Powered by Blogger.

Monday, March 28, 2011

உள்ளுராட்சி தேர்தல்- மீண்டும் மீண்டும் தமிழ் மக்கள் சொல்லும் பதில்


தமிழ் மக்களின் மனநிலை மாறிவிட்டது தமிழ் மக்களின் அரசியல் நிலைப்பாடு மாறிவிட்டது என்று கூப்பாடு போட்டு திரிந்தவர்களுக்கு மீண்டும் ஒருமுறை தமிழ் மக்கள் வழங்கிய பதிலே உள்ளுராட்சி தேர்தல் முடிவுகள். அதிலும் குறிப்பட்ட விகித தமிழ் மக்கள் தேர்தலை புறக்கணித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது. அதுபோக கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாணத்தில் தேர்தலை இடை நிறுத்துவதில் அரசு வெற்றி கண்டதையும் இங்கு ஞாபகப்படுத்தியாக வேண்டும்.

தமிழ் மக்களை பொறுத்தவரை விடுதலைப்புலிகளின் அரசியலை தவிர்த்த எந்த அரசியலும் நிதந்தர விடிவைத் தராது என்பதில் குறியாய் இருக்கிறார்கள் என்று பல தடவை நிரூபித்துவிட்டார்கள். சலுகை அரசியல்களும் சுகபோக வாழ்வாதாரங்களுக்கும் அப்பால் அரசியல் நிலைப்பாடு என்பது வித்தியாசமானது என்பதை திரும்ப திரும்ப கூறிவருகிறார்கள். ஆயுதப்போராட்டத்தின் பரிமானங்களில் இறுதி கால நிகழ்வுகள் மக்களை விடுதலைப்புலிகளிடம் இருந்து பிரித்துவிட்டது என்று அரசியல் கனவு கண்டு மக்களை திசை திருப்ப முனைந்தவர்களுக்கு போருக்கு பின்னரான இரண்டு தேர்தல்களிலும் மக்கள் சாட்டையடிகா தமது பதிலை வழங்கியிருக்கிறார்கள். அரசு செய்யும் சலுகைகளை ஏற்றுக் கொள்ள வேண்டும்  காரணம் அது அரசு மக்களுக்கு செய்ய வேண்டிய கடமை. ஆனால் அரசின் சலுகைகளை பெறுவதென்பது தமது அரசியல் நிலைப்பாட்டை இல்லாது செய்து அரசிடம் மண்டியிடுவதல்ல என்பதை தெளிந்த மனிநிலையோடு மக்கள் நிரூபித்திருப்பது,விடுதலைப்புலிகள் மீதும் தமிழின விடுலை மீதும் நம்பிக்கை வைத்து களத்தில் நிற்கும் மக்கள் உலகிற்கு சொல்லியிருக்கும் செய்தி.

தமிழினத்தின் பல அரசில் கட்சிகள் இணைந்த தமிழ் தேசிய கூட்டமைப்பை விடுதலைப்புலிகள் ஆதரத்தார்கள் என்பது அவர்கள் கொள்கையில் விடுதலைப்புலிகள் வைத்திருந்த நம்பிக்கை. விடுதலைப்புலிகள் காரணமின்றி தமது ஆதரவு நிலைப்பாட்டை  தெரிவிக்க மாட்டார்கள் என்பதை மக்கள் தெளிவாக புரிந்து வைத்திருப்பதென்பது விடுதலைப்புலிகளின் அரசியல் மேல் மக்கள் வைத்திருக்கும் அளப்பரிய மதிப்பும் உயிரிலும் மேலான நம்பிக்கையும் தான். அரசுடன் இணைந்திராத இந்த கூட்டமைப்பு தமக்கு சலுகைகளை பெற்றுத்தரமாட்டார்கள் என்பதை நன்றாகவே தெரிந்து வைத்திருந்தும் தமிழ் கூட்டமைப்பை மக்கள் வெற்றி பெறச் செய்ததென்பது மக்களின் உள்மனக்கிடைக்கைளின் வெளிப்பாடு. புலம் பெயர் தமிழர்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பினூடாக தமது கட்டுமானத்தில் பங்களிப்பார்கள் என்ன நம்பிக்கை தான் களத்தில் இருக்கும் மக்களை போராட்டத்தில் சோரவிடாது வைத்துள்ளது.

மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி பேசிய அரசியல் கட்சி இன்று தனது சொந்த நிலத்தில் தனியாக போட்டியிட முடியாத நிலைக்கு சிறிலங்கா அரசு தள்ளியிருக்கிறது. சிறிலங்கா அரசு தள்ளியிருக்கிறது என்பதற்கப்பால் அவர்களால் தமிழ் மக்களிடம் தனியாக நின்று அரசியல் பேசும் தைரியம் இல்லை என்பதோடு அவர்களிடம் தமிழ் மக்களின் உரிமைப்பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்றுத்தருவதற்கான தகுதி இல்லை என்பதை மக்கள் தெளிவாக புரிந்து வைத்துள்ளார்கள். ஆளும் வர்க்க அதிகாரத்தினால் ஆயுத முனையில் சில தலமைப்பதவிகளை பறித்து வைத்தபடி இந்த அரசியல் கட்சிகளும் ஆளும் வர்க்கமும் செய்யும் அராஜகங்களை சொல்லமுடியாது தவிப்பதை தேர்தலூடாக மக்கள் வெளிப்படுத்தியிருப்பதாகவேபடுகிறது. யாழ் மாநகர சபையில் ஈபிடிபியும் சிறிலங்கா அரசும் மேற்கொண்டு வரும் அராஜக போக்கு இதற்கு சிறிய உதாரணம். தவிர வன்னிப்பகுதியில் சிவில் நிர்வாக அனுமதிகளுக்கு முதல் ராணுவ அனுமதிகள் தேவையென்பதும் ராணுவ பிரசன்னம் முக்கியம் என்பதையும் ஆக குறைந்தது தட்டிக்கேட்க கூட முடியாதவர்களெல்லாம் தமிழ் மக்களிடல்தில் அரசியல் செய்வதை என்னவென்று சொல்ல தெரியவில்லை.

