Powered by Blogger.

Friday, September 2, 2011

கிறிஸ் பூதங்கள் என பெயர்வைத்து உலாவரும் சிறிலங்கா அரச மனித மிருகங்கள்.

சிங்கள அரசின் திட்டமிட்ட நிகழ்ச்சி நிரலில் கீழ் தமிழர் பிரதேசத்திற்கு கிறிஸ்பூதங்கள் என்ற பெயரில் சிங்கள ராணுவத்தின் காடையர் தனத்தை நகர்த்தியிருக்கிறது. கிழக்கு மாகாண இயல்பு வாழ்க்கையை குலைத்த சிறிலங்கா அரசு இன்று வடக்கு மாகாணத்திற்கு சிங்கள காடையர்களை அனுப்பியிருக்கிறது. மக்களின் இயல்புநிலையை குழப்புதல் அதனூடாக ராணுவத்தின் அதிகாரத்தன்மையை பிரயோகித்து அச்சமுள்ள சுழ்நிலையில் தமிழ் மக்களை அடக்கி வைத்திருத்தல் என்ற அராஜக போக்கில் செயற்பட்டுக் கொண்டிருக்கிறது சிறிலங்கா அரசு.

பிடிபடும் மர்ம மனிதர்கள் இராணுவத்திற்கு உடனடியாக தகவல் தெரிவிக்க கூடிய வகையில் ஜி.பி.ஸ் தொழினுட்ப வசதி அல்லது தொலைபேசி வசதிகளுடன் காணப்படுகின்றனர். மக்கள் பொலிசாருக்கு தகவல் தெரிவித்து பொலிசார் சம்பவ இடத்திற்கு வருமுன் இராணுவம் வந்துவிடுகிறது. ராணுவம் ஆயுதங்கள் சகிதம் சட்டத்தை கையில் எடுக்கிறது. மர்ம மனிதர்களை பிடித்த மக்கள் குறித்து நோட்டம்விட்ட அல்லது தகவல் சேகரித்த இராணுவம் மக்களை கலைந்து செல்லும்படி உத்தரவிடுகிறது சிறிது நேரத்தின் பின் அந்த மக்களின் வீடுகளுக்குள் புகுந்து காட்டுமிராண்டித்தனமாக தாக்கி அவர்களை நீமன்றத்திற்கு கொண்டு செல்கிறது.

பிடிபடும் மர்மனிதர்கள் எவரையுமே நீதிமன்றத்திற்கு கொண்டுசெல்லாத சிங்கள ராணுவமும் பொலிசும் மர்ம மனிதர்களை பிடிக்கும் மக்களை தாக்கி நீமன்றிற்கு இழுத்துச் செல்லும் அராஜகம் நடந்து கொண்டிருக்கிறது.

அண்மையில் கோண்டாவிலில் பிடிபட்ட மர்மமனிதனை மிகுந்த சிரமத்திற்கு மத்தியில் மக்கள் பொலிஸ் இல் ஒப்படைத்தனர். நீதிகிடைக்கும் என அனைவரும் எதிர்பார்த்திருந்த நிலையில் பிடிபட்ட சிங்கள இளைஞன் பாலியல் மன நோயாளி எனவும். அதனால்தான் களவாக பெண்களை யன்னல் வழியாக பார்த்ததாகவும் பொலிஸ் தெரிவித்தது. தென்னிலங்கையில் இருந்து பெண்களை களவாக பார்ப்பதற்கு பாலியல் மனநோயாளி பஸ் ஏறி யாழ்ப்பாணம் வந்திருப்பது புதுமையாக இருக்கிறது. கேட்பதற்க யாருமற்ற நிலையில் சிங்கள அரசும் சிங்கள ராணுவமும் தமிழ் மக்களை முட்டாள்கள் என நினைத்து நிர்வாகம் செய்து வருகின்றனர்.

நேற்று இரவு கூட யாழ்பல்கலைக்கழக பெண்கள் விடுதிக்குள் புக முயற்சித்துள்ளனர். இந்த நிலையில் பெண்கள் விடுதி மாணவிகள் ஆண் மாணவர்களிடம் சொல்ல ஆண்கள்விடுதியில் உள்ள மாணவர்கள் விடுதிடியில் கூடியபொழுது மரத்தில் இருந்து குதித்த மர்மமனிதர்கள் மாணவர்களை மிரட்டிக் கொண்டு ஓடியுள்ளனர். அவர்களை துரத்திச் சென்ற மாணவர்களை ரயில் ரோட்டு கரையில் மறித்த ராணுவத்தினர் தாக்கியுள்ளனர்.

மர்ம மனிதர்கள் நடமாட்டம் உள்ள இடங்களிலெல்லாம் அவர்களை பாதுகாப்பதற்கு ராணுவம் உடனடியாக கூடிவிடுவது ஆச்சரியப்படுவதற்கில்லை. யாருடைய திட்டமிடல் என்பது இங்கு புலனாகிறது.

சிவில் நிர்வாகத்தை காட்டுமிராண்டித்ததனமான கையாண்டு கொண்டிருக்கும் சிங்கள ராணுவத்திற்கெராக சமூக அர்வலர்கள் மனத உரிமை ஆர்வலர்கள் சட்டரீதியில் கையாள முன்வர வேண்டும். சிங்கள அரசின் காட்டுமிராண்டித்தனமான இந்த நிகழ்ச்சிநிரலிலின் பின்னணியில் இருக்க கூடிய அடக்குமுறையை சர்வதேச அளவில் பேசும்பொருளாக்கப்பட வேண்டும். ராஜபக்ஷ அரசு எதை வேண்டுமானாலும் மனிதகுலத்திற்கெதிராக செய்வோம் என கங்கணம்கட்டி நிற்பதை சர்வதேசத்திற்கு காட்டுவதோடு மனித உரிமைகள் மீறப்படுவதையும் இராணுவ அடக்கு முறைகளையும் எதிர்த்து ஜனநாயக வழியில் போராட வேண்டும். சர்வதேச அளவில் இதை கொண்டு போய் இலங்கை அரசுக்கெதிராக சட்டநடவடிக்கைகள் எடுக்க கூடிய வழிகள் இருக்கின்றனவா என்பதை ஆராயவேண்டும்.

மனித உரிமை ஆர்வலர்களுக்கு இந்த பிரச்சினையை உடனடியாக கொண்டு செல்லுங்கள் தமிழர்களே.

ஆதி
03-09-11

Monday, August 22, 2011

கிறிஸ் பூதங்கள்_கலையரசன் என்ற கோமாளியும் யோ.கர்ணன் என்ற லவுட்ஸ்பீக்கரும்.

"கிறிஸ் பூதங்கள்" என்ற பெயரில் மலையகத்தில் ஆரம்பித்த சிங்கள ராணுவ நகர்வு குருணாகல் தம்புள்ள உள்ளிட்ட பிரதேசங்கள் வழியாக கிழக்குமாகாணத்திற்குள் நுழைந்து மன்னார் கிளிநொச்சி பிரதேசங்களுக்கும் பரவியிருக்கிறது. இராணுவத்தின் இரத்த வெறியின் இன்னொரு பாகம் தான் இந்த நடவடிக்கை என்று நாங்கள் ஆரம்பத்தில் இருந்தே சொல்லி வருகிறோம். ஆனால் கலையரசன் என்ற அரச முகவர் "இதுக்கும் இராணுவத்திற்கும் சம்மந்தம் இல்லை... தமிழ் ஊடகங்கள் மக்களை ஏமாற்றுகின்றன என்று சொல்லியிருந்தார்" அதிகபட்சமாக சென்று "இராணுவம் தான் சம்மந்தப்பட்டிருந்தால் ஆதாரத்தை காட்டுங்கள் என கேட்டிருந்தார்" 

இந்த நிலையில் "புதிய ஜனநாயக மக்கள் முன்னணி" என்ற அரசியல் கட்சியின் இணையத்தில் கிறிஸ் மனிதர்களுக்கும் இராணுவத்துக்குமிடையிலான தொடர்பு குறித்த செய்திகள் வரவே கலையரசன் தடுமாறிவிட்டார். உடனே ராணுவத்திற்கு தொடர்பு இருப்பதாக கூறி குறிப்பெழுதினார். "கிறிஸ் பூதங்கள்" பிரச்சினையை சரியாக கையாளதெரியாத அரசியல் இல்லை என்று சொன்னார். இங்கு நகைப்புக்குரியவிடையம் என்னவென்றால் "கிறிஸ் பூதங்கள்" தொடர்பாக மக்களிற்கு ஏற்பட்டிருக்கும் கோபம் அரசுக்கெதிராக திரும்பும் சாத்தியமமிருக்கிறது என்று நான் ஒரு இடத்தில் குறிப்பிடும் பொழுது அதை கேலி செய்திருந்தவர் இன்று இந்த கருத்து சம்மந்தமாக பதிவே எழுதியிருக்கிறார்.

