Powered by Blogger.

Wednesday, December 31, 2014

சிறிலங்கா ஜனாதிபதி தேர்தலும் தமிழர் தரப்பு அரசியலும் - இது மோசமான விமர்சனமாக கூட இருக்கலாம்

2015 இல் நடைபெற இருக்கும் சிறிலங்கா ஜனாதிபதி தேர்தல் குறித்து வடக்கு கிழக்கு தமிழீழ மக்களுக்கு மூன்றுவிதமான கோரிக்கைகள் விடப்பட்டிருக்கின்றன:

அ) தேர்தலை புறக்கணிக்க வேண்டும் - தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி (தமிழக மே17 அமைப்பு உட்பட சில பிரமுகர்களும் இந்த கோரிக்கையை விடுத்திருப்பதாக அறிய முடிகிறது)

ஆ) தேர்தலில் இருவருக்கும் வாக்களித்து சிறிலங்கா வாக்குரிமையை செல்லுபடியற்றதாக மாற்ற வேண்டும் - சிவில் சமூகம்

இ) மைத்திரி தலமையிலான கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும் - தமிழ்த் தேசிய கூட்டமைப்பு


இந்த மூன்று தரப்புகள் குறித்து பேசுவதற்கு முன்னர் இன்றைய காலகட்டத்தில் ஒட்டுமொத்த தமிழீழ மக்களிடையில் (மண்ணில் இருக்கும் மற்றும் புலம்பெயர்)  காணப்படும் அரசியல் தளங்கள் குறித்து நுணுக்கமாக பார்க்க வேண்டும்

1) 2009 ற்கு முன்னரே புலத்தில் செயற்பட்டுவந்த அமைப்புகள். - இந்த அபை்பில் இன்று தலமையில் இருப்பவர்கள் போரை சாக்காக வைத்து விடுதலைப்போராட்டத்தில் நேரடியாக பங்களிப்பு செய்யாமல் சுயபாதுகாப்பிற்காக நாட்டைவிட்டு தப்பி ஓடி குடும்பங்களுடன் இருப்பவர்கள். (தமிழக அமைப்புகளும் பெரும்பாலும் இந்த புலம்பெயர் அமைப்புகளுடன்தான் தொடர்பில் இருந்து வேலை செய்கின்றன)


2) 2009ற்கு பிறகு புலம்பெயர்ந்து சென்ற போராளிகள் மற்றும் மக்கள் - இவர்கள் மீது சந்தேகத்தை உருவாக்கி புலம்பெயர் அமைப்புகள் இவர்களை உள்வாங்குவதை தவிர்த்து வருகிறது


3) ஆண்டாண்டு கால போரை தங்களின் தோழ்களில் சுமந்தபடி இன்னமும் மண்ணில் இருக்கும் மக்கள் - இவர்கள் தங்களுக்கு யார் சரியென்று தெரிகிறார்களோ அவர்களையே தங்கள் பிரதிநிதியாக தெரிவு செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள்.
..............................................................................................................................................
1) 2009 ற்கு முன்னரே புலத்தில் செயற்பட்டுவந்த அமைப்புகள்
இதில் முதலாவது தரப்பு அதாவது விடுதலைப்புலிகள் தமிழீழப் பரப்பில் நிர்வாகத்தில் இருந்த வேளையில் குடும்பத்தோடு புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் குடியுரிமைபெற்று வாழும் இன்றைய அமைப்புகளின் தலைவர்கள் மற்றும் அவர்களுடன் பணியாற்றுபவர்கள் தமிழீழ விடுதலைக்கு தமது உடல் ரீதியான எந்த பங்களிப்பும் செய்யப்போவதில்லை.

விடுதலைப்புலிகள் நிர்வாகத்தில் இருந்து விலகிய பின்னர் புலம்பெயர் நாடுகளில் அந்தந்த நாட்டு சட்டதிட்டங்களை மதிக்காமல் வன்முறைகளை மேற்கொண்டு காட்டிக் கொடுப்புகளை செய்து அதிகாரப் போக்கில் சண்டைகள் போட்டு வெளிநாடுகள் மத்தியில் அமைப்புகள் குறித்த நல்ல பார்வையை இல்லாமல் செய்ததில் முக்கிய பங்கு வகிக்கிறார்கள்.

எந்தவொரு கட்டுக்கோப்புமற்று புலம்பெயர் தமிழர் அமைப்புகளின் பெயர்களை சொல்லி கோஸ்டி மோதல் பணப்பறிப்பு என அந்ததந்த நாடுகளில் காவல் துறைகளிடம் நல்ல பெயர் இல்லாமல் செய்தது மட்டுமல்லாது தமிழ் நாட்டு செயற்பாட்டாளர்களையும் தத்தமது விருப்பு வெறுப்புக்கேற்றவாறு பிரித்ததில் இந்த அமைப்புகளை சேர்ந்தவர்களுக்கு முக்கிய பங்கு இருக்கிறது.

இவர்களைப் பொறுத்தவரை சிறிலங்காவில் நடந்து கொண்டிருக்கும் அரசியின் அறிவானது செய்திகளில் படிப்பது மட்டுமே. முள்ளிவாய்க்கால் அவலம் நடந்து இன்று 5 வருடம் கடந்துவிட்ட நிலையில் புலம்பெயர் தளத்தில் தமிழீழ விடுதலை நோக்கி ஒரு எப்பனும் நகர்த்தப்படவில்லை.

