழுத்து வந்து இருக்கிறத குடுத்திட்டு
அலுவல முடி - என்று கூட
உங்களில் சிலர் சொன்னார்களாமே!!!

"ஒரு ஈழத்து அகதி முகாமில் பெண்களுக்கு நடந்த வன்முறை பற்றி நண்பன் ஒருவன் இன்று சொன்னான்... ஆத்திரம் வருகிறது.. அழுகை வருகிறது... பிணம் புணரும் பிசாசுகள் சிங்களத்தில் மட்டுமல்ல தமிழகத்திலும் இருக்கிறார்கள்."

இங்கும் இருக்கிறார்கள். சிங்களத்தின் மலத்தை தின்றபடி துணை ராணுவ குழுக்களாக வலம்வரும் பிணம் புணரும் பிசாசுகள் இங்கும் இருக்கிறார்கள்!!!

எங்கள் உறவுகள் செத்து விழுந்து உயிர் தப்ப தானே தமிழகம் வந்தார்கள்!!!

எங்களுக்கும் ஒரு நாள் வாழ்வு விடியும்...


ஆதி
06-12-2011

Saturday, December 3, 2011

நினைத்தது நடந்ததா??? _ மாவீரர் நாள்

மாவீரர் நாள் என்பது மாவீரர்களுக்கான அனுஷ்டிப்பு மட்டுமன்றி ஈழப்போராட்டத்தின் ஆழத்தை தமிழினத்தின் அடுத்த தலைமுறைக்கு கடத்தும் ஒரு நாளாக இன்று உருவெடுத்திருக்கிறது.

மாவீரர் நாள்... பத்திரிகைகளில் வரும் இந்த தினம் குறித்து பிள்ளைகள் கேட்கும் கேள்விகளுக்கு பொறுமையாக பெற்றோர் பதிலளிக்கும் பெரும் உளவியல் இந்த நாட்களில் நடக்கிறது. அண்மையில் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற சம்பவங்கள் குறித்து சிலர் பேசிக் கொண்டிருக்கும் போது ரீயுசனால் வந்த 5ம் ஆண்டு பெடியன் கேட்கிறான் மாவீரர் தினம் என்றால் என்ன அம்மா?? அவனின் அம்மா சொல்கிறாள் "ஆமிக்காரர இங்க இருந்து கலைக்கிறத்துக்கு அண்ணா அக்காமர் அடிபட்டு செத்தவே.. அவேக்கு விளக்கேத்திற நாள்தான் மாவீரர் நாள்" பெடியனின் அடுத்த கேள்வி "இயக்க அண்ணாஅக்காமாரோ!!"

இங்குதான் ஊடுகடத்தப்படும் உளவியல் இருக்கிறது.
1) இயக்க அண்ணாமார் அக்காமார் குறித்த தகவல்களை இவன் வயது பராயத்தினர் பேசிக் கொள்கின்றனர்
2) இயக்க அண்ணாமார் அக்காமார் ஆமிய எங்களது இடத்தில் இருந்து கலைப்பதற்கு தான் சண்டை பிடித்திருக்கிறீனம்
3) அம்மா கூட சொல்வதால் அவர்கள் செய்தது சரியானதே!!

இவை சாதாரணமான விடையங்களல்ல... பெற்றோர்களும் இதை சாதாரணமாக சொல்வது கிடையாது. எமது வரலாறுகளை பிள்ளைகளுக்கூடாகவே அந்த தலைமுறைக்கு கடத்தும் மிகச்சிறந்த சக்திகளாக இந்த பெற்றோர்கள் இருக்கிறார்கள்.

ஆணையிறவு முகாமில் இராணுவம் கட்டி வைத்திருக்கும் போர்ச்சினத்துடன் புகைப்படம் எடுக்க கேட்ட ஒரு 9ம் ஆண்டு மாணவனை அவனது தகப்பனார் " இது எங்களை  சிங்களவன் வென்றதெண்டு கட்டின ஒன்று இதில் நின்று நாங்கள் புகைப்படம் எடுக்க கூடாது" என்று சொன்னார். இப்படிதான் வரலாறு கடத்தப்படுகிறது.

அதே போல் தான் மாவீரர் நாள் உலகெங்கும் வாழும் தமிழினித்தின் அடுத்த தலைமுறைக்கு தமிழர்கள் யார் என்பதை வீரியமாக அவர்களுக்குள் இறக்கும் ஒரு நாளாக இருக்கிறது.

பாடசாலை சுற்றுலா ஒன்றிற்கு டக்ளசிடம் பணம் கேட்டால் ஒழுங்கு செய்வார் என்று யாரோ சொன்னார்கள்.. அவரிடம் போய் பார்ப்போம் என்று சில மாணவர்கள் சொல்லியிருக்கிறார்கள்... அந்த வகுப்பில் பலர் "டக்ளசிடம் பணம் வாங்கி தான் சுற்றுலா போக வேண்டுமென்றால் அப்படியொரு சுற்றுலா எமக்கு தேவையில்லை" என்று நிராகரித்திருக்கிறார்கள். இந்த சிறுவர்களுக்கு பிரித்தறியும் அரசியல் எப்படி கிடைத்திருக்கும்? இனம் காணும் ஆற்றல் எப்படி கிடைத்திருக்கும்??? இது தான் இது வரை சிங்களம் அஞ்சிக் கொண்டிருப்பதற்கான காரணம்.

