Powered by Blogger.

Sunday, March 3, 2013

தமிழீழத்தின் 2009 இல் இருந்து 2013 வரை # அழிப்புகளும் மாற்றங்களும்

உலக நாடுகள் இன அழிப்பை முள்ளிவாய்க்காலில் நிறைவேற்றி நான்கு வருடங்கள் கடக்கவுள்ள நிலையில் தமிழீழ நிலப்பரப்பின் புவியியல் மற்றும் மக்கள் நிலையில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் அழிப்புகளையும் மாற்றங்களையும் இந்தப்பதிவில் நினைவூட்ட விரும்புகிறேன்.

அதற்கு முதல் விடுதலைப்புலிகளை தமிழ் மக்களிடம் இருந்து அந்நியப்படுத்துவதற்கு சமாதான காலத்தில் நோர்வே உள்ளிட்ட வெளிநாடுகள் போட்ட சதி பற்றி சற்று புரிந்து கொண்டு நகரவோம்.

விடுதலைப்புலிகள் தமது அமைப்பிற்கு ஆட்களை இணைக்கும் பொழுது மிகக்கவனமாக கையாளும் பொறிமுறையை ஆரம்பத்தில் இருந்தே வைத்திருந்தார்கள். யார் வேணும் என்றாலும் அமைப்பில் இணைய முடியாதவாறு இறுக்கமாக இருந்தது. இந்த நிலையில் வெளிநாட்டு உளவு அமைப்புகளுக்கும் சிங்கள இராணுவத்திற்கும் விடுதலைப்புலிகளுக்குள் ஊடுருவுவது சிம்மசொப்பனமாக இருந்தது.

இதை நாடிபிடித்த உளவு நிறுவனங்கள் சமாதான காலத்தில் திட்டம் தீட்டின. தீர்வு எட்டப்படாமல் சமாதான ஒப்பந்தம் குழப்புப்பட வேண்டும் அதே நேரத்தில் போர் தொடங்க முன் புலிகளுக்குள் ஊடுருவ வேண்டும்.

சமாதான காலத்தில் வெளிநாட்டு அரச நிர்வாக அலுவல்கள் பற்றி விடுதலைப்புலிகள் அதிக அக்கறை கொண்டு ஆராய்ந்தார்கள். அந்த சந்தர்ப்பத்தில் தான் வெளிநாடுகளில் இருக்கும் "கட்டாய இராணுவ பயிற்சி" பற்றிய தகவல்களும் புலிகளுக்கு அதிகமாக வழங்கப்பட்டிருக்கிறது.
கட்டாய ஆட்சேர்ப்பு இராணுவ நடைமுறையிலோ அரச நடைமுறையிலோ ஒரு குற்றமல்ல என்று அரசியல் சொல்லப்பட்டிருக்கிறது.

தமிழ் மக்களைப் பொறுத்தவரை உறவு முறைகளில் அதிக உணர்ச்சிகளை வெளிப்படுத்துபவர்கள். குடும்ப உறுப்பினர்கள் மீது ஏதாவது வன்முறை பாவிக்கப்படின் உணர்ச்சிவசப்பட்டு தமது எதிர்பபையும் வெறுப்பையும் தொடர்ச்சியாக வெளிப்படுத்துபவர்கள். அதனால் கட்டாய ஆட்சேர்ப்பு புலிகளை மக்களிடம் இருந்து அந்நியப்படுத்தும் என்ற உளவியலை பெரிதும் நம்பியது வெளிநாட்டு நிறுவனங்கள்.

தேசத்தின் குரல் அன்டன் பாலசிங்கம் அண்ணையின் இழப்பிற்கு பின்னர் பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் அண்ணையினூடாகவே விடுதலைப்புலிகள் வெளிநாட்டு அரசியல் நிலைப்பாடுகள் மற்றும் உறவு நிலை பற்றி கவனம் செலுத்தி வந்தார்கள். இந்த நிலையில் தமிழ்ச் செல்வன் அண்ணையை கொலை செய்யும் படி ஆலாசனை வழங்கியதும் இந்த நோர்வே கூட்டம் தான் என்று தெரிகிறது.

உச்சக்கட்ட போர் தொடங்கப்பட முதல் தமிழ்ச்செல்வன் அண்ணை கொல்லப்பட்டுவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இனி விடையத்திற்கு வருகிறேன்.

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை மற்றும் முள்வேலி இன அழிப்பு முகாம்கள் பற்றிய பல அதிர்ச்சிகரமான தகவல்கள் ஆதாரங்களுடன் பல மட்டங்களில் எழுதியாகிவிட்டது. தவிர சனல் 4 ஊடகம் இனப்படுகொலையை அக்குவேறாணிவேராக பிரி்த்து அம்பலப்படுத்திவிட்டது.

