Powered by Blogger.

Wednesday, February 16, 2011

தமிழ் பாடசாலைகளில் சிங்கள புலனாய்வாளர்கள்

இது அதிர்ச்சி தரக்கூடிய செய்தி மட்டுமன்றி ஈழவிடுதலைப் போராட்டத்தின் அடுத்த கட்ட நடவடிக்கைகளில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி கொண்டிருக்கிறது. தமிழீழ போராட்டத்தில் பாடசாலை மாணவர்களின் பங்களிப்பபு காலாகாலமாக பெரும் பக்கபலமாக இருந்து வருகிறது. விடுதலைப்போராட்டத்தில் போராளிகளை காப்பாற்றும் நடவடிக்கைகளில் இருந்து களத்திற்கு வெளியே பாதுகாப்பு நடவடிக்கைகள் வரை மாணவர்களின் பங்களிப்பு இருந்ததது. சாத்வீக போராட்டங்கள் பொங்குதமிழ் எழுச்சி நிகழ்வு என எல்லா வகையான புரட்சிகர போராட்டங்களிலும் மாணவர்கள் நேரடியாக ஈடுபட்டுவந்தனர்.

விடுதலைப் போராட்டத்தின் எழுச்சி மிக்க போராளிகள் பாடசாலையிலிருந்தே உருவாகிவிடுகிறார்கள் என்ற உண்மையை அறிந்த சிங்கள அரசு தனது புலனாய்வாளர்களை சிங்களம் கற்பிக்கும் பிக்குகளாக வடக்கு கிழக்கில் உள்ள பாடசாலைகளுக்கு அனுப்பி வைத்துள்ளது. அவர்கள் அங்கு அதிபர் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களை கண்காணிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

அண்மையில் யாழ்ப்பாணத்தில் சிங்கள மொழியில் தேசிய கீதம் பாடவேண்டும் என்று எழுந்த சர்ச்சையின் பின் நடந்த சில விடையங்களை தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும். சிங்கள அரசினால் பணம் போட்டு வளர்க்கப்படும் அமைச்சரான டக்ளஸ் தேவானந்தா சிங்களத்தில் தான் தேசிய கீதம் பாட வேண்டும் என அச்சுறுத்தி பணிய வைத்ததார். அதே போல் அரச அதிபர் இமட்டா சுகுமாரும் பாடசாலை மாணவர்களை வலுக்கட்டாயமாக அழைத்து சிறிலங்கா ராணுவத்தின் மேற்பார்வையுடன் சிங்கள தேசிய கீதத்தை பழகத்திணித்தனர். இந்த சிங்கள தேசிய கீதத்திற்கு பான்ட் அடிப்பதற்கு யாழ் இந்து கல்லூரி மாணவர்களே அழைக்கப்பட்டிருந்தனர். இந்த சிங்கள தேசிய கீதத்திற்கு இசை வழங்க அந்த மாணவர்கள் தமக்கு விருப்பம் இல்லை என்று பாடசாலை வரவுகளில் ஒழுங்கின்மையை காட்ட ஆசிரியர்களும் அதை பொருட்டாக எடுக்காமல் வீட்டுவிட்டனர். ஆனால் இமல்டா சுகுமாரின் அழுத்தத்தினால் மீண்டும் மாணவர்களை வலுக்கட்டாயமாக அழைத்து பயிற்சிக்கு அனுப்பினார்கள்.

இந்த நடவடிக்கைக்கு பாடசாலை சமூகத்திடம் இருந்து வெறுப்புணர்வு வந்தும் சிங்கள பிக்கு இருப்பதனால் அதை வெளிக்காட்டிக் கொள்ளாது நடவடிக்கைகளை மேற் கொள்ள வேண்டி உள்ளதாக பாடசாலை சமூகம் அங்கலாத்துக் கொண்டிருக்கிறது. ஒரு ஆசிரியருக்கு பயந்து தம்மை சிங்கள தேசிய கீதத்திற்கு இசையமைக்க அனுப்பிவிட்டார் என்று அதிபர் மேல் மாணவர்கள் அதிருப்தி வெளியிட்டுள்ளனர். அதிபர் தலையிடமாட்டார் என்றால் சிங்கள பிக்குவை தாம் அடித்து விரட்டுவோம் என்ற மனநிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் மாணவர்கள். அந்த பான்ட் குழுவில் இருந்த தரம் 11 மாணவன் சொல்கிறான் " ஏ.ல் அண்ணாக்கள் சிங்களாத்தில பாடப் போனதுக்கு எங்களுக்கு தான் பேசப்போறாங்கள். இந்த பிக்கு ஆமியாம். அதாலதான் ரீச்சர் மாரும் சிங்களத்தில பாட எங்கள பிள்ளைகள அனுப்ப வேண்டாம் என்டு அதிபருக்கு சொல்ல பயப்பிடினும்.... அதிபர் தலையிட மாட்டார் என்டா பிக்குவிக்கு நாங்களே சொட்ட போட்டு அனுப்பிருவம்" என்று .

ஆயுதப்போராட்டத்தையோ அல்லது சாத்வீக போராட்டங்களையோ நேரடியாக சந்திக்காத அடுத்த தலைமுறையிடம் விடுதலைப்போராட்ட வீச்சு மிக ஆழமாக செலுத்தப்பட்டுள்ளது. இயலாமை இருந்தாலும் அந்த சிறுவனின் அடி மனதின் கிடக்கை சிங்கள பிக்குவை அடித்தேனும் விரட்ட வேண்டும் என்பதாய் இருக்கிறது.

அது போக.... ஆண்கள் பெண்கள் என எல்லா பாடசாலைகளிலும் சிங்களம் கற்பிக்கவென பிக்குகள் நியமிக்கப்ட்டுள்ளனர். சிங்கள பாடசாலைகளில் தமிழ் கற்பிப்பதற்கு யாருக்கும் நியமனம் வழங்காத அரசாங்கம் தமிழ் பாடசாலைகளில் வலுக்கட்டாயமான மொழித்திணித்தலோடு சிங்கள பெளத்த கோட்பாடுகளையும் திணிக்கிறது. இதற்கு எதிப்பு தெரிவிப்பவர்கள் மற்றும் தமிழீழ விடுதலை கருத்தை கொண்டிருக்கும் பாடசாலை மட்டங்கள் என்பவற்றை அறிந்து கொள்வதற்காக பிக்கு வேடம் தரத்த சிறிலங்கா புலனாய்வாளர்கள் தமிழ் பிரதேச பாடசாலைகளில் ஊடுருவியுள்ளனர்.

ஆதி
2-17-2011

No comments:

Post a Comment

Blog template by simplyfabulousbloggertemplates.com

Back to TOP