முள்ளிவாய்க்காலில் தமிழர்களின் ஆயுதம் மெளனித்து போன பிற்பாடு இந்த வருடம் மாவீரர் நாள் குறித்து தமிழ் மக்களிடத்தில் மூர்க்கத்தனம் கிளம்பியிருக்கிறது. அளவுக்கு மிஞ்சிய அதட்டல்கள் மிரட்டல்களால் மக்களின் மனம் கொதிப்படையும் நிலைக்கு தள்ளப்ட்டிருக்கிறது. கடந்த வருடம் கிளிநொச்சி முழங்காவில் என பல இடங்களில் கோயில்களில் மணி அடிக்க தடை செய்தார்கள். அந்த தடை உத்தரவை 25ம் 26ம் திகதிகளில் பிறப்பித்தார்கள் இருந்தும் 27ம் திகதி பல கோயில்களில் மணியடிக்கப்ட்டது.

இந்த தடவை ஒரு வாரத்திற்கு முன்பே கோயில்களில் மணியடிக்க தடை, கோயில்கள் மற்றும் நிகழ்வுகளில் இசைக்கப்படும் பாடல்களள் குறித்து விளக்கம் அளிக்க வேண்டும், 26ம் திகதி கடைகளில் கேக் அடிக்க கூடாது என அளவுக்கு மிஞ்சிய மிரட்டல்களை செய்திருந்தது சிறிலங்கா அரசு.

தனது பிள்ளைகளை தனது ரத்த உறவுகளை நினைந்து ஒரு தீபம் ஏற்றக் கூடவா எமக்கு உரிமை இல்லை என்று சிந்திக்கும் நிலையில் வயது கூடியவர்கள் தள்ளப்படும் போது அது இலகுவாக சிறுவர்களிடத்தில் ஊடுகடத்தப்படும். இது தான் இந்த மாவீரர் நாட்களில் தமிழர் தாயகமெங்கும் நடந்தது. வீதிகளில் இருந்த மாவீரர் தூபிகளுக்கு பூக்கள் போட்ட சம்பவமும், தீபமேற்றிய சம்பவமும் 2009 ஆயுத மெளனிப்பிற்கு பிறகு இந்த தடவைதான் அதிக அளவு நிகழ்ந்திருக்கிறது.

தவிர புலத்தில் பெரும் அசாதாரண சூழலை உருவாக்க நினைத்திருந்திருக்கிறது சிங்கள அரசு.

ஆனால் சிங்கள அரசின் எதிர்பார்ப்புக்கு மீறி வழமையை போலவே புலம்பெயர் தமிழ் மக்கள் மாவீரர் நாளை உணர்வெழுச்சியுடன் பரவலாக அனுஸ்டித்திருக்கிறார்கள். பிரான்ஸில் சிங்கள அரசால் ஏற்பாடு செய்யப்ட்ட குழப்பகர நிகழ்வை முறியடித்து ஒன்றாக திரண்டிருக்கிறார்கள் தமிழ் மக்கள்.

பிரித்தானியாவில் தமிழ் மக்களிடத்தில் குழப்பங்களை ஏற்படுத்துவதற்காக களம் இறக்கப்ட்டுள்ளவர்கள் தம்மாலான குழப்பங்களை ஏற்படுத்தியும் தமிழ் மக்கள் மாவீரர் நாளை உணர்வெழுச்சியுடன் அனுஸ்டித்திருக்கிறார்கள்.

அதிர்வு போன்ற ஊடகங்கள் சின்ன சின்ன பிரச்சினைகளை பெரிதாக எழுதி மக்களிடத்தில் குழப்பங்களை உருவாக்க நினைத்திருந்த போதும் தமிழ் மக்கள் விழிப்புடன் செயற்பட்டமை வரவேற்கதக்கது.

சிறிலங்கா அரசும் இந்திய வல்லாதிக்கமும் தமிழீழ மக்களை தவறாக எடை போட்டிருக்கலாம். விடுதலைப்புலிகள் களத்தில் இல்லாத வெளியில் தமிழ் மக்கள் தடுமாறுவார்கள் ஊடகங்களை வைத்து தமிழீழ மக்களையும் குழப்பிவிடலாம் என்று தவறாக எடை போட்டிருக்கலாம்.

மாவீரர்களின் ஆத்ம பலத்தோடு விடுதலை நோக்கி இயங்கிக் கொண்டிருக்கும் இந்த தமிழ் இனத்தை அள்ளக்கை ஊடகங்களாலும் பணத்தினாலும் சிதறடித்துவிட முடியாதென்பதை இந்த ஆண்டு மாவீரர் தினம் இந்த அரசுகளிற்கு நன்றாகவே விளங்கப்படுத்தியிருக்கும்.

ஆதி
02-12-2011

Blog template by simplyfabulousbloggertemplates.com

Back to TOP