Powered by Blogger.

Saturday, July 6, 2013

அவர்கள் வழமைக்கு திரும்பிவிடுவார்கள் ஆனால் உங்களை நம்ப முடியாது.


தலைப்பு ஒரு சிங்கள அதிகாரி சொன்ன வசனம்.
இன்று வடமாகாண தேர்தல் தொடர்பாக பல விவாதங்கள்.. சந்திப்புகள் அரசியல் காரசாரங்கள் நடந்து கொண்டிருக்கின்றன.

சுயநிர்ணய உரிமைப்போராட்டத்தை வெறும் மாகாண அதிகாரங்களுக்குள் அடக்கிவிட நினைத்த இந்திய வல்லாதிக்கத்தின் நயவஞ்சகத்தை விடுதலைப்புலிகள் அமைப்பு எப்பொழுதோ தேவையற்றது என தூக்கி எறிந்த பிறகு தமிழீழ மக்கள் தமது இரத்தத்தை சிந்தி வலிகளை சுமந்து தமிழீழ சுதந்திரத்திற்கான போராட்டத்தை பல ஆண்டுகளாக முன்னெடுத்து வருகிறார்கள். இந்த நிலையில் மீண்டும் மாகாண சபை அதிகாரம் குறித்து முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுவருகிறது.

இது கூட இந்திய காங்கிரஸின் நாடகம் என்பதை எல்லா தமிழீழ மக்களும் அறிவார்கள்.

சிங்களம் எதிர்ப்பதாய் எதிர்க்கும்.. அதை இந்தியம் வாங்கித் தருவதாய் தரும்... எல்லாவற்றையும் தமிழீழம் நம்பும் என்பது அவர்களின் கணக்கு.
இந்தியம் எப்படிக் கணக்குப் போட்டாலும் சிங்களத்திற்கு தமிழீழம் குறித்த பதட்டம் ஒரு துளியும் குறையவில்லை.

இந்தியத்தின் கணக்குப்படி வடமாகாண தேர்தலில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு வெற்றி பெற்றுஆட்சியமைக்க வேண்டும் அத்துடன் தமது வேலை முடிந்துவிடும் தமிழீழ மக்கள் இந்தியாவை நம்புவார்கள் என்ற சராசரி சினிமா அரசியல் சிந்தனையுடன் செயற்படுகிறது. ஆனால் சிங்களம் தமிழீழ மக்களை நம்பத்தயாராக இல்லை.

வடமாகாண தேர்தலை முன்னிட்டு யாழ்ப்பாணம் கிளிநொச்சி முல்லைத்தீவு உள்ளிட்ட பல பிராதான நகரங்களில் சிங்கள அதிகாரிகள் மற்றும் ஒட்டுண்ணிகளின் ஊடுருவல் வழமைக்கு மாறாக அதிகரித்திருக்கிறது.
இவர்களில் பலர் தமிழ் தமிழ் உள்ளுர் அமைப்புகளினூடாக தகவல்கள்திரட்டுவது மற்றும் வாக்கு மோசடிக்கான வேலைத்திட்டங்களை செய்து வருகிறார்கள். இவர்கள் சந்திக்கும் சிலருடன் பேசிய விடையம் தான் இந்த பதிவின் தலைப்பு.


தமிழீழ மக்கள் குறித்து அச்சத்துடன் இருக்கிறார்கள்.
தமிழ்நாட்டு போராட்டங்கள் என்பது ஆளும் அரசியல் தேவைகளுக்காக நடாத்தப்படுவதொன்று. அது எப்பொழும் வழமைக்கு திரும்பிவிடும் போக்கை உடையது அல்லது அதை கட்டுப்படுத்த இந்திய மத்திய அரசாங்கத்தை நாடினால் போதுமானது என்பது சிங்களத்தின் நிலைப்பாடு.
ஆனால் தமிழீழ மக்களின்போராட்டங்கள் என்பது தமது சர்வதேச அரசியலை குடைந்து சீரழிக்கிறது என்ற அச்சம் மேலோங்கிக்கிடக்கிறது.

