Powered by Blogger.

Sunday, June 24, 2012

நாம்தமிழர் கட்சி ஆவணமும் ஈழத்தமிழர் போராட்டத்திற்கு போடப்பட்டிருக்கும் சுருக்கும்


முகநூல் மற்றும் இணைய தளங்களில் "நாம் தமிழர்" கட்சி ஆவணம் பற்றிய பல விமர்சனங்களும் ஆய்வுகளும் கருத்துரையாடல்களும் விதண்டாவாத வியாக்கியானங்களும் சமீப காலமாக நடைபெற்று வருகிறது.
 தமிழீழ போராட்ட வலிகளினது ஆழம் தெரியாமல் ஈழ ஆதரவு அல்லது நடுநிலை என்ற பெயரில் அல்பத்தனமான விமர்சனங்களை செய்துவரும் தமிழ்நாட்டை சேர்ந்த பலர் "நாம் தமிழர்" கட்சி குறித்தும் தமிழீழ மக்கள் ஏன் அவதானமாக இருக்க வேண்டும் என்ற காரணத்தை நியாயமான முறையில் வைக்காமல் வெறுமனே தமிழீழ கொடியில் இருக்கும் புலியை தமது கொடியில் பாவித்திருக்கிறார்கள், பெரியாரை குறை சொல்லி இருக்கிறார்கள், தமிழீழ கருத்துகளை தமது ஆவணத்தில் உள்ளடக்கி தமிழ் நாட்டு அதிகார அரசியல் நோக்கி நகருகிறார்கள் என்ற ஆதங்க வெளிப்பாடுகளை மட்டுமே சொல்லியிருக்கிறார்களே தவிர ஆவணம் எந்த விதத்தில் போராட்டத்தை நசுக்க போகிறது என்று பேசவில்லை.
 கருணா விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்து தப்பி ஓடி சிங்கள துணைராணுவ குழுவாக உருவெடுத்து "தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள்" என்ற கட்சியை ஆரம்பித்தது. அதன் கொடிக்கும் தமிழழீழ தேசிய கொடியில் இருக்கும் புலியையே பாவித்தது. அப்போது விடுதலைப்புலிகளின் தலமைச் செயலகம் அது பற்றி ஆட்சேபனை தெரிவிக்காது கணக்கில் எடுக்காமல் இருந்தது. காரணம் தமழீழ மக்கள் தெளிவான போராட்ட அரசியலில் இருக்கிறார்கள் என்பது தெரிந்த விடையம் அப்படியிருக்கையில் தேவையில்லாத விடையங்களிற்கு விளங்கங்கள் சொல்ல தேவையில்லை என்ற படியால்.

அப்படியிருக்கையில் "நாம் தமிழர்" கட்சிக் கொடியில் அதே புலியை பாவித்திருப்பது குறித்து நாங்கள் அலட்டிக் கொள்ள தேவையில்லை.
 விடுதலைப்புலிகளை தடை செய்திருக்கும் பல மேற்குலக நாடுகளில் இன்று தமிழீழ தேசிய கொடியையும் தமிழீழ தேசிய தலைவரையும் அணைத்தபடி வீதிகளில் மக்கள் போராட்டங்கள் செய்கிறார்கள். அதை அந்தந்த அரசாங்கங்கள் தடைசெய்யவில்லை காரணம் தமிழீழ தேசிய கொடியும் தமிழீழம தேசிய தலைவரும் தமிழர்களின் அடையாளம் என்பதை உலகம் ஏற்றுக் கொண்டு வருகிறது என்பதோடு தமிழீழம் தமிழர்களின் தாயகம் என்பதையும் ஏற்றுக் கொண்டு வருகிறது. அதை விரும்பியோ விரும்பாமலோ இந்திய வல்லரசும் ஏற்றுக் கொண்டே ஆக வேண்டிய கட்டாயத்திற்கு காலம் நெருக்கிக் கொண்டுவருகிறது. இப்படிப்பட்ட நிலையில் தமிழீழம் என்ற சொல்லோ மே..கு வே.பிரபாகரன் என்ற பெயரோ சட்டரீதியாக தடைசெய்யப்பட வேண்டிய ஒன்றாக இந்தியாவில் இல்லை என்ற நிலையும் உருவாகியிருக்கிறதென்றே சொல்லலாம்.
 இப்படிப்பட்ட நிலையில் "நாம் தமிழர்" கட்சி ஆவணம் எப்படி தமிழீழ போராட்டத்திற்கு சுருக்குப் போடுகிறது என்று எண்ணுவீர்கள்.
 ஆவணத்தின் 115ம் பக்கத்தில் மாவீரர் நாள் அன்று மாவீரத் தெய்வங்களின் கல்லறை மீது தமிழ் மக்கள் உறுதி எடுக்கும் பாடலின் உறுதி மொழிகளை "நாம் தமிழர்" கட்சி தனது உறுப்பினர்களுக்கான உறுதி மொழியாக அறிவித்திருக்கிறது.
தமிழ் மக்களின் (தமிழீழ விடுதலைப்போராட்டத்தில் தமிழகத்தை சேர்ந்த வீரர்களும் காவியமாகியிருக்கிறார்கள்) உணர்வுகளிற்கு மதிப்பளிக்காமல் தெய்வமாக மதித்துவரும் மாவீர்களின் கல்லறைமேல் குறிப்பிட்ட நாள் குறிப்பிட்ட மணித்துளியில் சத்தியம் செய்யும் ஒரு புனிதமான தருணத்தில் பாவிக்கப்படும் உறுதிமொழிக்கு மதிப்பளிக்காமல் அரசியல் உறுதிமொழியாக அதை பரிந்துரை செய்திருப்பது கீழ்த்தரமான செயல் என்பதற்கப்பால் இந்த உறுதி மொழியை தமது அரசியல் ஆவணத்தில் இணைத்து இந்தியாவில் மிகப்பெரிய சூழ்ச்சிச் சுருக்கை "நாம் தமிழர்" கட்சி போராட்டத்திற்கெதிராய் அரங்கேற்றியிருக்கிறதா என்ற அச்சம் இன்று தமிழீழ மக்களிடையில் பரவத் தொடங்கியிருக்கிறது.