தமிழீழ விடுதலைக்காய் தமது நாடுகளில் அரச மட்டங்களில் அழுத்தங்களையோ அல்லது விளக்கங்களையோ கொடுக்கும் அளவிற்கு நுண்ணறிவற்ற செயற்பாடுகளே காணப்படுகின்றன. தமிழீழ விடுதலையில் முழுவீச்சான அக்கறை கொண்ட நபர்கள் புறந்தள்ளபட்டு வெறும் பதவி தக்கவைப்பாளர்களே இன்று அந்த அமைப்புகளில் இருப்பதாக தெரிகிறது.

மாவீரர் நாள் எழுச்சி நிகழ்வுகளில் சம்மந்தமே இல்லாத பிற கலாச்சார இசை பிற கலாச்சார நிகழ்ச்சிகள் என தங்கள் வாழ்வு முறைமைக்கேற்றவாறு தமிழீழ நிகழ்வுகளை மாற்றியமைக்கப்பழகிவிட்டார்கள். இவர்கள் ஒருபோதும் தமிழீழ விடுதலைக்காய் தங்கள் பிள்ளைகளை போராட அனுப்பபோவதோ இல்லை தாங்களே இங்கு வந்து போராடப்போவதோ இல்லை.

ஜனாதிபதி தேர்தல் என்பது என்னவென்றே தெரியாதவர்கள் அதை புறக்கணிக்கும்படி கோருவது ஒன்றும் அதிர்ச்சிகரமான செய்தி இல்லை.


2) 2009ற்கு பிறகு புலம்பெயர்ந்து சென்ற போராளிகள் மற்றும் மக்கள் -

இவர்களை முதல்கூறிய அமைப்பினர் ஒதுக்கி வைத்துள்ளார்கள். 2009ற்கு பிறகு சென்றவர்கள் விடுதலைப்புலிகளின் தலமையின் நோக்கம் மற்றும் விடுதலையில் எப்போதும் உறுதியான நிலைப்பாடு காணப்படுவதாகவும். புலம்பெயர் அமைப்புகளின் உள் கூத்துகளை சகித்துக் கொள்ள கூடிய மனநிலையில் இல்லாதிருப்பதாலும் இவர்கள் மீது புலம்பெயர் அமைப்புகளுக்கு நல்ல அபிப்பிராயம் இல்லை. இவர்கள் பதவிக்கு வந்தால் தங்களின் பெயர் கெட்டுப்போய்விடுமோ என்ற அச்சமே தவிர தமிழீழ விடுதலைகுறித்த அக்கறை கிடையாது.

2009 ற்கு பிறகு புலம்பெயர்ந்த போராளிகள் மற்றும் மக்களிடம் சரியான சிந்தனை இருந்தாலும் அவர்களிடம் புலம்பெயர் தமிழர் அரசியல் செய்வதற்கு பணமும் பதவியும் இல்லை. எதிர்காலத்தில் ஆயுதப்போராட்டம் சாத்தியப்பட்டால் இவர்கள் இணைந்து கொள்வதற்கான சாத்தியங்கள் நிறையவே இருக்கலாம்.

 3) ஆண்டாண்டு கால போரை தங்களின் தோழ்களில் சுமந்தபடி இன்னமும் மண்ணில் இருக்கும் மக்கள் 

இந்த மக்கள்தான் இந்த மண்ணுக்கான சொந்தக்காரர்கள். இந்த மக்கள்தான் இங்கு நடக்கும் எந்த அரசியலையும் தீர்மானிப்பவர்கள். இந்த மக்களுக்கு உருத்திரகுமாரோ, ரூட்ரவியோ, தனமோ, நெடியவனோ தலைவனாக இருக்க முடியாது. இந்த மண்ணில் நின்று இந்த மக்களுக்காக போராடத எவனையும் இந்த மக்கள் தமக்கான தலைவர்களாக நினைத்ததே கிடையாது.

எல்லா போராளி அமைப்பு தலைவர்களும் இந்தியாவில் நிற்கும் போது தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் அவர்கள் இந்த மக்களோடு நின்று எதிரகளோடு போராடினார். அதனால்தான் அவர் தமிழீழ தேசியத்தலைவராக இன்றுவரை இருக்கிறார்.

இந்த மக்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை புலம்பெயர் தமிழர் அமைப்புகள் சொல்ல தேவையில்லை. தேர்தல் புறக்கணிப்பால் தமிழீழ விடுதலைக்கான கோரிக்கையை ஒரு படி முன்னேற்ற முடியும் என்ற வேலைத்திட்டம் புலம்பெயர் அமைப்புகளிடம் இருந்தால் அதை முதலில் செய்ய வேண்டும்.


இந்த தேர்தலில் ஏன் மாற்றம் வேண்டும்

மைத்திரி தலமையிலான அரசியல் கூட்டணி மோசமான கூட்டணி என்பது அறிந்ததே.

