Powered by Blogger.

Wednesday, November 30, 2011

பொதுநலவாய மாநாடும் தமிழர் தரப்பின் நடவடிக்கைகளும்


நடநத்து முடிந்த பொதுநலவாய மாநாடு தமிழர் தரப்பிற்கு எந்த அளவிற்கு வெற்றியளித்தது என்பதை பார்பதற்கு முன் இந்த மாநாடு சிறிலங்கா அரசிற்கு அரசியல் சங்கடங்களை உருவாக்கியிருக்கிறது என்று சொல்லலாம்.

சிறிலங்கா அரசினால் நிகழ்த்தப்பட்ட போர்க்குற்றங்கள் தொடர்பான கலந்துரையாடல்களும் அது குறித்த எதிர்வினை நிலைப்பாடுகளும் நிட்சயமாக ராஜதந்திர ரீதியிலான சங்கடங்களை சிறிலங்கா அரசிற்கு ஏற்படுத்தியிருக்கும். சிறிலங்காவில் நடக்கவிருக்கும் அடுத்த மாநாட்டில் கனடா பங்குபற்றாது என வெளிப்படையாக அறிவிக்கப்ட்டது ராஜதந்திர ரீதியில் சிறிலங்காவிற்கு ஏற்பட்ட ஒருவித பின்னடைவென்றே சொல்லலாம்.

இங்கிலாந்து மகாராணிக்கு கைகுலுக்குவது போன்ற புகைப்படம் எடுக்க முடியாது போனதால் போட்டோ எடிட்டிங் மூலம் ராஜபக்ஷ இங்காலந்து மகாராணிக்கு கைகொடுப்பது போன்று புகைப்பட்ம் உருவாக்கப்ட்டு உள்ளுர் ஊடகங்களில் வெளியிட்டமையும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது. அதாவது நடந்து முடிந்த பொதுநலவாய மாநாட்டில் தமக்கு எவ்விதமாக பாதிப்புகளையும் ஏற்படுத்தவில்லை என்று  காட்டுவதில் சிறிலங்கா அரசு பல வழிகளிலும் முயன்றிருந்தது.

தமிழர் தரப்பு திறந்த பாதைகள்
பொதுநலவாயா நாடு நடந்து கொண்டிருந்த காலப்பகுதிகளில் தமிழர் தரப்புகள் மேற்கொண்ட அரசியல் நகர்வுகள் முக்கியத்துவம் வாய்ந்தவை. அவுஸ்ரேலிய தமிழ் காங்கிரஸ் மற்றும் உலக தமிழர் பேரவையும் இணைந்து மேற்கொண்டிருந்த கூட்டத்தொடரானது பல ஊடகங்களிலும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது.

சிறிலங்கா அரசானது தண்டிக்கப்பட வேண்டிய போர்க் குற்றவாளி என்பதையும் ஈழத்தமிழர்களுக்கு இருக்க கூடிய உரிமைப்பிரச்சினையையும் இந்த கூட்டத்தொடர் பேசியிருந்தது. பலதரப்பட்ட சமூக பிரதிநிதிகளும் இந்த கூட்டத்தொடரில் பங்கேற்றிருந்தமை மற்றும் பலதரப்பட்ட ஊடகங்களில் இந்த கூட்டத் தொடர் முக்கியத்துவம் பெற்றிருந்தமை என்பது தமிழர்களின் நகர்வுகளிற்கு கிடைத்த வெற்றியாகும்.

சிறிலங்கா அரசு போர்குற்றவாளி என்றும் அது நீதிக்கு முன் நிறுத்தப்பட வேண்டிய அரசென்றும் வலியுறுத்தி நடாத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் அவுஸ்ரேலியர்களும் பங்கெடுத்திருந்தமை என்பது தமிழர்களின் நியாயத்திற்கான போராட்டம் பன்முகப்படுத்தப்படுகின்றது என்பதற்கான எடுத்துக்காட்டு.

வெளிநாட்டு அரசுகளின் நிலைப்பாடு
சிறிலங்கா என்பது தெற்காசிய பிராந்தியத்தில் பல்வேறு காரணங்களிற்காக முக்கியத்துவம் வாய்ந்தது என்பதால் தமது வல்லாதிக்க அதிகாரத்தை தக்க வைப்பதற்காக சிறிலங்காவை பகைத்துக் கொள்வோ அல்லது காட்டிக் கொடுக்கவோ வெளிப்படையாக கடுமையாக செயற்படுமா என்பது கேள்விக் குறியாக இருந்தாலும் தமிழர்கள் தொடர்ந்து மேற்கொண்டுவரும் சட்ட அழுத்தங்கள் அந்த நாடுகளை நீதியின்பால் கடுமையாக நிற்க தூண்டும் என்பதில் சந்தேகமில்லை.