வெளிநாடுகளில் இருந்து சிங்கள இனவெறியாட்டத்தை மறைப்பதற்கு பலவகையில் முயற்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன. "கிறிஸ் பூதங்கள்" எனப்படுபவர்கள் சழூகவிரோதிகள் மட்டும்தானாம். அவர்களுக்கு இராணுவத்துடன் எந்த தொடர்புமில்லையாம் என்று இங்கிருந்து யோ.கர்ணன் சயந்தனுக்கு உறுதிப்படுத்தினாராம். அதை கலையரசன் நம்புகிறாராம்.

சிங்கள அரசின் வெறியாட்த்தை காப்பாற்ற தமிழர்கள்தான் இனவெறி பிடித்தவர்கள், என ஓதிக் கொண்டிருக்கும் கலையரசனுக்கு யோ.கர்ணன் என்ற ஊதுகுழல் பிரயோசனமாக பயன்படுகிறது. சிங்கள வெறியாட்டத்தை மறைப்பதற்கு, தடுமாற்றக் கருத்துகளையும் முன்னுக்கு பின் முரணான கருத்துகளையும் வெளியிட்டு வாசகர்களின் சிந்தனைகளை திசைதிருப்பி அதில் இருந்து சிங்கள ராணுவத்தின் மீதான பார்வையை விலக்குவதற்கான உளவியல் உத்தியைதான் கலையரசன் கையாண்டிருந்தார். ஆனால் அது எடுபடவில்லை.

மக்களின் கருத்துக்கள்
************************************************************************
இந்த பிசாசு கதைகளுக்கு முன் கத்தறகம பிரதேசத்தில் ஒரு யானைக்குட்டி பரிதாபமாக இறந்தது. அதற்கான காரணம் என்ன தெரியுமா??  மகிந்த ராஜபக்ஷவுக்கு ஏதோ வியாதியாம். அதனால் "பண்சல"விற்கு குட்டியீன்ற யானை ஒன்றை தானம் செய்ய வேண்டும் என்று பிக்குகள் கூறினராம். அதன் காரணமாக குட்டியீன்று சில நாட்களேயான தாய் யானையை குட்டியிடம் இருந்து பிரித்துச் சென்றது ராஜபக்சவின் அடியாள் கூட்டம். பால்குடிக்கும் யானைக்குட்டிக்கு சரியான உணவு வழங்கப்படாததால் குட்டி சில நாட்களில் இறந்து போனது.

இந்த சம்பவம் நடந்து சில நாட்களின் பின்னர் தான் "கிறிஸ் பூத" கதைகள் வெளியாகின. புதையல் எடுப்பதற்காக நாமல் ராஜபக்ஷ தலமையிலான குழு நாடுமுழுவதும் இறக்கப்ட்டுள்ளது என்றும் அதனால் ஏற்படப்போகும் தளம்பலை கட்டுப்படுத்த வேண்டும் என்றால் மக்களை வீடுகளுக்குள் முடக்கவேண்டும் என்பதும் தேவையான ஒன்று என்றகாரணத்தால் தான் இந்த "கிறிஸ் பூதங்கள்" உருவாக்கப்ட்டன என்று ஒரு பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

ஆனால் "கிறிஸ் பூதங்கள்" இன் செயற்பாடுகள் மாற மாறவே மக்களிடத்தில் வேறுவகையான அச்சங்கள் உருவாகின. மக்களை உடல் ரீதியாக துன்புறுத்தும் அளவிற்கு "கிறிஸ் பூதம்" வளர்ந்துவிட்டபின்னர் தான் இதன் பின்னணியில் அரசாங்கம் இருக்கிறது என்ற உண்மை மக்களுக்கு தெளிவுபட்டது. குருணாகல் தம்புள்ள உள்ளிட்ட பிரதேசங்களில் சில "கிறிஸ் பூதங்கள்" ஊர்மக்களால் கொலை செய்யப்ட்டன. பெண்கள் மட்டும் உள்ள வீடொன்றில் புகுந்த "கிறிஸ் மனிதர்" ஒருவர் அங்கிருந்த தாய் மற்றும் 3 பிள்ளைகளால் கத்தியால் குத்தி செய்யப்ட்டார். பூதத்தின் பிணத்தை எடுத்த பொலிஸார் வழக்குப்பதிவின்றி மறைத்துள்ளார்களாம். இப்படியான சம்பவங்களிற்கு பின்னர்தான் "யானைக்குட்டி இறந்த சம்பவத்துடன்" மக்கள் தொடர்புபடுத்தி யோசிக்க வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளானார்கள். 

கிழக்கு மாகாணம் மற்றும் மன்னார்ப்பகுதிகளில் மக்களிடையில் பேசப்படும் கதைகள் வித்தியாசமானது. மகிந்தவின் வியாதிக்கான ரத்தத்தை எடுப்பதற்காக தான் இந்'த பிசாசுகள் களமிறக்கப்ட்டுள்ளதாக இங்குள்ள மக்கள் முழுமையாக நம்புகிறார்கள். குறிப்பாக தமிழ் மக்களை துன்புறுத்தியபடி இலக்கு முஸ்லீம் மக்களாகவே இருக்கிறது என்று கூறுகிறார்கள். முஸ்லிம் மக்கள் "பன்றி" இறைச்சி சாப்பிடுவதில்லை எனவே முஸ்லிம் பெண்களின் "இரத்தம்" தான் மாந்திரிகத்திற்கு நல்லது என்ற அடிப்படையில் தான் வன்முறை இடம்பெறுகிறது என்று நம்புகிறார்கள்.

மன்னார் பகுதியில் முஸ்லிம் பெண்களின் மார்பகங்கள் கிழிக்கப்ட்டதாக சில மக்கள் சொல்கிறார்கள்.

இவையனத்தும் மக்களின் கருத்துக்கள்.  

இனி இதை அரசியல் ரீதியாக அணுகினால் காரணம் என்னவாக இருக்க கூடிய சந்தர்ப்பங்கள் இருக்கின்றன என்ற எனது கருத்துகளை பதிவு செய்கிறேன்.
***************************************************************************************
 இந்த கிறிஸ் பூதத்தின் பின்னணியில் இருக்க கூடிய அரசியல் மற்றும் ராணுவ முக்கியத்துவம் குறித்து பலர் பேசிவிட்டதால் பேசப்படாத சில விடையங்களை மட்டுமே இங்கு குறிப்பிடுகிறேன்.

சிறிலங்கா அரசைப்பொறுத்தவரை பலவகைப்பட்ட சர்வதேச அழுத்தங்களுக்கு உள்ளாகியிருக்கிறது. தவிர உள்நாட்டு அரசியல் நெருக்கடியும் கூடிக் கொண்டுவருகிறது. குடும்ப அரசியலால் ஆழும் கட்சிக்குள்ளும் சிங்கள மக்கள் மத்தியிலும் மாற்றங்கள் வந்து கொண்டிருக்கும் நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பும் இறுக்கமான முடிவுகளை எடுக்கும் சூழ்நிலையை உருவாக்கியிருக்கிறது. மகிந்த ராஜபக்ஷ அரசால் சுரண்டப்படும் நாட்டின் வளங்கள் ஊழல்கள் குறித்த செய்திகள் மக்களிடையில் பரவ ஆரம்பித்திருக்கிறது. அரசு மீது அதிருப்தியடையும் படையினரின் எண்ணிக்கையும் அதிகரித்துவருவதாக அரசியல் கட்சி பிரமுகர்கள் மக்களிற்கு தகவல்களை வழங்கி வருகின்றனர். இந்த நிகழ்ச்சிகளுக்கு மத்தியில் அரசை தக்க வைப்பதற்கும் தமிழ் மக்களின் கோரிக்கைகளை அடக்கி வைப்பதற்கு அரசிற்கு தேவை ஏற்பட்டுள்ளது.

சிங்கள பிரதேசங்களில் ஆரம்பித்த இந்த வன்முறைக் குழு நாசுக்காக தமிழர் தாயகப்பகுதிக்கு பரவியிருக்கிறது. தமிழ் தேசிய கூட்டமைப்பின் காலக்கெடு முடியவும்.. அடுத்த கட்ட நடவடிக்கைகள் எடுப்போம் எனவும் கூட்டமைப்பு அறிவித்திருந்தது. ஒருவேளை அந்த நடவடிக்கை மக்களை ஒன்றுதிரட்டி சாத்வீக போராட்டமாக கூட்டமைப்பு நடவடிக்கையில் இறங்கும் திட்டமேதும் இருக்குமோ என்ற அச்சத்திலும் தமிழ் மக்களை குழப்புவதற்காக வீடுகளில் அடக்குவதற்குவதற்காகவும் ராணுவத்தின் கட்டுப்பாட்டிற்குள் மீண்டும் கொண்டுவருவதற்கான உத்தியாகவும் இருக்கலாம் என்று நம்புகிறேன்.

