Powered by Blogger.

Thursday, November 7, 2013

"தோற்றுப் போகிறோம் போராட வா" என்று கூப்பிடுங்கள் #புலிகள் இல்லாத வெளி

இன்று முகப்புத்தகத்தில் நண்பர் பரணி அவர்கள் எழுதியிருந்த குறிப்பொன்றை பார்க்க கிடைத்தது.

" 2009 ற்கு பிறகு இதுவரை நடந்த எல்லாப்போராட்டங்களும் தோற்றுவிட்டதாக பேசுகிறார்கள் ஆனால் வன்னியில் இருந்த சனங்களையும் எராளமான போராளிகளையும் இந்த போராட்டங்கள் காப்பாற்றியது" என்ற பொருள் பட எழுதியிருந்தார்.

இதை முற்றிலும் மறுக்கிறேன். அதுபோக 2009 ற்கு பிறகு வெல்வதற்காக போராட்டங்களை சரிவர நாங்கள் நடாத்தவில்லை என்ற கசப்பான உண்மையை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் எனது அபிப்பிராயத்தை முன்வைக்கிறேன்.

விடுதலைப்புலிகள் போராட்டத்தை கட்டியெழுப்பி அதை பெரும் மரபுவழி இராணுவமாகவும் பல்துறை கட்டுமானங்களைக் கொண்ட அரசாகவும் நடாத்துவதற்கு ஒவ்வொரு தோல்விக்குப் பின்னும் புலிகள் வகுத்த வியூகங்கள்தான் காரணம்.

தவளைப்பாய்ச்சல் நடவடிக்கையில் அதிகமான போராளிகள் வீரச்சாவடைந்தார்கள். வீரச்சாவடைந்தவர்களை விதைப்பதற்கு விதைகுழிகள் மாவீரர் துயிலுமில்லங்களில் வெட்டப்பட்டன. அதை வெட்டியவர்கள் பொதுசனங்களாக இருந்த இளைவர்கள்தான். இத்தனை போராளிகளை இழந்துவிட்டோம் என்ற செய்தி ஆழமாக பதியப்பட ஏராளமானவர்கள் வீரச்சாவடைந்தவர்களை இடங்களை நிரப்புவதற்காக போராளிகளாக மாறினார்கள்.

யாழ்ப்பாண குடாநாடு சிங்கள இராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்ட போது யாழ்குடாநாட்டில் ஏற்பட்டுவரும் தோல்வியை வன்னியில், மட்டக்களப்பில் மக்களிடம் பிரச்சாரப்படுத்தினார்கள். போராடவேண்டிய தேவையை சொன்னார்கள். அதன் தொடர்ச்சியாக புதிய அணிகள் இணைக்கப்பட்டு பயிற்சிக்கு செல்ல தயாராக இருந்த அணிகள் முல்லைத்தீவை கைப்பற்றின.

முல்லைத்தீவில் இருந்து இராணுவதளபாடங்கள் முதல் அந்த முகாமை இருந்த இடம் தெரியாமல் அப்புறப்படுத்துவதற்கு மக்களிடமே விட்டார்கள்.

அதே போல்தான் ஜெயசிக்குறு ஆக்கிரமிப்புச் சமர் வன்னியை பிழந்து முன்னேறிக் கொண்டிருக்கும் பொழுது சந்தித்துவரும் தோல்வியை மக்களிடம் சொன்னார்கள் புலிகள். தோல்வியில் இருந்து மீண்டெழுவதற்கு சனம் புலிகளுடனேயே நின்றது.
எல்லைப்படை, துணைப்படை, விழிப்புக்குழு, மாணவர் விழிப்புக்குழு, மாணவர் படை, என சனங்கள் எல்லா வழியிலும் போராடத்துணிந்தன.

போராளிகளுக்கு உலர் உணவு சேகரிப்பதில் இருந்து காயப்பட்டுவரும் போராளிகளை பராமரிப்பது வரைக்கும் சனங்கள்தான் நின்றார்கள்.