ஆனால் இன்று முகாம்களில் இருந்து காடுகளுக்கும் சில வீடுகளுக்கும் துரத்தப்பட்டிருக்கும் மக்கள், மக்களின் நிலங்கள், வாழ்வாதாரங்கள், இனத்தின் இருப்புகள் என்ன நிலையில் இருக்கின்றன.. எப்படிப்பட்ட ஆக்கிரமிப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன பற்றி தமிழ் ஊடகங்களே தொடர்ச்சியாக பதிவு செய்ய மறுக்கின்றன.

ஒன்றை மட்டும் ஞாபகம் வைத்திருங்கள், விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசம் இன்னமும் பிரிக்கப்ட்ட நிலையில் தான் இருக்கிறது. விடுதலைப்புலிகளை அழித்துவிட்டதாக சிங்கள தேசம் அறிவித்து நான்கு வருடம் ஆகியும் இன்னமும் புளியங்குளம் சோதனைச்சாவடி அதே இடத்தில் செயற்பட்டுக் கொண்டுதான் இருக்கிறது.

சிங்கள மயமாக்கல் உத்தி

புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசமாக இருந்த புளியங்குளம், கனகராயன் குளம், மாங்குளம், முறுகண்டி, கிளிநொச்சி, பரந்தன், ஆணையிறவு, பளை,இயக்கச்சி, முகமாலை  வரையிலான ஏ9 பாதை அணு அணுவாக சிங்கள தேசமாக மாற்றப்பட்டுக் கொண்டிருக்கிறது.தவிர முகமாலை தொடக்கம் யாழ்ப்பாணம் வரையிலான ஏ9 பாதை ஏற்கனவே இராணுவ முகாம்களால் சிங்கள மயமாக்கப்பட்டிருக்கிறது.

புளியங்குளம் தொடக்கம் முகமாலை வரை ஏ9 பாதையை அண்டி கிழக்கு மற்றும் மேற்கு பகுதிகள் இராணுவ மயமாக்கப்பட்டு புத்தர் குடியேற்றப்பட்டுக் கொண்டிருக்கிறார்.

அரச காணிகள் ராணுவ முகாம்களாகவும் நிலத்தை பார்க்க வரமுடியாமல் இருக்கும் தனியார் காணிகள் புத்தர் விகாரைகளாகவும் மாற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றன. புத்தர் குடியேற்றப்பட்ட கையுடன் இராணுவ குடும்பங்கள் குடியேற்றப்பட்டுகின்றன.

விரைவாக கட்டி முடிக்க கூடிய கட்டட தொழினுட்பத்திலான (டியுறா போட் வீடுகள்) வீடுகள் அவசர அவசரமாக கட்டப்பட்டு சிங்கள குடும்பங்கள் குடியேற்றப்படுகின்றன. சிறிது காலத்தின் பின் அத்திவாரம் போட்டு நிரந்தர வீடுகள் கட்டப்படுகின்றன.


ஏன் ஏ9 பாதை சிங்கள மயமாக்கலுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டது

சந்திரிகா ஆட்சியில் அனுரத்த ரத்வத்தை தலமையிலான ராணுவம் "ஜெயசிக்குறு" ஆக்கிரமிப்பு போரை தொடங்கியிருந்தது. அதன் பிரதான நோக்கம் ஏ9 பாதையை கைப்பற்றுவது. காரணம் புலிகள் கட்டுப்பாட்டில் இருக்கும் நிலத்தை கூறுபோடுவது, விநியோக பாதையை பிளவுபடுத்துவது, ஆட்பலத்தை பிளவுபடுத்துவது, திசை திருப்பல் தாக்குதல்களை மேற்கொள்ளுவதன் மூலம் மக்களை குழப்புவது.

புலிகளின் முறியடிப்பு சமரில் தோற்றுப்போன அந்த திட்டத்தை இப்பொழுது கோத்தபாய தலமையிலான சிங்கள ராணுவம் விரைவாக நிறைவேற்றி வருகிறது.

ஏ9 பாதை முற்று முழுதாக சிங்களமயமாக்கப்படும் பட்சத்தில் வடக்கு மாகாண மக்கள் இரு பகுதியினராக பிரிக்கப்படுவார்கள். பெருமளவிலான கடற்கரைகள் இராணுவ முகாம்களாலும் சிங்கள மீனவ குடும்பங்களாலும் கட்டுப்பாட்டில் இருக்கிறது. இந்த நிலையில் ஏ9 பாதை நேர்த்தியான சிங்கள மயமாக்கலுக்கு உட்பட்டுவருகிறது.

இன்னமும் சிறிது காலத்தில் ஏ9 ற்கு கிழக்கே உள்ள மக்களை சுற்றி சிங்கள இராணுவமும் சிங்கள மக்களும் இருப்பார்கள் அதே போல் மேற்கிலும் இருப்பார்கள்.