தவிர இராணுவம் சோர்வடைந்த நிலையில் அரசு மீது அதிருப்தி அடையும் நிலைக்கு தள்ளப்ட்டுக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் இனவெறியூட்டப்பட் ராணுவத்தை தமிழ் மக்கள் மீது சீண்டிக் கொண்டிருக்கும் வேலைத்திட்டங்கள் வழங்கப்பட்டிருக்கலாம். தமிழ் மக்கள் மீதான சீண்டல்களை சிங்கள ராணுவம் எப்பொழும் ஆவலுடன் எதிர்பார்த்திருக்கும் என்பது நான் சொல்லி தெரியவேண்டியதில்லை. அரசு மீதான சிந்தனைகளை நீக்கி தமிழ் மக்கள் மீதான வெறித்தனத்திற்கு ராணுவத்திற்கு வடிகாலிட்டு கொடித்திருக்கிறது அரசு.

ஆனால் அரசு நினைத்தளவை விட மக்கள் ஆக்கிரோசமாக மாறியிருக்கிறார்கள். விடுதலைப்புலிகள் அரசியல் செய்த காலத்தில் மக்கள் இராணுவத்தின் காவலரண்களையும் ராணுவ கடைகளையும் எரித்திருந்தனர். ஆனால் இன்று எந்த பக்க பலமும் இன்றி மக்கள் வெறித்தனமாகியது அரசிற்கு நிட்சயமாக அதிர்ச்சியளித்திருக்கும். மட்டக்களப்பு மற்றும் திருகோணமலைப்பகுதிகளில் முஸ்லிம் மக்கள் மீதான தாக்குதலை கண்டித்து ராணுவம் மற்றும் பொலிஸ் மீதான தாக்குதல்கள் பகிஸ்கரிப்புகளில் தமிழ் மக்களும் பெருமளவிலாக ஈடுபட்டதும் தமிழ் மக்கள் மீதான வன்முறையை கண்டித்து ராணுவம் மற்றும் பொலிஸ் மீதான தாக்குதல்கள் மற்றும் பகிஸ்கரிப்புகளில் முஸ்லீம் மக்கள் ஈடுபட்டதும் அரசிற்கு மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கும். இதன் காரணமாக தான் முஸ்லிம் அரச அதிகாரிகளை கொண்டு தமிழ் முஸ்லிம் மக்களிடையில் குழப்பங்களை ஏற்படுத்தும் விதமாக அறிக்கைகள் மற்றும் செயற்பாடுகளை முடக்கியிருந்தது. ஆனால் மக்கள் விழிப்படைந்துவிட்டார்கள்.

எது எப்படியிருப்பினும் மட்டக்களப்பில் இராணவ பதிவு ஆரம்பிக்கபட்டிருக்கிறது. இளைஞர்களை கண்காணிப்பதற்கான அரச முகவர்கள் விரிவாக்கப்ட்டுள்ளனர். இருந்தும் ராணுவம் மற்றும் பொலிஸ் மீது மக்கள் வெறித்தனமாக இருக்கிறார்கள் என்பதை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். இது சிங்கள அரசிற்கு மேலும் அதிர்ச்சியை உருவாக்கியிருக்கும் என்பதில் சந்தேகமில்லை. ராணுவத்தினூடாக சிங்கள அரசு செய்துவரும் இந்த வெறித்தனத்தை வெளிக் கொணர அனைவரும் செயற்பட வேண்டும்.

வீடுகளில் ஆண்களற்ற குடும்பங்களிற்கு சென்று பெண்களோடு சீண்டும் வன்முறையில் ஈடுபடும் வெறிபிடித்த சிங்கள இராணுவம்தான் இந்த பிசாசுகள் என்பதை சர்வதேச அளவில் கொண்டு செல்ல வேண்டும். சிங்கள அரசின் இந்த ரத்த வேட்டைநாய்களை உலக அளவில் காட்டி சிங்கள அரசின் கொரூர முகத்தை வெளிக்காட்ட வேண்டும். அதற்கு இங்குள்ள மக்களை தொடர்பு கொண்டு கருத்துகளை பதிவு செய்து பதிவுகளை எழுதுங்கள்.

குறிப்பு: பாதிக்கப்ட்ட மக்களின் மனநிலையை புரியாமல் அவர்களின் கருத்துகளை அறியாமல் "துவாரகாவின் தந்தை பெயர் பிரபாகரன்" என்று கதையெழுதி விடுதலை்பபோராட்ட தலைவரை கேவலப்படுத்திய யோ.கர்ணன் சொன்னார் அது சமூக விரோதிகள் மட்டும் தான் என்று என்பது போன்றானசாட்சியங்களை (!!!!)  வைத்து கட்டுரைகள் எழுதாதீர்கள். எட்டாம்கட்டை கோட்டைகட்டி அம்பலப்பெருமாள் பிரதேசங்களில் பூநகரி நாச்சிக்குடா முழங்காவில் போன்ற பிரதேசங்களில் ராணுவம் செய்துவரும் அட்டூழியம் இந்த யோ.கர்ணன்களுக்கு தெரியப்போவதில்லை. மல்லாவி உள்ளிட்ட பிரதேசங்களில் ராணுவத்தால் மக்கள்படும் துன்பங்கள் இந்த யோ.கர்ணன்களுக்கு தெரியப்போவதில்லை. ஷோபாசக்தி குழுமத்தினால் தனது கதைகள் புத்தகமடிக்கப்பட வேண்டும் என்பதற்காக கலையரசனும் யோ.கர்ணனும் பிதற்றும் அளவை சகிக்க முடியாமல் இருக்கிறது. மக்களின் மனநிலையை அறிவதற்கு எந்த முயற்சியும் இவர்கள் எடுப்பதாக தெரியவில்லை. இங்குள்ள மக்களின் நிலைப்பாட்டை அறிவதற்கு கலையரசன் யோ.கர்ணன் சொன்னதை கேட்பாராம்.. சனங்களின் சாட்சியாக யோ.கர்ணன் கதையெழுதி புத்தகமடிப்பாராம்.. 


ஆதி
22-08-2011


Tuesday, July 19, 2011

தமிழர்கள் மீதான கலாச்சார சிதைப்பு யாழ் பல்கலைக்கழகத்தில் இருந்து தான் ஆரம்பிக்கும்_விளைவுகள்

http://aathithyank.blogspot.com/2010/11/blog-post_6803.html இது நான் கடந்த வருடம் எழுதிய பதிவு. அப்போது எதிர்வு கூறல்களை எழுதியிருந்தேன். இப்பொழுது நிகழ் காலத்தில் நடந்து கொண்டிருப்பவை பற்றி எழுத வேண்டிய கட்டாம் உள்ளது.

உலக வரலாற்றில் பல்கலைக்கழகங்கள் பலவிதமாக போராங்களில் சம்மந்தப்படுகிறது. இனம் ரீதியான விடுதலைப்போராட்டம் என்றாலும் சரி.. கிளர்ச்சிகள் என்றாலும் சரி பல்கலைக்கழகளங்களில் இருந்தே போராட்டங்களின் பரிமானங்கள் விஸ்வரூபம் எடுக்கின்றன.

அந்த வகையில் தமிமீழ விடுதலைப்போராட்டத்தின் மிக முக்கியமான நகர்வுகள் கூட பல்கலைக்கழக மாணவர்களால் தான் முன்னெடுக்கப்ட்டன. பொங்குதமிழ் யாழ் பல்கலைக்கழகத்தில் தொடங்கிய பொழுது அத்தனை அடக்குமுறைகளையும் தகர்த்தெறிந்து அதிகாரத்திற்கு எதிராய் ஓங்கி ஒலித்தவர்கள் யாழ் பல்கலைக்கழக மாணவர்கள். சிறிலங்கா அரசின் இராணுவ இயந்திரத்துக்குள் இருந்து எப்படி கிளர்ந்தெழுந்தார்கள் என்று உலக அரசியலே வியந்த நிகழ்வது.

இப்படி தமிழர் உரிமைப்போராட்டத்துடன் ஒன்றித்து பயணிக்கும் மாணவர் சமுதாயம் உள்ள யாழ் பல்கலைக்கழகத்தை எப்படியாவது சிதைத்துவிட வேண்டும் என்பது சிறிலங்கா அரசின் நீண்டகால ஆசை. விடுதலைப்புலிகள் களத்தில் இருந்த காலப்பகுதியில் செய்ய முடியாததை இப்பொழுதான் சிறிலங்கா அரசு ஆமை்பித்திருக்கிறது.

கடந்தவருடம் யாழ் பல்கலைக்கழகத்திற்கு குறிப்பிடத்தக்க அளவு சிங்கள மாணவர்கள் உள்வாங்கப்பட்டனர். பாதுகாப்பு பிரச்சினை என சாக்கு சொல்லியபடி சிறப்பு அதிரடிப்படையின் பாதுகாப்புடன் பல்கலைக்கழகத்திற்குள் நுழைந்த பயிற்றுவிக்கப்ட்ட சிங்கள பல்கலைக்கழக மாணவர்கள் இப்பொழு தான் செயற்பட தொடங்கியிருக்கிறார்கள். அதிகளவில் சிங்கள மாணவிகளை கொண்ட இந்த அணி இப்பொழுது செயற்பட ஆரம்பித்திருக்கிறது.