இந்தியாவில் விடுதலைப்புலிகளை தொடர்ந்து தடைசெய்வதற்கு வைக்கோஅய்யாவையும் நெடுமாறன் அய்யாவையும் காரணம் காட்டி வந்த இந்திய அரசின் கபடத்தனத்தை சட்டரீதியாக வென்று விடுதலைப்புலிகள் மீதான தடையை நீக்குவதற்கான முழுவீச்சான செய்பாடுகளை இந்தியாவில் மேற்கொண்டுவருகிறார்கள். இப்படிப்பட்ட நிலையில் "நாம் தமிழர்" கட்சி, மாவீரத் தெய்வங்கள் மேல் செய்யும் சத்தியபிரமானத்தை தமது கட்சி ஆவணத்தில் இணைத்து தம்மை விடுதலைப்புலிகளின் செயற்பாட்டாளர்கள் போன்ற தோற்றப்பாட்டை உருவாக்கி அதன் ஊடாக விடுதலைப்புலிகளை தொடரந்து இந்தியாவில் தடை செய்து தமிழீழ போராட்த்தை சிதைப்பதற்கான நடவடிக்கையா என்ற அச்சம் எழுவதை தடுக்க முடியாது.

மாவீர்கள் மேல் ஒரு புனிதமான தருணத்தில் செய்யப்படும் சத்தியத்தை தமது அரசியல் கட்சி ஆவணத்தில் இணைத்து மக்களின் உணர்வுகளை காயப்படுத்தியது மட்டுமில்லாது இதன் பின்னணியில் இந்தியாவில் காலம்பூராகவும் விடுதலைப்புலிகளை தடைசெய்வதற்கான வேலையை நாசுக்காக "நாம் தமிழர்" கட்சி செய்து வருகிறதா என்ற அதிரச்சிகரமான சந்தேகமும் எழுகிறது.

"நாம் தமிழர்" கட்சி ஆவணத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் "தமிழக அரசியல்" பற்றிய கருத்துக்கள் குறித்து எங்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை. காரணம் அது பரந்துபட்ட பல விருட்சங்களை கொண்ட அரசியல். அதன் ஆழம் எமக்கு தெரியாது. அதனால் "கட்சி ஆவணத்தை" வைத்துக் கொண்டு அதன் அரசியல் போக்கு குறித்து விவாதிக்க கூடிய அரசியல் அறிவு "தமிழீழ மக்களுக்கு" குறைவென்றே சொல்லலாம். அதனால் அதுபற்றி நாங்கள் எதையும் பேச விரும்பவில்லை.

"நாம் தமிழர்" கட்சி ஆவணமெங்கும் தமிழீழ போராட்ட ஆதரவுக் கருத்துக்களும் தேசிய தலைவருக்கு கொடுத்திருக்கும் போற்றுதலுக்கும் நாங்கள் தலைவணங்குகிறோம்.