சிறிலங்கா அரசின் இன்றைய நிலைப்பாடு

சிறிலங்கா அரசு இன்று தமிழ் மக்களின் அரசியல் நிலைப்பாட்டை சிதைப்பதற்கு பல வழிகளில் முயற்சித்து வருகிறது. சலுகைகளை வழங்குதல் மக்கள் ஆதரவாக செயற்படுவது போல் காட்டிக் கொள்ளல் இப்படி பல முகங்களோடு களம் இறங்கியும் தமிழ் மக்கள் அந்தந்த முகங்களை கண்டுபிடித்து தேர்தலில் பதிலளித்துக் கொண்டிருக்கிறார்கள். இதனால் எப்படி தமிழ் மக்களின் அரசியல் நிலைப்பாட்டை சிதைப்பது என்று தெரியாமல் திணறிக் கொண்டிருக்கிறது அரசு.

இதன் அடிப்படையில் தான் இன்று எழுத்தாளர்களினூடாக அரசு மாபெரும் உளவியல் அரசியலை நடாத்திக் கொண்டிருக்கிறது. அதாவது நடுநிலை எழுத்தாளர்கள் போன்று செயற்படுவதற்கு பல எழுத்தாளர்களளை விலைக்கு வாங்கியுள்ளது அல்லது உக்குவித்து வருகிறது. சிறிலங்கா அரசை விமர்சிக்கும் அதேவேளை விடுதலைப்புலிகளை தாறுமாறாக விமர்சிக்க வேண்டும். சிறிலங்கா அரசை விமர்சிக்குமிடத்து தமிழ் தேசியத்தின் பால் பற்றுள்ள ஒருவனுக்கு அந்த எழுத்தாளன் மேல் நம்பிக்கை வரும்..அதே நேரம் விடுதலைப்புலிகளையும் தாறுமாறாக விமர்சிக்கும் பொழுது விடுதலைப்புலிகள் பற்றிய பொய்களையும் அவர்களுக்கெதிரான கருத்துகளையும் உள்வாங்கி கொள்ளவேண்டிய மனநிலை அதை வாசிப்பவர்களுக்கு உருவாகும். இதனூடாக நாளடைவில் விடுதலைப்புலிகளின் அரசியல் நிலைப்பாட்டில் மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை ஆட்டம் காணச் செய்து விடுதலைப்புலிகள் பற்றியதான அரசியலை தமிழ் மக்களிடம் இருந்து அகற்றிவிடலாம் என்று சிறிலங்கா புலனாய்வுத்துறையும் அரசியல் அனுமானிகளும் பெரிதாக நம்புகிறார்கள். அந்த அடிப்படையில் தான் இன்று "சிறிலங்கா அரசு தமிழ் மக்கள் மீது வன்முறையை கட்டவிழ்த்தது...  அதற்கு காரணம் விடுதலைப்புலிகள்" தான் என்பதும்... விடுதலைப்புலிகளின் தலைமை தவறு செய்தது என்பதும். விடுதலைப்புலிகள் மீது அவதூறு செய்து எழுத்து உலகில் ஒரு சலசலப்பை உருவாக்கி ஊடகங்களினூடாக தமது நீண்ட கால அரசிலை செய்து விடுதலைப்புலிகள் பற்றிய அரசியலை தமிழ் மக்களிடம் இருந்து அகற்றிவிடலாம் என்று சிறிலங்கா அரசு பெரிதாக நம்பி வருகிறது. இது களத்தில் நிற்கும் மக்களிடம் செல்லுபடியாகாது என்ற உண்மையை ஒவ்வொரு தேர்தலிலும் மக்கள் சொல்லிவருவது இவர்களுக்கு பெரிய அவமானமே.


"பெடியள் இருந்தா இந்த ஆட்டம் ஆடுவினமோ" என்று தமிழர் பிரதேசங்களில் முணுமுப்புகள் இருந்து கொண்டே இருக்கிறது. இதுதான் விடுதலை குறித்த அரசியல்.இதுதான் விடுதலைப்புலிகளுக்கு மக்கள் வழங்கிய அங்கிகாரம்...விடுதலைப்புலிகளின் அரசியல் மீது தியாகங்களின் மீது இலட்சிய கொள்கை மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையும் மரியாதையும். பேச்சிற்கு வந்து தீர்வை வழங்காத வரை மக்கள் தமது பதிலை சொல்லிக் கொண்டே இருப்பார்கள். எல்லா நேரமும் ஒரே பாணியில் தான் பதில் அளிப்பார்கள் என்று எதிர்வு கூற முடியாது. போராட்டங்களின் பாதையை காலம் தான் தீர்மானிக்கிறது.

ஆதி
25-03-2011

No comments:

Post a Comment

Blog template by simplyfabulousbloggertemplates.com

Back to TOP