Powered by Blogger.

Wednesday, November 30, 2011

பொதுநலவாய மாநாடும் தமிழர் தரப்பின் நடவடிக்கைகளும்


நடநத்து முடிந்த பொதுநலவாய மாநாடு தமிழர் தரப்பிற்கு எந்த அளவிற்கு வெற்றியளித்தது என்பதை பார்பதற்கு முன் இந்த மாநாடு சிறிலங்கா அரசிற்கு அரசியல் சங்கடங்களை உருவாக்கியிருக்கிறது என்று சொல்லலாம்.

சிறிலங்கா அரசினால் நிகழ்த்தப்பட்ட போர்க்குற்றங்கள் தொடர்பான கலந்துரையாடல்களும் அது குறித்த எதிர்வினை நிலைப்பாடுகளும் நிட்சயமாக ராஜதந்திர ரீதியிலான சங்கடங்களை சிறிலங்கா அரசிற்கு ஏற்படுத்தியிருக்கும். சிறிலங்காவில் நடக்கவிருக்கும் அடுத்த மாநாட்டில் கனடா பங்குபற்றாது என வெளிப்படையாக அறிவிக்கப்ட்டது ராஜதந்திர ரீதியில் சிறிலங்காவிற்கு ஏற்பட்ட ஒருவித பின்னடைவென்றே சொல்லலாம்.

இங்கிலாந்து மகாராணிக்கு கைகுலுக்குவது போன்ற புகைப்படம் எடுக்க முடியாது போனதால் போட்டோ எடிட்டிங் மூலம் ராஜபக்ஷ இங்காலந்து மகாராணிக்கு கைகொடுப்பது போன்று புகைப்பட்ம் உருவாக்கப்ட்டு உள்ளுர் ஊடகங்களில் வெளியிட்டமையும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது. அதாவது நடந்து முடிந்த பொதுநலவாய மாநாட்டில் தமக்கு எவ்விதமாக பாதிப்புகளையும் ஏற்படுத்தவில்லை என்று  காட்டுவதில் சிறிலங்கா அரசு பல வழிகளிலும் முயன்றிருந்தது.

தமிழர் தரப்பு திறந்த பாதைகள்
பொதுநலவாயா நாடு நடந்து கொண்டிருந்த காலப்பகுதிகளில் தமிழர் தரப்புகள் மேற்கொண்ட அரசியல் நகர்வுகள் முக்கியத்துவம் வாய்ந்தவை. அவுஸ்ரேலிய தமிழ் காங்கிரஸ் மற்றும் உலக தமிழர் பேரவையும் இணைந்து மேற்கொண்டிருந்த கூட்டத்தொடரானது பல ஊடகங்களிலும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது.

சிறிலங்கா அரசானது தண்டிக்கப்பட வேண்டிய போர்க் குற்றவாளி என்பதையும் ஈழத்தமிழர்களுக்கு இருக்க கூடிய உரிமைப்பிரச்சினையையும் இந்த கூட்டத்தொடர் பேசியிருந்தது. பலதரப்பட்ட சமூக பிரதிநிதிகளும் இந்த கூட்டத்தொடரில் பங்கேற்றிருந்தமை மற்றும் பலதரப்பட்ட ஊடகங்களில் இந்த கூட்டத் தொடர் முக்கியத்துவம் பெற்றிருந்தமை என்பது தமிழர்களின் நகர்வுகளிற்கு கிடைத்த வெற்றியாகும்.

சிறிலங்கா அரசு போர்குற்றவாளி என்றும் அது நீதிக்கு முன் நிறுத்தப்பட வேண்டிய அரசென்றும் வலியுறுத்தி நடாத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் அவுஸ்ரேலியர்களும் பங்கெடுத்திருந்தமை என்பது தமிழர்களின் நியாயத்திற்கான போராட்டம் பன்முகப்படுத்தப்படுகின்றது என்பதற்கான எடுத்துக்காட்டு.