போர்க்குற்றவாளி மகிந்த ராஜபக்ஷவிற்கு எதிராக அவுஸ்ரேலியாவில் போடபட்ட வழக்கை அவுஸ்ரேலிய தடுத்திருந்தது என்றே சொல்லலாம். மகிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக போடப்பட்ட வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் இடத்து அது பொதுநலவாய நாடுகளின் மத்தியில் தனது நிலை கேள்விக்குறியாகிவிடுமோ என்ற அச்சம் அவுஸ்ரேலிய அரசை இந்த முடிவை எடுக்க தூண்டியிருக்கலாம். ஆனால் சிறிலங்கா அரசானது போர்க்குற்றவாளிகளால் கட்டமைக்கப்பட்டுள்ள ஒரு அரசே தான் என்ற செய்தி அவுஸ்ரேலிய உள்ளூர் ஊடகங்களிலும் சர்வதேச ஊடகங்களிலும் இடம் பிடித்திருந்தமை இனிவரும் காலங்களில் தமிழர்களின் போராட்டங்களிற்கு வலுச்சேர்க்க உதவியாக இருக்கும்.
சர்வதேச நாடுகளிற்கு எமது போராட்டத்தின் தேவையை இன்னமும் ஆளமாக புரியவைக்க வேண்டிய தேவையில் தமிழ் மக்கள் இருப்பதாகவே எண்ண தோணுகிறது. போர்க் குற்றவாளிகளை நீதிக்கு முன் நிறுத்தி நியாயம் கேட்க வேண்டிய வேளையில் சமாந்தரமாக எமது உரிமைகளை பெற்று சுயாட்சியை நிறுவுவதற்கான வேலைகளிலும் சட்ட ரீதியாக மும்மரமாக ஈடுபடவேண்டும்.

தமிழ் மக்களை செயற்பாட்டு ரீதியில் பிளவுபடுத்தி உரிமைகளை கேட்கும் ஒட்டுமொத்த குரலில் பலத்தை சிதறடிப்பதற்கு சிறிலங்கா அரசு முனைப்புக்காட்டிவருகிறது. தமிழ் மக்கள் அவதானமாக செயற்பட வேண்டும். செயற்பாட்டு ரீதியில் பிளவுபடாமல் ஒன்றுபட்ட இனமாக விடுதலைக்கு பாடுபடவேண்டும். எல்லாவழிகளிலும் தொடர்ந்து சட்ட ரீதியான அழுத்தங்களையும் உரிமைகளை பெறுவதற்கு சட்டரீதியான முனைப்புகளையும் வேகப்படுத்த வேண்டும். அரசியல் ரீதியிலான சட்ட ரீதியிலான உரிமைகோரிய அணுகுமுறைகளை சாதாரணமாக தட்டிக்கழித்துவிட முடியாத நிலைக்கு சர்வதேசம் தள்ளப்படும். 

போர்க்குற்றவாளிகளை நீதிக்கு முன் தண்டிப்பதற்கான அழுத்தங்களை கொடுக்கும் அதேவேளை எமது நிலத்தில் நடந்துவரும் உரிமை மறுப்புகள் அடக்கு முறைகள் குறித்தும் தொடர்ந்து பதிவு செய்து வர வேண்டும்.
 பொதுநலவாய மாநாடு சிறிலங்கா அரசு குறித்த பல செய்திகளை பலதரப்பட்ட மக்களுக்கு கொண்டு சேர்க்கும் ஒரு வாய்ப்பாக அமைந்திருந்தது. இனிவரும் காலங்களில் சிறிலங்கா அரசை ஏன் தண்ணடிக்க வேண்டும் என்பதற்கான  காரணங்களோடு நாங்கள் ஏன் விடுதலை வேண்டி நிற்கிறோம் என்ற செய்தியையும் ஆழமாக பதிவு செய்ய வேண்டும். எல்லாவற்றிற்கும் தமிழினம் ஒன்றுபட்ட இனமாக பலத்தோடு எழுவது தேவை.

ஆதி
17-11-2011


No comments:

Post a Comment

Blog template by simplyfabulousbloggertemplates.com

Back to TOP