ஆனாலும் 107 ம் பக்கத்தில் தேசியத்தலைவருக்கு "பெரும்பாகரன்" என்று "அடைப்புக் குறிக்குள்" விளக்கம் சொல்லப்பட்டிருப்பது வன்மையாக கண்டிக்க வேண்டிய விடையம். காரணம் தேசிய விடுதலைப்போராட்ட வீரர்களின் பெயர்கள் அப்பெயரினூடே சொல்லப்பட வேண்டும். இந்த ஆவணத்தை வாசித்த தமிழ்நாட்டை சேர்ந்த யாராவது எதிர்காலத்தில் "மே..கு வே.பெரும்பாகரன்" என்று எழுதி குழப்பகரமான ஆவணங்களை உருவாக்கி வரலாற்று அழிப்பை மேற்கொள்ள கூடிய அபாயம் இருப்பதாகவே தெரிகிறது.பிரபாகரன் என்பதன் "அர்த்தம் இதுதான்" என்று எழுதுவது வேறு பிரபாகரன் என்ற பெருக்கு "அடைப்புக் குறிக்குள்" இன்னொரு பெயர் எழுதுவதன் அரத்தம் வேறு என்பதை "நாம் தமிழர்" கட்சி ஆவண உருவாக்கலில் ஈடுபட்டவர்களுக்கு நன்கு தெரிந்திருக்கும் என்று நம்புகிறோம்.

தமிழீழ போராட்டமும், விடுதலைப்புலிகள் அமைப்பும், தமிழ் மக்களை பொறுத்தவரை அவர்களின் மானம்,சொத்து,உயிர். அதனால் தான் இத்தனை தியாகங்களை செய்து வருகிறார்கள். தடைசெய்யப்பட்ட தேசங்கள் எங்கும் தமிழீழ வரைபடத்தையும், தமிழீழ தேசிய கொடியையும், தமிழீழ தேசியத் தலைவர் படத்தையும் தம்மோடு அணைத்தபடி போராடிக் கொண்டிருக்கிறார்கள். பொலிஸ் மற்றும் அந்தந்த நாடுகளின் அரசாங்க கட்டுப்பாடுகளுக்குள்ளும் இதை செய்து வருகிறார்கள். விடுதலைப்புலிகள் அமைப்பை சார்ந்தது போன்றதான கட்சிகளை உருவாக்காமல் அது மக்களின் உணர்வாக வெளிக்காட்டிக் கொண்டிருக்கிறார்கள். இந்த மக்களின் உணர்வுகளிற்கு மதிப்பளித்து எதிர்காலத்தில் விடுதலைப்புலிகள் மீதான தடை நீக்கப்பட்டு தமிழீழ தேசியம் அங்கிகரிக்கப்படும் என்ற நம்பிக்கையும் அதற்கான அறிகுறிகளும் தெரிகின்றன.

இப்படிப்பட்ட தருணத்தில் இந்தியாவிலும் அதை செய்வதற்கான வேலைகளை பல உணர்வாளர்கள் செய்துகொண்டிருக்கிறார்கள். இந்த வேளையில் "நாம் தமிழர்" கட்சி ஆவணத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் உறுதிமொழி இந்தியாவில் விடுதலைப்புலிகளை தொடர்ந்து தடைசெய்வதற்கான உத்தியாகவும் இருக்கலாம் என்ற அச்சம் எழுகிறது.

தமிழர்கள் எங்கெங்கு இருந்தாலும் மாவீரத்தெய்வங்களின் மேல் புனிதமான அந்த தருணத்தில் ஒட்டுமொத்த இனமாக உறுதியெடுக்கும் வாசகத்தை அரசியல் நோக்கத்திற்காக பாவித்திருப்பது ஒட்டுமொத்த தமிழனத்தின் உணர்வுகளையும் கொச்சைப்படுத்துவது என்பற்கப்பால் இந்தியாவில் விடுதலைப்புலிகளை தொடர்ந்து தடைசெய்து தமிழீழ விடுதலைப்போராட்த்திற்கு தடை ஏற்படுத்துவதுதான் காரணமென்றால் "நாம் தமிழர்" கட்சியிடம் மன்றாடிக் கேட்கிறோம் தயவு செய்து அதை செய்யாதீர்கள்.

