Powered by Blogger.

Saturday, December 3, 2011

நினைத்தது நடந்ததா??? _ மாவீரர் நாள்

மாவீரர் நாள் என்பது மாவீரர்களுக்கான அனுஷ்டிப்பு மட்டுமன்றி ஈழப்போராட்டத்தின் ஆழத்தை தமிழினத்தின் அடுத்த தலைமுறைக்கு கடத்தும் ஒரு நாளாக இன்று உருவெடுத்திருக்கிறது.

மாவீரர் நாள்... பத்திரிகைகளில் வரும் இந்த தினம் குறித்து பிள்ளைகள் கேட்கும் கேள்விகளுக்கு பொறுமையாக பெற்றோர் பதிலளிக்கும் பெரும் உளவியல் இந்த நாட்களில் நடக்கிறது. அண்மையில் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற சம்பவங்கள் குறித்து சிலர் பேசிக் கொண்டிருக்கும் போது ரீயுசனால் வந்த 5ம் ஆண்டு பெடியன் கேட்கிறான் மாவீரர் தினம் என்றால் என்ன அம்மா?? அவனின் அம்மா சொல்கிறாள் "ஆமிக்காரர இங்க இருந்து கலைக்கிறத்துக்கு அண்ணா அக்காமர் அடிபட்டு செத்தவே.. அவேக்கு விளக்கேத்திற நாள்தான் மாவீரர் நாள்" பெடியனின் அடுத்த கேள்வி "இயக்க அண்ணாஅக்காமாரோ!!"

இங்குதான் ஊடுகடத்தப்படும் உளவியல் இருக்கிறது.
1) இயக்க அண்ணாமார் அக்காமார் குறித்த தகவல்களை இவன் வயது பராயத்தினர் பேசிக் கொள்கின்றனர்
2) இயக்க அண்ணாமார் அக்காமார் ஆமிய எங்களது இடத்தில் இருந்து கலைப்பதற்கு தான் சண்டை பிடித்திருக்கிறீனம்
3) அம்மா கூட சொல்வதால் அவர்கள் செய்தது சரியானதே!!

இவை சாதாரணமான விடையங்களல்ல... பெற்றோர்களும் இதை சாதாரணமாக சொல்வது கிடையாது. எமது வரலாறுகளை பிள்ளைகளுக்கூடாகவே அந்த தலைமுறைக்கு கடத்தும் மிகச்சிறந்த சக்திகளாக இந்த பெற்றோர்கள் இருக்கிறார்கள்.

ஆணையிறவு முகாமில் இராணுவம் கட்டி வைத்திருக்கும் போர்ச்சினத்துடன் புகைப்படம் எடுக்க கேட்ட ஒரு 9ம் ஆண்டு மாணவனை அவனது தகப்பனார் " இது எங்களை  சிங்களவன் வென்றதெண்டு கட்டின ஒன்று இதில் நின்று நாங்கள் புகைப்படம் எடுக்க கூடாது" என்று சொன்னார். இப்படிதான் வரலாறு கடத்தப்படுகிறது.

அதே போல் தான் மாவீரர் நாள் உலகெங்கும் வாழும் தமிழினித்தின் அடுத்த தலைமுறைக்கு தமிழர்கள் யார் என்பதை வீரியமாக அவர்களுக்குள் இறக்கும் ஒரு நாளாக இருக்கிறது.

பாடசாலை சுற்றுலா ஒன்றிற்கு டக்ளசிடம் பணம் கேட்டால் ஒழுங்கு செய்வார் என்று யாரோ சொன்னார்கள்.. அவரிடம் போய் பார்ப்போம் என்று சில மாணவர்கள் சொல்லியிருக்கிறார்கள்... அந்த வகுப்பில் பலர் "டக்ளசிடம் பணம் வாங்கி தான் சுற்றுலா போக வேண்டுமென்றால் அப்படியொரு சுற்றுலா எமக்கு தேவையில்லை" என்று நிராகரித்திருக்கிறார்கள். இந்த சிறுவர்களுக்கு பிரித்தறியும் அரசியல் எப்படி கிடைத்திருக்கும்? இனம் காணும் ஆற்றல் எப்படி கிடைத்திருக்கும்??? இது தான் இது வரை சிங்களம் அஞ்சிக் கொண்டிருப்பதற்கான காரணம்.

