Powered by Blogger.

Monday, September 23, 2013

தமிழீழ மக்களுக்கு முதலாவது ஆப்பு வைக்க தயாராகிறதா தமிழ்த் தேசிய கூட்டமைப்பு!!

நடந்து முடிந்த வடமாகாண தேர்தலில் மக்கள் விடுதலைப்புலிகளின் அபிமானிகளாக தமிழ்த்தேசிய கூட்டமைப்பை கருத்தில் கொண்டு பெரு வெற்றியீட்டச் செய்திருக்கிறார்கள்.

மாகாண அரசியல் என்பது பூச்சாண்டி என நன்கு அறிந்து வைத்திருந்தும் சர்வதேச அரசியல் அரங்கிற்கு தமது நிலைப்பாட்டை தெளிவாக சொல்லும் ஒரு சந்தர்ப்பமாக மாத்திரமே இதை தமிழீழ மக்கள் பயன்படுத்தியிருக்கிறார்கள் என்பது தான் உண்மை.

தமிழ்த்தேசிய கூட்டமைப்பில் அங்கம்வகிப்பவர்கள் மீதான தனிப்பட்ட நம்பிக்கையில் வாக்குகள் வழங்கப்படவில்லை என்பது தான் உண்மை.

தனியே சிங்கள பேரினவாத்தை மட்டும் அகற்றியது மட்டுமல்லாது கூட்டமைப்புக்குள் ஒழிந்திருக்கும் குள்ள நரிகளையும் இனங்கண்டு துரத்தியிருக்கிறார்கள் தமிழீழ மக்கள்.

குறிப்பாக இந்திய வல்லாதிக்க வற்புறுத்தலினால் கூட்டமைப்புக்குள் இணைக்கப்பட்ட ஆனந்த சங்கரியை தமிழீழ மக்கள் கிளிநொச்சி அரசியலில் இருந்து வெளியேறும்படி சொல்லியிருக்கிறார்கள். (2,500 வாக்குகள் விழுந்தனதானே என்று எண்ணுபவர்களுக்கு தொடரந்து வாசிக்க விளங்கும்).

கிளிநொச்சி மக்களால் முற்றாக நிராகரிக்கப்பட்ட ஆனந்தசங்கரிக்கு இந்திய சிங்கள வல்லாதிக்க வற்புறுத்தலில் மேலதிக ஆசனத்தில் ஒன்றை வழங்குவதற்கு சம்மந்தர் அவர்கள் தயாராகிவருவதாக செய்திகள் கசிந்திருக்கின்றன.

புலிகள் நிர்வாகத்தில் இருந்த வேளை நடந்த தேர்தலில் சங்கரிக்கு கிளிநொச்சியில் இருந்து விழுந்த அந்த ஒரே ஒரு ஓட்டுப் போட்ட கந்தப்பு (பசுமாடு வாங்க காசு தாறன் என்று ஆளுக்கு சங்கரி கடிதம் போட்டது அப்ப) கூட இன்று வெளியாகியிருக்கும் செய்தி கேட்டு அதிர்ந்து போயிருக்கிறார்.

சங்கரி அப்படி என்ன செய்தார்!!!

சம்மந்தர் அய்யா போல் சங்கரியும் ஒரு இந்திய விசுவாசி என்பதற்கப்பால் சிங்கள அரசுகளின் நிரந்தர நண்பர். அமைச்சுப்பதவியில் இல்லாத ஒரு கதிர்காமர்தான் சங்கரி.

சங்கரியில் கடந்த 6 வருட (அதற்கு முற்பட்டவை பற்றி எல்லோருக்கும் பொதுவாக தெரியும்) அரசியல் செயற்பாடுகள் குறித்து நுணுக்கமாக பார்த்தால் எல்லாம் புரியும்.

அன்ரன் பாலசிங்கண்ணை மற்றும் தமிழ்ச்செல்வண்ணையின் இழப்புகளை தொடர்ந்து தமிழீழ சர்வதேச அரசியல் செயற்பாட்டில் பெரும் பின்னடைவு ஏற்பட்டமை வெளிப்படையானது. இந்த நேரத்தில் தான் சங்கரி மிக கேவலமான தனது அரசியலை முழு மூச்சுடன் செய்ய ஆரம்பித்தார்.

தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு எதிராகவும் தமிழீழ விடுதலைப்போராட்டத்திற்கு எதிராகவும் பல மோசமான பொய்க்குற்றச்சாட்டுகளை சர்வதேச அரசியல் தலைவர்களுக்கு வழங்கியதில் சங்கரியின் பங்கு பெரிது.

இந்தியாவிற்கும் சிறிலங்காவிற்குமாக மாறி மாறி ஓடி ஏராளமான சதிகளை செய்தவர்தான் சங்கரி. இந்தியாவின் சுப்ரமணியசுவாமியாகவும் சிங்களத்தின் கதிர்காமராகவும் செயற்பட்டார்.

இனப்படுகொலைப்போரை பயங்கரவாதத்திற்கெதிரான போர் சிங்கள விசுவாசம் செய்த ஆனந்தசங்கரி இனப்படுகொலைக் குற்றச்சாட்டில் இருந்து சிறிலங்கா அரசை காப்பாற்றுவதற்காக பல முன்னெடுப்புகளை செய்துவருகிறார்.