பெண்களின் மாணவிகள் விடுதிக்குள் அங்கிருக்கும் மாணவிகளின் ஆண் சகோதரர்கள் கூட நுழையமுடியாத நிலையில் முச்சரக்கர வண்டியில் வந்து சிறிலங்கா ராணுவத்தினர் வார இறுதி நாட்களில் சிங்கள மாணவிகளை தங்கள் முகாம்களுக்கு கூட்டிக் கொண்டு செல்கின்றனர். இதனால் அங்கிருக்கும் ஒட்டுமொத்த தமிழ் மாணவிகளுக்கும் பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது மட்டுமல்லாது தற்போதுள்ள பல்கலைக்கழக நிர்வாகத்தின் பக்கச்சார்பு நிலையையும் சிறிலங்கா அரசின் தான்தோன்றித்தனமான அதிகார அடக்குமுறையையும் காட்டுகின்றது.

தவிர சிங்கள மாணவிகள் தமது காதலர்களுடன் ஒரே குடைக்குள் செல்லுதல் உள்ளாடைகள் தெரியும் வண்ணம் உடைகள் அணிந்து வருதல் பல்கலைக்கழக வளாகத்தினுள் தமது காதலர்களுடன் பின்னிப்பிணைந்த நிலையில் செல்லுதல் என தமிழ் மாணவ மாணவிகளை பெரும் சங்கடத்திற்கு உள்ளாக்கி வருகின்றனர். பெரும்பாலான சிங்கள மாணவர்கள் சட்டத்துறைக்கே உள்வாங்கப்பட்டுள்ளனர். இந்த மாணவிகள் இராணுவ தலமைகளுடன் நெருங்க உறவை பேணிவருவதால் மற்றைய பீட மாணவர்கள் இது குறித்து பல்கலைக்கழ நிர்வாகத்திடம் விசனம் தெரிவிக்க கூட பயப்பிடுகிறார்கள்.

எந்தவொரு சமய நிகழ்ச்சியும் கொண்டாட அனுமதிக்காத யாழ்பல்கலைக்கழக நிர்வாகம் இந்த தடவை வெசாக் நிகழ்வை கொண்டா அனுமதித்திருந்தமை குறிப்பிடத்தக்க விடையம்.

நேரடியாக யாழ் சமூகத்துடன் தொடர்புடைய யாழ் பல்கலைக்கழகத்தின் செயற்பாடுகளை சீர்குலைத்தல் மற்றும் தமிழர்களின் கலாச்சாத்திற்கு சவால்விடும் நிகழ்வுகளை பல்கலைக்கழகத்திற்குள் அரங்கேற்றல் என்பதன் மூலம் எதிர்காலத்தில் தமிழர்களின் கலாச்சார இருப்பை ஆட்டம் காண வைக்க முடியும் என்று நம்புகிறது சிறிலங்கா அரசும் சிறிலங்கா ராணுவமும்.

ஈபிபடிபியின் நேரடி கண்காணிப்பில் இருக்கும் இன்றைய யாழ் பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு உட்பட்ட இந்த நிகழ்வுகளை தமிழர் நலன் சார்ந்து ஈபிடிபி பேசாது என தெரிந்தும் மற்றய தமிழ் கட்சிகள் இது குறித்து கேள்வி எழுப்பாமல் இருப்பது கண்டிக்கத்தக்கது. சிங்கள மாணவர்கள் நேரடியாக அரச அமைச்சர்களையோ சிறிலங்கா ராணுவத்தையோ பல்கலைக்களகத்திற்குள் கொண்டுவர முடியுமென்றால் தமிழ் மாணவர்கள் அதிகமாக இருக்கும் இடத்தில் அந்த மாணவர்களின் எதிர்கால இருப்பு குறித்து தமிழ் அரசியல்வாதிகளுக்கு அக்கறை செலுத்த முடியாதா என்ன??

பெரும்பாலான சிங்கள மாணவர்கள் சட்டபீடத்திலேயே இருப்பதால் சட்டத்துறை மாணவர்கள் அது குறித்து சிந்தித்து விரைவில் கட்டுப்பாடுகளை அமுல்படுத்துவதற்கான சாத்தியங்களை ஏற்படுத்த வேண்டும். 50 மாணவர்களே ஒரு கல்வியாண்டில் யாழ் பல்கலைக்கழகத்திற்கு சட்த்துறைக்கு தெரிவு செய்யப்படும் நிலையில் அடுத்தவருடத்தில் இருந்து 50 இல் 30 மாணவர்கள் சிங்க மாணவர்களுக்கே வாய்ப்பளிக்கப்பட இருப்பதாக அறியப்படுகிறது. அதாவது இன்னும் இரண்டு வருடங்களில் யாழ் பல்கலைக்கழ சட்ட பீடத்தின் பெரும்பான்மை சிங்கள மாணவர்களாகவே இருக்க போகிறார்கள். வெறும் 30 மாணவர்களால் இப்பொழுதே நிர்வாகத்தையும் பல்கலைக்களக தமிழ் மாணவர் சமுதாயத்தையும் கட்டுப்படுத்த முடியுமென்றால் இன்னும் 2 வருடங்களில் ஏற்படப்போகும் நெருக்கடி அல்லது ஆபத்து மிக மோசமானதாக இருக்கும். இது குறித்து பெற்றோர்களும் ஆர்வலர்களும் கவனத்தில் எடுத்து விரைவாக செயற்பட வேண்டும்.

ஆதி
7-18-11

Saturday, June 25, 2011

ஈழத்தமிழர் அரசியலில்; தமிழக அரசியலின் செல்வாக்கு





ஈழத்து அரசியலில் காலாகாலமாய் பிராந்திய வல்லாதிக்கங்களின் செல்வாக்கு இருந்து கொண்டேதான் வருகிறது. அதிலும் ஈழத்தமிழர் உரிமைப்பிரச்சினையை பொறுத்தவரையில் சிங்கள அரசுகளால் தமிழ் மக்களுக்கு உரிமைகள் மறுக்கப்பட்டு அதை எதிர்த்து ஈழத்தமிழர் அரசியல் தலமைகள் போராட்டங்களை ஆரம்பித்த காலத்தில் இருந்து தமிழக அரசியல் செல்வாக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் இருந்தே வருகிறது.


தமிழக அரசியலின் துணையின்றி ஈழத்தமிழர் விடையத்தில் எந்த அரசியல் முடிவுகளையும் எடுக்க முடியாத மறைமுக அழுத்தங்கள் இருந்து கொண்டேதான் இருக்கிறது. ஈழத்தமிழர் நலன் தொடர்பில் தமிழ் நாட்டு மக்கள் அனைவரும் ஒருமித்த குரலில் இந்திய அரசிடம் நீதி கேட்டால் தமிழர் உரிமைப்பிரச்சினை தொடர்பில் சாதகமான முடிவுகளை இந்திய அரசு அறிவிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும் என்ற நிலை காணப்படுகிறது. காரணம் இந்திய ஆழும் அரசுகளுக்கு தமிழ் நாட்டு அரசியல் சக்தி என்பது இன்றியமையாத ஒன்றாக இருக்கிறது.


இங்கு சில விடையங்கழள நாங்கள் தெளிவாக விளங்கிக் கொள்ள வேண்டும். ஒன்று பிராந்திய வல்லாதிக்கங்களின் அரசியல் பரம்பல் எப்படி எமது உரிமைப்பிரச்சினையில் செல்வாக்கு செலுத்துகின்றன மற்றயது அந்த செல்வாக்கு எப்படி தமிழ் நாட்டினூடாக அமுல்படுத்தப்படுகின்றன என்பதேயாகும்.


பிராந்திய வல்லாதிக்கங்களின் அரசியல் பரம்பல் என்பது பெரும்பாலும் வர்த்தகத்தை மையப்படுத்தியதாகவே இருக்கின்றன. தெற்காசியாவின் நுகர்வோர் சந்தையை கைப்பற்றுவதும் அதன் மீது தமது ஆதிக்கத்தை தக்கவைப்பதற்காகவுமே வல்லாதிக்க அரசுகள் முனைப்புக்காட்டி வருகின்றன. அந்த வர்த்தக போட்டியில் பிரந்தியா அரசியல் விடையங்களில் தமது செல்வாக்கை அதிகரித்து அதனூடாக வர்த்தக சந்தையை கட்டுப்பாட்டில் வைத்திருப்பதற்கான நடவடிக்கைகளில் தான் அனைத்து வல்லரசு நாடுகளும் ஈடுபட்டு வருகின்றன.