கடந்த 10 வருடத்தில் ராஜபக்ச அரசால் அணுவணுவாக வாழ்வாதாரங்களை இழந்து இன்று சொந்த மண்ணில் கூட தொழில் கூட செய்ய முடியாத நிலையில் 90வீதத்திற்கும் அதிகமான தமிழீழ மக்கள் இருக்கிறார்கள்.

கடலில் சிங்களவர்கள் ஒருபுறம் சீனனர்கள் மறுபுறமாகவும். வளமிக்க நிலங்களை ராஜபக்ச ஆதரவு சக்திகள் பறிப்பதாக இன்னொரு புறமும் தொழில்துறைகளை தமிழர்கள் நடத்த முடியாத அளவிற்கு எல்லாப்புறமுமாக ராஜப்ச அரசு தமிழர்களை முடக்கி வைத்திருக்கிறது.

முன்னாள் போராளிகள் காயப்பட்ட ஊனமுற்ற போராளிகள் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள். மாவீரர் போராளி குழும்பங்கள் இன்னமும் அச்ச மனநிலையில் இருந்து விடுபடாமலும் ஏராளமானவர்கள் வறுமையிலும் இருக்கிறார்கள். "ரப் சாங்" போட்டு மாவீரர் தினத்தை நடாத்தும் புலம்பெயர் அமைப்புகள் இங்குள்ள மாவீரர் குடும்பங்களை கவனிப்பது கிடையாது.

இப்படி எந்தப்பக்கம் திரும்பினாலும் ராஜபக்ச அரசின் கரங்கள் போரில் உயிர் தப்பிய தமிழ் மக்களின் குரல்வளையை நெரித்தபடியே இருக்கிறது. இதலிருந்து தப்பி எப்போது மூச்சுவிடப்போகிறோம்?

மருத்துவப்பிரிவில் இருந்த போராளி இன்று பகுதிநேரமாக கழிவகற்றல் வேலை செய்கிறான். இவன் குறித்த மன அழுத்தத்தால் அந்த குடும்பம் இன்னமும் சந்தோசமாக சிரிக்க கூட முடியாமல் இருக்கிறது.

"எங்களை ஏன் இயக்கம் சாக விடேல்ல" என்று இன்னமும் சொல்லிக் கொண்டிருக்கும் பழைய போராளிகள் நிறைய இருக்கிறார்கள். இவர்களுக்கு மூச்சு விடுவதற்காகவாவது ஒரு மாற்றம் தேவை.

 இன்று பெயர் போன புலம்பெயர் அமைப்புகளை நடத்துபவர்கள் இந்த மக்களுக்காக ஒரு நேரமும் தங்கள் உயிர்களை துறக்க தயாராக இல்லை. புலம்பெயர் அமைப்புகளை நடத்துபவர்கள் போராளிகள் கிடையாது. அவர்கள் தங்கள் குடும்பங்களோடு வெளிநாடுகளில் வாழ்பவர்கள். ஆனால் தமிழீழ விடுதலைக்கான அரசியலைக் கூட சரியான முறையில் நகர்த்த வக்கற்ற நிலையில் இருக்கிறார்கள்.

விடுதலைப்புலிகள் நிர்வாகத்தில் இருந்து விலகி 6 வருடமாகியும் புலம்பெயர் அமைப்புகளால் தங்களுக்குள் சண்டை போட்டதைத் தவிர ஒரு மயிரையும் பிடுங்க முடியவில்லை. இவர்கள் என்ன இழவிற்கு சிறிலங்கா அரசியல் குறித்து பேசுகிறார்கள் என்றே புரிந்து கொள்ள முடியவில்லை.


விடுதலைப்புலிகள் இல்லாத நிலையில் தமிழர்களின் உரிமையை ராஜபக்ச அரசும் தரவில்லை மைத்திரி தலமையிலான கூட்டணி அரசும் தரவில்லை எனவே தமிழர்கள் மீண்டும் போராடித்தான் தமிழீழத்தை பெயற வேண்டும் என்ற செய்தியை அடுத்த தலைமுறைக்கு சொல்வதற்காகவாவது சிறிலங்கா அரசு மாறியே ஆக வேண்டும். 

விடுதலைப்புலிகளிடனம் இனப்பிரச்சினைத் தீர்வு என்பது என்போதும் இரண்டு வகைப்படுத்தலில் இருந்தது
1. அன்றாட பிரச்சினை
2. அடிப்படைப் பிரச்சினை
1994 விடுதலைப்புலிகள் பத்திரிகை

தமிழீழ விடுதலைக்கு இந்த மண்ணில் உள்ள மக்களிடம் பொருளாதாரமும் மன எழுச்சியும் இருக்க வேண்டும். அதற்கு மாற்றம் அவசியம். 

ஆதி
31-12-2014




Friday, December 26, 2014

த.தே.ம.முன்னணியின் வேலைத்திட்டமற்ற தேர்தல் புறக்கணிப்பு கோரிக்கை

2015 ஜனவரி மாதமளவில் நடைபெற இருக்கும் "சிறிலங்கா" ஜனாதிபதி தேர்தலை புறக்கணிக்கும் படி தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கோரியிருக்கிறது. அதனைத் தொடர்ந்து புறக்கணிப்பு பற்றிய விவாதங்கள் "இணையதள" மற்றும் "இலத்திரனியல்" ஊடக மட்டத்தில் பரபரப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் சமகால அரசியல் போக்கு,வடக்கு கிழக்கு மக்களின் நீண்டகால அரசியல் மற்றும் எதிர்கால அரசியல் நோக்கம் என்பவற்றை பொதுமகனாக ஆராய வேண்டிய கட்டாயம் இருக்கிறது.