================================================================
குழம்பிய குட்டையில் மீன் பிடிப்பதைப் போல் தமிழ் நாட்டை சேர்ந்த சிலர் "நாம் தமிழர்'" கட்சிக்கு எதிராக பேசி ஈழத்தமிழர் போராட்டத்திற்கு தாங்கள் எப்பொழும் ஆதரவு போன்றதான முகமூடி  அணிந்து கொண்டு கோமாளியாட்டம் போடுகிறார்கள்.
விடுதலைக்காக போராடிக் கொண்டிருக்கும் தமிழர்களை பொறுத்தவரை, "தமிழீழம் தான் எங்கள் இலக்கு விடுதலைப்புலிகள்தான் எங்கள் அமைப்பு" என்பதில் தெளிவாக இருக்க வேண்டும்.
ஈழத்தமிழர் பிரச்சினையை பேசி நாற்காலி அரசியல் செய்த,செய்யும் பல தமிழ்நாட்டு வல்லூறுகளை தினமும் பார்த்துக் கொண்டிருக்கிறோம். வைக்கோ அய்யா போன்றவர்களும் தமிழகத்தில்தான் இருக்கிறார்கள்.

இப்படிப்பட்ட நிலையில் எடுத்த எடுப்பில் தமிழ்நாட்டை சேர்ந்த சில காழ்ப்புணர்ச்சிக் காரர்களின் கூச்சல்களுக்கமைவாக நாங்களும் சீமானை எதிர்ப்பது தேவையற்ற செயல் என்பதற்கப்பால் முட்டாள் தனம் என்று கூட சொல்லலாம்.

"நாம் தமிழர்" கட்சி உள்நோக்கோடு செயற்படுகிறாதா?? விடுதலைப்புலிகளை தொடர்ந்து தடை செய்வதற்கான உத்தியா இது??" என்ற எமது அச்சத்தை நாங்கள் முன் வைக்கலாம். அவர்களது "நியாயமான" பதில்களை பொறுத்து தமிழர்கள் நாங்கள் "சேர்ந்து நடப்பதா" அல்லது "விலகி நடப்பதா" என்பதை தீர்மானித்துக் கொள்ளலாம்.

எதை நிராகரிப்பதற்கும் எங்களிடம் தீர்க்கமான காரணங்கள் இருக்க வேண்டும். (விடுதலைப்புலிகள் எழுந்தமானமாகவும், எடுத்த எடுப்பிலும், உறுதியான காரணங்கள் எதுவுமின்றியும்.. எவரையும், எந்த கட்சியையும் நிராகரித்தது கிடையாது. தமிழர்கள் எப்பொழும் தெளிவாக இருக்க வேண்டும்)


ஆதி

24-06-2012

Tuesday, June 12, 2012

யாரும் சொல்ல விரும்பாத வாக்குமூலங்கள்

இறுதிக்கட்ட  போரில் விடுதலைப்புலிகள் மேல் குற்றம் சுமத்தி ஒரே நபர்கள் பல பெயர்களில் பதிவுகள் எழுதி வியாபாரம் நடத்தியது அனைவரும் அறிந்ததே.

மக்களை மனித கேடையங்களாக பாவித்தார்கள் வெளியேறிய மக்களை சுட்டார்கள் என்ற குற்றச்சாட்டுகளுடன் தாங்கள் அறிவு ஜீவிகள் என்றும் தங்கள் அறிவுரைகளை புலிகள் கேட்கவில்லை என்பது அவர்களின் உச்சக்ட்ட குற்றச்சாட்டுகள்.

மன்னாரில் தொடங்கி முள்ளிவாய்க்கால் வரைக்கும் குறிப்பாக கிளிநொச்சி நகர் சிறிலங்கா ராணுவத்தினால் ஆக்கிரமிக்கப்ட்டதன் பிற்பாடு முள்ளிவாய்க்கால் வரை புலிகள் எப்படி பின்வாங்கி சென்றார்கள் எப்படி மக்கள் வெளியேறினார்கள் என்பது இதுவரை எந்த ஆவணப்படுத்தலையும் யாரும் செய்யவில்லை.

புலிகள் பிடித்தார்கள் சுட்டார்கள் என்று எழுதியவர்கள் யாரும் புலிகள் எப்படி சமர் செய்தார்கள் எப்படி மக்களை பாதுகாக்க போராடினார்கள் என்று எழுதவேயில்லை. புலிகள் பிடித்தார்கள் சுட்டார்கள் என்று ஒரு சில நபர்கள்தான் பல பெயர்களில் எழுதித்தள்ளினார்கள் என்பதும் அதைவைத்து "முரண் அரசியல்", "புலிகளுக்கு முன் புலிகளுக்கு பின்" இப்படி பல மூலப்பெயர்களில் விவாதங்களையும் நடாத்தி தங்களை பெரிய அரசியல் மேதைகளாக காட்டிக்கொள்ள முயற்சித்த காமடிகளும் நடந்தேறின. இன்னமும் அதே சுரத்தில் அப்பப்போ வாசித்துக் கொண்டிருப்பவர்களும் இருக்கிறார்கள். சரி இனி விடையத்திற்கு வருவோம்.