 தெற்காசியாவின் நுகர்வோர் சந்தையின் பெரும்பகுதியை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் அமெரிக்காவிற்கு சீனாவின் அதிகரித்துவரும் வர்த்தகத்தை கட்டுப்படுத்த வேண்டிய நிலமை ஏற்பட்டுள்ளது. ஆதனால் தெற்காசிய அரசியலில் குழப்ப நிலைகளை உருவாக்கி அதனூடு தனது செல்வாக்கை செலுத்த வேண்டிய தேவையும் அதற்கிருக்கிறது. இந்தியாவை பொறுத்தவரை நேரடியாக அமெரிக்காவிற்கெதிராக களத்தில் இறங்க முடியாதெனிலும் பிராந்திய அரசியல் நிலையை கட்டுப்பாட்டடில் தான தான்; வைத்திருக்க வேண்டும் என்று விரும்புகிறது. பல வர்த்தக உடன்படிக்கைகளை செய்து தனது; பல சந்தைகளை அமெரிக்காவிற்கு தாரைவார்த்துள்ள இந்தியாவிற்கு பரிசாக பிராந்திய அரசியலில் நேரடித்தலையீடு செய்வதற்கு இந்தியாவிற்கு அமெரிக்கா வாய்ப்பளித்துள்ளது என்று கூட சொல்லக் சுடிய நிலை தான் காணப்படுகிறது.


தவிர தனது வர்த்தக செயற்பாடுகளுகளின் பாதுகாப்பிற்காக அமெரிக்கா தெற்காசியா முழுவதும் தனது படையினரை பரப்பி வைத்துள்ளது. இலங்கையை பொறுத்த வரையில் அமெரிக்காவிற்கு இந்துமா சமுத்திரத்தில் தனது பாதுகாப்பு அணியினருக்கான தளம் அல்லது ஓய்வெடுக்க கூடிய தளம் அமைப்பதற்கு இன்றியமையாத ஒன்றாக காணப்படுகிறது. இந்த நிலையில் தான் ஈழத்து அரசியல் நிலையை சாதகமாக பயன்படுத்தி தனது தலையீடுகளை விஸ்தரித்துள்ளது அமெரிக்கா.


அதே போல சீனாவினதும்; வர்த்தக மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு இலங்கை இன்றியமையாத ஒன்றாக காணப்படுகிறது. இப்படி பலதரப்பட்ட வல்லாதிக்கங்கள் மையம் கொண்டிருக்கும் நிலையில் தான் எமது உரிமைப்பிரச்சினைகளும் கையாளப்படுகின்றன.


ஈழத்தமிழர் பிரச்சினையை பொறுத்தவரையில் ஆரம்பம் தொடக்கமே இந்தியா நேரடியாக தலையீடு செய்து வந்துள்ளது. போராளிக் குழுக்களுக்கு பயிற்சி அளித்தது மட்டுமல்லாது உரிமைப்பிரச்சினை தொர்பில் இலங்கை அரசை நேரடியாக கண்டித்தும் உள்ளது. இந்த நிலையில் போராளிக்குழுக்களின் மையமாக தமிழநாடு திகழ்ந்து வந்துள்ளது. காலப்போக்கில் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு மட்டுமே சாதகமான தன்மை தமிழ் நாட்டு அரசியலில் புகுந்து கொண்டது. இது நாட்டின் ஸ்திரத்தன்மைக்கு பாதிப்பை ஏற்படுத்துமோ என்று அச்சம் கொண்ட இந்திய அரசு தமிழீழ விடுதலை;புலிகள் பற்றிய நற்பெரை தமிழ் நாட்டடில் இருந்து இல்லாது செய்வதற்கு நடவடிக்கைகளை எடுத்தது அதன் பிற்பாடுதான் விடுதலைப்புலிகளுக்கெதிரான சம்பவங்கள் சிலவற்றை தமிழ் நாட்டினூடாக செய்து முடித்தது இந்திய அரசு.


சில காலம் விடுதலைப்புலிகளுக்கு ஆதரவான வெளிப்படை போக்கு இல்லாதிருந்த தமிழ் நாட்டில் மீண்டும் விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக குரல்கள் எழத் தொடங்கின. அதை அடக்குவதற்கு காங்கிரஸ் அரசு பாவித்த மிகப்பெரிய ஆயுதம் தான் “கருணாநிதியின் அரசு”. குடும்ப அரசியலிலும் வியாபார நோக்கத்திலும் அதிக நாட்டம் காணப்பட்டவராக இருந்த கருணாநிதியை சாதகமாக பயன்படுத்திய இந்திய மத்திய அரசு அவரை சிறிலங்கா அரசிற்;கு நண்பராக அறிமுகப்படுத்தியதோடு அவருக்கு தனிப்பட்ட வியாபார ஒப்பந்தங்களையும் செய்வதற்கு ஊக்குவித்தது. ஈழத்தமிழர் விடையத்தில் அக்கறை உள்ளவர் போல் காட்டிக்கொண்டு ஈழத்தமிழருக்கான அனைத்து போராட்டங்களையும் தமிழகத்தில் நசுக்கிய கருணாநிதி சிறிலங்காவுடனான தனது நெருக்கத்தை அதிகரித்தார். இந்த நிலையில் தான் தமிழ் நாட்டில் எந்த கிளர்ச்சிகளுமின்றி விடுதலைப்புலிகளின் ஆயுத போராட்டத்தை முறியடித்ததோடு பலலட்சம் தமிழ் மக்களை கொன்று குவித்து போரை நிறுத்திக் கொண்டது இந்திய அரசும் சிறிலங்கா அரசும்.


போர்ச் செல்வாக்குடன் தனது குடும்ப அரசியலை நிலை நாட்டுவதற்கு ராஜபக்ஷ போர் முடிந்த கையோடு தீவிரமாக இறங்கினார். ஆடிப்படையில் ராஜபக்ஷ சீன ஆதரவுப்போக்கு கொண்டவர் என்பதால் இலங்கையில் அவரின் தனிப்பட்ட அரசியல் செல்வாக்கை விஸ்தரிக்க முழு ஆதரவு இந்தியாவைவிட சீனா போன்ற நாடுகளிடம் இருந்து கிடைக்க ராஜபக்ஷ சிறிலங்காவின் பெரும் வர்த்தக பகுதிகளை சீனாவிற்கு குத்தகைக்கு குடுத்ததுடன் சீனாவின் படைத்தளத்தை அமைப்பதற்காபன மறைமுக வேலைத்திட்டங்களிலும் இறங்கினார் ராஜபக்ஷ. இது இந்தியாவிற்கும் அதன் நட்பு நாடான அமெரிக்காவிற்கும் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில் தான் ராஜபக்ஷவை அகற்ற வேண்டும் அல்லது அடக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டிற்கு தள்ளப்படுகின்றன அமெரிக்காவும் இந்தியாவும்.


இந்த இறுக்கமான காலப்பகுதியில் தான் தமிழ்நாட்டு தேர்தல் மிக முக்கியம் வாய்ந்த ஒன்றாக கருதப்பட்டது. ஈழத்தமிழர் பிரச்சினை இந்த தேர்தலில் மிகத் தீவிரமாக்ப்ட்டது. தமிழர் போராட்டங்களை நசுக்கிய காங்கிரஸையும் கருணாநிதி அரசியலையும் இல்லாது செய்வதற்காக பிரச்சாரங்கள் வெளிப்படையாகவே பலதரப்பட்டோராலும் செய்யப்ட்டன. முடிவு ஈழத்தமிருக்கு துரோகமிழைத்த இரண்டு கட்சிகளும் தமிழக ஆட்சியில் இருந்து தூக்கி வீசப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஈழத்தமிழருக்கான  குரல்கள் தமிழக அரசிடம் இருந்து வருமானால் அதுவே “தனியரசு” பற்றிய தேவையை வலியுறுத்துமேயானால் இந்திய மத்திய அரசு அதை புறக்கணிக்க முடியாத நிலைக்கும் இலங்கை அரசை வற்புறுத்த வேண்டிய நிலைக்கும் தள்ளப்படும்.


ஆனால் தற்போது ஆட்சிக்கு ஏறியுள்ள தமிழக அரசு தமிழக மக்களின் உணர்வை மதிக்காது இந்திய மத்திய அரசின் நிகழ்சி நிரலில் செயற்படுமேயானால் ஈழத்தமிழர் விடையத்தில் மாற்றம் ஏற்படப்போதில்லை. இந்தியஇ அமெரிக்க ராஜதந்திரம் ராஜபக்ஷவை அரசியலில் இருந்து தூக்கினாலும் தமிழக சட்டமன்றத்தில் ஈழத்தமிழருக்கான “தனி அரசு” கோரிக்கை நிறைவேற்றப்ட்டால்தான் அது ஈழத்தமிழர் விடையத்தில் செல்வாக்கு செலுத்தும். இந்தியாவின் உடன்பாடின்றி ஈழத்தமிழர் கோரிக்கையை மேற்குலகம் எவ்வளவு நடைமுறைப்படுத்த ஒத்துழைக்கும் என்பது கேள்விக்குறியே. இந்தியாவின் நிலைப்பாடு மாறுவதற்கு தமிழக அரசின் அரசியலிலும் மாற்றம் ஏற்பட வேண்டும்.


