Powered by Blogger.

Thursday, June 12, 2014

பிராந்திய அரசியலை தவறவிடுகிறோமா!!

தமிழீழ விடுதலைப்போராட்டமானது என்றுமில்லாத அளவிற்கு முற்று முழுதான இராஜதந்திர வலைப்பின்னலுக்குள் சிக்குண்டுகிடக்கிறது.

தமிழீழ மக்களின் அரசியலானது இரண்டு எதிர்மறையான தளங்களில் நிகழ்ந்து கொண்டிருக்கிறது.
1) ஈழத்து அரசியல் - ஆசிய அரசியல் தளம்
2) புலம்பெயர் தமிழர் அரசியல் - மேற்கத்தைய அரசியல் தளம்

இந்த இரண்டு தளங்களிலும் தத்தமது பிராந்திய ஆதிக்க சக்திகளாக வல்லரசுகள் காணப்படுகின்றன.

ஆசிய அரசியல் தளத்தில் மாற்றத்தினை மேற்கத்தைய அரசியல் பின்புலங்களால் ஏற்படுத்தமுடியுமா என்பது சட்ட ரீதியாகவும் ராஜதந்திர ரீதியாகவும் ஆரயப்பட வேண்டிய முக்கியமான கருப்பொருள்.

2009 இனப்படுகொலையோடு தமிழீழ போராட்டத்தை பேரினவாத சிங்கள அரசும் வல்லாதிக்கங்களும் தமிழீழத்தில் இல்லாது செய்து 5 வருடங்கள் கடந்துவிட்ட நிலையில் தமிழீழ விடுதலை சக்திகள் எவ்வகையான ஆய்வுகளை மேற்கொண்டிருக்கின்றன என்பது கேள்விக்குட்படுத்த வேண்டிய விடையம்.

விடுதலைப்புலிகள் ஆயுதப்போராட்டத்தை மண்ணில் நடாத்திக்கொண்டிருந்தாலும் பிராந்திய அரசியல் மாற்றங்களை மிக அவதானமாக அவதானித்து ஆய்வுகளை மேற்கொண்டுவந்திருந்தமை தமிழீழ தேசியத்தலைவர் மற்றும் தளபதிகள் பொறுப்பாளர்களின் உரைகளில் இருந்து அவதானித்துக் கொள்ளலாம்.

விடுதலைப்புலிகள் மண்ணில் செயற்பாட்டுத் தளத்தில் இருந்த வேளையில் தமிழீழ விடுதலைக்கனா பிராந்திய ராஜதந்திரப் பலத்தை வல்லரசுகள் பல கோணங்களில் முடக்கியிருந்தாலும் மேற்கத்தைய அரசியல் தளத்தில் தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் உள்ளிட்ட பலர் வலுவான ராஜதந்திர தொடர்புகளை வைத்திருந்தனர் என்பது மறுக்கப்பட முடியாத ஒன்று.


தமிழீழத்தில் இருந்து புலம்பெயர்ந்தவர்கள் மேற்குலக நாடுகளை இலக்கு வைத்தே நகர்ந்திருக்கிறார்கள். அகதி அந்தஸ்தை வழங்க கூடிய நாடுகள் மேற்குலகில் இருப்பது மற்றும் பொருளாதார ரீதியில் வளர்ச்சியடைந்த நாடுகள் அதிகம் மேற்குலகில் காணப்படுவதே அதற்கான காரணம். இதனையொற்றியே புலம்பெயர் தமிழர் அரசியல் கட்டுமானங்கள் விரிபுபடுத்தப்பட்டிருக்கின்றன. ஆனால் இந்த சக்தி ஆசிய தளத்தில் எவ்வகையான தாக்கங்களை அல்லது ராஜதந்திர உறவுகளை வலுப்படுத்தும் என்பது கேள்விக்குறியே.

ராஜதந்திரம் என்பது வெறுமனே எமக்கு என்ன தேவை என்று சொல்வதன்று. எமக்கு தேவையானதை எப்படிப் பெற்றுக் கொள்ளலாம் என்று ஆராய வேண்டும், அதற்காக நாங்கள் இழக்க வேண்டிவருவதை ஆராய வேண்டும், அதற்காக நாங்கள் அடைமானம் வைக்க வேண்டியதை ஆராய வேண்டும். கடந்த 5 வருடங்களில் தமிழர் தரப்பில் இப்படிப்பட்ட ஆய்வுகள் மேற்கொள்ளபட்டதா என்பது சந்தேகமே.

பிராந்தியத்தை பொறுத்தவரையில் தமிழீழ நிலப்பரப்பில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் அரசியல் நீட்சியானது மட்டுப்படத்தப்பட்ட ஒன்று. தமது அபிலாசைகளை மக்கள் தேர்தலோடு மட்டுப்படுத்தவேண்டிய அடக்கு முறைக்குள் இருக்கிறார்கள். அடுத்த சக்தியாக தமிழகம் இருக்கிறது. தமிழகத்தை பொறுத்தவரை தங்களால் முடிந்த அளவு ஏன் உச்சக்கட்டமான போராட்டங்களை தொடர்ச்சியாக செய்கிறார்கள். ஆனால் இது தமிழீழ போராட்டத்தில் ராஜதந்திர ரீதியில் எமது இலக்கை நோக்கி எந்த அளவு தூரம் நகர்த்தியிருக்கிறது என்பதை தமிழீழ மக்கள் ஆய்வு செய்யவேண்டியது கட்டாயம்.

பிராந்திய வல்லரசுகள் ஏதாவது ஒன்றுடனாவது எமது நிலைப்பாட்டை, எமது விடுதலையின் தேவையை, புதிய நாடு உருவாகுவதில் உள்ள தாக்கங்கள் புதிதாக நாடு உருவாவதில் இருக்க கூடிய நன்மைகள் குறித்து பேசியிருக்கிறோமா!! என்பது குறித்து அக்கறை செலுத்துவது தமிழீழ விடுதலைப்போராட்ட அரசியல் தளத்தை விரிவுபடுத்தும் என்பதோடு நாம் எங்கே நிக்கிறோம் என்று எம்மை நாமே அளவீடு செய்யவும் உதவும்.

ஆசிய அரசியல் தளம் என்பது அரேபிய அரசியல் தளம் போல் அல்ல என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும்.

ஆதி
12-06-2014

























No comments:

Post a Comment

Blog template by simplyfabulousbloggertemplates.com

Back to TOP