த.தே.ம.முன்னணியின் தேர்தல் புறக்கணிப்பு கோரிக்கையும் அதனையொட்டி அவர்கள் சொல்லும் காரணமும் முன்னுக்கு பின் முரணானது மட்டுமல்லாது நீண்டகால நோக்கமற்றதுமாகும்.

த.தே.ம.முன்னணி சிறிலங்கா அரசியல் பதியப்பட்ட கட்சியாக இருப்பது மட்டுமன்றி 2010ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் நின்று மக்களால் புறக்கணிக்கபட்ட கட்சியுமாகும். 2010ம் ஆண்டு சிறிலங்கா பாராளுமன்ற தேர்தலில் நின்ற கட்சி 2015ம் ஆண்டு சிறிலங்கா தேர்தலை புறக்கணிக்கும்படி கோரி நிற்கிறது. அதாவது இடைப்பட்ட நான்கு வருடங்களுக்குள் சிறிலங்காவில் தமிழ் மக்களுக்கு சிறிலங்கா அரசியலில் எந்த பிரயோசனமும் இல்லை என்ற முடிவிற்கு த.தே.முன்னணி வந்திருக்கலாம். எதர்வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கு முன் சிறிலங்கா அரசியல் பதியப்பட்டிருக்கும் தமது கட்சியை கலைத்துவிட்டு பாராளுமன்ற தேர்தலையும் புறக்கணிக்கும்படி த.தே.ம.முன்னணி கோருமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

வேலைத் திட்டங்களற்ற த.தே.ம.முன்னணி

2010 இல் த.தே.ம.முன்னணி மக்களால் நிராகரிக்கப்பட்ட பின்னர் தமது அரசியல் தொடர்பான விளக்கங்களை நியாயப்பாடுகளை இதுவரை மக்களுக்கு நேரடியாக சென்று சொல்லவில்லை. சில ஆர்ப்பாட்டங்களை செய்ததைத்தவிர த.தே.முன்னணி இதுவரை எந்த கிராமங்களுக்கு சென்று மக்களை சந்தித்து அரசியல் பணிகளை முன்னெடுத்திருக்கிறது?

உதாரணத்திற்கு 2015 தேர்தலை புறக்கணிக்கும்படி இலத்திரனியல் ஊடகங்கள் ,சமூக வலைத்தளங்களில் மற்றும் புலம்பெயர் ஊடகங்களில் பிரச்சாரம் செய்யும் அளவிற்கு தமிழ் வாக்காளர்களை சந்தித்து
1) ஏன் தேர்தலைப் புறக்கணிக்க வேண்டும்?
2) தேர்தல் புறக்கணிப்பால் ஏற்படக்கூடிய நன்மை என்ன?
3) தேர்தல் வாக்களிப்பால் ஏற்படப்போகும் பாதகம் என்ன?
என்பது குறித்தான விளங்களை கொடுக்கவில்லை.

25 லட்சத்திற்கும் அதிமாக காணப்படும் தமிழ் வாக்களர்களுக்கு தாம் ஏன் தேர்தலை புறக்கணிக்கும்படி கோருகிறோம் என்ற விளக்கத்தை நேரடியாக மக்களிடம் சென்று சொல்லக்கூடிய வேலைத்திட்டமோ, ஆழுமையோ த.தே.முன்னணியிடம் காணப்படுவதாக தெரியவில்லை.

பல கிராமப் புற மக்களுக்கு த.தே.முன்னணியின் உறுப்பினர்கள் யாரென்றே தெரியாது. இந்த நிலமையில் தேர்தல் புறக்கணிப்பிற்கான விளக்கம் எப்படி மக்களை சென்றடையும்.

பிரயோசமன்ற தேர்தலும் பிரயோசனமான நோக்கங்களும்

"எதிரிக்கு எதிரி எனக்கு நண்பன்" என்ற கொள்கையை "அரசியலில்" (போராட்டத்தில் அல்ல) மிக நாசுக்காக பிரயோகித்தே ஆக வேண்டும். இன்றுவரை சிறிலங்கா அரசு பல இடங்களில் தமிழ் மக்களின் இருப்பை இல்லாது செய்வதற்கு அந்த கொள்கையைத்தான் பிரியோகிக்கிறது. இந்த கொள்கையானது நீண்டகால நிவாரணமாக இல்லாதுவிடினும் மக்களின் அரசியல் சிந்தனைகளுக்கு உத்வேகம் ஊட்டக்கூடிய முறையில் அமையலாம்.

