Powered by Blogger.

Friday, March 4, 2011

விடுவிக்கப்பட்ட போராளிகள் - சமூகத்தில் பின்தள்ளப்படும் கதை

இன்று விடுவிக்கப்பட்டும் போராளிகள் சமூகத்தில் பின் தள்ளப்படுவதாகவும் அதனால் சமூக மற்றும் வாழ்வாதரப் பிரச்சினைகள் அந்த போராளிகளுக்கு ஏற்பட்டுள்ளதாகவும் சிறிலங்காவின் ஆதரவுக் கூலிகள் முதலைக் கண்ணீர் வடிக்க ஆரம்பித்துள்ளன. இந்த விடையங்களை நாங்கள் நிதானமாகவும் விரைவாகவும் கையாள வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.

தமிழீழ விடுதலைப்போராட்டத்தில் தமது உயிர்களை துச்சமென மதித்து போராடிய அனைத்து வீரர்களுமே மரியாதைக்குரியவர்கள் என்பதை எந்த சமூகமும் மறந்துவிடக் கூடாது. தமது அவயங்களை இழந்து தமது வாழ்க்கையின் பல முக்கிய படிகளை இழந்து இன்று தமிழ் மக்களின் போராட்டம் உலகமயப்படவதற்கு களத்தில் நின்ற போராளிகள் தான் முக்கிய காரணம் என்று சொன்னால் மிகையாகாது.

விடுதலைப்புலிகளின் தலைமைப்பீடத்தின் கட்டளைகளுக்கமைய செயற்பட்டு சரணடைந்த பல போராளிகள் சர்வதேச விதிகளுக்கு மாறாக சிறிலங்கா அரச படகளால் சுட்டுக் கொல்லப்பட்டனர். அது போக சில ஆயிரம் போராளிகளையே முகாம்களில் அடைத்து புனர்வாழ்வு என்ற பெயரில் பல திணிப்புகள் மற்றும் மன உழைச்சல்களுக்கு உள்ளாக்கி பின் அவர்களின் கண்காணிப்பில் வெளியில் விடப்படுகின்றனர். அவர்களில் சிலர் நேரடியாக சிறிலங்கா புலனாய்வு துறையினரின் கட்டுப்பாட்டில் இயங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ள போதும் பலர் இயல்பு வாழ்க்கைக்கு திரும்புவதற்கு சந்தர்ப்பம் கொடுக்கப்ட்டுள்ளது. இந்த சந்தர்ப்பத்தில் அந்த போராளிகளுக்கு எம்மால் இயன்ற வழிகாட்டல்கள் மற்றும் சந்தர்பங்களை உருவாக்கி கொடுக்க வேண்டும். வீரியம் மிக்க நாற்றுகள் அவர்கள். தயா மாஸ்டர் உட்பட பல ஊடக புள்ளிகள் வெளிப்படையாகவே தமிழ் இன விடுதலை போருக்கு எதிராக செயற்பட்டுக் கொண்டிருப்பதனால் அவர்கள் குறித்து எந்த அக்கறையும் கொள்ள தேவையில்லை. சாதாரண போராளிகளாக களமாடி தமது வாழ்வை தொலைத்த போராளிகள் பற்றி நாம் சிந்திக்க வேண்டும்.

விடுதலைப்புலிகள் மேல் மக்களுக்குள்ள அன்பு விடுவிக்கப்படும் போராளிகளை அரவணைக்க தூண்டியது. இந்த சந்தர்பத்தில் தான் சிறிலங்கா அரசும் சில ஒட்டுக் குழுக்களும் தமது கைங்கரியங்களை காட்ட ஆரம்பித்தனர். விடுவிக்கப்படும் போராளிகளில், கரிசனை உள்ள மக்களை நேரடியாகவும் மறை முகமாகவும் மிரட்டினர். சிலர் கொலை கூட செய்யப்ட்டனர். விடுவிக்கபட்ட போராளிகளை சமூகத்தில் இருந்து ஓரங்கட்டி விடுதலைப் புலிகள் மேல் வெறுப்பு ஏற்படச் செய்வதற்கான உளவியல் நடவடிக்கைகளை எதிரி விடுவிக்கப்பட்ட போராளிகள் விடையத்தினூடாக செலுத்தும் உத்தியை கண்டு பிடித்துள்ளான். விடுதலைப்புலிகளை பழி கூறும் ஊடக மற்றும் இலக்கிய யுத்தத்தை பல புலம்பெயர் எழுத்தாளர்களினூடு ஆரம்பித்துள்ளான். அதற்காக பிரித்தானியா உட்டபட பல இடங்களில் இருந்து சில எழுத்தாளர்களை கூட்டி ஊக்கப்படுத்தி அனுப்பி வைக்கப்ட்டுள்ளனர்.

