தமிழ்நாடெங்கும் தமிழீழ விடுதலைத் தீ பற்றி எரிந்து கொண்டிருக்கிறது.
தமிழீழ தனி அரசிற்கான பொது வாக்கெடுப்பை நடாத்தும்படி தமிழக முதல்வர் ஜெயலலிதா அம்மையார் வரலாற்றுத் தீர்மானத்தை நிறைவேற்றியிருக்கிறார். நேர்த்தியாக ஒழுங்கமைக்கபட்டு உலக அரசியல் ராஜதந்திர தரத்தில் கோப்புகள் எழுதப்பட்டு தீர்மானம் நிறைவேற்றபட்டிருக்கிறது.
கருணாநிதியின் அரசியல் நாடக வார்த்தைகள் போலல்லாமல் சிறந்த சட்டவாக்கல் மொழி மூலம் தீர்மானம் ஒழுங்கமைக்கபட்டிருப்பது ஜெயலலிதா அம்மையார் மீது நம்பிக்கையையும் மதிப்பையும் ஏற்படுத்தியிருக்கிறது.
" இவ்வளவு நாளா ஜெயலலிதாவிற்கு பிழையான தகவல்களை வழங்கி தமிழீழ விடுதலை மீது வெறுப்பை ஏற்படுத்திய கள்ள வேலைகள் பார்த்தது கருணாநிதி போலத்தான் இருக்கு.. இப்பதான் ஜெயலலிதாவுக்கு உண்மைகள யாரோ சொல்லினம். ஆள் கெட்டிக்காரி லேசில இந்த பிரச்சினைய விடமாட்டா அதால நம்பிக்கை இருக்கு. கருணாநிதி தீர்மானம் நிறைவேற்றி இருந்தா தமிழ்ச் சனத்துக்கு ஏதோ பெரும் அழிவெண்டுதான் அர்த்தம்.. நல்லகாலம் தமிழ்நாட்டுச் சனம் அந்த தரித்திரத்த கலைச்சிட்டினம் " என்று தமிழீழ மக்களிடையில் பெரும் புத்ததுணர்ச்சி நிரம்பிய நிலையில் பேச்சுகள் பரவலாக அடிபடுகிறது.
சரி இனி விடையத்துக்கு வருகிறேன்.
இன்று கடைக்கு வந்த பாட்டி ஒருவர் சீமானை பற்றி விசாரித்தார். அவருடைய பேரன்கள் பாடசாலையில் கற்பவர்கள். எப்பொழும் "சீமான் அப்பிடிக் கதைக்கிறார்.. சீமான் அங்க அப்பிடி கதைச்சிருக்கிறார்.. கருணாநிதி நாக்க புடுங்கிட்டு சாகலாம்" என்று சீமான் புராணம் பாடுறாங்கள். ஆரப்பன் அந்த சீமான் என்று கேட்டார். பாட்டியினுடைய பேரன்கள் இருவரும் போர் வலி காணதாவர்கள். வரிச் சீருடையணிந்த புலிகளை நேரில் காணதவர்கள். அந்த சிறுவர்கள் புலிகளை பற்றி தேடுகிறார்கள். நண்பர்களுடன் பேசுகிறார்கள். அதனால் தான் இத்தனை பேச்சுகள் வீடுகளில் அடிபடுகின்றன.
பாட்டியை இருக்க சொல்லிவிட்டு "யூ டியுப்பில்" சீமானின் இரண்டு உரைகளை எடுத்து காட்டினேன். பாட்டி உணர்ச்சிவசப்பட்டிற்றா. மகன் இந்த பெடியன் "செல்வம் மாமா" ட்ட ரெயினிங் எடுத்துருக்கு. எல்லாராலையும் இப்பிடி கதைக்கேலாது. இண்டைக்கு தமிழகத்தில இவ்வளவு மாற்றம் நடந்திருக்கெண்டா இந்த மாதிரி கதைச்சதால தான் சாத்தியப்பட்டிருக்கும். என்று நிறைய கதைகள் சொன்னார். மே 17 இயக்க திருமுருகனுடைய ஒரு உரையையும் போராட்டம் ஒன்றின் போது பேசியவற்றையும் காட்டினேன்.