வெளிநாட்டு அரசுகளின் நிலைப்பாடு
சிறிலங்கா என்பது தெற்காசிய பிராந்தியத்தில் பல்வேறு காரணங்களிற்காக முக்கியத்துவம் வாய்ந்தது என்பதால் தமது வல்லாதிக்க அதிகாரத்தை தக்க வைப்பதற்காக சிறிலங்காவை பகைத்துக் கொள்வோ அல்லது காட்டிக் கொடுக்கவோ வெளிப்படையாக கடுமையாக செயற்படுமா என்பது கேள்விக் குறியாக இருந்தாலும் தமிழர்கள் தொடர்ந்து மேற்கொண்டுவரும் சட்ட அழுத்தங்கள் அந்த நாடுகளை நீதியின்பால் கடுமையாக நிற்க தூண்டும் என்பதில் சந்தேகமில்லை.

போர்க்குற்றவாளி மகிந்த ராஜபக்ஷவிற்கு எதிராக அவுஸ்ரேலியாவில் போடபட்ட வழக்கை அவுஸ்ரேலிய தடுத்திருந்தது என்றே சொல்லலாம். மகிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக போடப்பட்ட வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் இடத்து அது பொதுநலவாய நாடுகளின் மத்தியில் தனது நிலை கேள்விக்குறியாகிவிடுமோ என்ற அச்சம் அவுஸ்ரேலிய அரசை இந்த முடிவை எடுக்க தூண்டியிருக்கலாம். ஆனால் சிறிலங்கா அரசானது போர்க்குற்றவாளிகளால் கட்டமைக்கப்பட்டுள்ள ஒரு அரசே தான் என்ற செய்தி அவுஸ்ரேலிய உள்ளூர் ஊடகங்களிலும் சர்வதேச ஊடகங்களிலும் இடம் பிடித்திருந்தமை இனிவரும் காலங்களில் தமிழர்களின் போராட்டங்களிற்கு வலுச்சேர்க்க உதவியாக இருக்கும்.
சர்வதேச நாடுகளிற்கு எமது போராட்டத்தின் தேவையை இன்னமும் ஆளமாக புரியவைக்க வேண்டிய தேவையில் தமிழ் மக்கள் இருப்பதாகவே எண்ண தோணுகிறது. போர்க் குற்றவாளிகளை நீதிக்கு முன் நிறுத்தி நியாயம் கேட்க வேண்டிய வேளையில் சமாந்தரமாக எமது உரிமைகளை பெற்று சுயாட்சியை நிறுவுவதற்கான வேலைகளிலும் சட்ட ரீதியாக மும்மரமாக ஈடுபடவேண்டும்.

தமிழ் மக்களை செயற்பாட்டு ரீதியில் பிளவுபடுத்தி உரிமைகளை கேட்கும் ஒட்டுமொத்த குரலில் பலத்தை சிதறடிப்பதற்கு சிறிலங்கா அரசு முனைப்புக்காட்டிவருகிறது. தமிழ் மக்கள் அவதானமாக செயற்பட வேண்டும். செயற்பாட்டு ரீதியில் பிளவுபடாமல் ஒன்றுபட்ட இனமாக விடுதலைக்கு பாடுபடவேண்டும். எல்லாவழிகளிலும் தொடர்ந்து சட்ட ரீதியான அழுத்தங்களையும் உரிமைகளை பெறுவதற்கு சட்டரீதியான முனைப்புகளையும் வேகப்படுத்த வேண்டும். அரசியல் ரீதியிலான சட்ட ரீதியிலான உரிமைகோரிய அணுகுமுறைகளை சாதாரணமாக தட்டிக்கழித்துவிட முடியாத நிலைக்கு சர்வதேசம் தள்ளப்படும். 