இன்று ஏ9 கிழக்கில் இருந்து மேற்கிற்கு யார் செல்வதென்றாலும் ஒரு ராணுவ முகாமையாவது தாண்டித்தான் சென்றாக வேண்டிய நிலையிருக்கிறது.


தமிழர் காலாச்சார விழுமிய அழிப்புகள்

ஏ9 வீதியை அண்டி பெரிய அளவிலான கோயில்கள் குறைவு,தேவாலையங்கள் குறைவு . ஏ9 பாதையில் இருக்கும் கோயில்களின், தேவாலையங்களின் எண்ணிக்கையை விட புத்த விகாரைகளின் எண்ணிக்கையே அதிகம். ஏ9 வீதிக்கருகில் மக்கள் இருக்கும் வீடுகளைவிட இராணுவத்தின் முகாம்களும் இராணுவம் தங்கும் விடுதிகளும் தான் அதிகம்.

கட்டட அமைப்புகள், பெயர்பலகைகள், வர்ணப்பூச்சுகளின் நிறங்கள் எல்லாமே வேகமாக சிங்கள மயமாக்கபட்டுக் கொண்டிருக்கிறது.

யாழ்ப்பாணம் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் கட்டப்படும் கட்டங்களில் சிங்கள கலாச்சார சாயல் கட்டாயமாக உருவாக்கப்படுகிறது.

அசோக சக்கரத்தையும் பெளத்த கொடியையும் கொண்ட துணிகளில் சிறிலங்கா தேசிய கொடி பொறிக்கப்பட்டு தமிழர் தேசமெங்கும் பறக்கவிடப்படுகிறது. பொதுமக்கள் சேவையில் ஈடுபடும் வாகனங்கள் வங்கிகள் கடைகள் என எல்லா இடங்களிலும் இது பறக்கவிடப்பட்டிருக்கிறது.

வடக்கு மாகாணத்தில் இருந்து வெளிச்செல்லும் மற்றும் உள்வரும் பேரூந்துகளில் சிங்களவர்கள் வேலைக்கு அமர்த்தப்பட்டிருக்கிறார்கள்.. கட்டாயமாக சிங்கள பாடல்கள் ஒலிக்கவிடப்படுகிறது.


திட்டமிடப்பட்ட உளவியல் போர்

புலம்பெயர் தமிழர்கள் மட்டத்தில் இன்னமும் புரியப்படாத இந்தப் போர் தமிழீழ தாகயக்கில் உச்சக்கட்டத்தை அடைந்திருக்கிறது. யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் கைது மற்றும் விடுதலை தொடர்பில் பகிரங்கமாக வெளிப்பட்ட இன ஒடுக்குமுறையை வெளிநாட்டு அமைப்புகள் திறம்பட கையாளத் தவறியிருக்கின்றன. அது பற்றி பிறிதொரு பதிவில் எழுதுகிறேன்.

யாழ் நகர் உள்ளிட்ட மாணவர்கள் அதிகமாக இருக்கும் பிரதேசங்களில் வயதுக்கு வந்தோருக்கு மட்டுமான மலையாள திரைப்படங்களில் குறுந்தகடுகள் தாராளமாக கிடைக்கின்றன. வெளிப்படையாகவே விற்பனை செய்யப்படுகின்றன.

போராட்டம் பற்றியும் படிப்பை பற்றியும் பேசித்திரிந்த மாணவர்களிடையில் இன்று சினிமா பற்றி கதைக்கும் கலாச்சாரம் திட்டமிடப்பட்ட வகையில் பரப்பப்பட்டிருக்கிறது.

இந்திய சாமிகளின் பெயரில் மக்களை வரவழைத்து சமூகம் பற்றிய அக்கறையை இல்லாது செய்து சுயநல போதனைகள் வழங்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

தவிர அச்சமூட்டும் நடவடிக்கைகள், பழிவாங்கல்கள், பாலியல் தொந்தரவுகள் மற்றும் பாலியல் மிரட்டல்கள் என தமிழினம் தன்னை பலவற்றிற்கு தன்னை பாதுகாக்க வேண்டும் என்ற வெறுப்பு ஏற்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது.



தமிழீழ அடிப்படைப் பொருளாதாரம் சிதைக்கப்பட்டு முதலாளித்துவ ஏகாதிபத்தியத்திற்கு எப்படி தமிழனம் அடிமைப்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது என்பது பற்றியும் வடக்கு மாகாண சபைத் தேர்தலை நடாத்த முன் வடக்கு மாகாணத்தில் என்ன மாற்றத்தை செய்ய சிங்கள தேசம் அவசரமாக வேலை செய்கிறது என்பது பற்றியும் தொடரும் பதிவில் தருகிறேன்.


தொடரும்..


ஆதி
21-02-2013

No comments:

Post a Comment

Blog template by simplyfabulousbloggertemplates.com

Back to TOP