Powered by Blogger.

Monday, November 25, 2013

புரட்சிகர தமிழீழச் சனம் சிங்கள இராணுவத்துடன் செய்யும் உளவியல் போர் உணர மறுக்கும் உலகம்

உலக வரலாற்றில் போராடும் மக்கள் மீது ஆக்கிரமிப்பாளர்கள் பலவிதமான போரைச் செய்வார்கள். பாலியல் வன்முறைகள், கொடூரமான படுகொலைகள் மற்றும் போராடுபவர்களின் இலக்கு குறித்த சந்தேகத்தை எழுப்பி பரப்புவது  என ஆக்கிரமிப்பாளர்களின் போர் விரிவடைந்து செல்லும்.

இப்படிப்பட்ட இன்னல்களையும் சோர்வடையச் செய்யக்கூடிய உளவியல் போரையும் வென்ற இனம் விடுதலை பெற்றுவிடும் இதுதான் உலக நியதி.

இப்படி பதிவு செய்யப்பட்டிருக்கும் வரலாற்று நீட்சியில் தமிழீழ மக்களின் போராட்டம் வித்தியாசமாக உருவெடுத்திருக்கிறது.

30 வருடங்களிற்கு மேல் தங்களை பாதுகாத்து வழிநடத்தி எதிரியிடம் போரிடக் கற்றுக்கொடுத்த அமைப்பும் அந்த மக்களின் தலமையும் இல்லாத நிலையில் தமிழீழ மக்கள் மண்ணில் செய்து கொண்டிருக்கும் பெரும் உளவியல் போர் சிங்கள அரசை மட்டுமல்ல அதன் இயந்த்திரமாக இருக்கும் சிங்கள கொலைவெறி இராணுவத்தையும் அசைத்திருக்கிறது என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் கிடையாது.

2009 இல் தமிழீழ அரசு தனது ஆயுதங்களை மௌனித்து சர்வதேச சதியினால் சரணடைந்த பிறகு, இந்திய சிவசங்கர் மேனன் உள்ளிட்ட கும்பலால் பிரேரிக்கப்பட்ட முட்கம்பி வதைமுகாம்களில் அடைக்கப்பட்ட பின்பு நடந்த மாவீர்தினங்களையும் சம்பவங்களையும் அவதானமாக வரலாற்றில் பதிவு செய்ய வேண்டிய நிலையிலும் அதை சர்வதேசத்திடம் முறையாக கொண்டு சென்று எமது நிலைப்பாட்டை சொல்ல வேண்டிய நிலையிலும் தமிழீழ மக்கள் இருக்கிறார்கள்.


2009 மாவீரர் தினம் - மெனிக்பாம் மற்றும் சில முட்கம்பி முகாம்களுக்குள் விளக்கு கொழுத்தியதால் மக்கள் மீது சிங்கள இராணுவம் அடாவடி

2010 மாவீர்ர தினம் - மட்டக்களப்பு நகர் மத்தியில் மாவீரர் ஈகச்சுடர் ஏற்றும் நேரம் மாவீரர் கானம் இசைக்கப்பட்டது. மற்றும் சில இடங்களில் மாவீரர் படங்கள் வைக்கப்பட்டது தீபம் ஏற்றப்பட்டது.

2011 மாவீரர் தினம் - கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவில் புலிக்கொடி ஏற்றப்பட்டது. மாவீரர் நாளை முன்னிட்டு தாக்க வருவதாக நினைத்து கிளிநொச்சியில் சிறுவனை இராணுவம் சுட்டுக் கொன்றது. கிளிநொச்சியில் பல கோயில்களில் ஒலிபெருக்கிகள் இராணுவத்தால் பறிமுதல் செய்யப்பட்டது.

2012 மாவீர் தினம் - தமிழீழத்தில் எல்லா மாவட்டத்திலுமே மாவீரர் தின எழுச்சி பதாதைகள் மற்றும் தீபங்கள் ஏற்றப்பட்டன. யாழ் மற்றும் கிழக்கு  பல்கலைக்கழகத்தில் வெளிப்படையாகவே தீபங்கள் ஏற்றப்பட்டன. கோயில்களில் பிரார்த்தனைகள் நடந்தன. கார்த்திகை தீப நாளை சாக்காக வைத்து கிறிஸ்தவ மத்தை பின்பற்றும் தமிழர்களும்  வீதிகளில் தீபம் ஏற்றினர். வீதிகளுக்கு இறங்கி தீபங்களை காலால் மித்தது சிங்கள இராணுவம். யாழ் பல்கலைக்கழக சுற்றுவட்டாரத்தில் துப்பாக்கி பிரயோகங்கள் மேற்கொள்ளப்பட்டன.