போர்க்குற்றவாளிகளை நீதிக்கு முன் தண்டிப்பதற்கான அழுத்தங்களை கொடுக்கும் அதேவேளை எமது நிலத்தில் நடந்துவரும் உரிமை மறுப்புகள் அடக்கு முறைகள் குறித்தும் தொடர்ந்து பதிவு செய்து வர வேண்டும்.
 பொதுநலவாய மாநாடு சிறிலங்கா அரசு குறித்த பல செய்திகளை பலதரப்பட்ட மக்களுக்கு கொண்டு சேர்க்கும் ஒரு வாய்ப்பாக அமைந்திருந்தது. இனிவரும் காலங்களில் சிறிலங்கா அரசை ஏன் தண்ணடிக்க வேண்டும் என்பதற்கான  காரணங்களோடு நாங்கள் ஏன் விடுதலை வேண்டி நிற்கிறோம் என்ற செய்தியையும் ஆழமாக பதிவு செய்ய வேண்டும். எல்லாவற்றிற்கும் தமிழினம் ஒன்றுபட்ட இனமாக பலத்தோடு எழுவது தேவை.

ஆதி
17-11-2011


மாவீரர் நாள் கார்த்திகை 27

விடுதலை வீச்சோடு தமிழின விடிவிற்காய் களம் கண்டு மாண்ட மாவீர்ர்களை  தாயகம் எங்கும் நினைவேந்தும் நாட்கள் இவை.

வெளித்திக்கிடக்கும் வானம் இழுத்துப் போர்த்திய கறுத்தப் புகார்களோடு மெளனமாய் தூறி கல்லறைகளை நனைத்துக் கொண்டிருக்கும். கார்த்திகை மலர்கள் வீதியெங்கும் பூத்துத் தொங்கும். தமிழின விடுதலைக்காய் களமுனை சென்று காவியமாகி கனவுகளோடு கல்லறைகளில் உறங்கும் தெய்வங்களை மலர்கள் வாழ்த்திக் கொண்டிருக்கும். இது கார்த்திகை மாதம். மாவீரர் தெய்வங்களை ஒரே நாட்களில் நினைவேந்தும் உத்தம மாதம் இது.

இன்று தமிழீழ விடுதலைப்போராட்டமானது பலவகை பரிமானங்களை தாண்டி சர்வதேசமயப்படுத்தப்ட்டுள்ளது. உலகளவில் பல்வேறு தரப்ட்ட இன மக்களும் பேசும் விடையமாக உருவெடுத்துள்ளது தமிழீழ போராட்டம்.சிறிலங்கா அரசுடன் மட்டுமன்றி இந்திய வல்லரசின் இராணுவத்துடனும் மோதி தமிழழீழ மக்களின் சுதந்திர வேட்கையை உலகிற்க உணர்த்தியவர்கள் எமது மாவீரர்கள். இன்று தமிழீழ மக்களின் போராட்டமானது சர்வதேச அங்கிகாரத்திற்கு காத்து நிக்கிறது அல்லது சர்வதேச அரங்கில் இடம் பிடித்திருக்கிறது என்று சொன்னால் அது இத்தனையாயிரம் மாவீரர்களின் தியாகத்தின்பால் தான் என்பதை தவிர வேறெதுவுமாய் இருக்க முடியாது.

போராட்டத்தின் ஒவ்வொரு கட்டங்களிலும் கற்பனை செய்ய முடியாத அளவிற்கு மாவீரர்களின் உயிர்த்தியாகங்களை கொடுத்து நகர்ந்து வந்திருக்கிறது தமிழீழ விடுதலைப்போராட்டம்.
பலதரப்பட்ட துரோகங்களினால் தமிழழீழ போராட்டத்தின் ஆயுத வடிவம் மெளனித்து போனாலும் இலட்சியம் நோக்கிய போராட்டாம் நகர்ந்து கொண்டுதான் இருக்கிறது. சற்றும் குறையாத வீரியத்துடன் நகர்ந்து கொண்டிருக்கும் பயணத்திற்கு மாவீரர்களின் ஆத்ம பலம் தான் காரணமாக இருக்கிறது.

அடக்கு முறைகளுக்கெதிராக உரிமைக்கான இந்த போராட்டத்தில் தமது இன்னுயிர்களை ஆகுதியாக்கிய மாவீரச் செல்வங்களினோடு தம்மையும் போராட்டத்தின்பால் அர்ப்பணித்துள்ள நாட்டுப்பற்றாளர்கள் மற்றும் மக்களையும் இந்த நாட்களில் நாங்கள் நினைவுகூர்ந்தேயாக வேண்டும்.