கடந்த தேர்தலில் சரத்பொன்சேகா வெற்றியீட்டியிருந்தாலும் தமிழ் மக்கள் மீதான அழிப்பு தொடர்ந்திருக்க தான் போகுது. போர்க்குற்ற விசாரணைகள் மற்றும் இனப்படுகொலை குற்றவாளிகளுக்கான தண்டனை என்பவற்றை இந்தியா தடுத்திருக்கதான் போகுது. ஆனால் தமிழ் மக்களின் ஒட்டுமொத்த வாக்கும் சரத் பொன்சேகாவிற்கு போனதால் சரத் பொன்சேகா மேல் இராஜபக்ச தரப்பில் வெறுப்பு உண்டானது என்பது மறுக்கப்பட முடியாத உண்மையாகும்.

கடந்த தேர்தலில் தமிழீழ மக்களின் வாக்கு செல்வாக்குதான் இன்று சிங்கள கட்சிகள் சுக்கு நூறாக உடையக் கூடிய வழியை ஏற்படுத்தியிருக்கிறது என்பது அரசியல் அறிவாளிகளுக்கு புரியாத ஒன்றல்ல.

குழம்பியிருக்கும் குட்டையில் நாங்களும் கையை வைத்து கலக்குவதுதான் சிறந்தது.

தேர்தல் புறக்கணிப்பு கோரிக்கைக்கு பின்னால் ஆக்கபூர்வமான வேலைத்திட்டம் இருக்குமென்றால் அதை மக்களுக்கு விளங்கப்படுத்தி அரசியலை முன்னெடுக்க வேண்டும். அதைவிடுத்து வெறுமனே ஊடக மட்டத்தில் பரபரப்பிற்கா அரசியல் செய்வதென்றால் தொடர்ந்து மக்களால் புறக்கணிக்கப்பட வேண்டிய நிலை வந்து கொண்டே இருக்கும்.

இந்த தடவை பொது வேட்பாளர் வெல்லும் பட்சத்தில் இப்பாெழுது ஆழும் தரப்பை சேர்ந்தவர்கள் சிறிலங்காமட்டத்தில் பெரும் பழிவாங்கல்களுக்கு உட்படலாம். அதனால் தமிழ் மக்களுக்கு எந்த லாபமும் கிடையாது. ஆனால் மனதளவில் உத்வேகம் பிறக்கலாம்.


குறிப்பு: தேர்தல் புறக்கணிப்பு பற்றி புலம்பெயர் அமைப்புகள் மற்றும் ஊடக மட்டத்தில் விவாதம் நடாத்தும் த.தே.முன்னணி இதுவரை மக்களை சந்திக்கவில்லை என்றே அறிகிறேன். மக்களால் அடையாளம் காண முடியாத அளவிற்கு மக்களில் இருந்து விலத்தி யாருக்காக அரசியல் கட்சி நடத்துகிறார்கள் என்று புரியவில்லை. த.தே.முன்னணியின் கூட்டங்களை பார்த்தால் ஒரு குறிப்பிட்ட சில வட்டத்துக்குள்தான் அரசியல் செய்வது போல் தெரிகிறது.

நன்றி
ஆதி
27-12-2014

Friday, October 31, 2014

தமிழக மீனவர்களுக்கு சிறிலங்காவில் மரண தண்டனை - நடக்கப் போவது என்ன!!


டெயினர்களில் "ஹெரோயின்" போதைப்பொருளை பாகிஸ்தானில் இருந்து சிறிலங்காவிற்கு கொழும்புத் துறைமுகத்தால் கொண்டு வந்தவர்களே சுதந்திரமாக திரிய கஞ்சா கடத்தியதாக "சந்தேகத்தின்" பெயரில் கைது செய்யப்பட்ட நான்கு தமிழக மீனவர்களுக்கு மரண தண்டனை அழித்திருக்கிறது சிறிலங்கா நீதி.

சிறிலங்காவைப் பொறுத்தவரை நீதிமன்று என்பது அரசாங்க புறோக்கர் நிலையமாகவே பல சந்தர்பங்களில் வேலை செய்துகொண்டிருக்கிறது.

தமிழக மீனவர்கள் மீதான மரண தண்டனையின் பின்னணியில் பெரும் அரசியல் திட்டம் இருக்கலாம் என்பது எனது கணிப்பு. காரணம் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளவர்கள் தமிழகத்தவர்கள். இந்த மரண தண்டனையை எதிர்ந்து தமிழகத்தில் மாபெரும் போராட்டம் வெடிக்கும் என்பது சிறிலங்கா அரசாங்கத்திற்கு தெரியாத ஒன்றல்ல. இருந்தும் "சந்தேகத்தின்" பெயரில் கைது செய்யப்பட்டவர்களுக்கு மரண தண்டனை விதித்திருப்பதன் அரசியல் காரணங்கள் என்னவாக இருக்கலாம் என்பதை பாருங்கள்.

1. முக்கியமாக காரணம் வரப்போகும் ஆண்டில் நடக்கப் போகும் அரச அதிபர் தேர்தலில் ராஜபக்சக்களின் செல்வாக்கிற்கு இந்தியா செய்ய வேண்டிய உதவிகள்

2. பாகிஸ்தான் உளவாளி "என்று றோவால் சொல்லப்படும்" இலங்கைத்தமிழரான அருணை சிறிலங்க அரசு தம்மிடம் விசாரணைக்கு தரும்படி கேட்டும் இந்தியா கொடுக்காமை (ஏன் குடுக்கல!!!!!)