2013 மாவீரர் தினம் - மாவீர் துயிலும் இல்லங்களை துப்பரவு செய்ய சனம் துயிலுமில்ல வாசல்வரை சென்றது. மக்களின் சின்ன சின்ன அமைப்புகளில் மாவீரர் துயிலுமில்லங்கள் பாதுகாக்கப்பட வேண்டியவை என தீர்மானங்கள் நிறைவேற்றுப்பட்டது. சம்மந்தன் தலமையிலான கூட்டமைப்பு மாவீரர் நினைவு நாள் மற்றும் மாவீரர் நினைவிடங்கள் பற்றி பேசியே ஆகவேண்டிய கட்டாய நிலையை மக்கள் உருவாக்கியிருக்கிறார்கள்.


தமிழீழ விடுதலைப்புலிகள் என்ற தமிழீழ மக்களின் தலமை களத்தில் இல்லாத நேரத்தில் தமிழீழ விடுதலை குறித்து மக்கள் இந்த அளவிற்கு சிங்களத்துடன் மோதுவதென்பது சாதாரண விடையமல்ல. வெறுமனே இந்த மாதத்தில் மட்டுமல்லாது காணாமல் போனோர் மற்றும் நிலப்பறிப்புக்கு எதிராக சனங்களின் மூர்க்கம் அதிகரித்து வருவது சிங்களத்திற்கு விளங்குவது போல் உலகத்திற்கு விளங்கவில்லையா அல்லது அதை சரியான முறையில் உலக அரங்கில் கொண்டு சேர்கவில்லையா என்பது குறித்து கவனமெடுப்பது அவசியமான ஒன்று.


ஆதி
25-11-13

Monday, November 18, 2013

இந்தியப் புற்று நோயால் செயலிழந்துவரும் தமிழினம்

இந்தியா என்பது புற்றுநோய்.

இந்தியப் புற்றுநோய் குறித்து 25 வருடங்களுக்கு முன்பே தெரிந்திருந்தும் அதுகுறித்து அதிக கவனம் செலுத்தாததால் இன்று தமிழினம் தனது இருப்பைத் தொலைத்து அழிவடையும் உச்சத்தை எட்டியிருக்கிறது.

மன்னர்கள் ஆட்சிக்காலத்திற்கு பின்னர் ஏராளமான வரலாற்று படிப்பினைகளையும் நமது மூதாதேயரின் வாழ்வு பற்றியதுமான ஏராளமான பொக்கிசங்கள் இருந்தும் அதை தூசுதட்டி தலைமுறை தலைமுறையாக சொல்லிக் கொடுப்பதைவிடுத்து சினிமா ரசிகர்களாகவும் கிரிக்கட் ரசிகர்களாகவும் மாற்றப்பட்டனர் தமிழர்கள்.

விதிவிலக்காக உரிமை மறுப்பை எதிர்த்து வீட்டுக்கு வீடு ஆயுதம் தூக்கி எதிரியை களத்தில் சந்தித்தது தமிழீழம். இருந்தாலும் தமிழீழ விடுதலைப்போராட்டத்தை மூடி மறைத்து எவ்வளவு விரைவாக தமிழகத்தை சல்லடைபோட்டு செயலிழக்க செய்ய முடியுமோ அவ்வளவிற்கு செயலிழக்க பண்ணிவிட்டு தமிழீழத்தை சூறையாடியிருக்கிறது இந்தியப் புற்று நோய்.

கல்வெட்டுக்களில் இருக்கும் தமிழ் மன்னர்களின் வீர வரலாறு தமிழீழ தாயமெங்கும் வியாபித்து நிற்கும் பொழுது திரைச்சீலைகளுக்கு பின்னால் கவர்ச்சி நடிகைகளின் நடனங்களை பார்த்துக் கொண்டிருந்த தமிழகம் இன்று தன்னை சுதாகரித்துக் கொள்ள முயற்சித்தாலும் இந்தியப் புற்று நோயால் முழுமையாக பீடிக்கப்பட்டு எப்படி தன்னை காப்பாற்றிக் கொள்வதென்று தெரியாமல் திணறுகிறது.