தமிழ்நாட்டு மாணவர்களின் போராட்டம், முத்துக்குமார் அண்ணா, தங்கை செங்கொடியின் நடனம் என எல்லா வற்றையும் காட்டினேன்.
"செத்த சனம்.. பெடியளின்ட ஆவிதான் தமிழ்நாட்டு பிள்ளைகளுக்குள்ள புகுந்திருக்கு... தமிழீழம் கிடைக்குதோ இல்லையோ சிங்களவன் துலைஞ்சான்... உந்த ஆணையிறவ பிடிக்கிற நேரத்தில இப்பிடி தமிழ்நாட்டில இருந்திருந்தா கட்டாயம் 2003க்குள்ள தம்பி தமிழீழத்த பிடிச்சிருப்பான். " என்று நிறைய சொன்னார். ஏனோ தெரியவில்லை உடம்பு புல்லரித்தது.
ஆணையிறவை பிடித்து யாழ்ப்பாண மீட்ப்பு போர் கைதடியையும் தாண்டி சென்று கொண்டிருக்கும் பொழுது இந்தியா தான் புலிகள் மீது அழுத்தம் பிரயோகித்து போரை நிறுத்தியது. இனியொரு தடவை இந்திய படைகளுடன் மோதல் வேணாம் என்ற நோக்கத்திற்காக தலைவர் போரை நிறுத்தி புலிகள் அணியை முகமாலைக்கு எடுத்திருந்தார் என்று அப்பொழுது பேசப்பட்டது. பாட்டி சொன்னவுடன் நினைத்துப் பார்த்தேன் உண்மைதான். இந்த எழுச்சி அன்று தமிழகத்தில் இருந்திருந்தால் அன்று இந்தியா சிங்கள ராணுவத்தை காப்பாற்ற தனது படையை அனுப்புவோம் என்ற எச்சரிக்கையை விடுத்திருக்க முடியாது.
சரி செல்வம் மாமா யார் என்று சொல்லி விடுகிறேன்.
செல்வம் மாமா ஒரு பிரச்சார பீரங்கி. சம்பவங்களை தனது பேச்சாற்றலால் கண்முன் கொண்டுவரக்கூடிய அதி திறமைசாலி. விடுதலைப்புலிகள் அமைப்பிற்கு ஆள் சேர்ப்பு பிரச்சாரங்களிற்கு "செல்வம் மாமா" போனால் அவர் பேசி முடிய நிறைப்பேர் தம்மை போராளிகளாக இணைப்பார்கள்.
யாழ்ப்பாணத்தில் "கிருசாந்தி" என்ற உயர்தர வகுப்பு மாணவி சிங்கள ராணுவத்தால் மிலேச்சத்தனமான பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தபட்டு படுகொலை செய்யப்ட்டார். தமிழீழ மக்களையே உலுக்கியெடத்த படு பயங்கரமான கற்பழிப்பு படுகொலை அது. அந்த சம்பவத்தை வன்னியில் இளைஞர் யுவதிகளுக்கு செல்வம் மாமா விளங்கப்படுத்த ஒரு வகுப்பில் இருந்த அத்தனை மாண மாணவியரும் போராட்டத்தில் இணைந்த சம்பவங்களும் இருக்கின்றது.
எத்தனையோ வலிகளையும் கொடுமைகளையும் தாண்டி.. பேச முடியாத ஏராளமான கதைகளுடன் என்றோ ஒரு நாள் விடுதலையடைவோம் என்ற நம்பிக்கையில் புலிகளின் வரவை மட்டுமே எதிர்பார்த்திருந்த சனங்களுக்கு தமிழக மாற்றம் பெரும் புத்துணர்ச்சியை தந்திருக்கிறது. எல்லா வீடுகளிலும் தமிழக மாணவர்களை மக்கள் கொண்டாடுகிறார்கள்.
ஆதி
28-3-13