சர்வதேச அரசியலில் எமக்கு சாதகமான நிலையை உருவாக்க வேண்டும். அதனூடு தமிழக அரசிடமும் எமது கோரிக்கைக்கான சாதகமான நிலைப்பாட்டை ஏற்படுத்த முயற்சிக்க வேண்டும். எமது உரிமைப்பிரச்சினையில் பலதரப்பட்ட வல்லாதிக்க சக்திகள் பல்வேறு தேவைகளுக்கு மையம் கொண்டிருப்பதால் மிக அவதானமாக எமது ராஜதந்திர நகர்வுகளை செய்து எமது இலக்கை அடைய வேண்டிய கட்டாம் இருக்கிறது.


பலதரப்பட்ட ராஜதந்திரிகளோடும் எமக்கான உரிமைகளின் தேவைகள் பற்றியும் உரிமைகளை பெற்றுக் கொள்வது பற்றியும் எல்லோரும் பேசவேண்டும். எமது அபிலாசை குறித்த பிராந்திய வல்லாதிக்கங்களின் சந்தேகங்களை இல்லாது செய்து எமது விடுதலையை உறுதி செய்ய அனைவரும் பாடுபடவேண்டும்.
ஆதி
8-6-11

Sunday, June 19, 2011

பாதைகளை உருவாக்குவோம்


இன்று நாம் வித்தியாசமான அரசியல் சூழலில் இருக்கிறோம். பலவிதமான உலக அரசியல் மாற்றங்களுக்கு நடுவே எமது உரிமைப் பிரச்சினையை நகர்த்தியிருக்கிறோம்.இன்று தமிழர்களுக்கான இராணுவ தலமையோ குறிப்பிடத்தக்க அரசியல் தலமையோ இன்றி உலக அரங்கில் உரிமைப்பிரச்சினையை பேச வேண்டிய கட்டாய அரசியல் நிலமைக்கு தமிழர்களாகிய நாம் தள்ளப்ட்டிருக்கிறோம் என்பதை அனைவரும் தெளிவாக விளங்கிக் கொள்ள வேண்டும்.

இனத்தின் தேசிய உரிமைப்பிரச்சினையை உலக அரங்கில் எமக்கு சாகமாக பல வழிகளிலும் நகர்த்த வேண்டிய கட்டாயமும் நகர்த்தப்பட்டுள்ள பல விடையங்களை இன்னமும் வீரியமாக கொண்டு செல்ல வேண்டிய தேவையும் ஒவ்வொரு தமிழனுக்கும் உள்ளது என்பதை நாங்கள் புரிந்து கொள்ள வேண்டும். ஈழத்தில் தமிழர்களுக்கான விடுதலைப்போராட்டம் ஏன் ஆரம்பித்தது என்ற தார்ப்பரியத்தை ஒவ்வொருவரும் விளங்கிக் கொள்ள வேண்டும். அகிம்சைப் போராட்டங்கள் ஆயுதப்போராட்டமாக உருவெடுத்து இன்று முற்றுமுழுதான அரசியல் ராஜதந்திர நகர்வுகளுக்கு பரிணமித்திருக்கிறது.

அகிம்சை போராட்டங்கள் தொடக்கம் ஆயுதப்போராட்ட முடிவு வரைக்கும் வெளிப்படையான தலமைகளை நாங்கள் கொண்டிருந்ததும் இன்றைய அரசியல் ராஜதந்திர நகர்வுகளுக்கு வெளிப்படையான பொதுவான தலமையின்றி முற்று முழுதாக மக்கள் மயப்படுத்தப்பட்ட வேலைத்திட்டமாக மாறியுள்ளதை தமிழர்கள் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும். இன்றை நிலையில் சர்வதேச பார்வைகளை தமிழர் உரிமைப்பிரச்சினை மேல் தெளிந்த நிலையில் குவிக்க ஒட்டு மொத்த தமிழினமும் ஒன்றுபடவேண்டிய கட்டாயம் இப்பொழுது உருவாகியிருக்கிறது. உரிமைப்பிரச்சினைகளைஇ எமது தேவைகளை சர்வதேச மயப்படுத்துதல் என்பது புலம்பெயர் தமிழர்களின் கையில் தான் பெரிதும் தங்கியிருக்கிறது.

1976ம் ஆண்டு விடுதலைப்புலிகளின் அடிப்படைக் கொள்கையாகிய “தமிழீழத்தனியரசு”  என்ற கொள்கையை வலியுறித்தி வட்டுக்கோட்டையில் நிகழ்த்தப்ட்ட தீர்மானத்திற்கு உலகெங்கும் நடாத்தப்ட்ட வாக்கெடுப்பில் 90 வீதத்திற்கும் அதிகமானோர் ஆதரவு தெரிவித்து தமிழ் மக்களின் அபிலாசையை உலகிற்கு வெளிப்படுத்தினர் என்பது மட்டுமல்லாது தமிழ் மக்களின் நிலைப்பாட்டை தெளிவாக சிறிலங்கா அரசிற்கும் உலகிற்கும் வெளிப்படுத்தியிருந்தனர். இதன் அடிப்படையில் தான் தமிழ் மக்களின் சிறிலங்கா அரசுடனான ஆயுதப்போராட்டமும் சர்வதேச முன்னிலையில் நடைபெற்ற பேச்சுவாரத்தைகளும் நடைபெற்றன. அதாவது ஒட்டுமொத்த தமிழ் மக்களின் அபிலாசைகளை அடைவதற்கு போராடிய வழிகள் பலவகைப்பட்டாலும் குறிக்கோள் இன்றுவரை ஒன்றாகதான் இருந்து வந்துள்ளது.

அகிம்சை மற்றும் ஆயுதப்போராட்ட காலப்பகுதிகளில் கொள்கைவேறுபாடுகள் மற்றும் ஆயுதபோராட்ட எதிர்ப்பு போக்கு காரணங்களால் தமிழ் மக்களில் சில பிரிவினர் சிறிலங்கா அரசுடன் சேர்ந்தியங்கிய நிலைப்பாடும் அவர்களால் தமிழ் மக்களின் போராட்டங்களிற்கு முட்டுக்கட்டை ஏற்படும் சந்தப்பங்களும் பெருமளவில் உருவாகியிருந்தது. ஆனால் இன்றய நிலை என்பது முற்றிலும் மாறுபட்ட அரசில் சூழ்நிலை. இராணுவ கட்டமைப்போ அல்லது அமைப்பு ரீதியான அரசில் தலமையோ இன்றி ஈழத்தில் நேரடியாக எமது அபிலாசைகளை சிறிலங்கா அரசிற்கு வெளிப்படுத்தும் சூழ்நிலையும் சர்வதேசத்திற்கு நேரடியாக எமது பிரச்சினைகளை வெளிப்படுத்தும் நிலையும் உருவாகியுள்ளது.

ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்களை பலி கொடுத்து, உலகிலேயே நடந்தேறாத பல வகையிலான அத்துமீறல்களையும் அராஜகங்களையும் சந்தித்து, இராணுவ தலமைகளையும் இழந்து இக்கட்ட நிலையில் இன்று தமிழினம் இருக்கிறது. இந்த நிலையிலே தமிழ் மக்கள் மிக நிதானமாக சிந்தித்து செயல்ப்பட வேண்டிய கட்டாம் இருக்கிறது. எமது அரசியல் இலக்கை அடைவதற்கு புதிய பாதைகளை உருவாக்கி ஒருமித்த இலக்கிற்காக பயணிக்க வேண்டிய மிக முக்கியமான சந்தர்ப்பத்தில் அனைவரும் இருக்கிறோம்.
முந்தயை காலப்பகுதிகளில் நடந்த போராட்டங்களில் இருந்த கருத்துவேறுபாடுகள், வறட்டுக்கௌரவ நிலைப்பாடுகள் மற்றும் தேவைகள் என பல வழிகளில் தமிழ் மக்களின் விடுதலைப்பயணத்தில் இருந்து விலகி நின்றவர்களும் சிறிலங்கா அரசுடன் கைகோர்த்து நின்று இன்று தமிழ் மக்களின் மிகப்பெரிய அழிவிற்கு விரும்பியோ விரும்பாமலோ காரணமாகிவிட்ட தமிழர்களும் இன்று நிதானமாக சிந்திக்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது.

சுயநலக்கோட்பாடுகளுக்கப்பால் தமிழ் இனம் என்ற ஒற்றை மொழியில் பயணித்து ஒட்டுமொத்த இனத்தின் சுதந்திரத்திற்கும் உரிமைக்கும் குரல் கொடுக்கவேண்டிய காலத்தின் கட்டளை அனைவருக்கும் திணிக்கப்ட்டுள்ளது என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். சமகாலத்தில் அந்நிய அராஜகங்களால் எம் தமிழ் உறவுகள் படும் சொல்லணாத்துன்பங்களும் இன அழிப்பு நிகழ்ச்சி நிரலில் சிக்கி தவிக்கும் ஈழத்து உறவுகளையும் கருத்தில் கொண்டு வேறுபாடுகளுக்கப்பால் தமிழ் இனமாக சிந்திக்க வேண்டி கட்டாயம் அனைவருக்கும் ஏற்பட்டுள்ளது.