இந்த பூமிப்  பந்தில் எட்டுக் கோடிக்கு மேல் ஒரே மொழிபேசும் இனமாக, ஒரே இலக்கணம் கொண்ட சனமாக, ஒரே இலக்கியத்தை படிக்கும் மக்களாக இருந்தும் தனக்கென்று சொந்த நிலமும் அதற்கொரு கொடியும் தனியொரு படையும் கொண்ட அரசாக, தன்னைத்தானே ஆழும் இனமாக தமிழினம் இல்லாததற்கு காரணம் இந்தியப் புற்றுநோய்தான் என்றால் மிகையாகாது.

சாதிபேதங்கள் இன்றி, வரட்டுக் கௌரவங்கள் இன்றி, ஊழல் இன்றி இன விடுதலையை மட்டுமே இலட்சியமாக கொண்டு தங்களால் தனிப்பெரும் படையை கட்டியெழுப்பவோ அல்லது ஆழும் அந்திய சக்திகளுக்கு எதிராக போரிடவோ தெரியாத அல்லது முடியாத தமிழகம் ஆகக்குறைந்தது இந்திய வல்லூறுகளை தமது சொந்த நாட்டுக்குள் முடக்க தெரிந்திருந்தால் கூட இன்று "தமிழீழம்" என்ற தனிப்பெரும் தமிழர் நாடு மலர்ந்திருக்கும்.


சொல்வதற்கு கடினமானதென்றாலும் ஒரு உண்மையை சொல்லியே ஆகவேண்டும். தன்னைத்தானே வருத்தும் தியாக மனப்பாண்மை கொண்ட தமிழக வீரர்களால் எதிரியை திணறடிக்கவோ அல்லது எதிரியின் சூழ்ச்சியை புரிந்து அதற்கேற்போல் போராடவோ தெரியாது.


இன உணர்வுடன் தன் சொந்த மக்களை மட்டுமே நம்க கூடியதும் தன் சொந்த மக்களை வைத்து எந்தப்பெரும் அரசையும் ஆட்டம் காண வைக்க முடியும் என்ற நம்பிக்கை வைத்து ஒரே இலட்சிய கொள்கையுடன் களத்தில் இறங்கி மக்களை வழிநடத்தக் கூடிய தலமை தமிழகத்திற்கு அவசரமாக தேவைப்படுகிறது.

தமிழ் மன்னர்களின் வீர வரலாறுகள் மூடி மறைக்கப்பட்டு திட்டமிடப்பட்ட வகையில் வரலாறுகள் அழிக்கப்படுவதாக சொல்கிறார்கள்.

சொந்த நிலமும் தன்னைத்தானே ஆழும் ஆட்சியும் என்பது ஒரு இனத்தின் பாதுகாப்பு மற்றும் இருப்பு. தமிழீழத்தை சுவம்சம் செய்து பறித்து  சிங்களத்திடம் கொடுத்த இந்தியம் தமிழகத்தை நாசுக்காக கூறுபோட்டுவிட்டது.

இன்றைய நிலவரத்தில் தமிழகத்தில் தமிழ் மக்கள் ஒன்று திரண்டு தமக்காக போராட முடியாத அடிமை நிலமை ஏற்படுத்தியாகிவிட்டது. அடக்கு முறைக்களுக்கு எதிராக தொடர்ச்சப் போராட்டங்களை செய்யவும் சூழ்நிலைக்கேற்றவாறு அதன் வடிவத்தை மாற்றவும் முடியா நிலை உருவாக்கப்பட்டுவிட்டதாகவே தெரிகிறது.


தமிழகமே!!!!

இனிவரும் தமிழனத்தின் சந்ததிக்காகவேனும் உனக்கென்றொரு செங்கோல் ஆட்சியை உருவாக்கு. சாதிகளால் பிளவுண்டுகிடக்கும் முட்டாள்களே!!!! உங்கள் பெற்றோர்களையும் பெற்றோரின் பெற்றோர்களையும் திட்டமிட்டு சகதிக்குள் தள்ளியிருக்கிறான் எதிரி அதன் தொடரச்சியாக அந்த சகதிதான் உங்கள் வாழ்கை என்று உங்கள் தலைமுறையையும் அந்த சகதி நாற்றத்திற்குள் வைத்திருக்காதீர்கள்.