அன்பான தமிழ் மக்களே!!
இன்றைய நாட்களில் நாங்கள் ஒரு விடையத்தை தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும். உயிர் அர்ப்பணிப்புகள், உடல் அர்ப்பணிப்புகள் என தியாகங்களின் உச்சக்கட்டங்களுக்கு சென்று எமது விடுதலைப்போராட்டம் நடந்து கொண்டிருக்கிறது. இலட்சியம் நோக்கிய பயணம் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.இந்த காலகட்டத்தில் பல தரப்பட்ட வெளிச் சக்திகளால் தமிழினத்தை பிளவு படுத்தப்படுவதற்கான முயற்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன. தமிழினம் துண்டாடப்பட்டு அதனூடாக இலட்சிய வேட்கையை இல்லாது செய்துவிட முடியும் என்று நம்புகின்றன அந்த சக்திகள். அந்த சக்திகள் சிறிலங்கா அரசுடன் இந்திய மற்றும் வேறு சில சக்திகளாகவும் இருக்கலாம். ஆனால் தமிழ் மக்கள் நிதானமாக செயற்பாடுகளை செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளோம்.

இத்தனை இழப்புகளை சந்தித்த எமது இனத்தின் வீரியத்தையும், நம்பிக்கையையும், வைராக்கியத்தையும் சிதைத்துவிடும் நடவடிக்கைகளில் பல சக்திகள் ஈடுபட்லாம் ஆனால் தமிழ் மக்கள் நிதானத்துடன் செயற்பட வேண்டும்.

கந்தகம் சுமந்து உடல் கூட மிஞ்சாது விடுதலைக்காய் துகள் துகள்களாகிப் போன மாவீரர்கள் மேல் இலட்சியம் நோக்கி பயணித்துக் கொண்டே இருப்போம் என்று சத்தியம் செய்ய வேண்டும்.

பசி மறந்து, நீர் மறந்து, தூக்கம் துறந்து, களமுனைகளில் காவல் கிடந்து விடுதலைக்காய் மரணம் கொண்ட மாவீரத் தெய்வங்கள் மீது எமது இலட்சியப்பயத்தில் இருந்து விலக மாட்டோம் என்று சத்தியம் செய்து கொள்ள வேண்டும்.


இறுதிக்கட்ட போரில் ஆவணப்படுத்தப்படாத அளவிற்கு மாவீரச்செல்வங்களையும் குழந்தைகளையும் பெரியோர்களையும் இழந்துள்ளோம். எல்லாருடைய தியாகங்களும் கனவுகளும் நனவாவதற்கு நாங்கள் இடைவிடாது பயணிக்க வேண்டும். மாவீர்கள் மேல் சத்தியம் செய்வோம். தமிழீழமே எங்கள் மூச்சென்று உரக்க கத்துவோம்.

மாவீரர்களின் கனவு நனவாக்க நாங்கள் எல்லோரும் இலட்சியம் நோக்கிய பயணத்தில் தீவிரமாக இறங்க வேண்டும். தேசிய விடுதலையை மையப்படுத்தி அறவளிப் போராட்டங்களில் சட்டரீதியான அணுகுமுறைகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் தமிழர் அமைப்புகளை வலுப்படுத்த வேண்டும். தமிழர்களின் குரல் வலுவானதாக சர்வதேச அரங்கில் ஒலிக்க வேண்டும். எமது நோக்கமும் விடுதலைக்கான தேவையும் சிறந்த வழியில் சர்வதேச அரங்கில் சொல்லப்ட்டடு பிராந்திய அரசுகளின் வல்லாதிக்க போக்கிற்கும் சிறிலங்கா அரசின் காட்டுமிராண்டித்தனமான போக்கிற்கும் முடிவுகட்டப்பட வேண்டும். பிரந்தியத்தில் தேவைப்படும் எமக்கான விடுதலை குறித்து முக்கியமான அனைத்து நாடுகளுக்கும் தெளிவுபடுத்தப்பட வேண்டும்.