முள்ளிவாய்க்காலில் தமிழர்களின் ஆயுதம் மெளனித்து போன பிற்பாடு இந்த வருடம் மாவீரர் நாள் குறித்து தமிழ் மக்களிடத்தில் மூர்க்கத்தனம் கிளம்பியிருக்கிறது. அளவுக்கு மிஞ்சிய அதட்டல்கள் மிரட்டல்களால் மக்களின் மனம் கொதிப்படையும் நிலைக்கு தள்ளப்ட்டிருக்கிறது. கடந்த வருடம் கிளிநொச்சி முழங்காவில் என பல இடங்களில் கோயில்களில் மணி அடிக்க தடை செய்தார்கள். அந்த தடை உத்தரவை 25ம் 26ம் திகதிகளில் பிறப்பித்தார்கள் இருந்தும் 27ம் திகதி பல கோயில்களில் மணியடிக்கப்ட்டது.

இந்த தடவை ஒரு வாரத்திற்கு முன்பே கோயில்களில் மணியடிக்க தடை, கோயில்கள் மற்றும் நிகழ்வுகளில் இசைக்கப்படும் பாடல்களள் குறித்து விளக்கம் அளிக்க வேண்டும், 26ம் திகதி கடைகளில் கேக் அடிக்க கூடாது என அளவுக்கு மிஞ்சிய மிரட்டல்களை செய்திருந்தது சிறிலங்கா அரசு.

தனது பிள்ளைகளை தனது ரத்த உறவுகளை நினைந்து ஒரு தீபம் ஏற்றக் கூடவா எமக்கு உரிமை இல்லை என்று சிந்திக்கும் நிலையில் வயது கூடியவர்கள் தள்ளப்படும் போது அது இலகுவாக சிறுவர்களிடத்தில் ஊடுகடத்தப்படும். இது தான் இந்த மாவீரர் நாட்களில் தமிழர் தாயகமெங்கும் நடந்தது. வீதிகளில் இருந்த மாவீரர் தூபிகளுக்கு பூக்கள் போட்ட சம்பவமும், தீபமேற்றிய சம்பவமும் 2009 ஆயுத மெளனிப்பிற்கு பிறகு இந்த தடவைதான் அதிக அளவு நிகழ்ந்திருக்கிறது.

தவிர புலத்தில் பெரும் அசாதாரண சூழலை உருவாக்க நினைத்திருந்திருக்கிறது சிங்கள அரசு.

ஆனால் சிங்கள அரசின் எதிர்பார்ப்புக்கு மீறி வழமையை போலவே புலம்பெயர் தமிழ் மக்கள் மாவீரர் நாளை உணர்வெழுச்சியுடன் பரவலாக அனுஸ்டித்திருக்கிறார்கள். பிரான்ஸில் சிங்கள அரசால் ஏற்பாடு செய்யப்ட்ட குழப்பகர நிகழ்வை முறியடித்து ஒன்றாக திரண்டிருக்கிறார்கள் தமிழ் மக்கள்.

பிரித்தானியாவில் தமிழ் மக்களிடத்தில் குழப்பங்களை ஏற்படுத்துவதற்காக களம் இறக்கப்ட்டுள்ளவர்கள் தம்மாலான குழப்பங்களை ஏற்படுத்தியும் தமிழ் மக்கள் மாவீரர் நாளை உணர்வெழுச்சியுடன் அனுஸ்டித்திருக்கிறார்கள்.

அதிர்வு போன்ற ஊடகங்கள் சின்ன சின்ன பிரச்சினைகளை பெரிதாக எழுதி மக்களிடத்தில் குழப்பங்களை உருவாக்க நினைத்திருந்த போதும் தமிழ் மக்கள் விழிப்புடன் செயற்பட்டமை வரவேற்கதக்கது.

சிறிலங்கா அரசும் இந்திய வல்லாதிக்கமும் தமிழீழ மக்களை தவறாக எடை போட்டிருக்கலாம். விடுதலைப்புலிகள் களத்தில் இல்லாத வெளியில் தமிழ் மக்கள் தடுமாறுவார்கள் ஊடகங்களை வைத்து தமிழீழ மக்களையும் குழப்பிவிடலாம் என்று தவறாக எடை போட்டிருக்கலாம்.

மாவீரர்களின் ஆத்ம பலத்தோடு விடுதலை நோக்கி இயங்கிக் கொண்டிருக்கும் இந்த தமிழ் இனத்தை அள்ளக்கை ஊடகங்களாலும் பணத்தினாலும் சிதறடித்துவிட முடியாதென்பதை இந்த ஆண்டு மாவீரர் தினம் இந்த அரசுகளிற்கு நன்றாகவே விளங்கப்படுத்தியிருக்கும்.

ஆதி
02-12-2011

No comments:

Post a Comment

Blog template by simplyfabulousbloggertemplates.com

Back to TOP