தனி இனமாக தமிழ் இனமாக இந்த ராஜ்ஜியத்தை ஆண்டது தான் தமிழினம். தமிழினமாக உருவெடுங்கள். தமிழனத்திற்கு எதிராக பேசுபவர்கள் முதல் செயற்படுபவர்களை உங்கள் மண்ணில் இருந்து விரட்டுங்கள். இறுக்கமாகவே இருங்கள். இறுக்கம் இனத்தை காக்கும்.


ஆதி
18-11-13

Thursday, November 7, 2013

"தோற்றுப் போகிறோம் போராட வா" என்று கூப்பிடுங்கள் #புலிகள் இல்லாத வெளி

இன்று முகப்புத்தகத்தில் நண்பர் பரணி அவர்கள் எழுதியிருந்த குறிப்பொன்றை பார்க்க கிடைத்தது.

" 2009 ற்கு பிறகு இதுவரை நடந்த எல்லாப்போராட்டங்களும் தோற்றுவிட்டதாக பேசுகிறார்கள் ஆனால் வன்னியில் இருந்த சனங்களையும் எராளமான போராளிகளையும் இந்த போராட்டங்கள் காப்பாற்றியது" என்ற பொருள் பட எழுதியிருந்தார்.

இதை முற்றிலும் மறுக்கிறேன். அதுபோக 2009 ற்கு பிறகு வெல்வதற்காக போராட்டங்களை சரிவர நாங்கள் நடாத்தவில்லை என்ற கசப்பான உண்மையை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் எனது அபிப்பிராயத்தை முன்வைக்கிறேன்.

விடுதலைப்புலிகள் போராட்டத்தை கட்டியெழுப்பி அதை பெரும் மரபுவழி இராணுவமாகவும் பல்துறை கட்டுமானங்களைக் கொண்ட அரசாகவும் நடாத்துவதற்கு ஒவ்வொரு தோல்விக்குப் பின்னும் புலிகள் வகுத்த வியூகங்கள்தான் காரணம்.

தவளைப்பாய்ச்சல் நடவடிக்கையில் அதிகமான போராளிகள் வீரச்சாவடைந்தார்கள். வீரச்சாவடைந்தவர்களை விதைப்பதற்கு விதைகுழிகள் மாவீரர் துயிலுமில்லங்களில் வெட்டப்பட்டன. அதை வெட்டியவர்கள் பொதுசனங்களாக இருந்த இளைவர்கள்தான். இத்தனை போராளிகளை இழந்துவிட்டோம் என்ற செய்தி ஆழமாக பதியப்பட ஏராளமானவர்கள் வீரச்சாவடைந்தவர்களை இடங்களை நிரப்புவதற்காக போராளிகளாக மாறினார்கள்.

யாழ்ப்பாண குடாநாடு சிங்கள இராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்ட போது யாழ்குடாநாட்டில் ஏற்பட்டுவரும் தோல்வியை வன்னியில், மட்டக்களப்பில் மக்களிடம் பிரச்சாரப்படுத்தினார்கள். போராடவேண்டிய தேவையை சொன்னார்கள். அதன் தொடர்ச்சியாக புதிய அணிகள் இணைக்கப்பட்டு பயிற்சிக்கு செல்ல தயாராக இருந்த அணிகள் முல்லைத்தீவை கைப்பற்றின.

முல்லைத்தீவில் இருந்து இராணுவதளபாடங்கள் முதல் அந்த முகாமை இருந்த இடம் தெரியாமல் அப்புறப்படுத்துவதற்கு மக்களிடமே விட்டார்கள்.

அதே போல்தான் ஜெயசிக்குறு ஆக்கிரமிப்புச் சமர் வன்னியை பிழந்து முன்னேறிக் கொண்டிருக்கும் பொழுது சந்தித்துவரும் தோல்வியை மக்களிடம் சொன்னார்கள் புலிகள். தோல்வியில் இருந்து மீண்டெழுவதற்கு சனம் புலிகளுடனேயே நின்றது.
எல்லைப்படை, துணைப்படை, விழிப்புக்குழு, மாணவர் விழிப்புக்குழு, மாணவர் படை, என சனங்கள் எல்லா வழியிலும் போராடத்துணிந்தன.

போராளிகளுக்கு உலர் உணவு சேகரிப்பதில் இருந்து காயப்பட்டுவரும் போராளிகளை பராமரிப்பது வரைக்கும் சனங்கள்தான் நின்றார்கள்.