தமிழ்நாட்டில் ஆர்ப்பாட்டம் செய்வார்கள்..உரக்க குரல் கொடுப்பார்கள் ஆனால் நிஜமான களம் என்று வரும்பொழுது சமூக வர்கங்களாக (சாதிகளாக என்பது அவர் குறிப்பிடுவது) பிரிந்துவிடுவார்கள். அதே நேரத்தில் தமிழீழ போராட்டக்காரர்களை பொறுத்தவரை களம் தமக்கானது என்று தீர்மானித்துவிட்டால் மூர்க்கத்தனமானமாக போராடுவார்கள். எனவே தமிழீழ போராட்டக்காரர்களுக்கான களத்தை இயலுமானவரை சிங்கள அரசாங்கம் தடுக்கும் என்பதே சிங்கள அரசியல்வாதிகளின் நிலைப்பாடாக காணப்படுகிறது.

அதனால் தான் "அவர்கள் வழமைக்கு திரும்பிவிடுவார்கள் உங்களை நம்ப முடியாது என்று குறிப்பிட்டிருக்கிறார்கள்"

லண்டன் கிரிக்கட் மைதானத்தில் சிறிலங்கா கிரிக்கட் அணிக்கு எதிராக நடாத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் தமிழ் பெண்களை சிங்கள இளைஞர்கள்  ஆக்குரோசமாக தாக்கிய போது அமைதியாக இருந்தவர்கள் இறுதிப் போட்டியில் புலிக்கொடியுடன் மைதானத்திற்குள் புகுந்தார்கள்.
பிரித்தானிய பொலிசார் அது குறித்த விசாரணைகள் செய்து கொண்டிருக்கும் வேளையில் சிறிலங்கா அரசானது சிறுபிள்ளைத்தனமாக சர்வதேச பிடிவிராந்து ரேஞ்சிற்கு சென்றிருக்கிறது. (சர்வதேச பிடிவிராந்து ஏன் எதற்கு எப்படி என்பது குறித்து அறிந்து கொள்ளுங்கள்).

பசீல்ராஜபக்‌ஷ அமைதியாக இந்தியா வந்து திரும்பியதும் கருணாநிதி+காங்கிரஸ் கும்பலில் சாமர்த்தியமும்

மகிந்தராஜபக்ச மற்றும் வேறு சில சிறிலங்கா அமைச்சர்கள் இந்தியாவரும்பொழுது கடும் எதிர்ப்பு தெரிவித்த தமிழக அமைப்புகள் சிறங்காவின் மிக முக்கியமான அமைச்சர் மிக முக்கியமான விடையம் குறித்து பேச வரும்பொழுது பெரும் அடக்கத்தை வெளிப்படுத்தி அதிர்ச்சியை உருவாக்கியிருக்கிறார்கள்.

கருணாநிதி கும்பல் மத்திய அரசியல் இருந்து விலகியிருந்தாலும் ஊழல் குற்றச்சாட்டில் சிறைவைக்கப்பட்ட கருணாநிதி மகள் கனிமொழியை அரசியல் அதிகாரியாக்குவதற்கு மும்மரமாக செயற்பட்டு அண்மையில் தெரிவுசெய்யபட்டிருந்தார்.

சாதிக்கட்சி தலைவர் ராமதாஸ் கைது தொடர்பில் தனது எதிர்ப்பையும் அனுதாபத்தையும் வெளிட்டு வந்த கருணாநிதி ராமதாஸை பயன்படுத்துவதற்கான சந்தர்ப்பத்தை எதிர்பார்த்திருந்தார். அந்த நிலையில் தான் பசீலீன் இந்திய வருகைக்கு ராமதாஸ் பயன்படுத்தபட்டிருக்கிறார்.
கருணாநிதி முதலமைச்சராக இருந்த காலத்தில் பசீல் ராஜபக்‌ஷ இன அழிப்பு போர் குறித்த சர்வதேச அரசியலில் மும்மரமாக ஈடுபட்டிருந்தார். பசீல் ராஜபக்‌ஷவினூடாக தான் கருணாநிதி கும்பல் சிறிலங்காவில் ஏராளமான முதலீடுகள் மற்றும் குத்தகைகளை வாங்கி குவித்திருக்கிறது.

என்தான் ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தாலும் கருணாநிதி காங்கிரஸ் கும்பலின் ஆட்டங்களை தமிழ்நாட்டில் கட்டுப்படுத்தக் கூடிய வல்லமை ஜெயலலிதாவிடம் இருக்கிறதா என்பது கேள்விக்குரிய விடையமே!!.
வலுவற்ற சிங்கள அமைச்சர்களுக்கு மாநிலம் கடந்து எதிர்ப்பு வெளியிட்ட தமிழக அமைப்புகள் பசீலின் வருகை குறித்து திசைதிருப்பப்பட்டதும்.. வல்லரசான (!!) இந்தியாவின் மீனவ சமூகம் பசீல் ராஜபக்சவிடம் உயிர்ப்பிச்சை கேட்டதும் இந்த காலப்பகுதியில் தான் நடந்தேறியது.