இப்படி இன்னும் சில அரசியல் செல்வாக்கு காரணங்கள் இருக்கலாம்.

இந்த காரணங்களுக்கும் தமிழக மீனவர்களுக்கு மரண தண்டனை விதித்ததற்கும் என்ன சம்மந்தம் என்று நீங்கள் யோசிக்கலாம்.

பாகிஸ்தானியர்கள் இலங்கையில் இருந்து இந்தியாவிற்கு போதைவஸ்து கடத்துவதாக இந்தியா குற்றம்சாட்டி வந்தாலும் இதுவரை இந்தியாவால் அதை நிரூபிக்க முடியவில்லை. ஆனால் இந்தியாவில் இருந்துதான் சிறிலங்காவிற்கு போதைப்பொருள் கடத்தப்படுவதாகவும் அதை தமிழக மீனவர்கள்தான் செய்கிறார்கள் போலவும் சிறிலங்கா நீதிமன்று தீர்ப்பளித்திருக்கிறது. இந்த தீர்ப்பானது இராஜதந்திர மட்டத்தில் இரு அரசுகளுக்கிடையில் நடக்கும் பனிப்போராகும்.


தவிர தமிழகத்தில் கைது செய்யப்பட்ட அருண் உண்மையில் யார்!!
சிறிலங்காவில் உள்ள பாகிஸ்தான் தூரகத்தை உளவு பார்க்க றோவால் செட்டப் செய்யப்பட்ட ஏஜன்டா??
இல்லை உண்மையில் பாகிஸ்தான் உளவாளியா??
இல்லை சிறிலங்கா உளவாளியா!!
அல்லது சிறிலங்காவின் செயற்பாடுகளை உளவு பார்க்க றோவால் ஒழுங்கு செய்யப்பட்ட செட்டப்பா!!!      ஏன் இந்தியா அருணை சிறிலங்கா அதிகாரிகள் விசாரிக்க மறுக்கிறது. இந்திய புலனாய்வுத்துறையால் செய்யப்பட்ட செட்டப்பாக இருந்தால் அதன் தாக்கமும் ராஜதந்திர ரீதியில் மீனவர் மரணதண்டனை விவகாரத்தில் சம்மந்தப்பட்டிருக்கலாம் என்றே தோணுகிறது.

சிறிலங்காவில் மரண தண்டனை நடைமுறையில் இல்லாவிட்டாலும் எதிரியின் காலில் விழுந்தாவது அப்பாவிகளின் உயிரை காப்பாற்ற வேண்டும்.

இந்தியாவின் மற்றைய மாநில பிரஜைகளை இச்திய அரசு கையாழும் விதமும் தமிழகத்தவர்களை கையாழும் விதமும் வெவ்வேறானவை. காரணம் தமிழகத்தில் ஆட்சியில் இருக்கும் எல்லோருமே ஊளல்வாதிகள் மற்றும் சினிமா நடிகர்கள்.

7 கோடி தமிழக தமிழனுக்கு எதிரியோடு மோதக்கூடிய தலைவன்/தலைவி இல்லை. சினிமாவில் வில்லன்களை பறந்து பறந்து அடிக்கும் ஹீரோக்கள்தான் தமிழகத்திற்கு பொருத்தமான தலைவர்கள் என தமிழக மக்கள் நினைக்கிறார்கள்.


#மீனவர்களை மீட்போம்


ஆதி
01-11-2014


Wednesday, August 20, 2014

லைக்காவிற்கு எதிரான அதீத கோசம் சந்தேகம் கொள்ள வைக்கிறது

லைக்காவை எதிர்க்க வேண்டும் என்று ஆக்குரோசமாக கத்தும் புலம்பெயர் மற்றும் தமிழக அறிவு சீவிகள் லிபராவை மறந்தார்களா இல்லை மறப்பதற்காக யூரோக்கள் ஊடகங்களில் பூந்து விளையாடுதா??

லைக்கா சரி என்பதல்ல வாதம். வெறுமனே ஒரு வியாபார நிறுவனத்திற்கு எதிராக இத்தனை அரசியல் சக்திகள் மற்றும் ஊடகங்களின் முக்கியத்துவம் எப்படிச் சாத்தியமானது என்பதை ஆய்வு செய்யவேண்டும் என்பது கட்டாயமாகிறது.

Made in Sri Lanka வை புறக்கணிக்கும்படி புலிகள் இருந்தபோதே போராட்டங்கள் நடந்த நிலையில் இன்னமும் Made in Sri Lanka வை தமிழீழ மக்களிடம் இருந்து அகற்ற முடியாத நிலையில் லைக்காவிற்கெதிரான போராட்டத்திற்கு பலதரப்பட்ட மட்டங்களில் தரப்படும் ஆதரவு சமகால போக்கின் மீது சந்தேசம் கொள்ள வைக்கிறது.