விடுதலைப்புலிகளின் அரசியற் பிரிவினரின் சில செயற்பாடுகளுக்கு கோபமடைந்திருந்த மக்கள் எவருமே புலிகளின் ராணுவ பிரிவுகளை குறை சொல்லியிருந்தது கிடையாது. தவிர வன்னிக்குள் இருந்து கட்டம் கட்டமாக போரினால் வெளியேறிய மக்கள் விடுதலைப்புலிகளின் தாக்குதல்கள் ஆயுத பிரசன்னங்கள் மக்களுக்கும் புலிகளுக்கும் இடையில் இருந்த "இராணுவ உறவு" குறித்து வாய்திறந்தது கிடையாது. யாரும் கேட்டாலும் அவர்கள் ஒருபோதும் சொல்லப்போவதும் இல்லை என்பது பேசிப்பார்த்தீர்களெண்டால் புரியும். ஒன்றில் தெரியாது என்று சொல்வார்கள் அல்லது பொய் சொல்வார்கள். இது யாவரும் (ராணுவம் ஒட்டுக்குழு வெளிநாட்டு புலனாய்வமைப்புகள் உள்ளிட்ட அனைவரும்) அறிந்த ஒன்று தான்.

இரண்டு சம்பவங்களை மாத்திரம் இங்கு பதிவுசெய்யலாம் என்று நினைக்கிறேன்.
கிளிநொச்சி பின்வாங்கலுக்கு பிறகு மக்களை புலிகளே கட்டம் கட்டமாக வெளியேற்றினார்கள். குறிப்பிட்ட கால இடைவெளிகளுக்குள் இது நடந்தது. "இன்று நாங்கள் பின்வாங்க போகிறோம்.. வருபவர்கள் வரலாம் அங்கால் போகிறவர்கள் போகலாம்.. போறதெண்டால் கவனமாக போங்கள்.. ஆமி அடிபட்டு கொண்டு வரேக்க இடம் மாற வேண்டாம்" இப்படி அறிவுறுத்தல்களை புலிகளே மக்களுக்கு வளங்கியிருந்தார்கள்.

குறிப்பாக சுதந்திரபுர பிரதேசத்தில் 10ற்கும் குறைவான போராளிகள் நூற்றுக்கணக்கான இராணுவத்தை 100 மீட்டருக்கும் குறைவான இடைவெளியில் 15 நாட்களுக்கு மேல் மறித்து வைத்திருந்திருக்கிறார்கள். அந்த போராளிகள் அங்கிருந்த மக்களை வெளியேறி விரைவாக செல்லும் படியும் இல்லாவிடில் சண்டைக்குள் மாட்டுப்பட வேண்டிவரும் என எச்சரித்தும் போராளிகளை விட்டு மக்கள் நகர மறுத்த விடையத்தை அந்த சம்பவத்தில் இருந்த ஒரு பெண் சொன்னார். பெடியளுக்கு சண்டை பிடிக்க சப்ளை காணாம தான் விட்டிற்று போனவங்கள் எண்டு சொன்னார்.

தங்களுக்கே சாப்பாடு செய்ய ஏலாம இருக்குமாம் பங்கருக்க வச்சு வெறும் மாவில ரொட்டி சுட்டுதான் சாப்பிட்டவர்களாம். இரவும் பகலும் மாறிமாறி பெடியள் படுறபாட்ட பாத்த பாவமா இருக்கும். இப்ப எங்கயோ தெரியா அவங்கள் என்று கண்கலங்கினார் அந்த பெண். "ஒரு பெடியன் விடிய அஞ்சு மணில இருந்து கிட்டதட்ட இரவு 7 மணிவரைகக்கும் இருந்த இடம் விட்டு நகராம சினைப்பரால போட்டுக் கொண்டே இருந்தான்" என்று சொன்வர் "தம்பி உந்த அரசியல் துறைல இருந்த சிலதுகள்தான் சனத்தோட பிரச்சினப்பட்டது. இப்ப யோசிக்கேக்க இவங்கள் முதலே காட்டிக்குடுக்க வெளிக்கிட்டிருப்பாங்களோ எண்டு டவுட்டா இருக்கு" என்று சொன்னார். 