ஆயுதப்போராட்டம் மெளனிக்கப்பட்டுள்ள நிலையில் ரரஜதந்திர ரீதியிலாக சட்டரீதியிலாக எமது போராட்ட முனைப்புகளை நகர்த்த வேண்டும்.தமிழ் தேசியத்திற்கான அணுகுமுறைகளை செய்து கொண்டிருக்கும் தமிழர் அமைப்புகளை இனம் கண்டு மக்கள் அவர்களுக்கு முழு ஆதரவையும் வழங்கி சர்வதேச ரீதியில் சட்டரீதியாக எமது விடுதலைப்போராட்டத்தின் தேவையை சென்றடைவதற்கு ஒத்துளைப்பு வழங்க வேண்டும்.

விடுதலைக்காய் தமது வாழ்வைத் தொலைத்து இத்தனை தூரம் விடுதலைப்பயணத்தை கொண்டு வந்துள்ள மாவீரச் செல்வங்கள் மீது சத்தியம் செய்வோம்... நாங்கள் எமது விடுதலை நோக்கிய பணயத்தில் இருந்து எள்ளளவும் விலகமாட்டோம் என்று.

விடுதலை வேண்டிய போராட்டத்தில் தம்மை ஆகுதியாக்கி கல்லறைகளில் உறங்கும் மாவீரத் தெய்வங்களிற்கு இந் நாளில் எமது வீரவணக்கங்களை செலுத்துவதோடு மாவீர்களின் கனவு நனவாக தொடர்ந்தும் பயணிப்போம் என உறுதி எடுப்போம்.
தமிழரின் தாகம் தமிழீழ தாயகம்

ஆதி
16-11-2011

Sunday, November 20, 2011

இன அழிப்பின் பின் பறிக்கப்படும் எஞ்சியிருந்த அதிகாரங்களும்

சிறிலங்காவில் தமிழினித்தின் மீது இந்திய அரசின் முழு ஆதரவோடு சிறிலங்கா அரசு திட்டமிட்டு மேற்கொண்ட இன அழிப்பின் பின் திரைமறைவில் எஞ்சியிருக்கும் அதிகாரங்கள் நிலங்கள் மற்றும் தமிழ் மக்களின் வரலாற்று இருப்புகளையும் மெதுமெதுவாக அழித்து வருகிறது சிறிலங்கா அரசு.

இந்த அரசியல் அழிப்பு பற்றி இந்திய தேசமோ மற்றைய தேசங்களோ அறிந்திராத விடையமல்ல ஆனால் இந்த வரலாற்று சிதைப்புக் குறித்து தமிழ் மக்கள் முழு வீச்சோடு இன்னமும் போராடவில்லை என்பதால் தான் சிறிலங்கா அரசிற்கு இலகுவாக தப்பித்து கொள்ளவும் தொடர்ந்து தமிழ்மக்கள் மீது அழிப்பை மேற்கொள்ளவும் இலகுவாக இருக்கின்றது என்பது வெளிப்படை உண்மை.

வடக்கு கிழக்கு பிரதேசத்தில் கோத்தாபாய, பசீல்ராஜபக்ஷ, நாமல்ராஜபக்ஷ உட்பட பல அமைச்சர்களினால் பறிக்கப்படும் தமிழர் நிலங்களும் இராணுவத்தினால் பலவந்தமாக கையகப்படுத்தப்படும் தமிழர் நிலங்களும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. வளம் மிக்க பிரதேசங்களை அரச அமைச்சர்கள் தமது சொந்த நலனிற்காக கையகப்படுத்துவதும் முக்கியம் வாய்ந்த நிலங்களை ராணுவம் கையகப்படுத்துவதுமாய் தமிழர் நிலங்கள் துண்டாடப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

நிலத் துண்ணடாடலில் இறங்கிய சிங்கள அரசு தமிழர் வரலாற்றை கூறும் சமய தலங்கள் ஞாபக சின்னங்கள் பழமைவாய்ந்த கட்டிடங்கள் என எல்லாவற்றையும் அழித்து வருகிறது. எல்லா கிராமங்களிலும் புத்தருக்கான அடிக்கல்கள் நாட்டப்பட்டுவருகின்றன. தமிழ் மக்கள் பின்னபற்றாத அல்லது வெறுக்கும் ஒன்றை தமிழ் மக்கள் மீது திணித்து வருகிறது சிறிங்கா அரசு.