தமிழீழத்தில் புலிகளுடனையே இருந்த சனங்களுக்கு புலிகள் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தோல்வியை எதிர்மறையாக காட்டியது கிடையாது. "தோற்கிறோம் போராடவா" என்றுதான் அழைப்புவிடுத்திருக்கிறார்கள்.

புலம்பெயர் கட்டமைப்பு

புலம்பெயர்கட்டமைப்பை பொறுத்தவரை சனங்கள் போராட்டங்களை செய்திகளில் படிப்பவர்களாக மாறிப்போய் இருக்கிறார்கள்.

2009 இல் இலட்சக்கணக்கில் வீதிக்கு இறங்கி போராடிய சனங்கள் எங்கே!! அவர்களை ஏன் இப்பொழுது போராட அழைக்க முடியவில்லை!!!

"தோற்றுப்போகிறோம் போராட வா" என்று வீட்டைத் தட்டுங்கள். படிக்கும் மாணவ மாணவிகளுடன் பேசுங்கள்.

இது நிரந்தர தோல்வியானால் எங்கள் சரித்திரம் ஈழத்தில் அழிந்துவிடும் என்ற பயங்கரமான உண்மையை சொல்லுங்கள்.

தோற்கிறோம் என்ற உண்மையை விளங்கி போராட வருபவன்தான் கடைசிவரை இலட்சியத்திற்காக போராடுவான்.

இரண்டாயிரம் பேர் போராடி தோற்றுப்போனால் தோற்றுவிட்டோமே என்ற இன உணர்வு மூவாயிரம் பேரை கூட்டி போராடத் தூண்டவேண்டும். அது தான் நிலைத்து நிற்க கூடியதும் இலக்குவரை செல்லக் கூடியதுமான போராட்டம்.



தமிழக கட்டமைப்பு

தமிழகத்தைப் பொறுத்தவரை இலட்சியத்திற்கா போராடக்கூடியவர்கள் அதிகம் இருக்கும் இடம். ஆனால் சாதிகளாலும் அரசியல் கட்சிகளாலும் பிழவுபட்டு நிற்கும் தேசம்.

தமிழக மீனவர்கள் சுட்டுக் கொல்லப்படுவது குறித்து, அணு உலை குறித்து இதுவரை போராடிக் கொண்டிருப்பதை மத்திய அரசு கண்டு கொள்வதாக இல்லை.

போராட்ட வழிமுறைகளை மாற்ற வேண்டும். காந்தி நடாத்திய போராட்டம் வெற்றியளித்தது உண்மையென்றால் அதே போராட்டத்தை செய்ய தமிழிகத்தில் விடுதலை அமைப்பு உருவாக்கப்பட வேண்டும்.

தன்னைத்தானே எரிக்கும் தியாக போராட்டங்களை கைவிட்டு எதிரியை அழிக்கும் விடுதலைப்போராட்டத்தை தமிழகம் தொடங்க வேண்டும். தமிழகத்தில் அப்படியொரு அமைப்பு உருவாக வேண்டும்.

வெறும் மேடை அரசியல் எதையம் பெற்றுத்தராது என்ற உண்மையை மக்கள் விளங்கிக் கொள்ள வேண்டும்.

ஒடுக்கபட்டுகிடக்கும் சனங்கள், ஊழல் அரசியல்வாதிகளால் தமது உரிமைகள் மற்றும் வாழ்வாதார பலன்களையே இழந்து கொண்டிருக்கும் தமிழக மக்களுக்காக தமிழனாக போராடக்கூடிய  அமைப்பு உருவாக வேண்டும்.

தமிழீழ விடுதலை குறித்து தமிழகத்தில் நடந்துகொண்டிருக்கும் உணர்வு மிக்க போராட்டங்களுக்கு என்ன கைமாறு செய்யப்போகிறோம் என்று தெரியவில்லை.

ஒட்டு மொத்த இனமாக ஒருவிடுதலைக்கு சிந்தித்துக் கொண்டிருக்கும் தமிழினம் எப்போது ஒரே அமைப்பாக போராடப்போகிறது!!!!


போராட்ட வடிவத்தை மாற்றுங்கள்.

ஆதி
07-11-2013

Blog template by simplyfabulousbloggertemplates.com

Back to TOP