தவிர காயப்படும் மக்களை பராமரிக்க சில வைத்தியர்களை தவிர பெரிய ஆளணியோ மருந்துப்பொருட்களோ இருந்கவில்லை. காயப்படும் போராளிகள் மக்கள் என அனைவரையும் வைத்தியர்கள் தாதிமார்களோடு விடுதலைப்புலிகளின் மருத்துவ பிரிவுதான் பராமரித்தது.

"காயப்பட்ட அத்தினயாயிரம் சனத்தையும் எப்பிடி பராமரிக்கிறது. இண்டைக்கு அங்க கொண்டுபோய் கிபிர் வந்து அடிச்சா திருப்பி வேற இடத்துக்கு கொண்டு போகோணும். இயக்க பெடியளும் பிள்ளையளும் எப்பிடி பாத்தாங்கள்.
காயப்படுற சனத்துக்கு மருந்த கட்டிற்று அடுத்தநாள் பாத்தா புண்ண சுத்தி புழு வந்திருக்கும். அதையெல்லாம் சுத்தப்படுத்தி திரும்பி மருந்து கட்டி பாவம் அவங்கள். சண்டைய பாக்கணோம்.. இதை பாக்கோணும். புதுசா இயக்கத்துக்கு கொண்டுவந்த பெடியள இதுகளுக்குதான் கூட விட்டிருந்தவங்கள்.. அதில இருந்து ஓட வெளிக்கிட்ட பெடியள் இந்த நிலைய பாத்திட்டு சனத்துக்கு உதவுற வேலைய செய்தவங்கள். காயப்படுறதெண்டா அப்பிடி இப்பிடி காயமில்லை.. சதைகள் எலும்புகள் எல்லாமே முறிஞ்சு தொங்கும்... இப்பிடி பட்ட நிலையிலயும் பதட்டமடையாம வேலை செய்யிறத்துக்கு அவங்களால மட்டும் தான் முடியும் தம்பி" என்று தனது கணவரையும் 1 பிள்ளையையும் பறிகொடுத்த தாய் ஒருவர் சொன்னார்.

இப்படி நிறைய இருக்கிறது. மக்கள் பேசமாட்டார்கள்.பத்திரிகைகளில் வரும் செய்திகளை மாத்திரம் படித்துவிட்டு அரசியல் வியாக்கியானம் செய்யும் "அவர்களின்" நோக்கம் இங்குள்ள அனைவருக்கும் தெரியும்.

இந்தியன் ஆமிக்கெதிரான சமர் தொடக்கம் பூநகரி தாக்குதல்(தவளைப்பாய்ச்சல்) முல்லைச்சமர் (ஓயாத அலைகள் 1) கிளிநொச்சி சமர் (ஓயாத அலைகள் 2, ஓயாத அலைகள் 3 சமர், மற்றும் தீச்சுவாலை முறியடிப்பு சமர் போன்ற பெரு வெற்றிக்களுக்கு பின்னால் நின்றவர்கள் இந்த மக்கள். இந்த சண்டைகளுக்கு பின்னால் மக்களின் பங்கு எப்படிப்பட்டது என்பதை பல தளபதிகளே சொல்லியிருக்கிறார்கள். ஏன் தலைவர் கூட சொல்லியிருக்கிறார்.

"புலிகளுக்கு முன் புலிகளுக்கு பின்" , "முரண் அரசியல்" என்று தமது சுயவிளம்பரம் அல்லது பொழுதுபோக்கிற்காய் விவாதம் செய்யும் இவர்களை விட இந்த மக்கள் இராணுவ நுணுக்கங்களும் அரசியல் தெளிவும் கொண்டவர்கள். அதனால்தான் விவாதங்களை விரும்பவில்லை.

"இயக்கத்தின்ர விசயங்கள் நாங்க ஆராய கூடாது என்ன செய்யோணும் எண்டு அவங்களுக்கு தெரியும்" என்று எனக்கு அறிவுறுத்தல் சொன்ன பெண்ணின் வயது 18 ..இரண்டு மாவீரர்களின் பள்ளி செல்லும் தங்கை.

ஆதி
13-06-2012

Wednesday, June 6, 2012

இதை யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்..

மகிந்தராஜபக்ஷவிற்கு எதிராக பிரித்தானியாவில் தமிழ் மக்கள் இந்த அளவு எதிர்ப்பையும் போராட்டத்தையும் இந்த காலப்பகுதியில் நடத்த இருந்திருப்பார்கள் என சிங்கள அரசோ இந்திய அரசோ சிந்தித்திருக்காது. பிரித்தானிய அரசு கூட இந்த போராட்டம் இந்த அளவு வீரியம் பெறும் என நினைத்திருக்கமாட்டார்கள்.