லைக்கா முழுமையாக ஈழத்தமிழரின் உரிமையானது என்பதாலும் அது பல நாடுகளுக்கு தனது வியாபாரத்தை விஸ்தரிப்பதாலும் அதை தடுக்க வேண்டிய அல்லது மட்டுப்படுத்த வேண்டிய தேவை சிறிலங்கா, இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு இருக்கலாம் என்று சிலர் சொல்கிறார்கள். அமெரிக்க பங்கு பரிவர்த்தனையில் ராஜாவாக விளங்கிய ஈழத்தமிழர் ராஜரட்ணத்தின் வர்த்தகத்தை வேரோடு சாய்ததற்கும் இப்படியான காரணங்கள் இருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது. 

கொமன்வெல்த்திற்கு அனுசரணை வழங்கியபோதே லைக்காவிற்கு எதிராக போர்க்கொடி தூக்கி தமிழீழ ஊடகங்களை ஆக்கிரமித்து புலம்பெயர் தமிழர்களிடையில் போராட்டங்கள் நடத்தப்படாமல், லைக்கா தனது வணிகத்தை தமிழகத்திற்குள்ளும் நகர்த்தும் போது ஏன் போராட்டங்கள் எழுகின்றன? ஏன் அரசியல் கட்சிகள் வீதிக்கிறங்குன்றன? ஏன் புலம்பெயர் ஊடகங்கள் முக்கியத்துவம் கொடுக்கின்றன??

காமன்வெல்த்திற்கு லைக்கா மில்லியன் கணக்கில் கொடுத்ததற்கு எதிராக பொங்கி எழாதவர்கள், தொடர்ச்சியான போராட்டங்களை செய்யாதவர்கள் அல்லது மறந்து படுத்திருந்தவர்கள் ஏன் தமிழக சினிமாவில் லைக்காவின் பங்கிற்காக பொங்குகிறார்கள்.?? காமன்வெல்த்தைவிட தமிழக சினிமாவை முக்கியமாக்கியதன் பின்னணி என்ன??

உங்களிடம் இப்படியான சந்தேகங்கள் இருந்தால் பகிர்ந்து கொள்ளுங்கள். என்னைப்பொறுத்தவரை இந்த நகர்வுகளின் பின்னணியில் பெரும் முதலையொன்று இருப்பதாகவே தெரிகிறது. அவதானம் முக்கியம்.

ஆதி
20-08-2014

Monday, August 18, 2014

சிங்களத்தில் வெளியாகிய “பிரபாகரனா” தமிழகத்தில் வெளியாகும் “புலிப்பார்வை”



அண்மையில் பாலச்சந்திரன் உள்ளிட்ட சிறுவர்களை போராளிகளாக சித்தரிக்கும் தமிழக திரைப்படமான “ புலிப்பார்வை” யின் வெளியீட்டிற்கு நாம்தமிழர் கட்சி தலைவர் சீமான் சென்று ஆசிர்வாதம் வழங்கியிருந்ததது மட்டுமல்லாமல் சிறுவர்களை போராளிகளாக புலிகள் வைத்திருந்தார்கள் என தவறாக சித்தரிக்கும் திரைப்படத்தை தடை செய்யச் சொல்லி கோசம் எழுப்பிய மாணவர்களும் மிருகத்தனமாக தாக்கபட்டிருந்தார்கள்.

“புலிப்பார்வை”யின் சில காட்சிகள் சிங்களத்தில் மொழிபெயர்க்கபட்டு சிங்களவர்கள் மத்தியில் பரப்புரை வெகு விமர்சையாக ஆரம்பிக்கபட்டுவிட்டது. பாலச்சந்திரன் ஒரு போராளி என்றும் அவன் சண்டையில் கொல்லபடப்டதாகவும் சிங்களவர்கள் மத்தியில் பரப்புரை செய்யபட்டுவருகிறது. பாலச்சந்திரன் ஒரு போராளி என்பதை தமிழ்நாடே ஏற்றுக்கொண்டுள்ளது என்பது அவர்களின் வாதம்.

“புலிப்பார்வை” என்ற தமிழக சினிமா தொடர்பாக பேச முதல் தமிழ்நாட்டு உணர்வாளர்களுக்கும் நாம்தமிழர் கட்சிக் காரர்களுக்கும் ஒன்றை ஞாபகப்படுத்த விரும்புகிறேன்.
 
2008 இல் சிங்களத்தில் வெளியாகிய பிரபாகரன்
விடுதலைப்புலிகள் சிறுவர்களை படையில் வைத்திருந்தார்கள் என்று சித்தரிக்கும் சிங்கள திரைப்படம் ஒன்று “பிரபாகரன்” என்ற பெயரில் 2009 காலப்பகுதியில் வெளியாகியது. அதில் பல காட்சிகள் தமிழகத்தில் எடுக்கட்டிருந்தன. “பிரபாகரன்” என்ற சிங்கள திரைப்பட இயக்குனர் துசார பீரிஸ் மற்றும் குளுவினர் 2008 இல் தமிழகத்தில் இருந்து விரட்டப்பட்டனர். (2008 இல் சீமான் தலமையிலான நாம்தமிழர் கட்சி ஆரம்பிக்கபட்டிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது). தமிழீழ விடுதலை ஆதரவுச் சக்திகள் அந்த சிங்கள திரைப்படக் கும்பலை தமிழநாட்டில் இருந்து விரட்டியிருந்தது. ஆனால் இன்று சிங்கள திரைப்படத்தில் மூலக்கருவான “சிறுவர்களை புலிகள் போராளிகளில் வைத்திருந்தனர்” என்ற கருப்பொருளை மெய்பிக்கும் வகையில் “புலிப்பார்வை” என்ற போர்வையில் தமிழில் திரைப்படம் தயாரித்து அதை “நாம் தமிழர்” கட்சியின் தலமையினூடாக அங்கிகாரம் பெற்று தமிழகத்தில் வெளியிட இருக்கிறது தமிழக திரையுலகம்.