தமிழ் மக்கள் மீது நிலப்பறிப்பும் சிங்கள கலாச்சார திணிப்பும் மேற்கொண்டுவரும் சிறிலங்கா அரசு சமாந்தரமாக தமிழர் தாயகப்பகுதியில் அரச அதிகாரிகளாக சிங்கள அதிகாரிகளை நியமிக்கும் வேலைகளில் இறங்கியுள்ளது. திருகோணமலையில் தொடங்கி மட்டக்களப்பு அம்பாறை யாழ்ப்பாணம் கிளிநொச்சி முல்லைதீவு வவுனியா என்று இன்று கடைசியாக மன்னார் வரை நீண்டிருக்கிறது சிங்கள அதிகாரிகளின் நியமனப்பட்டியல்.

தனிச்சிங்கள பிரதேசங்களாகிய காலி மாத்தறை அம்பாந்தோட்டை போன்ற பிரதேசங்களில் சாதாரண அரச வேலையாட்களாக கூட தமிழ் மக்களுக்கு நியமனங்கள் வழங்கப்படாத நிலையில் தமிழர்தாயகப் பகுதியில் சிங்கள அதிகாரிகளின் நியமனத்தின் பின்னால் பெரும் எதிர்காலத்திட்டம் இருக்கிறது.
1) அந்த அதிகாரியுடன் உறவை பேணுவதற்கு அல்லது வேலையை இலகுவாக செய்வதற்கு கட்டாயம் சிங்கள மொழியை கற்க வேண்டும்.

2)அரச அதிகாரியாக சிங்களவர் இருக்கும் பட்சத்தில் அவர் சார்ந்த கலாச்சார நிகழ்வுகளை கட்டாயம் அலுவலகங்களில் கொண்டாட வேண்டும்.

இது போல் நிறைய. இவை பார்பதற்கு சாதாரணமாக தெரிந்தாலும் இதன் தாக்கம் எதிர்காலத்தில் பெரும் விளைவை கொண்டுவரும். தமிழ் மக்கள் மீது கட்டாயம் சிங்களம் படித்தே ஆகவேண்டும் என்ற ஆதிக்க வெறியை காட்டுகிறது சிறிலங்கா அரசு.

வருடாவருடம் எத்தனையோ ஆயிரம் தமிழ் பட்டதாரிகள் பல்கலைக்கழகங்களில் இருந்து வெளியேறியும் தமிழ் பிரசேங்களிற்கு சிங்களவர்களை நியமித்தல் என்பது அரச அடக்குமுறையின் வடிவம் ஒன்று.

தவிர யாழ்பல்கலைக்கழகத்தின் செயற்பாடுகளையும் யாழ்பல்கலைக்கழகத்திற்கு தமிழ் சமூகத்தின் விடுதலை போராட்டத்தில் இருக்கும் பங்களிப்புகளையும் சிதைப்பதற்கு சிறிலங்கா அரசு இராணுவ புலனாய்வு துறையினர் மற்றும் ஈபிடிபி கருணாகுழு போன்ற துணைராணுவ குழுக்கள் மும்மரமாக செற்பட்டுக் கொண்டிருக்கின்றனர். யாழ் பல்கலைக்கழகத்திற்கு வந்துள்ள சிங்கள மாணவ மாணவிகள் யாழ் படையதிகாரிகளின் உறவினர்களாகவோ அல்லது நெருங்கிய உறவு வைத்திருப்பவர்களாகவோ இருப்பது சந்தேகத்திற்குரியது. இவர்களின் உறவு நிலையினால் யாழ் பல்கலைக்கழகத்தை சுற்றி எப்பொழும் சிறிலங்கா ராணுவத்தின் பிரசன்னம் இருப்பது தமிழ் மாணவர்களை ஒருவித அச்ச சூழ்நிலையில் வைத்திருக்கின்றது என்றே சொல்லலாம். அது போக யாழ்பல்கலைகழக மாணவர் ஒன்றிய பிரதிநிதிகள் மிரட்டப்படுவதும் தாக்கப்படுவதுமாய் தொடர்கிறது சிறிலங்கா அரசின் அரசியல் இனவெறியாட்டம்.