தமிழீழத்தில் புலிகளுடனையே இருந்த சனங்களுக்கு புலிகள் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தோல்வியை எதிர்மறையாக காட்டியது கிடையாது. "தோற்கிறோம் போராடவா" என்றுதான் அழைப்புவிடுத்திருக்கிறார்கள்.

புலம்பெயர் கட்டமைப்பு

புலம்பெயர்கட்டமைப்பை பொறுத்தவரை சனங்கள் போராட்டங்களை செய்திகளில் படிப்பவர்களாக மாறிப்போய் இருக்கிறார்கள்.

2009 இல் இலட்சக்கணக்கில் வீதிக்கு இறங்கி போராடிய சனங்கள் எங்கே!! அவர்களை ஏன் இப்பொழுது போராட அழைக்க முடியவில்லை!!!

"தோற்றுப்போகிறோம் போராட வா" என்று வீட்டைத் தட்டுங்கள். படிக்கும் மாணவ மாணவிகளுடன் பேசுங்கள்.

இது நிரந்தர தோல்வியானால் எங்கள் சரித்திரம் ஈழத்தில் அழிந்துவிடும் என்ற பயங்கரமான உண்மையை சொல்லுங்கள்.

தோற்கிறோம் என்ற உண்மையை விளங்கி போராட வருபவன்தான் கடைசிவரை இலட்சியத்திற்காக போராடுவான்.

இரண்டாயிரம் பேர் போராடி தோற்றுப்போனால் தோற்றுவிட்டோமே என்ற இன உணர்வு மூவாயிரம் பேரை கூட்டி போராடத் தூண்டவேண்டும். அது தான் நிலைத்து நிற்க கூடியதும் இலக்குவரை செல்லக் கூடியதுமான போராட்டம்.



தமிழக கட்டமைப்பு

தமிழகத்தைப் பொறுத்தவரை இலட்சியத்திற்கா போராடக்கூடியவர்கள் அதிகம் இருக்கும் இடம். ஆனால் சாதிகளாலும் அரசியல் கட்சிகளாலும் பிழவுபட்டு நிற்கும் தேசம்.

தமிழக மீனவர்கள் சுட்டுக் கொல்லப்படுவது குறித்து, அணு உலை குறித்து இதுவரை போராடிக் கொண்டிருப்பதை மத்திய அரசு கண்டு கொள்வதாக இல்லை.

போராட்ட வழிமுறைகளை மாற்ற வேண்டும். காந்தி நடாத்திய போராட்டம் வெற்றியளித்தது உண்மையென்றால் அதே போராட்டத்தை செய்ய தமிழிகத்தில் விடுதலை அமைப்பு உருவாக்கப்பட வேண்டும்.

தன்னைத்தானே எரிக்கும் தியாக போராட்டங்களை கைவிட்டு எதிரியை அழிக்கும் விடுதலைப்போராட்டத்தை தமிழகம் தொடங்க வேண்டும். தமிழகத்தில் அப்படியொரு அமைப்பு உருவாக வேண்டும்.

வெறும் மேடை அரசியல் எதையம் பெற்றுத்தராது என்ற உண்மையை மக்கள் விளங்கிக் கொள்ள வேண்டும்.

ஒடுக்கபட்டுகிடக்கும் சனங்கள், ஊழல் அரசியல்வாதிகளால் தமது உரிமைகள் மற்றும் வாழ்வாதார பலன்களையே இழந்து கொண்டிருக்கும் தமிழக மக்களுக்காக தமிழனாக போராடக்கூடிய  அமைப்பு உருவாக வேண்டும்.

தமிழீழ விடுதலை குறித்து தமிழகத்தில் நடந்துகொண்டிருக்கும் உணர்வு மிக்க போராட்டங்களுக்கு என்ன கைமாறு செய்யப்போகிறோம் என்று தெரியவில்லை.

ஒட்டு மொத்த இனமாக ஒருவிடுதலைக்கு சிந்தித்துக் கொண்டிருக்கும் தமிழினம் எப்போது ஒரே அமைப்பாக போராடப்போகிறது!!!!


போராட்ட வடிவத்தை மாற்றுங்கள்.

ஆதி
07-11-2013

No comments:

Post a Comment

Blog template by simplyfabulousbloggertemplates.com

Back to TOP