காங்கிரஸ் கருணாநிதி மற்றும் ராமதாஸ் திட்டப்படி "இளமாறன்" என்ற இளைஞன் படுகொலை செய்யபட்டு புகைரத தண்டவாளத்தருகில் வீசப்பட்டு தமிழக அமைப்புகளை திசைதிருப்பிவிட்டு பசீல் ராஜபக்சவை ராஜ மரியாதையுடன் அழைத்து பேசிவிட்டு அனுப்பிவிட்டார்கள்.

அதற்கு ஏற்றாற் போல் தமிழீழ விடுதலை குறித்து போராடுபவர்கள் ஏன் "இளமாறன்" படுகொலை குறித்து போராடக் கூடாது என்று ஊடகங்கள் மற்றும் எழுத்துவெளியில் பரப்புரையை மேற்கொண்டு பசீல் ராஜபக்சவிற்கு எதிரான போராட்டங்களை தணித்துவிட்டார்கள்.

சமாந்தரமாக இன மற்றும் சமூக விடுதலை குறித்து போராடும் மனநிலையை தமிழக அமைப்புகள் கட்டியெழுப்பவில்லை என்பதே இங்குள்ள உண்மையாகும்.

சாதிப் பெயரில் இடம்பெற்ற மிகப்பெரும் படுகொலைக்கு (அரசியல் படுகொலை) நீதிவேண்டி தமிழக அமைப்புகள் தொடர் போராட்ட களத்தில் குதிக்கும் அதேவேளை தமிழ; இன அழிப்பு முக்கிய அரசியல்வாதியை எதிர்த்தும் போராட்டத்தில் இறங்கியிருக்க வேண்டும். தமிழக மீனவ அமைப்புகள் சிங்களத்திடம் உயிர்ப்பிச்சைகேட்பதற்கு பதிலாக இந்திய அரசு சிங்கள மந்திரியை எச்சரிக்கை செய்து அனுப்ப வேண்டும் என்று போராட்டம் நடாத்தியிருக்க வேண்டும்.

இனம் குறித்த அத்தனை போராட்டங்களையும் முடக்கி சாதி வெறிக்குள் லாவகமாக தமிழக அமைப்புகளை திசை திருப்ப முடியும் என்ற சாமர்த்தியத்தை கருணாநிதி காங்கிரஸ் கும்பல் தெளிவாக புரிந்து வைத்துள்ளது.

சமாந்தரமாக போராடத்தெரியாத அல்லது சமாந்தரமாக போராட பயிற்சிகளை அல்லது அதற்கான ஏற்பாடுகளை செய்ய கூடிய வலுவற்ற தமிழக அமைப்புகள் இருக்கும் வரை "ஒட்டு மொத்த தமிழனம்" என்ற வார்த்தை வெறும் வார்த்தை மட்டுமே.

உலக வரலாற்றில் தமிழீழ மக்களின் போராட்டம் குறித்தும்.. தமிழீழ விடுதலைப்புலிகளின் மெனம் குறித்தும் இன்னமும் வெளிப்பட்டுக் கொண்டிருக்கும் அச்சம் போல் ஒன்றுபட்ட தமிழனத்தின் போராட்டம் குறித்து அச்சம் வரவேண்டுமென்றால், ஒன்றுபட்ட தமிழின விடுதலை குறித்து உலகம் கவனம் செலுத்த வேண்டுமென்றால் தமிழக அமைப்புகளுக்கிடையில் மாற்றங்கள் வரவேண்டும். எல்லா வகையான போராட்டங்களையும் ஓரே நேரத்தில் கையாளக்கூடிய வகையில் மக்களை ஒழுங்குபடுத்த கூடிய அமைப்புகள் உருவாக வேண்டும்.



புரட்சி என்பது மாற்றம். மாற்றம் நிகழ வேண்டுமென்றால் அதற்கான களமும் தளமும் விரிவாக்கப்பட வேண்டும்.






ஆதி
07-07-13

Blog template by simplyfabulousbloggertemplates.com

Back to TOP