கட்சி ஆதரவாளர்கள் என்ற பெயரில் தமிழ் இனத்தின் தேசிய விடுதலையை எதிர்ப்பவர்களாயும், பிரதேசவாரிய பிரிவுபட்டு நிப்பவர்களும், சொந்த சொந்த தேவைகளுக்காய் தமிழ் தேசிய விடுதலைப் பணயத்திற்கு எதிராக முட்டுக்கட்டை போடுபவர்களும், இன்று சிந்திக்க வேண்டி நிர்ப்பந்தம் ஏற்பட்டிருக்கிறது. தமிழ் இன அழிப்பும், தமிழ் இனச்சிதைப்பும,இ தமிழ் இன விடுதலைப்பயணத்திற்கு முட்டுக்கட்டை போடுபவர்களின் எதிர்காலத்தையும் இருப்பையும் கூட இல்லாது செய்யும் என்ற உண்மையை விளங்கிக் கொள்ள வேண்டும்.

இனமே பெரும் அழிவுக்கு உட்பட்டு நிக்கும் இந்த நேரத்தில் தமிழ் மக்களுக்கிடையில் உள்ள கருத்துவேறுபாடுகள் மற்றும் காழ்ப்புணர்வுகளை கழைந்து ஒன்றுபட்ட இனமாக எமது இனத்தை கருவறுத்த சிறிலங்கா அரசை நீதிக்கு முன் நிறுத்த பாடுபட வேண்டும். சர்வதேச சட்டத்தின் வரையறைக்குட்பட்டு இனத்தின் தேசிய விடுதலைக்காய் பயணிக்க வேண்டும். சர்வதேச மனித உரிமை மற்றும் போர்க்குற்ற ஆய்வியலாளர்கள்இ ராஜதந்திரிகள் என பலதரப்பட்டோரையும் அணுகி எமது இனத்தின் மீது நடந்தேறிய இன அழிப்புக் குறித்தும் எமது இனத்திற்கு தேவையான விடுதலை குறித்தும் பேச வேண்டும். எமது ராஜதந்திர நகர்வுகளுக்கு நாங்களே பாதைகளை உருவாக்க வேண்டும். உலக ராஜதந்திரிளை அணுகி எமது பிரச்சினைகளை பேசுவதற்குரிய வெளியை நாங்களே கண்டுபிடிக்க வேண்டும். இது ஒவ்வொரு தமிழனின் கடமையும் கூட. சிறிலங்கா அரசுக்கெதிராய் தமிழ் மக்களின் நலனிற்காய் செய்யப்டும் அந்தனை விடையங்களையும் நாம் ஒருமித்த தமிழ் இனமாக ஆதரிக்க வேண்டும்.

சிறிலங்காவில் தமிழ் மக்களின் இருப்பை சிதைத்து சிங்களமயமாக்கும் அரசின் முகமூடி அரசியலை கிழித்தெறிய வேண்டும். தமிழ் மக்களின் கலாச்சார மற்றும் கல்வி பலத்தை ஆட்டம் காண வைப்பதோடு தமிழ் மக்களை அரசியல் அடிமைகளாக்க தனது அரசியலை நகர்த்திக் கொண்டிருக்கும் சிறிலங்கா அரசின் போக்கை தெளிவாக விளங்கி ஒன்றுபட்ட இனமாக விடுதலைக்குபாடுபடுவதுதான் இன்று தமிழ் மக்கள் அனைவருக்கும் உள்ள அவசரமான தேவை.

ஆதி
3-6-11

Thursday, June 16, 2011

ஈழத்தில் தற்கொலைகளாகும் படுகொலைகள்


இன அழிப்பு நடந்தேறி முடிந்த ஈழத்தில் குறிப்பாக தமிழர் தாயகப்பகுதிகளில் நாளுக்குநாள் தற்கொலைச்சம்பவங்கள் அதிகரித்துக் கொண்டிருக்கின்றன. அதற்கான பின்னணி என்ன, காரணங்கள் என்னவாயிருக்க முடியும் என்பது பற்றியதான ஒரு ஆய்வுதான் இந்த கட்டுரை.

பலதரப்பட்ட நாடுகளின் உதவியுடன் போர்விதிமுறைகளுக்கப்பாற்பட்டு இரண்டு நாடுகள் சண்டையிடும் போது பாவிக்கக் கூடிய அனைத்து ஆயுதங்களை பாவித்து மனத உரிமைகளை மீறி தமிழினத்தின் மீது மாபெரும் இனப்படுகொலையை கனகச்சிதமாக முடித்துவிட்டு எந்த சலனமும் இன்றி இலங்கை அரசு உலக அரங்கில் உலா வருகிறது.

மனிதாபிமான போர் என்று அட்டைப்படம் கட்டிய இனப்படுகொலைiயின் மற்றய பக்கங்களை புரட்டிப்பார்ப்பதற்கும் தட்டிக்கேட்பதற்கும் உலக அரங்கில் இருந்து வலுவான குரல்கள் எதுவுமே இன்னமும் எழவில்லை. போர்தின்ற மக்களின் நலன் குறித்து அக்கறை கொள்ள எந்த நாடுகளுமே சிறிலங்கா அரசை அதட்டிக்கேட்கவில்லை. வேரோடு பிடுங்கி எறிப்பட்ட மக்களாய் அவர்கள் வாழ்வோடு போராடிக் கொண்டிருப்பது குறித்து யாருக்கும் அக்கறையில்லை. உரிமைகளை இழந்தும் எல்லா உடமைகளை இழந்தும் உறவுகளை இழந்தும் வாழ்வின் கிழிந்து போன பக்கங்களுடன் இந்த மக்கள் நாட்களை நகர்த்திக் கொண்டிருக்கிறார்கள்.

சங்கீதங்கள் மரத்துப்போய் மௌனம் நீண்டுகிடக்கும் வெளியில் இவர்களின் மனங்களும் சிந்தனைகளும் வெறுமையாய் கிடக்கிறது. எல்லாம் இழந்து விட்ட இவர்களின் மனங்களை செழிப்படைய செய்து வாழ்வியல் குறித்து சிந்திக்க வைக்க யாருமே இதுவரை களத்திற்கு வரவில்லை. உளவியல் ரீதியில் நொந்துபோய் கிடக்கும் இந்த மக்களை உளமேற்ற சிறிலங்கா அரசு ஒருபோதும் நினைக்காது. ஆவர்களின் உள ரீதியான பலத்தை அதிகரிக்க செய்து வாழ்வின் வரப்போகும் நாட்களை நம்பிக்கை தரக்கூடியவையாக அவர்களுக்கு செய்து கொடுக்க வெளிநாட்டு அமைப்புகளை இந்த நிலத்திற்கு அனுமதிக்கும் படி சர்வதேசம் சிறிலங்கா அரசை அதட்டவில்லை.

ஏன் உளவியல் பலம் அவசியம்?
ஏல்லா துயரத்தையும் நேரில் கண்டமக்கள்.. எல்லா உடமைகளையும் இழந்த மக்கள் உறவுகள் பலதை இழந்த மக்கள் வாழ்வது குறித்த வெறுப்பில் இருக்கிறார்கள். குழந்தைகள் எதையுமே அச்சத்துடன் பார்க்கிறார்கள். இரவுகளில் திடுக்கிட்டு கதறுகிறார்கள். போரின் சத்தமும் அச்சமும் இன்னமும் இவர்களின் பொழுதுகளை தின்றபடிதான் உள்ளது. ஒரு இனத்தின் விடிவிற்காய் இறுதிவரை ஆயுதமெடுத்து போராடிய மக்கள் இவர்கள். இறுதிவரை அத்தனை வலிகளையும் போரின் ரணங்களையும் அனுபவித்த மக்கள் இவர்கள். அந்த வலியும் ரணமும் மரணத்தின் வாயில்வரை சென்றுவந்த தருணங்களும் இவர்களை இன்னமும் வதைத்துக் கொண்டே இருக்கிறது.

சிந்தனைகள் இறந்தகாலத்தின் மீதும் நிகழ்காலத்தின் மீதும் அடிக்கடி அலைபாய்ந்து நிமிடங்களை கொன்று கொண்டிருக்கும் இந்த நேரத்தில் அவர்களின் சிந்தனைகளை எந்தவழியிலும் திசை திருப்பிவிடக்கூடிய அபாயம் இருக்கிறது. வாழமுடியும் என்ற நம்பிக்கையையும் வாழ்வதில் இனி எதுவுமே இல்லை என்ற வெறுப்பையும் இலகுவாக குழந்தைகளுக்கு கூட புகுத்திவிடக்கூடிய அபாயகரமான தருணம் இது. இந்த தருணத்தில் தான் நம்பிக்கை தரக்கூடிய உளவியல் ரீதியிலான பலத்தை இவர்களுக்கு கொடுக்க வேண்டும்.