இந்த சதி யுத்தத்தில் மாண்டு போகாது விடுவிக்கப்படும் போராளிகளின் வாழ்வியலை எப்படி வளமாக்க முடியும் என்று உள்நாட்டு மற்றும் புலம் பெயர் மக்கள் சிந்திக்க வேண்டும். விடுவிக்கப்படும் போராளிகளுக்கு நேரடியாக புலம் பெயர் தமிழர்கள் தொடர்பேற்படுத்தி தம்மால் இயன்ற உதவிகளை செய்து அவர்களை வளப்படுத்துவது பாதுகாப்பு பிரச்சினை என்று கருதினால், நிறுவனங்களினூடாக பொது அமைப்புகளினூடாக செய்யவேண்டும். எமது குரல்கள் புலத்தில் பலமாய் ஒலிப்பதற்கு களத்தில் ரத்தம் சிந்திய போராளிகளை கைவிடமுடியாது அவர்கள் குறித்த அக்கறையின்மை என்பது எமது போராட்டத்தை நசுக்குவதற்கு ஒப்பானது. புலிஎதிர்பு கோசங்களுக்கு விலைபோய் தமிழீழ தாகத்தை இல்லாது செய்து தமிழர் இரண்டாம் தரப்பு பிரஜைகள் அவர்களுக்கு உரிமை தேவையில்லை என்ற சிறிலங்கா அரச செயற்பாட்டிற்கு பக்க பலமாக மாறியிருக்கும் பழைய புலி உறுப்பினர்கள் குறித்து நாம் எந்த அக்கறையும் கொள்ள தேவையில்லை. விடுதலைப்புலிகள் அமைப்பில் பெரிய பொறுப்புகளில் இருந்து களம் சந்திக்காது வாழ்ந்த சில ஈனப்பிறவிகளே இன்று களத்தில் நின்ற புலிகளை வேட்டையாட புறப்பட்டுள்ளனர். பத்திரிகை ஆசிரியர்களாகவும் ஒட்டுக்குழுக்களின் சில பொறுப்பாளர்களாகவும் உருவெடுத்துள்ள இவர்கள் களத்தில் நின்ற எம் போராளிச் செல்வங்களை ஓரங்கட்டுவதற்கு கங்கணம் கட்டி நிற்கின்றனர். இதற்கு மக்கள் இடம் அளிக்க கூடாது. வேலையின்றி இருக்கும் விடுவிக்கப்ட்ட போராளிகளுக்கு வழிகாட்ட வேண்டும். நம்பிக்கை தரவேண்டும். இதற்கு உடனடியாக செயலில் இறங்க வேண்டும் என அனைவரிடமும் உரிமையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

விடுதலைப்புலிகளின் செய்தி மற்றும் இலக்கிய ஊடகப்பிரிவுகள் விளையாட்டுப் பிரிவுகள் என பெரிதளவில் களம் சந்திக்காது இயல்பாக வாழ்ந்த சில ஈனப்பிறவிகள் தான் இன்று சிங்கள படைகளுடனும் ஒட்டுண்ணிகளுடனும் இணைந்து விடுவிக்கபட்ட போராளிகளையும் அவர்களுக்கு உதவுபவர்களையும் வேட்டையாடி விடுதலைப்புலிகள் பற்றிய அரசியல் நிலைப்பாட்டை தமிழ் மக்களிடம் இருந்து அகற்றுவதற்கு மாபெரும் உளவியல் சதியுத்தம் செய்து கொண்டிருக்கின்றனர் என்பதை ஞாபகம் வைத்துக் கொண்டு களமுனையில் ரத்தம் வியர்வை சிந்தி போராடி அங்கங்களை இழந்தும் வாழ்வினை தொலைத்தும் அல்லலுறும் விடுவிக்கப்பட்ட போராளிகளுக்கு உடனடியாக உதவ அனைவரும் கை கோர்க்க வேண்டும்.

ஆதி
05-03-2011

No comments:

Post a Comment

Blog template by simplyfabulousbloggertemplates.com

Back to TOP