இந்த போராட்டங்களை திறம்பட ஒழுங்கமைப்பு செய்ய தமிழ் அமைப்புகளுக்கு நன்றிகளை சொல்வதோடு பதிவிற்குள் செல்கிறேன்.

தமிழ் தேசிய போராட்டங்கள் மற்றும் செயற்பாடுகளுக்கு எதிராக குறிப்பாக முள்ளிவாய்க்கால் இன அழிப்பு நினைவு கூரலை குழப்பும் நோக்கோடு ஒட்டுக்குழுக்களை சேர்ந்த ஏராளமானவர்கள் கனடா லண்டன் பிரான்ஸ் நோர்வே என அனுப்பட்டிருப்பதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகியிருந்தன.

தமிழ் மக்கள் சுயநிர்ணய உரிமை மற்றும் தனிநாட்டு கோரிக்கைகளை கைவிட்டுவிட்டார்கள் என்ற கருத்துப்பட திட்டமிட்ட அரசியல் பரப்புரையை இந்திய மற்றும் சிறிலங்கா அரசுகள் செய்து வந்தன. குறிப்பாக தமிழீழ மக்கள் பற்றியதான அனைத்துலக கரிசனையை சிதைத்து சிறிலங்கா அரசின் இரண்டாம்தர மக்களாக தமிழ் மக்களை காட்டி கொடுப்பதை வாங்கி கொண்டு இறமையை தொலைத்துத்தான் தமிழ் மக்கள் வாழ்வது நல்லது என்ற தோற்றப்பாட்டில் இந்திய அரசால் அனுப்பட்ட குழுவும் செயற்பட்டது அனைவரும் அறிந்த விடையம்.

ஒருபக்கத்தில் தமிழர் போராட்ங்களை குழப்புதல் மறுபக்கத்தில் தமிழ் மக்களின் அரசியல் சிந்தனைகளுக்கு நெருக்கடியை கொடுத்து மக்களின் சிந்தனையில் ஸ்திரமற்ற நிலை ஏற்படும் தறுவாயில் தாம் நினைக்கும் அரசியல் தீர்வை திணிப்பது என்ற உளவியல் அரசியலை இந்திய இலங்கை கூட்டணி நகர்ந்து வருகிறது.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் குழப்பகரமான அறிக்கைகள் என குழம்பியிருக்கும் மக்களை இலகுவில் அடக்கிவிடலாம் என்பது இந்த பயங்கரவாத அரசுகளின் கனவு. இப்படி உள்ளுக்குள்ளும் வெளியிலும் தமிழர்கள் குழம்பியிருக்கிறார்கள் ஆகவே இவர்களால் எதையும் ஒருமித்து செய்யமுடியாது என்று இந்த பயங்கரவாத அரசுகள் அளவுக்கு மீறிய நம்பிக்கையில் இருந்தன. அதனடிப்படையில் தான் முதல் பட்ட அவமானத்தையும் பொருட்படுத்தாது மகிந்தராஜபக்ஷ மீண்டும் லண்டன் புறப்பட்டார்.

பரமேஸ்வரனின் உண்ணாவிரதத்தை அவமதிப்பு செய்து தவறான தகவலை ஸ்கொட்லண்ட் பொலிஸிற்கு கொடுத்து தன்னையும் அவமானப்படுத்தி ஸ்கொட்லண்ட் பொலிஸையும் அவமானப்படுத்தியிருந்தது சிறிலங்கா அரசு. அதன் பின் தமிழர்கள் ஏன் போராட்டம் செய்கிறார்கள்.. உண்மையில் தண்டிக்கப்பட வேண்டியது யார்.. தமிழர்களின் விடுதலை வேட்கை எப்படிப்பட்டது என்பதை ஸ்கொட்லண் பொலிஸ் நன்றாகவே உணர்ந்திருக்கும்.

பல குழப்பகரமான நிலமைகளை தமிழ் மக்களின் அரசியல் ரீதியில் உருவாக்கிவிட்டு (உருவாகியிருப்பதாக அவர்கள் நினைக்கிறார்கள்) அதற்குள் தன்னை ராஜாவாக காட்டிக் கொள்ளும் கனவோடு லண்டன் புகுந்திருந்த ராஜபக்ஷ மரண வேதனையை அனுபவத்திருப்பார் என்பது உண்மையே.