இந்த உளவியல் பின்னணிகளில் தான் வாழ்வியல் மீதான் வெறுப்புகளை உருவாக்கி இளம் தலைமுறையினருக்கு தற்கொலை மீதான தூண்டுதலை செய்து கொண்டிருக்கிறான் எதிரி. இது வரை எத்தனையோ தற்கொலைகள் நடந்துவிட்ட பின்னும் அதன் பின்னணி அல்லது தற்கொலை தூண்டுதலுக்கான காரணங்கள் குறித்து ஆய்வு செய்து அதற்கு தீர்வுகாணும் வழிமுறைளை சிறிலங்கா அரசு மேற்கொள்ளாதிருப்பதற்கான காரணம் என்ன? குறிப்பிட்ட ஒரு சில மாதங்களுக்குள் 30ற்கும் மேற்பட்ட சம்பவங்கள் தற்கொலைச்சம்பவங்கள் என வைத்திய அறிக்கைகள் தெரிவித்தும் அதுகுறிதது எந்த அக்கறையும் எடுக்கப்படாமைக்கான காரணம் என்ன? குறிப்பிட்ட ஒரு பிரதேச எல்லைகளுக்குள் மாத்திரம் அல்லது குறிப்பிட்ட ஒரு இனக்குழுமத்திடையில் மாத்திரம் குறுகிய காலப்பகுதிகளில் இதத்தனை தற்கொலைச்சம்பவங்கள் நடைபெற்றிருக்குமேயானால் எந்தவொரு நாட்டின் அரசாங்கமும் இத்தனை அசமந்தப்போக்கை கடைப்பிடித்திருக்காது. ஆனால் சிறிலங்கா அரசு அது குறித்து அக்கறையிற்று இருப்பதன் பின்னணி என்னவாயிருக்க முடியும் என்பதை நீங்களாகவே ஊகிக்க முடியும்.


இனப்படுகொலைப்போர் முடிவுற்று ஏ9 பாதை திறந்த கையோடு நடந்தேறிய முதலாவது சம்பவம் மருத்துவமாது தர்ஷிகாவினுடையது. தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்ட சம்பவத்தை உடனடியாகவே அது தற்கொலை என அறிவித்தது யாழ் பொலிஸ் மற்றும் இராணுவம். ஆனால் அவரின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கொண்ட சந்தேகத்தால் அரசுக்கெதிராக போர்க்கொடி தூக்கியதால் பிரேத பரிசோதை அறிக்கையின் உண்மைத் தன்மையை கட்டாயம் வெளியிட வேண்டிய நிலை ஏற்பட்டது. ஆதனடிப்படையில் அது ஒரு படுகொலை என்றே நிரூபணமானது. குற்றபழிப்பிற்கு பின் படுகொலை செய்யப்ட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தை வலுப்படுத்தியது. ஆதனடிப்படையில் சிங்கள வைத்திய அதிகாரி ஒருவர் கைது செய்யப்ட்டு நீதிமன்றில் ஆயர்படுத்தப்பட்டார். ஆனால் அவரை சிறிலங்கா ராணுவமும் அரசும் காப்பாற்றி அனுராதபுரம் சிறைச்சாலைக்கு மாற்றுவதாக கூறி பிணையில் விடுதலை செய்தது.

இந்தச் சம்பவம் தொடக்கம் இன்று இளம் பாடசாலை ஆசிரியைகள் தற்கொலை என்று வரும் செய்திகள் வரைக்கும் இதுவரை எந்த முழுமையான வைத்திய அறிக்கைகளோ காரணங்களோ வெளியிட்படவில்லை. இதன் பின்னணியில் கொலைகளும் தற்கொலைத்தூண்டுதல்களும் இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. தற்கொலைக்கு தூண்டுதலும் அதை ஊக்குவித்தலும் கொலை என்றே கருத்தப்படும். இதுவரை தற்கொலை என்று வந்த அத்தனை பெண்களின் உடல்களிலும் காயங்களும் வன்முறை அடையாளங்களும் இருந்தான் இருக்கின்றன. ஆனால் அதுகுறித்த விசாரணைகளோ விசாரணை அறிக்கைகளோ இதுவரை சமர்ப்பிக்கப்பட்வில்லை. வெறுமனே தற்கொலை என்று சொல்லி கவனமற்று விடமுடியாது. துற்கொலைக்கான காரணங்களை சமுகத்திற்கு சொல்லவேண்டிய கட்டாயம் நீதித்துறைக்கு இருக்கிறது.

இப்படி தமிழ் இளம் சமுதாயத்தின் மீது கொலைகளை செய்து தற்கொலைகள் என பெயர்சூட்டி தூக்குகளில் தொங்கவிடுவதும் உண்மையாகவே தற்கொலைகளாக இருப்பவற்றின் காரணங்களை மறைப்பதும் ஒருவிதமான இன அழிப்புத்தான். உளவியல் ரீதியிலான இன அழிப்பு இது. இது குறித்து தமிழ் மக்கள் விழிப்புடன் செயற்பட வேண்டும்.


அரச பயங்கரவாதத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் சிறிலங்கா நீதித்துறையிடம் நியாயத்தை எதிர்பார்ப்பதென்பது இயலாத ஒன்றாக மாறியுள்ளது. புhலியல் ரீதியாக வன்முறைகளுக்கு உள்ளாகும் தமிழ் உறவுகள் நீதிமன்றங்களை நம்பி நீதிகேட்டுச் செல்லமுடியாத நிலை தோன்றியுள்ளது. புhலியல் வன்முறைக்குட்படுத்தியரை நீதிமன்றத்தில் அடையாளம் காட்டினாலும் அவர்கள் இராணுவ மற்றும் அரசியல் செல்வாக்குடன் வெளியில் வந்துவிடுகிறார்கள். பின் வழக்கை வாபஸ்வாங்குமாறும் அல்லது அதுகுறித்து இனிமேல் அக்கறை செலுத்தாது இருக்குமாறும் மிரட்டப்படுகிறார்கள். அதன் உச்சக்கட்டமாக பாதிக்கப்ட்டவர்கள் தற்கொலை செய்து கொள்கிறார்கள். இப்படியான சம்பவங்கள் ஊடகங்களுக்கு தெரியாமல் இருந்தாலும் இடம்பெயர்ந்து மீளக்குடியமர்ந்துள்ள மக்களிடையில் காணப்படுகிறது. இப்படியான சம்பவங்கள் குறித்து ஊடகங்களுடனோ அல்லது வெளி அமைப்புகளுடனோ பேச அஞ்சுகிறர்கள் இந்த மக்கள்.

இந்த மக்களுக்கு உளவியல் ரீதியிலான பலம் கொடுக்க வேண்டும். சர்வதேச மனித உரிமை அமைப்புகள் மற்றும் உளவியல் அமைப்புகளை நாடி தமிழர் தாயகத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் இந்த சம்பவங்கள் குறித்து முறைப்பாடுகளை செய்யவேண்டும். ஆலோசனைகளை பெறவேண்டும். சிறிலங்கா அரசாங்கத்தின் இந்த வன்மத்தை நேரடியாக கண்காணித்து தமிழர் தாயகப்பகுதிகளில் உளவியல் பலத்தை அதிகரிக்க சர்வதேசத்தை உதவுமாறு வற்புறுத்த வேண்டும். இது குறித்தும் புலம்பெயர் தமிழ் மக்கள் அவசரமாக செயற்படுவது இன்றியமையாதது.

ஆதி
10-06-11

Thursday, June 9, 2011

மெளனத்தின் போராட்டம்



மனிதம் தீர்ந்துவிட்ட
இந்த மண்ணில் இருந்து
இன்னமும் இன்னமும்
எப்படித்தான்
நாங்கள் கத்துவது..
எனது குரல்வளையை
நசுக்கி
பிய்த்தெறிய
இந்த அரச இயந்திரத்தின்
கரங்கள் மிகப்போதுமானவையே!!
வீட்டுவாசலில்
துப்பாக்கியை சொருவியபடி
அங்கும் இங்குமாய்
அலைந்து திரியும்
இந்த சிப்பாயின்
துப்பாக்கிச் சன்னம்
என்னில் பாய்ந்துவிட
சில நொடிகளுக்கு மேல் ஆகாது...


புழுதி மாறாத
என் வீதிகளில்
புதிதாய்
ராணுவத்தை தவிர
எதையுமே தருவிக்கவில்லை
இந்த சிங்கள அரசு...
பலவந்தமாய் திணிக்கப்படும்
பெரும்பான்மை மொழியும்
அதன் பால் கொண்ட
சமய நெறியும்
என்னை மீண்டும் மீண்டும்
சுதந்திரத்திற்கான போராட்டம்
பற்றியதாய்
சிந்திக்கத் தூண்டுகிறது..
ஆனால்
வீட்டுவாசலில்
துப்பாக்கியை சொருவியபடி
அங்கும் இங்குமாய்
அலைந்து திரியும்
இந்த சிப்பாயின்
துப்பாக்கிச் சன்னம்
என்னில் பாய்ந்துவிட
சில நொடிகளுக்கு மேல் ஆகாது...

ஆதி
6-6-2011

Blog template by simplyfabulousbloggertemplates.com

Back to TOP