சீமான் கட்சி தொடங்க முதல் “பிரபாகரன்” என்ற சிங்கள திரைப்படத்தை தமிழகத்தில் இருந்து விரட்டிய உணர்வாளர்கள் “புலிப்பார்வை”யை துரத்த வேண்டும். சீமான் குறுக்கிட்டால் சீமானையும் துரத்த வேண்டும்.

“பிரபாகரன்” என்ற திரைப்படத்தில் எல்லா இடத்திலும் புலிகளின் வரிச்சீருடை பாவிக்கபட்டிருப்பதோடு  சிறுவர்கள் மீது அது திணிக்கபட்டிருந்தது. “பிரபாகரன்” என்ற சிங்கள  திரைப்படத்தால் சாதிக்க முடியாமல் போனதை இலங்கை அரசு “புலிப்பார்வை”யினூடு நிட்சயமாக சாதிக்க முடியும் என்று நம்புகிறது. பாலச்சந்திரன் குழந்தையல்ல அவன் ஒரு போராளி என்று சாட்சியத்தை மாற்றும் வகையில் “புலிப்பார்வை”யை தயாரித்து அதை நாம்தமிழர் கட்சித் தலமையையின் அங்கிகாரத்துடன் வெளியிடுவது என்பது இலங்கை அரசின் தமிழகத்தில் செய்த மிகப்பெரிய உளவு நடவடிக்கையாக தான் கருத முடியும்.
 
2008 இல் சிங்களத்தில் வெளியாகிய பிரபாகரன்
தமிழக மாணவர்களே!!!
புலிகள் சிறுவர்களை போராளிகளாக வைத்திருந்தார்கள் என்று சொல்லும் “பிரபாகரன்” என்ற சிங்களத் திரைப்பட படமாக்கலையே தமிழகத்தில் இருந்து துரத்திய மறத்தமிழர்கள் இன்னமும் தமிழகத்தில் இருக்கிறார்கள். அந்தக் காலப்பகுதியில் நாம் தமிழர் என்ற கட்சி கூட இருக்கவில்லை என்பதை ஞாபகம் வைத்திருங்கள். 

ஆரம்பத்தில் சீமான் மீது அதீத நம்பிக்கை இருந்தது என்னமோ உண்மைதான். ஆனால் சீமானின் அரசியல் நோக்கிலான நகர்வுகள் மற்றும் சீமானை சுற்றியிருக்கும் அல்லக்கைகள் அந்த நம்பிக்கையை தகர்த்திருந்தன. தமிழீழ தேசிய கொடி மற்றும் மாவீரர் நாள் வணக்கங்களை சீமானின் கட்சியினர் படுத்தும் பாடு அவர்கள் மீது எரிச்சலை உண்டுபண்ணியது. இன்று சிங்கள அரசின் திரைப்படத்தை வேறு தொனிப்பொருளில் தமிழ்ப்படமாக்கி அதன் வெளியீட்டிற்கு சீமானே சென்றுவிட்ட நிலையில் இனிமேல் சீமான் குறித்து அமைதியாக கடந்து செல்வதே சிறந்தது. 

சீமான் வரமுதே தமிழகத்தில் தமிழீழத்திற்கா பலமான குரல் இருந்துவருகிறது. அதை உடைத்து தனக்கு கீழ் கொண்டுவந்து அதை திசைமாற்றவா சீமான் செயற்படுகிறார் என்பதை தமிழக மாணவர்களும் மக்களும் உணர்ந்து செயற்படுவது நன்று. அது குறித்து எங்களிடம் எந்த கருத்தும் கிடையாது.


 
2008 இல் சிங்களத்தில் வெளியாகிய பிரபாகரன்
 
2014 இல் தமிழில் வெளியாகும் புலிப்பார்வை


2008 இல் சிங்களத்தில் வெளியாகிய “பிரபாகரன்” என்ற திரைப்படத்தினதும் 2014 இல் தமிழகத்தில் இருந்து தமிழில் வெளியாகும் “புலிப்பார்வை” என்ற திரைப்படத்தினதும் நோக்கம் ஒன்றுதான்.
 “பிரபாகரன்” திரைப்படக்குழுவை தமிழக மக்கள் 2008ல் தமிழகத்தில் இருந்து துரத்தியடித்தனர் ஆனால் “புலிப்பார்வை” என்ற திரைப்படத்தை எதிர்த்த மாணவர்களை மண்டையை உடைத்து கலைத்தனர் நாம் தமிழர் மற்றும் புலிப்பார்வை படக்குழுவினர்.
ஆறு வருடத்தில் பெரும் மாற்றம்.

ஆதி
18-08-2014
 

Blog template by simplyfabulousbloggertemplates.com

Back to TOP