குறுகிய ஒழுங்குபடுத்தலில் இத்தனையாயிரம் தமிழ் மக்கள் லண்டன் மாநகரில் கூடியதும்.. முன்பைவிட ஆக்குரோசமாய் மக்கள் திரண்டிருப்பதும் இந்திய இலங்கை உள்ளிட்ட பயங்கரவாத நாடுகளுக்கு நிட்சயமாக ஆச்சரியமளித்திருக்கும்.


ராஜபக்ஷவின் கொடும்பாவியையும் சிறிலங்கா தேசிய கொடியையும் பிரித்தானிய காவல்துறையினருக்கு முன்பு வைத்தே தீயிட்டுக் கொழுத்தியுள்ளார்கள் தமிழீழ மக்கள். இந்த ஆக்குரோசம் முன்னயதைவிட பல மடங்கு அதிகமானது. பரமேஸ்வரன் உண்ணாவிரம் இருந்து மோசமான நிலையை அடைந்து கொண்டிருந்த பொழுதும் தமிழ் மக்களின் மீதான படுகொலையை நிறுத்தக்கோரி முத்துக்குமார் உள்ளிட்ட தியாகிகள் தம்மைத்தாமே அழித்துக்கொண்ட போதிலும் அமைதியாக போராட்டங்களை நடாத்திக் கொண்டிருந்த தமிழ்ச் சமூகம் பிரித்தானியாவின் ராணி வருகைக்கிருக்கும் நிகழ்வொன்றின் நாளில் சிறிலங்கா தேசிய கொடியையும் சிறிலங்கா ஜனாதிபதியின் கொடும்பாவியையும் தீயிட்டு கொழுத்தியது சாதாரணமான கருதிக்கொள்ளக் கூடிய விடையமல்ல என்பது அரசியல் ராஜதந்திரிகளுக்கு புரிந்திருக்கும்.

சமகாலத்தில் போர்க்குற்றவாளி ராஜபக்ஷவை பிரித்தானியா வெளியேற்றவேண்டும் என்ற தொனியில் பிரித்தானிய தூதரகத்தை தமிழகத்தில் தமிழர்கள் சூழ்ந்து கொண்டனர். கனடா உள்ளிட்ட நாடுகளில் கண்டன அறிக்கைகள் விடப்பட்டிருந்தன. தவிர யாழ்ப்பாணத்தில் இளைஞர்களால் அரசியல் சாசனம் தீயிட்டு கொழுத்தப்பட்டது.

அறிக்கைகளையும் கண்டனங்களையும் மட்டுமே தெரிவித்துக் கொண்டு தமிழினம் அடங்கிவிட்டது என்று தேனிலவு அரசியல் செய்து கொண்டிருந்த வல்லாதிக்கங்களுக்கு தமிழ் மக்களின் இந்த எழுச்சியும் கடந்தகாலங்களை விட ஆக்குரோசமாக மக்கள் போராட நினைக்கும் தன்மையும் அதிர்ச்சிக்குள்ளாகியிருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

தம்மைத்தாமே எரித்து போராட்டம் நடாத்தியவர்கள் சிறிலங்கா தேசிய கொடியை ராஜதந்திரிகள் கூடுமிடத்தில் எரித்து போராட்டம் நடத்தும் அளவிற்கு மனதளவில் மாற்றமடைந்துவிட்டார்கள் என்பது சாதாரணமாக கடந்துவிடக்கூடிய விடையமில்லை என்பது உளவியல் தெரிந்த அரசியல் ஆர்வலர்களுக்கு புரியும்.

தமிழீழம் என்பது தமிழ்மக்களின் நாடு என்பதும் புலிக்கொடிதான் தமிழ் மக்களின் கொடி என்பதும் உலக அளவில் வேகமாக புரிந்துவருகிறது. தமிழர்களின் நாட்டை இலங்கை இந்திய பயங்கரவாத அரசுகள் ஆக்கிரமித்துள்ள உண்மை வேகமாக பரவிவருகிறது.

தமிழீழ தேசிய கொடியுடன் viva உலக கிண்ண போட்டிகளில் தமிழீழ உதைபந்தாட்ட அணி பங்குபற்றிக் கொண்டிருக்கிறது.

தமிழர்கள் தமது இலட்சியத்தை கைவிட்டுவிட்டார்கள் என்று அரசியல் கனவு கண்டுகொண்டிருந்த பயங்கரவாத அரசுகள் சமகாலத்தில் இத்தனை மாற்றங்கள் நடந்து கொண்டிருப்பதை எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.

ஆதி
07-06-2012


Blog template by simplyfabulousbloggertemplates.com

Back to TOP