தமிழ் அரசியல்வாதிகளின் பலமற்ற அரசியல்
சிறிங்காவை பொறுத்தவரை ஆழும்தரப்பிலும் எதிர்த்தரப்பிலும் தமிழ் அரசியல்வாதிகள் இருக்கிறார்கள். ஆனால் இவர்கள் யாராலும் தமிழ் மக்களை ஒழுங்குபடுத்தவா வழிகாட்டவோ பலமற்றவர்களாகவே இருக்கின்றனர்.

தமது அரசியல் இருப்பிற்காக அரசுடன் இணைந்து துணைராணுவ குழுக்களாக செற்படும் ஈபிடிபி டக்களஸ் தேவாந்தா உட்பட்ட அரச அமைச்சர்கள் தமிழ் மக்களின் உரிமைகள், பறிக்கப்படும் நிலங்கள், சிதைக்கபடும் வரலாறுகள் குறித்து எந்த விமர்சனமும் அற்று வழமைபோல் இருக்கிறார்கள் அல்லது வழமைபோல் இவர்களும் சேர்ந்து தான் எல்லா அழிப்புகளையும் இப்பொழும் செய்து கொண்டிருக்கிறார்கள்.

தமிழ் தேசிய கூட்டமைப்பையோ அல்லது தமிழ் காங்கிரஸ்சையோ பொறுத்தவரையில் தமிழ் மக்களுடன் உறவுநிலை அற்றவர்களாகவே காணப்படுகின்றனர். தமிழ் மக்களின் பிரச்சினைகளை அறிந்து அதற்கான போராட்டங்களை ஒழுங்குபடுத்த கூடிய நிலையில் இவர்கள் நிலை இல்லை.

ராஜதந்திர நிலைப்பாடுகள் காரணமாக தமிழ் தேசிய கூட்டமைப்பு அரசுடன் பேசும்விடையங்கள் குறித்து மக்களுக்கு வெளிப்படையாக சொல்லாது போனாலும் தமிழ் மக்களின் பிரைச்சனைகளுக்கு தொடர்ச்சியாக சட்ட ரீதியிலான அழுத்தங்களை கொடுக்க தவறுகிறது என்று சொல்ல வேண்டியிருக்கிறது. தவிர நாடாளுமன்ற தேர்தலில் பங்கெடுத்த தமிழ் காங்கிரஸ்சும் இன்று தமிழ் மக்கன் முன்னிலையில் தமிழ் மக்களுக்கான அரசியலையோ அல்லது தமிழ் மக்களின் பிரச்சினைகளை சட்டரீதியாக எப்படி கையாளலாம் என்பது குறித்தோ செயற்படுவதாக தெரியவில்லை.

இப்படிப்பட்ட பலமற்ற தமிழ் அரசியல் நிலமை காரணமாக சாதாரண சிங்கள அதிகாரிகளும் தமிழ் மக்களை மிரட்டி வைக்க கூடிய துர்ப்பாக்கிய நிலை காணப்படுகிறது.

புலம்பெயர் தமிழர்களே!!
சிறிலங்கவை பொறுத்தவரையில் சட்டரீதியாக நீதிமன்றத்தில் எதையும் எதிர்பார்க்க முடியாத துர்ப்பாக்கிய நிலை காணப்படுகிறது. தீர்ப்புகளை வழங்கிய பின் தமது தீர்ப்புகள் குறித்து தாமே ஆட்சேபனை தெரிவிக்கும் நிலையில் தான் நீதிபதிகள் கட்டுப்படுத்தபட்டுள்ளனர். பெயரளவில் கட்டப்பட்டுள்ள சிறிலங்கா நீதிமன்றங்களும் சிறிங்கா சட்டமும் தமிழ் மக்களுக்கு நீதியை பெற்று தரும் என்று நம்பவில்லை.

