போராட்டங்களின் தன்மையறியாது அதுபற்றிய விமர்சனங்கள் செய்வது போராட்த்தின் தேவை குறித்த செய்தி சமுதாயத்தில் குழப்ப நிலையில் இருக்க வைப்பதற்கான ஒரு நடவடிக்கையே தவிர போராட்டத்தின் குரலாக அமைய முடியாது.
இங்கு "இலங்கை மீனவர்கள்" என்று குறிப்பிடும் அனைத்து எழுத்தாளர்களிடமும் ஒன்று கேட்கிறேன்... இலங்கை மீனவர்களுக்கு பிரச்சினை என்று இதுவரை இலங்கை மீனவர் சங்கம் சொல்லியிருக்கிறதா??? இலங்கை மீனவர் சங்கம் என்பது தமிழர்+சிங்களவர்+முஸ்லிம் மீனவர்களை சேர்த்த அமைப்பு. இந்த அமைப்பு இலங்கை தமிழ் மீனவர்களின் வலைகள் அறுப்பது பற்றி பேசியிருக்கிறதா???முல்லைத்தீவு, அம்பாறை, திருகோணமலை, வடமராட்சி, வடமராட்சிகிழக்கு என தமிழ் மீனவர்கள் மீன்பிடிக்கும் இடங்களில் சிங்கள மீனவர்கள் அத்து மீறி படையினரின் உதவியோடு மீன்படிப்பதால் தமிழ் மினவர்களுக்கு ஏற்படும் பாதிப்பு குறித்து பேசியிருக்கிறதா??? இல்லை தமிழ் மீனவர்கள் காலி, மாத்தறை, கொழும்பு, ஹம்பாந்தோட்டை பகுதிகளில் மீன்பிடிக்க முடியும் என்றாவது கூறியிருக்கிறதா??? இங்கு தான் இலங்கை மீனவர்கள் என்ற பதம் தொலைந்து போகிறது.
தமிழக மீனவர்களின் உயிர்கள் பறிக்கப்படுவது நிறுத்தப்படவேண்டும் என்று போராட்டம் நடந்து கொண்டிருக்க இலங்கை மீனவர்களின் வலையும் அறுக்கப்படக்கூடாது என குரல் எழுப்புவது உள்நோக்கு கொண்டதாகவே கருத வேண்டிக்கிடக்கிறது.
திரு லோஷன் அவர்கள் தன் பதிவில் " ஐந்நூறு பேர் இறந்த பிறகுதான் இத்தனை பேரின் கண்களும் விழித்தனவா?" (லோசன்)என்று எழுதியிருக்கிறார்.இது தான் பிரச்சினை... முதலாவது தமிழக மீனவன் சிறிலங்கா படைகளால் சுட்டுக்கொல்லப்படும் போது எல்லோரும் கத்தினோம்.... அந்த குரல்கள் கேட்கவில்லை.... 500 வது மீனவன் சுட்டுக்கொல்லப்படும் போது கத்தும் குரல் கொஞ்மென்றாலும் கேட்க ஆரம்பித்திருக்கிறது அந்த வேளையில் தான் அறுபடும் வலைகள் குறித்த கேள்வியும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ஹம்பாந்தோட்டையில் இருந்து வடமராட்சி வந்து சிங்களவனால் மீன்பிடிக்கப்படும் உரிமை வடமராட்சி மீனவனால் ஹம்பாந்தோட்டை போய் மீன்பிடிக்க இல்லை என்ற இலங்கை மீனவர்களிடையில் காட்டப்படும் உரிமை பிரச்சினை அறுக்கப்படும் வலைகள் விடையத்தால் மறைக்கப்படுகிறது.
இலங்கை தமிழ் மீனவனின் வலையை தமிழக மீனவன் அறுத்தாலும் சரி தமிழக மீனவனின் வலையை இங்கத்தைய மீனவன் அறுத்தாலும் சரி ஒருவரின் பிழைப்பை இன்னொருவன் இல்லாது செய்வதை அனுமதிக்க முடியாது அதற்கு மேல் கொல்லப்படுவதை எப்படி விபரிக்க முடியும்??? இதே எல்லயைில் மீன்பிடிக்கும் சீனனும், கொரியனும் உயிருடன் திரும்பிப்போகலாம் தமிழக மீனவன் மட்டும் சாகவேண்டும் என்பது என்ன நியாயம். தமிழன் என்பதால் மட்டும் தான் அவன் சுட்டுக்கொல்லப்படுகிறான் என்பது தான் எனது கருத்து. மருந்துகளை பாவித்து ஈழத்து மீனவளத்தை சீனன் கொத்துக்கொத்தாய் அள்ளிக்கொண்டு போவது எல்லோருக்கும் தெரிந்த விடையம். ஆனால் அப்பாவி தமிழ் மீனவர்கள் அத்து மீறி வந்தார்கள் என்று சுட்டுக்கொல்லப்படுவதும் அதற்கு சொல்லப்படும் நியாயமும் மிருகத்தனத்தைவிட மோசமானது.
தமிழக மீனவர்கள் சுட்டுக்கொல்லப்படுதை நிறுத்தும் அதேவேளை(ஒரே நேரத்தில்) இலங்கை மீனவர்களுக்கு தமிழகமீனவர்களால் வரும் பிரச்சினைகள் குறித்தும் பேச வேண்டும் என்பது போராட்டத்தை திசை திருப்புவதற்கான நடவடிக்கை. இலங்கை அரசு முதலில் தமிழ் மீனவனை சுட்டுக்கொல்வதை நிறுத்து வேண்டும். இலங்கையில் அந்தந்த மாவட்ட மீனவர்களை அந்தந்த மாவட்டங்களில் மட்டும் மீன்பிடிக்க அனுமதிக்க வேண்டும் இல்லையெனின் எல்லோருக்கும் ஒரே சட்டம் பேணவேண்டும். எல்லாரும் எல்லா இடத்திலும் மீன்பிடிக்க முடியுமென்றால் இருந்து பாருங்கள் ஈழத்தமிழனின் பிணங்கள் காலி, மாத்தறை, ஹம்பாந்தோட்டை கடல்களில் மிதக்கும். சிங்களவன் எப்போதும் தனது குணத்தோடு தான் இருப்பான். கடந்த மாதம் கூட வடமராட்சி..வடமராட்சி கிழக்கு மற்றும் முல்லைத்தீவு பகுதி கடல்களில் தமிழ் மீனவர்களின் வலைகள் சிங்களவர்களால் அறுக்கப்ட்டு ராணுவத்தினரால் விரட்டியடிக்கப்ட்டனர்.
முதலில் தமிழ் மீனவன் சுட்டுக்கொல்லப்படுவதை நிறுத்து. இலங்கை மீனவர்கள் என்று ஜக்கியம் பேணும் இலங்கையர்கள், இலங்கை தமிழ் மீனவனுக்கு, இலங்கை சிங்களவனுக்கு கொடுக்கப்படும் உரிமையை கொடுக்கச் சொல்லி ஒரு வரியாவது எழுதட்டும் பார்க்கலாம் (நாங்கள் எழுதினால் இனவாதிகள் என்ற சொல்லாடலில் அடக்கப்பட்டுவிடுவோம்).
ஆதி
1-2-2011