2008 இல் வன்னியில் இருந்து இடம்பெயர்ந்து வவுனியா முகாமல் தங்கியிருந்த குடும்பங்களை சந்திக்க வந்த சங்கரி "எனக்கு வன்னி உடும்பு இறச்சியும் புட்டும் சாப்பிட ஆசை.. எங்க பிரபாகரன் விட்டாத்தானே" என்று கதையளந்து சனம் வெளில போக சொல்லி அனுப்பின சம்பவம் நடந்தது.


சங்கரியை அரசியலுக்குள் கொண்டுவர நினைப்பது யார்!!

தமிழீழ விடுதலைப்போராட்டத்திற்கும் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும் எதிரான ஆனந்த சங்கரியை மக்கள் திட்டமிட்டு நிராகரித்த பின்னரும் ஆனந்தசங்கரியை மாகாணசபை உறுப்பினராக்கி அழகு பார்க்க நினைக்கிறது இந்திய சிங்கள அரசியல் கூட்டு சதிகள்.

இத்தனை நாளாக தமது அராஜகங்களுக்கு துணை போய் தமிழீழ விடுதலைப் போராட்ட அரசியலை காட்டிக் கொடுத்தமைக்காக மக்களால் நிராகரிக்கப்பட்டாலும் தமது அழுத்தங்களினால் அப்படியாவது பலவந்தமாக ஆனந்தசங்கரிக்கு ஒரு அரசியல் இருப்பை செய்து கொடுப்பதற்காகவே முயற்சிக்கின்றன என்று தெரிகிறது.


தமிழ்த்தேசிய கூட்டமைப்புக்கு பகிரங்க வேண்டுகோள்

மேலதிக ஆசனத்தில் மக்களால் முழுமையாக நிராகரிக்கபட்ட ஆனந்த சங்கரி  மக்களுக்கான அரசியலில் பலவந்தமாக திணித்து உங்கள் இந்திய அடிமைத்தனத்தை எமது குழந்தைகளுக்கு சொல்லித்தரவேண்டாம்.

இந்திய வல்லாதிக்கத்தின் நிகழ்ச்சி நிரலில் இந்த தேர்தல் நடாத்தப்பட்டதும் அதற்காக பிரச்சினைகள் சிங்கள பேரினவாத அறிக்கைகள் சோடிக்கப்பட்டதும் அனைவரும் அறிவோம். ஆனால் தமிழீழ விடுதலைப்புலிகள் விடுதலைவீரர்கள், தமிழீழ மக்களின் விடுதலைக்காக தங்கள் உயிர்களை அர்ப்பணித்தவர்கள் என்றும் விடுதலைப்புலிகளால் அங்கிகரிக்கப்பட்ட அமைப்புதான் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு என்றும் நீங்கள் ஏற்றுக் கொண்டு சிங்கள இராணுவத்தின் முன் நீங்கள் சொன்ன வார்த்தைகளுக்காக மாத்திரம் தான் எங்கள் சனம் அடக்குமுறைகளையும் உடைத்து வாக்களிப்பு நிலையம் வந்தது.

சனம் எப்படி ஓட்டுப்போட்டது என்று உங்களுக்கு தெரிய வாய்ப்பில்லை. கூட்டமைப்பை தெரிவு செய்யும் அதே வேளை தவறானவர் தெரிவு செய்யப்படக் கூடாது என்பதில் மிகத் தெளிவாகவே சனம் இருந்தது.

முதன் முறையாக ஓட்டுப்போட வந்த சனமும்.. பதட்டத்தில் தாங்கள் பிழையாக ஓட்டுப்போடக் கூடாது என்று எப்படி ஓட்டுப் போடுவது என்று கேட்டறிந்து வந்த சனமும் கூட்டமைப்பிற்காக வரவில்லை. புலிகளுக்காக தான் வந்தார்கள் என்பதை நினைவல் வைத்து மக்களால் நிராகரிப்பட்டவர்களை நிராகரிக்கப்பட்டவர்களாகவே கருதும்படி கேட்டுக் கொள்கிறோம்.

மேலதிக ஆசனத்தில் பெண்களுக்கு சந்தர்ப்பம் வழங்குங்கள்.

ஆனந்தசங்கரி என்ற நரியைவிட ஈபிடிபி கும்பலில் போட்டியிட்டவர்கள் சிலருக்கு வாக்குகள் அதிகம் கிடைத்திருக்கிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

குறிப்பு: இந்த கட்டுரை சங்கரியை மேலதிக ஆசனத்தில் வடமாகாண சபை உறுப்பினராக தெரிவு செய்ய தமிழ்த்தேசிய கூட்டமைப்பு யோசனை வைத்திருப்பதாக வெளியாகிய செய்தியை அடிப்படையாக வைத்து சங்கரி குறித்த அரசிலையும் நிராகரிப்பையும் பேசுவதற்காய் எழுதப்பட்டது.


ஆதி
கிளிநொச்சி.
23-09-13






















































No comments:

Post a Comment

Blog template by simplyfabulousbloggertemplates.com

Back to TOP