தமிழ் மக்கள் மீதான அரசியல் மற்றும் வரலாற்று அழிப்புகள் குறித்து சர்வதேச ரீதியில் பதிவு செய்து சர்வதேச மக்கள் முன்னிலையில் நீதி கேட்க வேண்டிய கட்டாயத்தில் நாங்கள் இருக்கிறோம். சிங்கள அரசிடம் இருந்து ஏன் விடுதலை எமக்கு வேண்டும் என்பதை ஆணித்தரமாக சொல்வதற்கு சிறிலங்கா அரசு செய்துவரும் உரிமை மற்றும் வரலாற்று அழிப்புகள் குறித்து பதிவு செய்துவருவது கட்டாயமானது.

போர்க்குற்றங்கள், தமிழ் மக்கள் மீதான மனித உரிமை மீறல்கள், போருக்கு பின் தமிழ் மக்கள் மீது கட்டவித்துவிடப்பட்டுள்ள அழிப்பு அரசியல்கள் குறித்து சர்வதேச ரீதியில் அரசியல் மற்றும் மனித உரிமை ஆர்வலர்களிடம் முறைப்பாடுகள் செய்ய வேண்டும்.

தொடர்ச்சியாக நாங்கள் செய்யும் முறைப்பாடுகளும் அழுத்தங்களும் நிட்சயமாக ஒரு முடிவை நோக்கி நகர்த்தும் என்பதில் சந்தேகமில்லை.

விடுதலைப்புலிகளை விமர்சித்தல் என்பதனூடாக சிறிலங்கா அரசின் அராஜகங்களை மறைத்துவரும் ஒரு சில தமிழ் அமைப்புகளும் புலம்பெயர் மக்கள் மத்தியில் இருப்பது கவலைக்குரியவிடையம். இது குறித்து மக்கள் தெளிவாக இருக்க வேண்டும். வரலாற்று கடமையை ஏற்று ஒன்றுபட்ட தமிழ் இனமாக விடுதலைக்கான பணி செய்ய வேண்டும். ஈழத்தில் தமிழ் மக்கள் படும் துன்பங்களை சர்வதேச அளவில் கொண்டு செல்ல வேண்டும்.

தமிழ் மக்களின் விடுதலைக்காய் தமது இளமையை தொலைத்து உறவுகளை தொலைத்து  உயிர்களை ஆகுதியாக்கி மாவீரர்களாக கல்லறைகளில் தூங்கும் தெய்வங்களின் கனவுகள் நனவாகும் வரை நாங்கள் பல வழிகளிலும் போராடிக் கொண்டிருக்க வேண்டும்.

பிராந்திய வல்லாதிக்கங்களின் சிங்கள பக்கச்சார்பு நிலை அதிகரித்துவரும் இந்நிலையில் புலம்பெயர் தமிழ்கள் ஒன்று திரண்டு தமிழ் இனமாக பெரும் பலத்தோடு போராட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அரசியல் நிலைகளை ஆராய்ந்து சமகாலத்தில் தமிழ் மக்களின் பலம் எப்படியிருக்கிறது என்பதை உணர்ந்து ஒன்றுபட்ட இனமாக புலம்பெயர் தமிழ் மக்கள் செயற்பட வேண்டும். ஈழத்தில் தமிழ் மக்களின் நிலை எதுவென்று உங்களுக்கு தெரியும். இந்த நிலையில் ஈழத்து தமிழ் மக்களால் எதுவும் செய்ய முடியாத அளவிற்கு நொந்து கிடக்கின்றனர். தமிழ் தேசியத்திற்காக போராடும் எல்லா புலம்பெயர் தமிழ் மக்கள் அமைப்புகளும் குழு அரசியல்களை கடந்து ஒன்றுபட்ட இனமாக செயற்பட வேண்டும்.

மூலம் : http://aathithyank.blogspot.com/2011/11/blog-post.html
ஆதி
16-11-2011

Blog template by simplyfabulousbloggertemplates.com

Back to TOP